கதவு சாத்தியிருந்தது. அதைத் திறக்க தயக்கமாக இருந்தது சிவமூர்த்திக்கு. அந்த அவகாசத்தில் அவசர அவசரமாக அங்கே வந்த காவேரி,”என்ன ஆச்சு உங்களுக்கு? இதைப் பற்றி ஏற்கனவே பேசி முடிவு எடுத்ததை மறந்து போயிட்டீங்களா? அப்படியே மறந்து போயிருந்தாலும் இப்போ நீங்க செய்யப் போகறது எத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்தும்னு யோசிச்சு பாருங்க? விஷயம் தெரிஞ்சா சம்மந்திங்க வீட்லே சும்மா இருக்க மாட்டாங்க..நம்மளை கேவலமா பேசுவாங்க.” என்று படபடத்தார்.
“பேசட்டும்.” என்றார் சிவமூர்த்தி.
“இதுக்கு தான் அன்னைக்கே ‘வீட்டுக்குள்ளே விட்டா உனக்கு என்னைக்கும் பிரச்சனை தான்னு’ எங்கப்பா சொன்னாங்க’ நான் கேட்டுக்கலை..உங்களை நம்பினதுக்கு அனுபவிக்கப் போறேன்.” என்றார்.
“உனக்கு எந்தச் சங்கடமும் வரக் கூடாதுன்னு தான் நான் இருக்கும் போதே இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்னு நினைக்கறேன்.” என்று தெளிவாக அவரது முடிவைச் சொன்னார் சிவமூர்த்தி.
கணவரின் முடிவை மாற்ற முடியாதென்று உணர்ந்த காவேரி,”சரி..உங்க விருப்பப்படி செய்யலாம்..அதுக்குன்னு இப்படித் திடுதிடுப்புன்னு என்னாலே முடியாது..எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை.” என்றார்.
அவரது முடிவை எதிர்க்காமல் அதை ஏற்றுக் கொண்ட மனைவியின் கோரிக்கையை மறுக்க முடியாமல் மீனாவின் அறைக் கதவு வரை வந்த சிவமூர்த்தி வந்த வழியே திரும்பிச் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டார். பெரிய சிக்கலிருந்து காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லியபடி கணவர் அருகில் காவேரி அமர,”எத்தனை நாள் தேவைப்படும்?” என்று கேட்டார் சிவமூர்த்தி.
“இப்படிக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும்?” என்று காவேரி பதில் கேள்வி கேட்க,
மனைவியையும் மீனாவின் அறையையும் மாறி மாறி பார்த்தபடி,“இனியும் காலம் தாழ்த்த எனக்கு விருப்பமில்லலை காவேரி.” என்றார் சிவமூர்த்தி.
“பல வருஷம் முன்னாடியே இதைப் பற்றி பேசி முடிவு எடுத்தாச்சுங்க..யாருக்கும் தெரிய வேணாம்..நமக்கு அப்புறம் பாதுகாப்பான இடத்திலே விடணும்னு உங்க பிரண்ட் நரசிம்மன்கிட்டே சொல்லி வைச்சிருக்கு..இப்போ திடீர்னு அதை மாத்த நினைக்கறீங்க..எப்படி அதைச் செய்யறது, என்ன செய்யறதுன்னு யோசனை செய்யணும் தானே.” என்றார் காவேரி.
“கடைசிவரை நம்மளோட தான்..நமக்கு பிறகு உத்தமோட தான்.” என்று பட்டென்று பதிலளித்தார் சிவமூர்த்தி.
அந்த முடிவைத் தான் கணவர் எடுத்திருப்பார் என்று காவேரி யுகித்திருந்தாலும் அதைக் கேட்ட போது உள்ளமானது அதிர்ந்து தான் போனது.காவேரி எதிர்வினை ஆற்றுமுன் அவரது கைப்பேசி ஒலித்தது. இந்திராவிடமிருந்து அழைப்பு. மகளின் அழைப்பை ஏற்க மனமில்லை என்றாலும் கணவருடனான உரையாடலை தவிர்க்க அதை ஏற்றார் காவேரி. எப்போதும் போல் அவளது புராணத்தைப் படித்த இந்திரா பெற்றவர்களின் நலனைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. உத்தம் சொன்னது அவரை உறுத்திக் கொண்டிருந்ததால்,”நாங்க எப்படி இருக்கோம்? நல்லபடியா வீடு வந்து சேர்ந்தோமா? சாப்பிட்டோமான்னு உனக்கு விசாரிக்க தோணுதா..உன் கதையைத் தான் பேசிட்டு இருக்க.” என்றார்.
அதற்கு,“இரண்டு மணி நேரத்திலே உங்களுக்கு என்ன ஆகிடப் போகுது? ஆக்கிப் போட தான் இரண்டு பேர் இருக்காங்களே..என்னைத் தான் வீட்டுக்காரரோட அனுப்பி விட்டிட்டுடீங்க..இரண்டு சின்ன குழந்தைங்களை வைச்சுக்கிட்டு அல்லாடிட்டு இருக்கேன்.” என்று எரிச்சலுடன் பதில் அளிக்க, ‘உன் பிள்ளைங்களை நீ தான் பார்த்துக்கணும்..அந்த வரம் கிடைக்க எத்தனை தவம் செய்த..உன்னோட சேர்ந்து நாங்களும் எத்தனை கஷ்டத்தை அனுபவிச்சோம்.’ என்று வாய் வரை வந்த பதிலை பின்னணியில் கேட்ட குழந்தைகளின் அழுகை சத்தம் விரட்டி விட்டதால்,”முதல்லே பிள்ளைங்களைப் பார் இந்து..நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வைச்சுக்கலாம்.” என்று அந்த அழைப்பை முடித்தார்.
அலைப்பேசி உரையாடலை கேட்டு கொண்டிருந்த சிவமூர்த்தி,“அக்கறை எல்லாம் ஆரம்பித்திலிருந்து இருக்கணும்..இடையிலே வரவழைக்க முடியாது..இந்த விஷயத்திலே தவறு செய்தது நாம தான்.” என்று சொல்லி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தார். மகள்களைக் குறை சொன்னால் ஏதாவது பதில் வைத்திருக்கும் காவேரி வழக்கத்திற்கு மாறாக அமைதி காத்தார்.
கணவன், மனைவி இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தாலும் அவர்களின் உள்ளமானது பயங்கரமாக சத்தம் செய்து கொண்டிருந்தது. அகிலாவின் வீட்டு விசேஷத்தில் கிடைத்த விசேஷமான கவனிப்பு காவேரியின் மனக் குளத்தில் கல் எறிந்து நீர் அலைகளைக் கிளப்பி விட்டிருந்தது. பல குழப்பங்கள், இன்னல்களுக்கு இடையே இத்தனை வருடங்களாக அவர் கட்டிக் காத்து வந்த குடும்பம் இனியும் ஒற்றுமையாக இருக்கப் போவதில்லை என்ற உண்மை புரிய, எதிர்காலத்தை நினைத்துக் அச்சம் வந்தது.
அந்த நேரம் அவரது அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த மீனாட்சி திறந்திருந்த வாசல் கதவையும் வரவேற்பறையில் அமைதியாக அமந்திருந்த தம்பதியையும் பார்த்து திகைத்தவர் ஓசை எழுப்பாமல் சமையலறைக்கு சென்று விட்டார். மணி, அர்ஜுன் இருவரையும் அங்கே காணாமல் பின்பக்கம் போனார். அங்கே துடைப்பம் செய்யும் வேலை பாதியில் இருப்பதைப் பார்த்து, புடவையை இழுத்துப் போர்த்தி அமர்ந்து அந்த வேலையை முடிக்கும் முயற்சியில் இறங்கினார் மீனாட்சி.
கையானது அதன் வேலையைச் செய்ய மனமானது அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. இதுவரை உடல் நலக்குறைவிலும் அவரது கடமைகளைச் செய்ய தவறியதில்லை. சமீபக் காலமாக அவரிடம் ஓர் உடல் சோர்வு குடியேறியிருந்தது. எத்தனை முயற்சி செய்தும் அவரால் அதை விரட்ட முடியவில்லை. கடந்த இரண்டு நாள்களாக தான் அதற்கு பெயர் வயோதிகம் என்று புரிந்தது. ஒருவேளை மணி பெங்களூரிலிருந்து வரவில்லை என்றால் எப்படி அத்தனை வேலையையும் செய்திருப்போமென்ற பெரும் கவலை அவரின் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. வீட்டினர் திரும்பியது கூட தெரியாமல் உறங்கியதை நினைத்து வெட்கியவர் உடலின் வலியைப் பொருட்படுத்தாமல் விறுவிறுவென்று தென்னை ஓலையை சீவினார்.
கோவில், கடவுள் இரண்டையும் பல வருடங்களாக தனது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தவர், அந்த வழக்கத்தை உடைத்து,’எதற்கும் உபயோகமில்லாமல் போகும் நிலை வருமுன் தன்னை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று’ மனமுருகி கடவுளிடம் வேண்டுதல் வைத்தார் மீனாட்சி. அதே நேரம், அதே கடவுளிடம் முத்துமீனாட்சியின் கடைசிக் காலம் நல்லவிதமாக அமைய அருள் புரிய வேண்டுமென்று வேண்டுதல் வைத்தார் சிவமூர்த்தி.
மனத்தை திடப்படுத்திக் கொண்டு வேலையை செய்து முடித்து அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி விட்டு மீனாட்சி வீட்டிற்குள் சென்ற போது அரைமணி கடந்திருந்தது. தாகமாக இருந்ததால் ஒரு பாத்திரத்தில் குடிநீரை நிரப்பி அடுப்பில் வைத்து போது தான் மதியத்திற்காக சமைத்த சாப்பாடு அப்படியே இருப்பதைக் கவனித்தார். ‘சாப்பாடு சாப்பிடாம இரண்டு பேரும் எங்கே போயிருக்காங்க? இந்திராவோட அவ வீட்டுக்கு கிளம்பிப் போயிட்டாளா மணி? அது கூட தெரியாம தூங்கிட்டு இருந்தோமா?’ என்று யோசனை செய்து கொண்டிருந்த போது வரவேற்பறையில் அர்ஜுனின் குரல் ஒலித்தது. இதுவரை இதுபோல் சத்தமாக சந்தோஷமாக அவனது குரலை அவர் கேட்டதேயில்லை. அவரது மனத்தில் இருந்த சோர்வை மீறி ஓர் ஆர்வம் ஏற்பட அதை உதறித் தள்ளமுடியாமல் அடுப்பை அணைத்து விட்டு சமையலறை வாயிலை நோக்கிச் சென்றார் மீனாட்சி.
மணியோடு உரையாடியபடி சாப்பாடு மேஜையில் பார்சல்களை வைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். மீனாட்சியைக் கண்டவுடன்,”உங்களுக்காக சூப் வாங்கிட்டு வந்திருக்கோம் பாட்டி.” என்று ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரைச் சுட்டிக் காட்டினான். அப்போது மேலும் சில பைகளோடு வீட்டினுள்ளே வந்த உத்தம்,
“மீனாம்மா, நாளை வரை வீட்லே சமையல் கிடையாது..உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்.” என்றான்.
அதைக் கேட்டு மீனாட்சியும் மணியும் மிரட்சியோடு காவேரியை நோக்க, வழமைக்கு மாறாக வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தார் காவேரி. ‘தண்டச் சோறு சாப்பிடறவங்களுக்கு ஹோட்டலேர்ந்து விருந்து சாப்பாடா?’ என்று எந்த நேரமும் பூகம்பம் வெடிக்காலமென்று அவர்கள் எதிர்பார்த்திருக்க, படு அமைதியாக இருந்தார் காவேரி. அப்போது வெகு சாதாரணமாக,
“அப்பா, அம்மா சாப்பிட வாங்க.” என்று பெற்றோரை உணவருந்த அழைத்தான் உத்தம்.
அதில் சகஜ நிலைக்குத் திரும்பிய மணி பார்சல்களைப் பிரிக்க ஆரம்பிக்க, ஒரு சாப்பாட்டு பார்சலையும் மீனாவின் சூப்பையும் அவள்புறம் தள்ளி,”மீனாம்மாவோட சூப்பை சூடு செய்து அவங்களுக்கு கொடு…நீயும் லன்ச் முடிச்சுக்க..இங்கே நான் பார்த்துக்கறேன் மனோ.” என்றான் உத்தம்.
“நான், நானும் உங்களுக்கு ஹெல்ப் செய்யறேன் ண்ணா.” என்று உதவி செய்ய வெகு ஆவலாக இருந்தான் அர்ஜுன்.
மகனின் அளவான பேச்சோடு அர்ஜுனின் ஆரவாரத்தோடு மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டனர் சிவமூர்த்தி தம்பதியர். அவர்களின் அறையில் மீனாம்மாவோடு மதிய உணவைப்ப் பகிர்ந்து சாப்பிட்டாள் மணி. அவளது விருப்பமாக இல்லையென்றாலும் அனைத்து பதார்த்தங்களையும் அனுபவித்து உண்டாள் மணி. ஆலோசனைக்காக அவளை அழைத்துச் சென்றிருந்தாலும் முக்கால்வாசி மதிய உணவுப் பண்டங்கள் உத்தமின் மிகுவிருப்பம் தான் (choice). வீட்டு நபர்களின் விருப்பு வெறுப்பை நனறாக அறிந்திருந்தவளுக்கு அவளின் சொந்த விருப்பம் பற்றி ஐடியா இருக்கவில்லை. அவளைச் சங்கடப்படுத்தாமல் ஓர் அனுமானத்தில் அவளுக்கு அர்ஜுனுக்கு உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்திருந்தான் உத்தம்.
சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்த பிரபலமான உணவு விடுதி ஒன்றிர்க்கு அவர்களை அழைத்துச் சென்றிருந்தான் உத்தம். வாயிலில் இருந்த கண்ணாடி பெட்டகத்தினுள் அன்றைய தயாரிப்பு அனைத்தையும் அழகாக வரிசைப்படுத்தி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்வது சுலபமாக இருந்தாலும் அனைத்து பண்டங்களும் பார்சலாக மாறி வர நேரம் பிடித்தது. அந்த அவகாசத்தில் அவனுக்கு ஒரு பழச்சாறை ஆர்டர் செய்த உத்தம் அக்கா, தம்பி இருவருக்கும் தம்பியின் விருப்பப்படி ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தான்.
ஐஸ்க்ரீம் உண்டபடி உத்தமின் கரங்களைப் பற்றியபடி உணவகத்தில் அலைந்து கொண்டிருந்த தம்பியைப் பார்த்து சந்தோஷமாகவும் சஞ்சலமாகவும் இருந்தது மணிக்கு. இதுபோல் சலசலயென்று பேசும் தம்பியை இதுவரை அவள் பார்த்ததில்லை. இனியும் பார்க்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. சாரதியின் கோரிக்கைக்கு மாமி செவி சாய்த்து விட்டால் தம்பியின் நிலை என்னவாகும் என்று நினைத்த நொடியே மணியின் மனது பாரமாகிப் போனது. அவளை விட அர்ஜுனைப் பற்றி தான் அவளுக்கு கவலையாக இருந்தது. சாரதியின் குடும்பத்தோடு அவர்கள் சேர்ந்து விட்டால் அர்ஜுனின் எதிர்காலம் இருண்டகாலம் தானென்று தெளிவாகத் தெரிந்தாலும் அதை எப்படித் தடுத்து நிறுத்துவென்று அவளுக்குத் தெரியவில்லை.
விதி விட்ட வழியில் செல்லத் தயாராக இருந்த மணியின் மனத்தில் பாரத்தை ஏற்றி அதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தான் இந்தப் புது அர்ஜுன். அவளது வாழ்க்கையைப் பற்றி கவலை கொள்ளாதவள் எப்பாடுபட்டாவது தம்பியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடிவு செய்தாள். அர்ஜுனுடன் பேசியபடி உணவகத்தை வலம் வந்து கொண்டிருந்த உத்தமும் அவனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடிவு எடுத்திருந்தான். பல வருடங்களாக குடும்பச் சம்மந்தப்பட்ட முடிவுகளை முழுமையாக பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருந்தவன் இனி சின்ன விஷயங்களில் கூட அவனது முழுப் பங்களிப்பை கொடுக்க முடிவு செய்திருந்தான்.
அவர்கள் செயல்படுத்த போகும் மாற்றத்தினால் அவர்கள் இருவரின் வாழ்க்கை திசை மாறிப் போகப் போவதை உணராமல் மணியும் உத்தமும் மதிய சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தனர். உணவு உண்டு முடிந்ததும் சின்னவனை அவனோடு மாடிக்கு அழைத்துச் சென்று விட்டான் உத்தம். அவர்களைத் தொடர்ந்து சிவமூர்த்தியும் மாடிக்குச் சென்று விட சோஃபாவில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்த காவேரி, சாப்பாடு மேஜையை சுத்தம் செய்து கொண்டிருந்த மணியிடம்,”சாப்பாடு வாங்க ஹைவேக்கு போனீங்களா?” என்று விசாரித்தார்.
“ஆமாம்..பக்கத்திலே இருக்கற இரண்டு ஹோட்டலுமே அவங்களுக்குப் பிடிக்கலை..சின்னதா இருக்கு..நமக்கு வேண்டியது இல்லைன்னு சொன்னாங்க.” என்றாள் மணி.
“என்ன தான் பெரிய ஹோட்டலா இருந்தாலும் நாளை வரைக்கும் தாங்குமா? சாயங்காலமா எல்லாத்தையும் ஒருமுறை சூடு செய்து வைச்சிடு.” என்றவுடன்,
”அது பிரெட் வகை மாமி..சூடு செய்ய அவசியமில்லை.” என்று மணி பதில் அளிக்க,
“பிரெட்டா? வெளி நாட்லே இருந்ததாலே நம்மூர் பட்சணமெல்லாம் இவன் கண்ணுக்குத் தெரியலையா?..அவனே சாப்பிடட்டும்..நாளைக்கு நமக்கு அடை செய்திடு.” என்று கட்டளையிட்டு விட்டு மாடிக்குச் சென்று விட்டார்.
அடிக்கடி மாடிப்படியைப் பார்த்தபடி மற்ற வேலகளைச் செய்து முடித்த மணி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மாடிப்படி ஏறிச் சென்றாள். அங்கே வரவேற்பறை சேஃபாவில் அமர்ந்தபடி பெரிய டீ வியில் உத்தமும் அர்ஜுனும் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவளைப் பார்த்ததும்,
அவனது கையில் இருந்த கண்ட்ரோலை ஆட்டியபடி,“அக்கா, வா செமையா இருக்கு கேம்.” என்று கத்தினான் அர்ஜுன்.
அதில் பயந்து போய்,“கத்தாதே டா..மாமி..” என்றவளை இடையிட்டு,
“அவங்களோட ரூம் கதவைச் சாத்திட்டேன்..நீயும் வா.” என்று சிறிது நகர்ந்து, அவனுக்கும் அர்ஜுனுக்குமிடையே அவள் அமர இடம் அளித்தான் உத்தம். அந்தச் செய்கை அவளுள் பிரளயத்தை ஏற்படுத்த, அசையாமல் அதே இடத்தில் நின்றாள் மணி.
“அக்கா மறைக்குது, நீ வா இப்படி” என்று அவளின் கையைப் பற்றி இழுத்து வந்து அவளை சோஃபாவில் அமர வைத்து விட்டு கேம் விளையாடுவதில் தீவிரமானான் அர்ஜுன். சின்னவனைப் போலவே பெரியவனும் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்ததாலலும் டி வியிலிருந்து கண்களை அகற்றாமல் மணியுடன் உரையாட ஆரம்பித்தான்.
“நாளைக்குக் காலைலே எத்தனை சீக்கிரம் வீட்லேர்ந்து புறப்பட முடியும்?” என்று அவளிடம் கேட்க, பெரும் சங்கடத்தில் அவர்களிடையே அமர்ந்திருந்தவளுக்கு அவன் கேட்டது காதில் விழுந்தாலும் மூளையில் போய் சேரவில்லை. எனவே, குழப்பத்துடன் அவனது முகத்தை அவள் நோக்க, அவள் புறம் திரும்பாமலே அதை உணர்ந்தவன்,”எத்தனை மணிக்கு வீட்டைப் பூட்ட முடியும்?” என்று வேறு விதமாக அதே கேள்வியைக் கேட்டான்.
‘நானும் அர்ஜுனும் வரலைன்னு சொன்னா என்ன செய்வாங்க?’ என்ற கேள்வி எழுந்தாலும் அதை வெளியிடாமல்,“ஏழு, ஏழரை ஆகிடும். பிரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கிட்டு தான் மாமி கிளம்புவாங்க..மாமா பெரும்பாலும் கஞ்சி மட்டும் தான் சாப்பிடுவாங்க.” என்றவளிடம்
“நாளைக்கு எல்லோருக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்திருக்கேன்..போகுற வழிலே வண்டியை நிறுத்தி டிஃபனை முடிச்சுக்கலாம்.” என்ற உத்தமின் பதிலில் மணி முகத்தில் குழப்பம் அதிகரித்தது.
”எல்லோரும் போறோமா?” என்று மணி அவளது குழப்பத்தை வெளியிட,
அதற்கு,”வீட்டைப் பூட்டணும்னு சொன்னேன்.” என்று சொன்னவன் அத்தோடு உரையாடல் முடிந்தது என்ற பாணியில் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
’மீனாம்மாக்கு உடம்பு சரியில்லையே..அவங்களையும் அழைச்சிட்டுப் போறோமா? எங்கே போறோம்..மாமிக்கு இந்த திட்டம் தெரியாதா? நாளைக்கு காலைலே டிஃபனுக்கு அடை செய்யணும்னு சொல்லியிருக்காங்களே.’ என்று மணியின் மனது தீவிரமான தர்க்கத்தில் ஈடுபட,”அர்ஜுனுக்கு ஒரு செட் டிரெஸ் தேவைப்படும்.” என்ற தகவலோடு மீண்டும் விளையாட்டில் தீவிரமானான் உத்தம்.
‘ஒரு செட் டிரெஸ்ஸா?’ எதுக்கு?’ என்று யோசித்தபடி அமர்ந்திருந்தவளின் காதருகே,”அண்ணா” என்று சந்தோஷத்தில் அர்ஜுன் கத்த அதே நொடி மணியின் நெஞ்சிற்கு நேரே அர்ஜுனுடன் ஃபிஸ்ட் பம்ப் செய்து,”வாவ்..பிரமாதம் டா” என்று உத்தம் அவனைப் பாராட்ட,”அண்ணா, அடுத்த லெவல் ஒபன் பண்ணுங்க.” என்று கோரிக்கை வைத்தான் அர்ஜுன்.
சட்டென்று அவளைச் சுதாரித்து எழுந்து கொண்ட மணி,”அர்ஜுன் போதும்..தலைலே போட்டிருக்கறதைக் கழட்டு கீழே போகலாம்.” என்று ஆண்கள் இருவரும் மறுப்பு தெரிவிக்கும் முன் அர்ஜுன் தலையில் அணிந்திருந்ததைக் கழட்டி சோஃபா மீது வைத்து விட்டு அவனை இழுத்துக் கொண்டு வேகமாக கீழே சென்று விட்டாள். அக்காவின் மூட் சரியில்லை என்று உணர்ந்த தம்பியும் உத்தமைப் பரிதாபமாக பார்த்தபடி அமைதியாக சென்று விட்டான்.
அவர்கள் இருவரும் சென்ற பின் சிறிது நேரம் தொலைக்காட்சித் திரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்த உத்தம் அதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அவனது கைப்பேசியை எடுத்து சில அழைப்புக்கள் விடுத்தான். பத்து நிமிடங்கள் கழித்து திருப்தியானதொரு புன்னகையோடு மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்தான்.
உத்தம் திட்டமிட்டபடியே இம்மி பிசகாமல் அடுத்த நாள் நகர அதன் இறுதியில் மீண்டும் அது போலானதொரு நாள் வராதா என்ற மிகுபிரியம் (ardent desire, longing) உத்தம் உட்பட வீட்டினர் அனைவர்க்கும் உண்டானது.
***************************
வாசகர்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.