அந்தக் காட்சியைப் பார்த்து குதுகலமாகிப் போன அர்ஜுன் அவனது கூட்டை விட்டு வெளியே வந்து, உத்தமின் பேண்ட்டை பிடித்து இழுத்து,”அண்ணா, சூப்பர் ஸ்ட்ராங் நீங்க…நான் எப்போ இப்படி ஸ்ட் ராங்க ஆக முடியும்?” என்று சகஜமாக பேசியபடி வீட்டினுள்ளே செல்ல, மணியும் மற்றவர்களும் வாயடைத்துப் போயினர்.
“நாள் கணக்கெல்லாம் சொல்ல முடியாது..அது உன் கைலே தான் இருக்கு..நீ சத்துள்ள சாப்பாடு சாப்பிடணும், நல்லா ஓடி விளையாடணும், உடற்பயிற்சி செய்யணும்..அப்போ தான் உடம்பு ஸ்ட்ராங் ஆகும்..ரூம் உள்ளே அடைஞ்சு கிடந்தா ஸ்ட் ராங் ஆக முடியாது.” என்றான் உத்தம்.
அதற்கு அவனிடமிருந்து பதில் வராமல் போக, வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல்,”இவனை மாதிரி ஸ்ட் ராங்கா மாற உன்னாலே முடியாது டா.” என்று காவேரி அவரது எண்ணத்தை வெளியிட,
உடனே,”ஆமாம்..முடியாது தான்..நீங்க தான் என்னை ரூமுக்கு வெளியே வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கீங்களே..அப்புறம் எப்படி ஓடி விளையாட முடியும்.” என்று உண்மையைப் போட்டு உடைக்க, அதைக் கேட்ட உத்தம் அவனுடைய அம்மாவை தொப்பென்று சோஃபாவில் போட,”டேய், அறிவுக்கெட்டவனே உன்னாலே என் இடுப்பு பிடிச்சுகிச்சு.” என்று கத்த,
அவரை நேராக பார்த்து, அர்ஜுனிடம் அவர் நடந்து கொள்ளும் முறை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை “நல்லது..இனி நீங்களும் ஒரே இடத்திலே அடைஞ்சு கிடங்க.” என்று உத்தம் கோபமாகச் வெளியிட,
“டேய் சின்னவனே தினமுமா ரூமை விட்டு வெளியே வராதேன்னு சொன்னேன்.” என்று அர்ஜுனிடம் காவேரி நேரடியாக சண்டைக்குப் போக, பயந்து போன அர்ஜுன் மணியின் பின்னால் மறைந்து கொள்ள,
“அவன் சொல்றான் நீயும் வாயை மூடிக்கிட்டு இருக்க..ஜெய்யில் மாதிரி அடைச்சு வைச்சிருக்கேனா இவனை.” என்று மணியிடம் பாய்ந்தவரின் குரலில் ‘அப்படித் தான்னு சொல்லித் தான் பாரேன்’ என்று மறைமுக மிரட்டல் இருந்தது.
அதைக் கண்டு கொண்டவள், தலையசைவில் ‘இல்லை’ என்று பதில் அளிக்க, அதில் கோபமான காவேரி,”பாருங்க..இப்போவும் வாயைத் திறக்க மாட்டேங்கறா இவ..அப்படியா சொன்னேன் நான்?” என்று கணவரிடம் முறையிட்டார்.
“எப்போவும் உள்ளேயே இருன்னு சொல்லலை டா..அகிலா வரும் போது தான்.” என்று வாய்மைமூர்த்தியாக சிவமூர்த்தி மாற, கணவனை காவேரி முறைக்க, அவரின் முகத்தை அவன் புறம் திருப்பிய உத்தம்,”யார் வந்தாலும் போனாலும் சின்னவன் அவன் இஷ்டப்படி தான் இருப்பான்..அப்படி அவன் இருக்க வேண்டியதுக்கு நீங்க தான் பொறுப்பு.” என்றான்.
“டேய், நீ இப்படி ஆர்டர் போட்டா நான் கேட்கணுமா? நடைமுறைலே எத்தனை பிரச்சனை வருமுன்னு உனக்குத் தெரியாது..அகிலா அவ மகனோட வந்தா..” என்றவரின் பேச்சை இடைமறித்து,
“யாரோட வேணும்னாலும் வரட்டும்..இந்த வீட்லே என்ன நடைமுறையோ அதைத் தான் அவ பின்பற்றணும்.” என்று சொன்னவன் அவனுடைய அப்பாவிடம்,”வீட்லே இருக்கறங்களுக்கு ஏற்ற மாதிரி நடந்துக்க முடியலைன்னா அவ வரவே வேணாம் ப்பா..” என்றான். உடனே,
“நான் இருக்கறவரை என்னோட இரண்டு பொண்ணுங்களும் வந்து போயிட்டு தான் இருப்பாங்க..வரக் கூடாதுன்னு நான் சொல்ல மாட்டேன்.” என்று காவேரி அவரது மறுப்பைத் தெரிவித்தார்.
அதற்கு,“ஓகே…நீங்க போனப் பிறகு இங்கே வரவே கூடாதுன்னு நான் சொல்லிடறேன்.” என்று கூலாக உத்தம் பதில் கொடுக்க,
கண்களில் சட்டென்று கண்ணீர் திரள, வேதனையுடன்,”இந்த மாதிரி கால்லை வைச்சுக்கிட்டுமாடி, கீழேன்னு அலைஞ்சுகிட்டு, உங்களுக்கு ஊழியம் செய்துகிட்டு, இரண்டு சம்மந்திங்களைச் சமாளிச்சுக்கிட்டு, தோட்டம், வீடுன்னு நேரம், காலம் பார்க்காம ஓடிக்கிட்டு, இவனுக்கு நல்லது நடக்கணும்னு கடவுள்கிட்டே கெஞ்சிட்டு, எல்லோரையும் அனுசரிச்சிட்டு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன்..எதைப் பற்றியும் கவலைப்படாம வருஷக்கணக்கா வெளிநாட்லே ஹாயா இருந்திட்டு இப்போ வந்து இப்படி இருங்க..அப்படி இருங்க..இருக்கவே இருக்காதீங்கன்னு எப்படிஅபசகுனமா பேசறான் பாருங்க..நான் போன பிறகு தான் இவனுக்கு அம்மாவோட அருமை என்னென்னு தெரியப் போகுது.” என்று கணவரிடம் முறையிட்டார்.
ஏற்கனவே மகனின் வார்த்தைகளில் காயமடைந்திருந்த சிவமூர்த்தி மனைவியின் வார்த்தைகளில் மேலும் காயமடைய, சட்டென்று சமாதான வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்ய, காவேரியின் கண்ணீர் கரையைக் கடக்க, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த மணி, உத்தம் மீது உக்கிரப் பார்வையை வீசியபடி வேகமாக காவேரி அருகில் சென்றவள்,”ப்ளீஸ், அப்படியெல்லாம் பேசாதீங்க மாமி.” என்றாள்.
“மாமி, நல்லா சாப்பிட்டு அண்ணாவைப் போல ஸ்ட் ராங்காகிடுவேன்..உங்களைத் தூக்கிட்டு போய் மாடிலே விடுவேன்..அழாதீங்க” என்று அர்ஜுன் ஆறுதல் சொல்ல, கண்ணீரைக் கடந்து காவேரியின் முகத்திலும் புன்னகை ஒளிர, மற்றவர்களின் முகத்திலும் அது பிரதிபலித்தது.
“உங்களை இவன் மாடிக்குத் தூக்கிட்டுப் போகறதை பெரிய ஃபோட்டா பிடிச்சு வைங்க..அப்போ தான் நான் நம்புவேன்..சும்மா வாயாலே சொன்னா எல்லாம் நம்ப மாட்டேன்.” என்று அர்ஜுனை உத்தம் சீண்ட,
காவேரியையும் அவரருகில் இருந்த மணியையும் மாறி மாறி பார்த்தவன்,”மாமி, நான் பலசாலியானாலும் அக்கா மாதிரி நீங்க ஒல்லியா மாறினதான் என்னாலே உங்களைத் தூக்கிட்டுப் போக முடியும்..இனி நீங்க குறைவா தான் சாப்பிடணும்.” என்று காவேரிக்கு ஆர்டர் போட்டான்.
அதைக் கேட்டு ஒரு நொடி ஸ்தம்பித்து அடுத்த நொடி உரக்க சிரித்தார் காவேரி. அவரைத் தொடர்ந்து அனைவரும் சிரிக்க, அர்ஜுனின் சிகையை வாஞ்சையுடன் கலைத்து விட்ட உத்தம்,”நீ ரொம்ப ஸ்மார்ட் திங்கிங் டா.” என்றான்.
ஒரு வெட்கச் சிரிப்போடு,“தாங்க்யு அண்ணா.” என்று பாராட்டை ஏற்றுக் கொண்டான் அர்ஜுன்.
அர்ஜுன், உத்தம் இருவரின் உரையாடலைக் கண்களில் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த மணியிடம்,”மதியத்திற்கு என்ன சமையல் செய்த?” என்று கேட்டார் காவேரி.
அதற்கு அவள் பதிலளிக்கும் முன்,“ரசம், சாதம்..காய் எதுவும் செய்யலை அக்கா.” என்று பதில் அளித்தான் அர்ஜுன்.
“மீனாம்மாக்கு ரசம் சாதம் சரியா இருக்கும்னு அது மட்டும் தான் செய்தேன் மாமி.” என்றாள் மணி.
“எங்களுக்கு சாதம் வைச்சிட்டு ஒரு கூட்டு செய்திடு.” என்றார் காவேரி. அதைச் செயல்படுத்த சமையலறைக்குச் சென்றாள் மணி. அவளைத் தொடர்ந்து சென்றான் அர்ஜுன்.
சில நொடிகள்ள் கழித்து,”மனோ” என்று உத்தம அழைக்க,
“என்ன டா?” என்று காவேரி விசாரிக்க,
“நீங்க மனோவா?” என்று அவன் கேட்க,
“இல்லை” என்று பவ்யமாக பதில் அளித்தவர் பாவமாக கணவனைப் பார்த்து வைக்க,
“எதுக்கு தேவையில்லாம வாயைத் திறக்கற.” என்று சிவமூர்த்தி கண்டிக்க,
சமையல் அறையிலிருந்து ஓடி வந்த அர்ஜுன்,“என்ன அண்ணா?” என்று கேட்க,
“உன் பெயர் மனோவா?” என்று அவனிடம் கேட்க, பதில் சொல்ல முடியாமல் அவன் விழிக்க, சமையல் அறை வாசலில் வந்து நின்ற மணியிடம்,”கிளம்பு மனோ.” என்றான் உத்தம்.
“எங்கே டா?” என்று காவேரி கேட்க,
“சாப்பாடு வாங்க தான்..இனிமேல் ஒலை வைச்சு, கூட்டு செய்து எப்போ நாம சாப்பிடறது..வண்டியை டிஸ்போஸ் செய்யறத்துக்கு முன்னாடி சாப்பாடு வாங்கிட்டு வந்திடலாம்னு நினைச்சேன்.” என்றான்.
“அதுக்கு அவ எதுக்கு?” என்று காவேரி கேட்டவுடன்,
“யாருக்கு என்ன பிடிக்கும்னு மனோக்கு தானே தெரியும்.” என்றவுடன்,
மணியை மகனுடன் அனுப்ப மனது ஒப்புக் கொள்ளாததால்,“எனக்கும் தெரியும்.” என்றார் காவேரி.
“என்னோட நீங்க வர்றீங்களா? கால் பாரமாகிடுச்சு, இழுத்துக்கிச்சுன்னு சொல்லி என்னைத் தூக்க வைச்சு, கியூட்னு என்னை சொல்ல வைக்க தானா..” என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்,
“நான் பெத்த உத்தமா உன்னோட முடியலை டா.” என்று காவேரி தோல்வியை ஒப்புக் கொள்ள,
“கியூட் ம்மா நீங்க.” என்று அவரது கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்ச, “போடா போக்கிரி.” என்று மகனைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் காவேரி.
காவேரியின் மனச் சஞ்சலத்தைப் போக்கும் விதமாக அர்ஜுனையும் அவர்களோடு அழைத்துச் சென்றான் உத்தம். அவர்கள் மூவரும் சென்றவுடன்,
“இவனை எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலை..வெட்டி ஒண்ணு துண்டு இரண்டுன்னு இருந்தா எந்த உறவையும் பிடிச்சு வைக்க முடியாது..உடன்பொறந்ததுங்க கூட வெடிக்கிட்டுப் போயிடும்..இவன் தனியாகிடுவான்..என்னோட கவலை புரிய மாட்டேங்குது இவனுக்கு.” என்றார் காவேரி.
“போகட்டும்..இத்தனை வருஷமா அகிலாவை விட்டுக் கொடுக்காம தாங்கிட்டு தானே இருந்தோம்..என்ன ஆச்சு? ஒரே தம்பிக்கு அவ என்ன மரியாதை செய்தா? அவ வீட்லே என்ன மரியாதை கிடைச்சுது? அவளைச் சொல்லிப் பிரயோஜனமில்லை..நம்ம பிள்ளைக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காததுக்கு நாம தான் காரணம்..நம்ம மேலே தான் தப்பு..நம்ம வளர்ப்பு தான் சரியில்லைன்னு சம்மந்தி வீட்லே நம்மளை தான் குறை சொல்லுவாங்க..
உத்தம் சொல்றபடி நடக்கறது தான் நமக்கு நல்லது….அகிலா வந்தா இதைச் செய்யறது, இந்திரா வந்தா அதைச் செய்யறதுன்னு நம்ம பழக்க வழக்கத்தை மாற்றாத..நம்மளைப் பற்றி யோசிக்காதவங்களைப் பற்றி நீயும் நானும் யோசிக்கக் கூடாது.”
“உங்களாலே முடியும்..என்னாலே முட்யாது..பெத்தவனாலே எப்படி அப்படி இருக்க முடியும்?”
“இருக்கணும்..அகிலா அப்படித் தானே நடந்திட்டு இருக்கா..முதல்லே வீட்லே நிச்சயம்னு சொன்னா..அப்புறம் மண்டபம்னு சொன்னா..கடைசிலே மைதானத்திலே ஊரையே கூட்டி பெரிய அளவுலே செய்திருக்கா..ஒரு வார்த்தை அதைப் பற்றி நம்மகிட்டே சொன்னாளா? நமக்கு அவ செய்த மரியாதையைப் பார்த்து மனசு நிறைஞ்சிடுச்சு..போதும்..கல்யாணத்துக்கு நான் போகப் போகறதில்லை.” என்று அவரது முடிவை வெளியிட்டார்.
மூத்த மகள் பற்றி கணவன் கூறிய எதையும் மறுக்க முடியாமல், கணவரின் முடிவை மாற்ற வழி தெரியாமல் அமைதியாக இருந்தார் காவேரி.
“இப்போவே நீ உன்னை மாற்றிக்கிட்டா தான் உனக்கு நல்லது காவேரி..உன் பொண்ணுங்களோட நீ சேர்த்துகிட்டா உன்னை விலக்கி வைச்சிடுவா உன் வருங்கால மருமகள்..உன் இரண்டு பொண்ணுங்களும் உன்னை தள்ளி வைச்சிட்டு அவளோட சேர்ந்துக்குவாங்க..நீ தான் தனியாகிடுவ.” என்றார்.
உடனே,”உத்தம் என்னை விடமாட்டான்.” என்றார் காவேரி.
அதற்கு,“அப்படி நடந்தா நல்லது தான்..என்னை மாதிரி அவன் இல்லாம இருந்தா நான் நிம்மதியா போய் சேருவேன்.” என்றார் சிவமூர்த்தி.
“எதுக்கு இப்போ இந்தப் பேச்சு? உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.” என்றார் காவேரி.
மனைவியின் கூற்றை ஆமோதிக்காமல், அவளுக்கு ஆறுதலும் சொல்லாமல், மீனாட்சி தங்கி இருக்கும் அறையை நோக்கி சிவமூர்த்தி செல்ல, இத்தனை வருடங்களாக நடக்காத ஒன்று, இனியும் நடக்காது என்று எண்ணியிருந்த ஒன்று இப்போது கண்ணெதிரே நடப்பதைப் பார்த்து, பதற்றத்துடன் எழுந்து கொண்ட காவேரி,”அங்கே எதுக்குப் போறீங்க?” என்று கோபமாகக் கேட்டார்.
மனைவியின் புறம் திரும்பி,”நான் போனாலும் உனக்கு உத்தம் இருக்கான்..அவளுக்கு நான் மட்டும் தானே இருக்கேன்.” என்று பதில் கொடுத்து விட்டு மீனாட்சியின் அறை வாயிலில் சென்று நின்று கொண்டார் சிவமூர்த்தி.
*************************
வாழ்க்கை என்னென்வோ என் திசைலே தூக்கிப் போட்டிட்டு இருக்கு. நானும் என்னாலே முடிஞ்சவரை எல்லாத்தையும் சமாளிச்சிட்டு இருக்கேன்..அந்த முயற்சிலே என்னுள்ளே, என்னைச் சுற்றின்னு நிறைய மாற்றங்கள். ஒரு சுழற்சிலே நான் பயணம் செய்திட்டு இருக்கறதாலே திட்டமிட்டபடி கதையோட பதிவுகளைக் கொடுக்க முடியலை. அநிருத்தனோட ரிசர்ச் வேலை இன்னும் பாக்கி இருக்கு அதனாலே இந்தக் கதையை முதல்லே முடிக்கலாம்னு நினைக்கறேன். காத்திருந்த வாசகர்களுக்கு ஒரு பெரிய சாரி.