இரவு உணவு நேரம் வரை வீடு திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. உத்தமின் அட்டகாசத்தில் காவேரிக்கு தலைவலி வராத குறை தான். வரவேற்பறையில் சேகரிக்கப்பட்டிருந்த பைகள் ஒன்றில் எதையோ திணித்துக் கொண்டிருந்த மணியிடம்,”மணி, நாளைக்குக் காலைலே போயிட்டு இராத்திரி வந்திடுவோமில்லே?” என்று கேட்டார்.
‘உங்க மகன் என்ன செய்யப் போறாங்க, எப்படிச் செய்யப் போறாங்கண்ணு நம்மளைப் படைச்ச கடவுளுக்கு கூட தெரியுமோ தெரியாதோ..என்னை வந்து கேட்கறீங்க?’ என்று கேட்க நினைத்த மணி அப்படிக் கேட்காமல்,”ஆமாம் மாமி.” என்று பதிலளித்தாள்.
“அப்போ எதுக்கு இத்தனை சாமானைத் தூக்கிட்டுப் போறோம்?” என்று காவேரி சிடுசிடுக்க,
“எல்லோருக்கும் ஒரு செட் மாற்றுத் துணி எடுத்திட்டு வரச் சொல்லியிருக்காங்க..அதுக்கு மூணு பேக் ஆகிடும்.” என்றாள்.
“சின்னவனும் அவனும் எங்கே போயிருக்காங்க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.
“அவளுக்கு எப்படித் தெரியும்? அறையிலே இருந்த அர்ஜுனை கூட்டிட்டு உன் கண்ணெதிரே தானே கிளம்பிப் போனான்..அவன்கிட்டேயே கேட்க வேண்டியது தானே.” என்று காவேரியின் விசாரணையிலிருந்து மணியைக் காப்பாற்றி விட்டார் சிவமூர்த்தி.
மாலையிலிருந்து அவர்கள் இருவரும் வீட்டின் கீழ் தளத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அனைத்து நிகழ்வுகளும் சம்பாஷணைகளும் அவர்கள் கண்ணெதிரே நடக்க, மனைவியின் கேள்விகள் அர்த்தமில்லாத கேள்விகளாக தோன்றின சிவமூர்த்திக்கு.
“நான் ஒண்ணு கேட்டா அவன் ஒண்ணு சொல்றான்..எந்தக் கேள்விக்காவது நேரடியாப் பதில் சொல்றானா?” என்று பொங்கினார் காவேரி.
“நாளைக்கு ஒரு நாள் வெளியே போறோம்னு சொன்ன பிறகு எதுக்கு, ஏன், எந்த இடம்னு வரிசையா கேட்கற..’என் மேலே நம்பிக்கை இல்லைன்னா வராதீங்கண்ணு’ அவன் சொல்றான்..’என்னை மட்டும் வீட்லே விட்டிட்டு போவியான்னு? ஏடாக்கூடமாக் கேட்கற..இந்த மாதிரி எதையாவது எக்குத்தப்பா கேட்டிட்டு இருந்தா அவனுக்கு எரிச்சல் தான் வரும்..வாயை மூடிட்டு இரு..அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான்.” என்றார் சிவமூர்த்தி.
“இத்தனை வருஷமா இந்த வீட்டை நான் தான் நடத்திட்டு இருந்தேன்..இவன் எதிலேயும் தலையிடாம ஹாயா இருந்தான்..இப்போ இவனைக் கேட்டு தான் நான் கொட்டாவி விடுனும்னு சொல்வான் போல.” என்று காவேரி கடுப்பாக உரைக்க, அதைக் கற்பனையில் கண்ட மணிக்கு சிரிப்பு பொங்கியது.
உண்மையில் உத்தமின் நடவடிக்கைகள் அப்படித் தான் இருக்கிறது. வீட்டு வாயிலில் டாக்ஸி வந்த போது தான் அவன் வெளியே செல்லப் போகு விஷயம் வீட்டினர்க்கு தெரிய வந்தது. மீனாம்மாவுக்குத் துணையாக அறையில் இருந்த அர்ஜுனை ‘வா டா என்னோட’ என்று அழைத்துச் சென்று விட்டான் உத்தம்.
சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்த போது சிவமூர்த்தி, காவேரி இருவரும் வரவேற்பறையில் தான் அமர்ந்திருந்தனர். அர்ஜுனின் கையில் பெரிய பை இருந்தது. வீட்டின் உள்ளே நுழைந்தவுடனேயே சோஃபாவில் அமர்ந்திருந்த காவேரியிடம்,”மாமி, அண்ணா எனக்கு டிரெஸ் வாங்கி கொடுத்திருக்காங்க.” என்றான் சின்னவன்.
“எதுக்கு புது டிரெஸ்?” என்று கேட்டவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அர்ஜுனுக்கு.
“போய் உன் அக்காகிட்டே கொடு..அதிலே இருக்கறதை நாளைக்குக் எடுத்திட்டு வரணும்னு சொல்லு.” என்று அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தான் உத்தம்.
துள்ளளோடு அர்ஜுன் அங்கிருந்து சென்றவுடன்,”அவன்கிட்டே ஸுவிம்மிங் ட் ரங்க்ஸ் இல்லை..அதை வாங்க தான் வெளியே கூட்டிட்டுப் போனேன்..அப்படியே ஒரு ஜோடி டீ ஷர்ட் ஷார்ட்ஸ் வாங்கினேன்.” என்றான்.
“நாளைக்கு எங்கே டா போறோம்?” என்று கஜினி காவேரி கேட்க, ஒரு புன்சிரிப்போடு,”நாளைக்கு சொல்றேன்.” என்று ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் பதில் கொடுக்க,
“தேவையில்லை..நாளானைக்கு சொல்லு.” என்று காவேரி கோபமாக பதில் கொடுக்க, கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டுச் சிரித்தார் சிவமூர்த்தி.
“அம்மா” என்று காவேரியைச் சாமாதானம் செய்ய அவரருகே உத்தம் வந்தபோது வாசலில் வண்டி சத்தம் கேட்டது.
“நம்ம வண்டி மாதிரி இருக்குது.” என்று காவேரி சொல்ல, வாயிலுக்குச் சென்றான் உத்தம்.
கால்மணி நேரமாகியும் வாயிலுக்கு சென்ற உத்தம் வீட்டிற்குள் வரவில்லை.”என்னென்னு போய் பாருங்க.” என்று கணவரை நச்சரித்தார் காவேரி.
“இனி அவன் தான் எல்லாத்தையும் பார்க்கப் போறான்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு என்னை அனுப்பற?” என்று சிவமூர்த்தி பதில் கொடுக்க, பட்டென்று வாயை மூடிக் கொண்டார் காவேரி.
மேலும் சில நிமிடங்கள் கழித்து உத்தம் வீட்டிற்குள் வந்த போது அவன் கையில் வண்டி சாவி இருந்தது. லோகுவுடன் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்று சொல்லாமல்,”அம்மா, நாளைக்கு காலைலே கரெக்ட் டயத்துக்கு ரெடியா இருக்கணும் நீங்க.” என்று ஆர்டர் போட்டு விட்டு மேல் விசாரணைக்கு வாய்ப்பு அளிக்காமல் மாடிப்படி ஏறி மேலே சென்று விட்டான்.
அடுத்த நாள் காலையில் ஏழு மணி போல் அனைவரும் தயாராகி இருந்தனர். சாமான்கள் அனைத்தையும் டிக்கியில் போட்டு விட்டு மணி, அர்ஜுனை முதலில் வண்டியில் ஏற்றி பின்பக்க இருக்கையில் அமர வைத்தான் உத்தம். மீனாம்மா, காவேரி இருவரும் நடு இருக்கையில் அமர, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த உத்தம் வண்டியை ஆன் செய்ய, அவனுக்கு அடுத்து அமர்ந்திருந்த சிவமூர்த்தி ஒரு நொடிக்கு கண்களை மூடி கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். அவர் எதிர்பார்க்காத ஒன்று, அவரது வாழ் நாளில் நடக்கவே நடக்காது என்று எண்ணியிருந்த ஒன்று இன்று, இப்போது நடக்கிறது. எத்தனை முறை கடவுளுக்கு நன்றி சொன்னாலும் மீண்டும் மீண்டும் நன்றி சொல்லத் தோன்றியது அவருக்கு. அதே சமயம் தலையைத் திருப்பி பின்பக்கத்தைப் பார்க்கவும் பயமாக இருந்ததது அவருக்கு. அனைத்தும் கனவு என்றாகிப் போய் விடுமோ என்ற நினைப்பை அவரால் ஒதுக்கி வைக்க முடியவில்லை. அதன் விளைவாக அவரது முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக கவலை குடியேறியிருந்தது.
சின்னவன் அர்ஜுன், பெரியவன் உத்தமைத் தவிர மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பெயருக்கு கூட இல்லை. சஞ்சலமும் கவலையும் தான் அப்பி இருந்தது. இனிமையான காலை வேளை பயணத்தை அனுபவிக்காமல் கடனே என்று அமர்ந்திருந்தனர் மீனா, மணி இருவரும். காவேரியின் மனநிலை காவேரிக்கே புரியவில்லை. ஒருநாளும் இப்படியொரு நாள் வருமென்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. நேற்றிலிருந்து பலவாறு யோசித்து பல்வேறு தீர்வுகளை அலசி ஒன்றும் கைவராமல் தோல்வியைத் தழவியிருந்தார். அன்றைய சூழ்நிலையில் அவருக்கு அறிவுரை ஆலோசனை அளித்த பெரியவர்கள் யாரும் இன்று இந்த உலகத்திலே இல்லை. இப்போது கணவர், மகன் இருவரைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் தலையிட முடியாது, முடிவு எடுக்க முடியாது என்பதால் கடவுள் விட்ட வழி என்று மனத்தை தேற்றிக் கொண்டு விட்டார்.
அனைவரும் அவரவர் சிந்தனையில் அமிழ்ந்திருந்த போது திடீரென்று ஒரு பெரிய பள்ளத்தில் வேகமாக இறங்கி அதே வேகத்தில் வெளியேறிய வண்டி காவேரியின் இடுப்பை பதம் பார்த்திருக்க,”இதுக்கு தான் நீ ஓட்ட வேணாம் லோகுவை அழைச்சிட்டுப் போகலாம்னு சொன்னேன்…கேட்டியா நீ? இரண்டு வயசானவங்க பின்னாடி உட்கார்ந்திருக்கறது உன் மூளைக்கு எட்டலையா?” என்று காவேரி கத்த, உத்தம் பதில் அளிக்கும் முன்,
“மாமி, நான் தான் பின்னாடி உட்கார்ந்திருக்கேன்..எனக்கு பத்து வயசு தான் ஆகுது..அக்காக்கு” என்ற அர்ஜுனை இடையிட்டு,
“டேய் சின்னவனே, சுண்டக்கா, நான் என்னையும் மீனாவையும் சொன்னேன்..நீயும் உன் அக்காவும் மேலேயும் கீழேயும் குதிச்சு குதிச்சு வந்தாலும் உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.” என்றார் காவேரி.
“நான் சின்னவனுமில்லை..சுண்டக்காவுமில்லை” என்று காவேரியுடன் சண்டையிட ஆரம்பித்தவனின் கையைப் பிடித்து அழுத்தி,”அர்ஜுன்” என்று அதட்டி அவன் வாயை அடைத்தாள் மணி.
அவனது கோபத்தைக் காட்ட அக்காவிடமிருந்து நகர்ந்து ஜன்னலோரமாக அமர்ந்து கொண்டான் அர்ஜுன். அவனது முகப் பாவத்தை ரியர்வியூ கண்ணாடி வழியாக பார்த்த உத்தம்,”அர்ஜுன், நீ கொஞ்சம் ஹைட் ஆகியிருக்க..உன்னோட மாமிக்குத் தான் சரியா கண்ணு தெரியலை.” என்று அவனைச் சமாதானம் செய்ய, அர்ஜுன் மசியவில்லை.
“நாம திரும்பி வரும் போது நீ முன்னாடி வந்து உட்கார்.” என்று அவனது கவனத்தை கவர முயற்சி செய்ய, சமாதானம் அடையாமல் முகத்தைத் தூக்கி வைத்து அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
அவன் தான் இந்தப் பயணத்தின் உயிரோட்டம் என்று புரிந்திருந்ததால்,”உனக்கு என்ன பாட்டு வேணும்னு சொல்லு..போடறேன்.” என்று மேலும் சமாதான முயற்சியில் இறங்கினான் உத்தம்.
மணியின் அறையில் டி வி கிடையாது. அவளுடைய பட்டன் கைப்பேசி தான் அர்ஜுனுக்கு தெரியும். மற்றொரு கைப்பேசியைப் பள்ளிக்கூடம் சம்மந்தப்பட்ட வேலைகளுக்காக வைத்திருந்ததால் அதை அவனிடம் அவள் கொடுப்பதில்லை. வெளியுலகம் அதிகம் பார்த்திராதவனுக்கு பாட்டு பற்றி என்ன தெரியப் போகிறது என்று அனைவரும் எண்ணியிருக்க,
அவன் சொன்ன பாட்டை அவனது கைப்பேசியில் தேடிப் பிடித்து அதை ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்து வண்டியில் ஒலிக்க விட்டான் உத்தம். அந்தப் பாட்டு அவனுக்கு எப்படி அறிமுகமாகி இருக்கும் என்று சரியாக யுகத்திருந்தாலும் அதை ஊர்ஜிதம் செய்து கொள்ள பாட்டு முடியும் வரை அமைதியாக இருந்த காவேரி, அது முடிந்ததும்,”எங்கே டா கேட்ட இந்தப் பாட்டை.” என்று அர்ஜுனிடம் கேட்டார்.
அந்தப் பாட்டு அவனது கோபத்தைக் காணாமல் போகச் செய்திருந்ததால், சந்தோஷமாக,“சாரதி அண்ணா வீட்லே.” என்றான்.
”அண்ணியோட அண்ணன் எப்போதும் இந்தப் பாட்டை சத்தமா போட்டு விடுவாங்க.” என்று மணி விளக்கம் கொடுக்க, இனி சின்னவனையும் மணியையும் சாரதியின் வீட்டிற்கு அனுப்புவது உசிதமானதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தார் காவேரி.