அத்தியாயம்-20

“அண்ணா, அண்ணா” என்ற அர்ஜுனின் கூச்சலும் அதைத் தொடர்ந்து கலகலவென்ற சிரிப்பும் அந்த இடத்தின் அமைதியை அடித்து விரட்டியிருந்தது. பெரியவர்கள் மூவரும் நதிக் கரையில் அமர்ந்திருக்க, உத்தம், அர்ஜுன் இருவரும் போட்டா போட்டியாக நதியிலேயே குடியிருக்க, மணி தான் நீருக்கும் நிலத்திற்கும் இடையே அல்லாடிக் கொண்டிருதாள். அவளது அதட்டல், மிரட்டலுக்குக் கட்டுப்படுவது போல் நடித்து, அவள் அகன்றதும் அவனது திறமையை காட்டும் பொருட்டு நீருக்குள் மூழ்கி சில நொடிகளுக்கு காணாமல் போய் திடீரென்று வேறொரு இடத்தில் மேலெழுந்து விளையாட்டு என்ற பெயரில் மணியின் வயிற்றில் அச்சத்தை விதைத்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

‘வேணாம் டா..வேணாம் டா..போதும்..போதும்.’ என்ற மணியின் மிரட்டலுக்கும் கெஞ்சலுக்கும் கொஞ்சமும் அவன் செவி சாய்க்கவில்லை. அன்றைய தினம் தான் கடைசி என்பது போல் ஆனந்தமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அந்த எண்ணத்தை  ஊக்குவிக்கும் விதமாய் அவனுக்கு சமமாய் அவனோடு சேர்ந்து கொட்டம் அடித்துக் கொண்டிருந்தான் உத்தம். பொறுத்து பொறுத்துப் பார்த்த மணி, வேகமாக சிவமூர்த்தி இருக்குமிடம் வந்தவள்,

“மாமா, ஒரு மணி நேரம் மேல தண்ணீர்லே விளையாடிட்டு இருக்கான் அர்ஜுன்..அவனை வெளியே வரச் சொல்லுங்க.” என்று முறையிட்டாள்.

“நல்ல ஆள்கிட்டே நீ சிபாரிசுக்கு வந்திருக்க.” என்று காவேரி பரிகாசம் செய்ய,

“அப்போ நீங்க உங்க மகனை வெளியே வரச் சொல்லுங்க.” என்று மணி பட்டென்று பதில் கொடுக்க,

அதில் பெரியவர்கள் மூவரும் அதிர்ச்சியாகினர். ‘எப்படி இப்படிப் பேசினோம்’ என்று மணியும் கூட அதிர்ச்சியில் தான் இருந்தாள். அவளது முகத்தில் தெரிந்த அதிர்வைக் கண்டு கொண்ட சிவமூர்த்தி, அவருடைய மனைவி எதுவும் சொல்லுமுன்,”இவ்வளவு தண்ணீரைப் பார்த்ததும் ஆசை வந்திருக்கும்..சின்ன பிள்ளை தானே..ரொம்ப பயமா இருந்தா நீயே ஆத்திலே இறங்கி இழுத்திட்டு வந்திடு.” என்றார்.

அதற்கு,“இவளும் எதுக்கு தண்ணீர்லே இறங்கணும்? உத்தம் இருக்கானே.” என்றார் காவேரி.

“அவனுக்கு இந்த மாதிரி நதிலே நீந்திப் பழக்கம் இல்லை காவேரி..அவன் நீச்சல் குளத்திலே தான் அதிகமா நீந்தி இருக்கான்..அர்ஜுன் அப்படிக் கிடையாது. ” என்றார் சிவமூர்த்தி.

“அதனாலே என்ன? நீந்த தெரிஞ்சா போதும்..எல்லாத் தண்ணீரும் தண்ணீர் தானே.” 

“அப்படி இல்லை மாமி.” என்று மணி மறுப்பு தெரிவித்த போது,”அக்கா, அக்கா” என்று குரல் கேட்க, மூவரும் குரல் வந்த திசையை நோக்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேகமாக ஓடிக் கொண்டிருந்த நீர் தான் தெரிந்தது ஆள் தென்படவில்லை. 

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த மீனாம்மா டக்கென்று எழுந்து கொண்டு, குரல் வந்த திசையைப் பார்த்தவர், பதற்றத்துடன்,”ஆளைக் காணலையே..வேகமாப் போ மணி..உத்தம் தம்பியும் காணலை.” என்றவுடன் காவேரியிடமும் பதற்றம் ஏற்பட்டது.

ஒரு நொடி கண்ணெதிரே நின்றிருந்த மணி அடுத்த நொடி அங்கே இல்லை.  அடுத்து வந்த நிமிடங்கள் யுகம் போல் கழிய, பல வருடங்களுக்கு முன்பு காவேரி கரையில் நடந்த இதே போன்றதொரு சம்பவம் மீனாவின் மனத்தை ஆள்கொள்ள, சிவமூர்த்தியை அவர் அர்த்தமாக நோக்க, மீனாவின் மனத்தில் ஓடும் எண்ணங்களை உணர்ந்த சிவமூர்த்திக்கு ஆறுதல் வார்த்தைகள் கிடைத்தாலும் அதை வெளிப்படுத்த முடியாத தனது நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார். 

இனிப் பொறுமையாகக் காத்திருக்க முடியாதென்று உணர்ந்த மீனா,”நீங்க இங்கே உட்கார்ந்திருங்க..நான் போய் பார்க்கறேன்.” என்று எழுந்து கொள்ள, “நானும் வரேன்.” என்று காவேரியும்  சொல்ல, சிவமூர்த்தி வாயைத் திறக்குமுன் பெண்மணிகள் இருவரும் மற்ற மூவரைத் தேடிச் சென்றனர்.

இதுவரை காவேரியும் மீனாம்மாவும் எங்கேயும் சேர்ந்து சென்றதில்லை. அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவமூர்த்தியின் மனத்தில் இத்தனை வருடங்களாக உறுத்திக் கொண்டிருந்த ஒன்று இப்போது இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்திருந்தது. அவரது கோரிக்கைக்கு மனைவி மறுப்பு தெரிவித்தால் வேறு ஏற்பாடு தான் செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தவருக்கு இனி அதற்கான அவசியம் ஏற்படாதென்று தான் தோன்றியது.

அவருடைய மகனைப் பற்றிய ஒரு பயம் எப்போதும் காவேரிக்கு உள்ளே வாசம் செய்து வந்ததால் எதையும் யோசிக்காமல் மீனாவைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் மூச்சு வாங்கிக் கொண்டு நடந்து வந்த காவேரியைப் பற்றி கவலைப்படாமல், தனது உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் வெகு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார் மீனா. காவேரியைப் போல் அவரையும் அச்சம் ஆட்கொண்டிருந்தது. கடவுள்களைப் பிரார்த்தனை செய்தபடி சென்றவரின் கண்களில் நதிக் கரையின் திருப்பத்தில் மற்ற மூவரும் தென்பட்டனர். 

கண்களில் கண்ணீருடன் அவனது வலது முழங்கையை இடதுக் கையால் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான் அர்ஜுன். மணியும் உத்தமும் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் இருவரையும் முதலில் பார்த்த அர்ஜுன் உரக்க அழுதபடி அவர்களை நோக்கி வர, பாய்ந்து சென்று,”என்ன டா ஆச்சு..உன்னைக் காணும்னு பயந்து போயிட்டேன்.” என்றார் மீனா.

“பாட்டி, இந்த அக்கா, அக்கா..” என்று மணியைக் காட்டி அழுதவன் வாயிலிருந்து அடுத்து வார்த்தைகள் வரவில்லை.

அப்போது தான் மணி முழுமையாக நனைந்திருந்தது மீனாவின் கண்ணில் பட்டது. மணியின் விளக்கத்திற்குக் காத்திராமல்.”ஊர்லே பேட்டை தண்ணீ அமைதியா இருந்தாலும் உள்ளே இழுத்துக்கும்னு தெரியுமில்லே.. அங்கே போக மாட்டேயில்லே…இங்கே எதுக்கு போன? நல்லவேளை உன் அக்கா வந்திட்டா..இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்னு என்னாலே யோசிக்க கூட முடியலை..” என்றார் மீனா.

“இது ஒண்ணும் பேட்டை கிடையாது.” என்று விசும்பலுடன் பதில் அளித்தான் அர்ஜுன்.

அதற்குப் பதில் அளிக்க மணி வாயைத் திறக்குமுன்,”தண்ணீர்லே இறங்கறத்துக்கு முன்னாடி நான் உன்கிட்டே என்ன சொன்னேன் அர்ஜுன்? என்ன சொன்னேன்?” என்று உத்தம் குரலை உயர்த்த,

“உங்ககூட தான் இருக்கணும்..தனியாப் போகக் கூடாதுன்னு சொன்னீங்க.” என்றான் அர்ஜுன்.

அப்போது, காவேரி,”என்ன டா நடந்திச்சு?” என்று உத்தமிடம் கேட்க, அவன் அதற்கு பதிலளிக்குமுன்,

“மாமி, நாங்க வீட்டுக்குப் போறோம்..எங்களை பஸ் ஏத்தி விடுங்க.” என்று காவேரியிடம் கோரிக்கை வைத்தாள்.

அதற்கு,”அம்மாவா உன்னை அழைச்சிட்டு வந்திருக்காங்க..நான் தான் அழைச்சிட்டு வந்தேன்..நான் எப்போ வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேனா அப்போ தான் நீ போக முடியும்.” என்றான் உத்தம்.

உடனே,”இவன் தண்ணீக்குள்ளே போயிட்டான் மாமி..நான்..” என்றவளை இடைமறித்து,

“அவனை ஒண்ணும் தண்ணி இழுத்திட்டுப் போகலை..அவன் தனியாவும் இல்லை..நானும் அவனும் விளையாட்டா..” என்றவனை இடைமறித்து,

“பத்து வயசு பையன் அவன்..மூச்சுப் பிடிச்சிட்டு தண்ணீர் உள்ளே எத்தனை நேரம் இருக்கப் போறான்? இதெல்லாம் ஒரு போட்டியா? அறிவில்லை உங்களுக்கு.” என்று பொரிந்தாள் மணி.

“என்னை விட அதிக நேரம் இருந்தான்..இன்னும் இருந்திருப்பான்..அதுக்குள்ளே பைத்தியம் மாதிரி தண்ணீர்லே குதிச்சு, அவனைப் பயமுறுத்தி அமர்க்களம் செய்திட்ட நீ..சூழ்நிலை கைமீறிப் போயிருக்கும்..” என்று உத்தம் தொடரமுன்.

‘ஓ’ என்று அழுதபடி  தம்பியைக் கட்டிக் கொண்டாள் மணி. அக்காவின் அழுகை தம்பியின் விசும்பலை நிறுத்தியிருந்தது. மணியின் மனநிலையின் கணத்தைப் புரிந்து கொண்ட காவேரி,”டேய் பைத்தியக்காரா, அவ செய்ததிலே எந்தத் தப்புமில்லை..சின்ன புள்ளை அவன்…சாரதிக்கு அவ தானே பதில் சொல்லணும்.” என்று அவர் பங்கிற்கு மகன் மீது பாய்ந்தார்.

அதைக் கேட்டு கோபத்தில் முகம் இறுகிப் போய் நின்றிருந்த உத்தமைச் சமாதானம் செய்ய,”மணிக்கு மட்டுமில்லை எனக்கும் இவன் குரல் மட்டும் கேட்டு ஆளைக் காணும்னதும் பயமாப் போயிடுச்சு தம்பி..நீங்களும் கண்ணுலே படலை..ஊர்லே பேட்டை சுழல் இப்படித் தான் அமைதியா நிறைய பேரை முழுங்கியிருக்கு..குரல் கேட்கற அதே நொடி ஆள் காலி..மணி மேலே தப்பில்லை தம்பி..அவளைப் போல நானும் தண்ணீர்லே குதிச்சிருப்பேன் தம்பி.” என்றார் மீனா.

அந்தச் சமாதானம் அவனைச் சமாதானம் செய்வதற்குப் பதிலாக அவனது கோபத்தைக் கிளறி விட,”என் மேலே உங்களுக்கும் நம்பிக்கையில்லையா மீனாம்மா?” என்று அவன் அதை வெளியிட,

“ஐய்யோ அப்படியில்லை தம்பி..கண்ணுக்கு அழகா தெரியற தண்ணி ஆபத்தானதும் கூட…ஓர் ஆளைக் காப்பாத்த நாலு ஆள்கள் தேவைப்படும்..தண்ணீர்லே நடக்கற விபரீதம் தரைலே நடக்கற விபத்து மாதிரியில்லே.” என்று விளக்கம் கொடுத்தார்.

“மீனா சொல்றது சரி..தரைலே விபத்து நடந்தா டக்குன்னு ஒரு பக்கமா இழுத்துப் போட்டு இல்லை தள்ளி விட்டு எதையாவது செய்து கை, கால் போனாக் கூட உயிரைக் காப்பாத்திடலாம்..தண்ணீர்லே அந்த மாதிரி முடியாதில்லே..தப்பா எதுவும் நடக்கலைன்னு நினைக்காம நல்லவேளை தப்பிச்சிட்டோம்னு நினைச்சுக்க..” என்றார் காவேரி.

“அம்மா” என்று ஆரம்பித்தவனிடம்,

“போதும் இந்தப் பேச்சு..குரங்கு கூட்டத்துக்கு நடுவே உங்கப்பாவைத் தனியா விட்டிட்டு வந்திருக்கோம்..சீக்கிரமாப் போகலைன்னா ஈரத் துணியோட தான் நீங்க திரியணும்.” என்றார் காவேரி.

உடனே,”அய்யோ மாமி, என்னோட புது டிரெஸ்..குரங்கு கொண்டு போயிருச்சா.” என்று அலறிய அர்ஜுன், அதற்கான பதிலிற்குக் காத்திருக்காமல், மணியின் பிடியிலிருந்து விடுபட்டு சிவமூர்த்தி இருக்குமிடத்தை நோக்கி ஓடினான்.

“டேய்..டேய்..இல்லை டா.” என்ற காவேரியின் பதிலைக் கேட்க அவன் அங்கில்லை. 

அப்போது ஆற்றை நோக்கி சின்ன குழு ஒன்று வர, “கூட்டம் வர ஆரம்பிச்சிடுச்சு..கிளம்பலாம்.” என்று பெண்கள் மூவரிடமும் சொல்லி விட்டு அர்ஜுன் சென்ற திசையில் விரைந்தான் உத்தம். 

 

சற்றுமுன் நடந்த நிகழ்வை அசைப் போட்டபடி மூவரும் சிவமூர்த்தி இருந்த இடத்தை சென்றடைந்தனர். பைகள் எல்லாம் பத்திரமாக இருந்ததால் அர்ஜுனின் முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும். மணி வந்தவுடன்,

“அக்கா, என்னோட டிரெஸ் எடுத்துக் கொடு..மாத்திக்கணும்.” என்றான்.

பத்திரப்படுத்தி வைத்திருந்த அவனது கைப்பேசியை வெளியே எடுக்கும் முயற்சியில் இருந்தான் உத்தம்.

அவனுடைய மாற்று உடுப்பைக் கையில் வாங்கிய அர்ஜுன், திடீரென்று,”மீனா பாட்டி, பேட்டை சுழல் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க, திகைத்துப் போன மீனா சிவமூர்த்தியை நோக்கிப் பார்வையைத் திருப்ப, இந்தக் கேள்வி எப்படி அவன் வாயிலிருந்து வந்தது என்று திடுக்கிட்டுப் போய் அமர்ந்திருந்தார் சிவமூர்த்தி. காவேரியின் முகத்தில் முதலில் அதிர்ச்சி அதை அடுத்து அச்சம் அவரது முகத்தை அப்பியது.