அத்தியாயம்-4_1

உடனேயே, பட்டென்று,“செருப்பு கடை அந்தப் பக்கம் இருக்குன்னு சொன்னாங்க.” என்று சொல்ல,

“செருப்பு கடையா? எதுக்கு?” என்று கேட்டவனின் பார்வை அர்ஜுனின் பாதங்களுக்குப் பயணம் செய்ய, சாதாரண ரப்பர் செருப்பு அணிந்திருந்தான். அப்படியே மணியின் பாதங்களுக்கு பயணம் செய்தவனின் கண்களுக்கு அவளின் பாதம் தெரியவில்லை. புடவை தான் தெரிந்தது. தரையைத் தொட்டுக் கொண்டிருந்த புடவையை யோசனையோடு பார்த்தவன் அவளது முகத்திற்கு பார்வையை திருப்ப, அவனை நேராகப் பார்க்க முடியாமல் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் மணி. சற்றுமுன் மணிக்கும் போலீஸ்காரிக்கும் இடையே நடந்து மனத்தில் வந்து போக, அதற்கு மேல் எந்த விளக்கமும் கேட்காமல், அவனது பையைத் தூக்கிக் கொண்டவன்,“என் பின்னாடியே வா.” என்று சொல்லி விட்டு முன்னே செல்ல, அக்கா, தம்பி இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர். 

விமான நிலையத்தின் பிரம்மாண்டமான வடிவமைப்பை விரிந்த கண்களுடன் வேடிக்கை பார்த்தபடி உத்தமைப் பின்பற்றி சென்றவர்கள் அப்படியே காலணி கடை ஒன்றினுள் நுழைந்திருந்தனர். கடையில் நுழைந்த பின் தான் அது செருப்புக் கடை என்று மணிக்கு புரிய, உத்தமைப் பார்க்கவே சங்கடப்பட்டுக் கொண்டு கர்மசிரத்தையாக செருப்புகளின் அணிவகுப்பை பார்வையிட்டாள்.

அவளின் நிலையைப் புரிந்து கொண்டவன் அவர்களை வரவேற்ற விற்பனையாளரிடம் மணியைக் காட்டி காலணி வேண்டுமென்றான் உத்தம். அங்கே இருந்த இருக்கை ஒன்றில் அமரும்படி மணிக்கு செய்கை செய்த விற்பனையாளன்,”சைஸ்.” என்று அவளின் அளவைக் கேட்க, மணிக்குத் தெரியவில்லை. பதினான்கு பதினைந்து வயதிலிருந்து அவளுடைய தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வது உத்தமின் குடும்பம் தான். உடையிலிருந்து காலணி வரை அவளுக்கும் மீனாம்மாவுக்கும் தேர்வு செய்வது மாமி தான். ஹாஸ்டலுக்கு செல்லும் முன் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அனுப்பி விடுவார் காவேரி மாமி. அதே போல் சித்தி வீட்டிற்கு போகும் போதும் அவளுக்குத் தேவையானதை கொடுத்து அனுப்பி விடுவார். அவளுடைய பொறுப்பை சிவமூர்த்தி மாமா ஏற்றுக் கொண்டதிலிருந்து பணம், பொருள் பற்றிய கவலை அவளுக்கு இல்லவே இல்லை. 

சாரதியின் திருமணத்திற்குப் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தது கூட மாமி தான். பள்ளிக்கு உடுத்திச் செல்லும் புடவைகள் அனைத்தும் மாமி தேர்வு தான். அகிலா, இந்திரா இருவரும் அவர்களுக்குப் பொருந்தாத, பழையதாகிப் போன புடவைகளை அவளுக்கும் மீனாம்மாவிற்கு தந்து விடுவார்கள். அதனால் சொந்தத் தேவைகள், முக்கியமாக உடைகள் தேர்வு செய்ய அவள் கடைக்குச் சென்றதில்லை. ஒரு சில சமயங்களில், மாமி வேறு வேலைகளில் பிஸியாக இருக்கும் போது, டிரைவருடன் காரில் பஜாருக்கு சென்று மீனாம்மாவின் பட்டியலைப் பார்த்து வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிய அனுபவம் அவளுக்கு இருக்கிறது. ஆனால் பண பரிவர்த்தனை செய்ததில்லை. கணக்கில் எழுதிக் கொள்ளும்படி கடைக்காரரிடம் சொல்லி விடுவாள். இன்று தான் முதன்முறையாக அவளுக்கென்று அவளொரு பொருள் வாங்க வேண்டிய சூழ்நிலை அமைந்து விட்டது.

அவளது முகத்தைப் பார்த்திருந்தவனுக்கு அவளது மனப்போராட்டம் புரிய, விமானத்திற்கு நேரமாகிக் கொண்டிருந்ததால்,”நீங்களே இரண்டு மூணு அளவுலே கொண்ட்டிட்டு வாங்க..எது சரியா இருக்கோ அந்த அளவுலே இரண்டு, மூணு டிசைன்லே காட்டுங்க.” என்று விற்பனையாளருக்குப் பதில் கொடுத்தான் உத்தம்.

அவள் சொல்லமலேயே அவளின் நிலையை புரிந்து கொண்டு அந்தச் சூழ்நிலையைக் கையாண்ட உத்தமை வியப்புடன் பார்த்தாள் மணி. அவள் கண்களின் வியப்பு உத்தமைக் காந்தம் போல் ஈர்க்க, சில நொடிகளில் அவனைச் சுதாரித்துக் கொண்டவன்,’எதுக்கு இப்போ அவ கண்ணைப் பார்த்திட்டு இருக்கோம்?’என்று யோசித்தவனின் கைப்பேசி ஓசை எழுப்பி அவனது யோசனையைக் கலைக்க, இரண்டு ஜோடி காலணிகளைக் கொண்டு வந்து மணியின் காலடியில் வைத்து அவளது வியப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விற்பனையாளர்.

”சீக்கிரம்.” என்று கட்டளையிட்டு விட்டு அழைப்பை ஏற்று, கடையின் வாயிலில் நின்றபடி பேச ஆரம்பித்தான் உத்தம்.

உத்தமின் வாய் அதன் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் பார்வை முழுவதும் மணியின் பாதங்களில் தான் இருந்தது. லேசாகப் புடவையை உயர்த்தி விற்பனையாளர் கொண்டு வந்த காலணியின் ஒன்றை அவள் அணிய, அவளது பாதங்கள் அவனது உள்ளத்தில் காலடி பதித்ததன. 

முதலில் அணிந்த ஜோடி அசௌகர்யமாக இருக்க ஆனாலும் அடுத்த ஜோடி காலணியை முயற்சி செய்து பார்க்க மணிக்குத் தயக்கமாக இருக்க, லேசாகத் தலையை உயர்த்தி உத்தமை அவள் நோக்க, அந்த நொடி அவளது பாதங்களிருந்து பார்வையை உயர்த்தி அவள் பார்வையோடு அவன் கலக்க, அடுத்த நொடி,

“இது வேணாம்..அடுத்தது எடுங்க.” என்று விற்பனையாளருக்குக் கட்டளையிட்டான்.

அது போல் அடுத்து அடுத்து என்று மணியின் பார்வையைச் சரியாகப் படித்து அவளுக்கு பொருத்தமான காலணியைத் தேர்ந்தெடுத்தான்.’காலைலே அப்பாவோட பேசும் போது பள்ளிக்கூடத்திலே டீச்சரா இருக்கான்னு சொன்னார்..இவ என்ன இப்படி செருப்பு கூட தேர்வு செய்யத் தெரியமா இருக்கா? எல்லாத்துக்கும் என்னைப் பார்த்திட்டு இருக்கா? ஏன் பாதத்தை இப்படி வைச்சிருக்கா? டீச்சருக்கு பாடம் எடுக்கணும் போல.’ என்று யோசனை செய்தபடி காலணிக்கு உரிய பணத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.  அவளது பாதங்களில் கண்ட வெடிப்புகளில் சிக்கி கொண்டிருந்த மனத்தை மீட்டெடுக்க முடியாமல், அது கோபமாக அவள் மீது வெடிக்கும் முன்,”வேகமா நடக்கணும்..ஃப்ளைட்டுக்கு லேட்டாகிடுச்சு.” என்ற சிடுசிடுத்தபடி முன்னே சென்றான்.

தன்னால் தான் கோபம் என்று புரிந்து கொண்ட மணி, அர்ஜுனையும் இழுத்துக் கொண்டு பழக்கமில்லாத புத்தம் புது செருப்புடன் உதம்மின் பின்னால் ஓட்டமும் நடையுமாக மூச்சு வாங்கிக் கொண்டு சென்றாள். அவர்களின் கேட் வந்தவுடன் அங்கே வரிசையாக இருந்த நாற்காலிகள் அவர்களை அமரச் சொல்லி விட்டு, ஓய்வறை நோக்கி செல்லயிருந்த உத்தம், கடைசி நொடியில், அர்ஜுனை இருக்கையிலிருந்து எழுப்பி, அவனது கையைப் பற்றி,

“என்னோட வா.” என்று அழைத்தான்.

அதற்கு,’மாட்டேன்’ என்று தலையசைவில் மறுத்தான் அர்ஜுன்.

உத்தம் எதற்காக அழைக்கிறானென்று புரிந்து கொண்ட மணி,”நானும் வரேன்.” என்று எழுந்து கொள்ள,

“நீ உள்ளே வர முடியாது.” என்று அவள் மீது இருந்த கோபத்தை எரிச்சலாக வெளியிட,

“என்னோட அழைச்சிட்டு போறேன்.” என்று மெதுவாகக் சொல்ல,”இவனையா?” என்று கேட்ட உத்தம் முகத்தில் கோபம் தாண்டவமாட, கண்களின் சூடு அவளை அப்படியே பொசுக்க, அச்சத்தில்  மணியின் உடம்பு நடுங்க, முகம் வெளேறிப் போக, இமைகள் படபடக்க, உதடு துடிக்க, அதில் மேலும் கோபமடைந்தவன், பொது இடமென்பதால் அவனது கோபத்தை அடக்கிக் கொண்டு,”வா” என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்தான் .

அக்கா, தம்பி இருவரும் அவனைப் பின்தொடர்கிறார்களாயென்று ஒருமுறை கூட திரும்பிப் பார்க்காமல் உத்தம் ஓய்வறையை அடைந்த போது நிஜமாகவே மணிக்கு இரண்டு நிமிடங்கள் ஓய்வு தேவைப்பட்டது. 

இதுவரை அர்ஜுனை அவளுடன் பெண்களின் ஓய்வறைக்கு தான் அழைத்துச் சென்றிருக்கிறாள். பேருந்து நிலையத்தில் யாரும், எதுவும் சொன்னதில்லை. பத்து வயதாகி இருந்தாலும் அவனது முகத்தில் இருக்கும் பயமும் தயக்கமும் அவனைத் தனியே விட அனுமதித்ததில்லை. விமான நிலையத்தில் எல்லாமே புதிதாக இருக்க, அவளால் உத்தமிற்கு பிரச்சனை வரக் கூடாதென்று, ஆண்களின் பக்கம் உத்தம் நுழைந்தவுடன்,”அவங்க கூட போ.” என்று தம்பியை அவன் பின்னால் அனுப்பி வைத்தாள் மணி. அது காதில் விழுந்ததால் அவனது பையோடு உள்ளே நுழைந்த உத்தம் சில நொடிகள் அர்ஜுனுக்காக வாயிலருகே காத்திருக்க,  முகத்தில் பயத்தோடு உள்ளே நுழைந்த அர்ஜுன், உத்தமைப் பார்த்தவுடன் வேகமாக வந்து அவனது கரத்தைப் பற்றிக் கொண்டான். அதில் உத்தமின் மனது சமாதானமடைய, மணி மேல் இருந்த கோபம் கொஞ்சம் போல் குறைந்து போனது. 

அவர்கள் இருவரும் வெளியே வந்தவுடன் அர்ஜுனிடம்,”பையைப் பார்த்துக்கோ..அக்கா வந்திடறேன்.” என்று சிறு பையனிடம் பொறுப்பை ஒப்படைக்க, பெரிய பையனின் கோபம் மீண்டும் பழைய அளவைத் தொட்டு,’நான் முழுமையாகக் காணாமல் போகவில்லை.’ என்று அவனது முகத்தில் குடியேறி அதன் இருப்பை நிரூபித்தது.

பெண்கள் ஓய்வறை கூட்டமாக இருந்தது. அடுத்தடுத்து என்று ஒவ்வொரு கதவின் முன்பும் ஆள்கள் நின்று கொண்டிருந்தார்கள். வாஷ்பேசினில் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே முகத்தில் தண்ணீர் அடித்து, டிஷ்யூ பேப்பரால் துடைத்தபடி முகத்தைக் கண்ணாடியில் நோக்கினாள் மணி. மிகவும் களைப்பாக உணர்ந்தாள். காலையில் நான்கு மணிக்கு அவளை எழுப்பி விஷயத்தை சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டான் சாரதி. அப்போதிலிருந்து லயாவையும் பார்த்துக் கொண்டு, சமையல் வேலையைச் செய்து முடித்து, அர்ஜுனை எழுப்பி, பால் குடிக்க வைத்து, குளிக்க அனுப்பி, தயார் செய்து, அறையை ஒழித்து, பெருக்கி, துடைத்து, அவளும் குளித்து என்று அத்தனை வேலைகளையும் செய்து முடித்து கிளம்புவதற்குள் தாமதமாகிவிட்டது. அவளைக் காணாது அவனுடைய அம்மாவிற்கு உத்தம் அழைப்பு விடுத்திருப்பான் அதன் விளைவாக அண்ணா, அண்ணியை மாமி அழைத்திருப்பார். அண்ணியின் உறக்கம் கலையும் முன் அழைப்பை ஏற்று நேற்றே அவளிடம் விஷயத்தை சொல்லாத அவனது தவறை மறைக்க அவளை விரட்டியிருக்கிறான் என்று நடந்ததை மனத்தில் மீண்டும் கட்டமைத்துக் களைத்துப் போனவள் அப்படியே அந்தச் சுவரில் சாய்ந்து கொண்டாள். சில நொடிகளுக்கு கண்களை மூடி உடலிற்கும் மனத்திற்கு ஓய்வு கொண்டுத்தாள். கதவு திறக்கும் ஒலி கேட்டு கண்களைத் திறக்க, ஓய்வறை ஒன்று காலியானாலும் அதன் அருகே யாரும் செல்லவில்லை. திறந்திருந்த கதவின் வழியாக அது இந்தியன் ஸ்டைல் என்று தெரிய, வேறு யாரும் மனத்தை மாற்றிக் கொள்ளும் முன் அதனுள்ளே வேகமாக நுழைந்து விட்டாள் மணி.

ஓய்வறையை உபயோகித்து விட்டு வெளியே வந்தவள், மீண்டும் கைகளை கழுவிக் கொள்ளும் போது அங்கே காத்திருந்தவர்களோடு அவளை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவள் உடுத்தியிருந்த புடவை அவளுக்கே பிடிக்காததனால் அவள் மீதே கோபமாக வந்தது. திவ்யாவிற்காக வாங்கிய உடைகளில் சிலது அவளுக்குப் பொருந்தாமல் போகும் போது இவளிடம் வந்து சேரும். அவை உயர்தரமாக இருந்தாலும் இவளுக்கும் சுற்றும் பொருந்தாதவைகளாக தான் இருக்கும்..அப்படிப்பட்ட உடைகளை தான் இவள் புறம் அனுப்பி விடுவாள் திவ்யா. அந்த உயரரக உடைகள் அனைத்தும் வீட்டில் இருந்தன. ஸ்கூலிற்கு உடுத்தி செல்லும் புடவைகளில் இரண்டு, வீட்டில் அணியும் சல்வார் கமீஸ் மூன்று, அர்ஜுனுக்கு நான்கு உருப்படிகள் என்று எண்ணி தான் எடுத்து வந்திருந்தாள். 

பகல் பொழுது வீட்டிலும் மாலைப் பொழுதுகள் அப்பார்ட்மெண்ட் பூங்காவிலும் கழிந்ததால் நல்ல உடைகள் தேவைப்படவில்லை. இப்பொழுது கூட டாக்ஸி பயணத்திற்காக அவளிடமிருந்த உடைகளில் சிறந்ததை தான் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தாள். இஸ்திரி போடாததால் சுருக்கங்களோடு சுருணைப் போல் தெரிந்தது. மற்றப் பெண்களின் உடைகளைப் பார்க்க பார்க்க அவள் ஒரு மாதிரி உணர, அந்த உணர்வை அவள் அடக்க முயல், அது அடங்காமல் மேல் எழும்ப, அதற்கு காரணமான உத்தம் மேல் கோபம் ஏற்பட்டது.

’ப்ளேன்லே அழைச்சிட்டுப் போங்கண்ணு நான் கேட்டேனா? பஸ் டர்மினஸ்லே விட்டிருந்தா நானே போயிருப்பேனே…எதுக்கு இப்போ ப்ளேன்லே அழைச்சிட்டுப் போறாங்க? அப்படி என்ன அவசரம்?’ என்று யோசித்தபடியே அவளது புடவையை லேசாக உயர்த்த, பாதங்களில் வெகு பொருத்தமான காலணிகளைப் பார்த்ததும் மனோன்மணியின் கோபம் பறந்தோடியது.