விருந்து ஏற்பாடு செய்திருந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் அம்மா, அப்பாவை அழைத்துச் செல்ல முடியாதென்று உணர்ந்த உத்தம் என்ன செய்யலாமென்று யோசனை செய்து கொண்டிருந்தான். அதை உணர்ந்த கஜபதி,
“இங்கேயெல்லாம் டீசண்ட்டா காத்திட்டு இருந்தா வேலைக்கு ஆகாது உத்தம்..நான் போய் இடம் பிடிச்சிட்டு உனக்கு ஃபோன் போடறேன் நீ இவங்களை அழைச்சிட்டு வந்திடு.” என்று உத்தமின் பதிலிற்குக் காத்திருக்காமல் சென்று விட்டார்.
“என்ன ம்மா இது? நமக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசமில்லையா..எல்லோரோடேயும் முட்டி மோதி தான் சாப்பிடணுமா..ஓர் ஆளை நம்ம உதவிக்கு அனுப்பி விட்டா தான் என்ன? அப்படியென்ன எல்லோரும் பிஸியா இருக்கறாங்க உங்க பெரிய சம்பந்தி வீட்லே? நாம முக்கியமானவங்க இல்லையா?” என்று கோபமாக காவேரியிடம் கேட்டாள் இந்திரா.
காவேரிக்குள்ளேயும் அதே கேள்வி தான். விழாவிற்கு கண்டிப்பாக வரவேண்டுமென்று வற்புறுத்திய மகள் ஏன் வந்தோமென்று அவர்களை நினைக்க வைத்து விட்டாள். உத்தமின் பரிசை வாங்கி உடனே திவ்யாவின் கழுத்தில் மாட்டிய அகிலா அதன் பின் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அவளின் குடும்பத்தினரை மாப்பிள்ளைக்கும் அவனின் பெற்றோருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. மாமனார் வீட்டினரை மாப்பிள்ளை பெண்ணுடன் புகைப்படம் எடுக்க புகைப்படக் கலைஞர் ஆயுத்தமான போது,’சீக்கிரம், முக்கியமானவங்க வராங்க.’ என்று அவசர அவசரமாக ஒரு புகைப்படத்தை எடுத்து அவர்களை விரட்டாத குறையாக மேடையிலிருந்து கிளப்பினார் அகிலாவின் கணவர் பாஸ்கர். திவ்யாவின் வருங்காலக் கணவனிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளலாமென்று எண்ணியிருந்த உத்தம் அந்த எண்ணத்தைக் கைவிட்டு முதல் ஆளாக மேடையிலிருந்து இறங்க மகனைத் தொடர்ந்தார் சிவமூர்த்தி. கணவனும் மகனும் சென்ற பின் அந்த இடத்தில் இருக்க முடியாமல் காவேரியும் மேடையிலிருந்து இறங்கி விட்டார். இந்திரா தான் பிடிவாதமாக அவளுடைய கணவன் குழந்தைகளோடு அகிலா அருகில் நின்று பேச முயற்சி செய்ய,’கிளம்பு டீ..முக்கியமானவங்க வராங்கண்ணு மாமா சொன்னாங்கயில்லே.’ என்று சொல்ல, மனைவியின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டார் கஜபதி. வழக்கமாக கொடுக்கும் மரியாதைக்கு கூட பஞ்சமாகிப் போனது அன்று. பெரிய இடத்தில் மாப்பிள்ளை அமைந்த மமதையில் தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்தனர் அகிலாவின் புகுந்த வீட்டினர். ஆனாலும் மகளை விட்டுக் கொடுக்க முடியாமல்,
“அவ நிலை உனக்கு தெரியாதா..பட்டுப் புடவை கட்டின வேலைக்காரி.” என்று காவேரி சொன்னவுடன்,
“அம்மா, அது உண்மையில்லைன்னு உங்களுக்குத் தெரியாதா? மூத்த மருமகளா அங்கேயும் மூத்த மகளா நம்ம வீட்டையும் ஆட்டிப்படைக்கறா? இப்போவரை லோகு நம்ம கண்ணுலே படவேயில்லை..நீங்க வருவீங்கண்ணு அவனுக்குத் தெரியும் தானே..என்ன வேலை செய்திட்டு இருந்தாலும் உங்களைப் பார்க்க வந்திருக்கணுமில்லே..அவனுக்கு நீங்க சம்பளம் தர்றீங்களா இல்லை அகிலா கொடுக்கறாளா?” என்று சண்டையில் இறங்கினாள் இந்திரா.
சின்ன மகள் சொன்ன எதையும் மறுக்க முடியாமல் அமைதியாகிப் போனார் காவேரி. உடனே,
“சாப்பாடு முடிஞ்சதும் நான் கிளம்பறேன்.” என்றாள் இந்திரா.
“இப்போ என்ன ஆகிடுச்சின்னு நீ இப்படிக் குதிச்சிட்டு இருக்க? மாப்பிள்ளைக்கு ரெஸ்ட் வேணாமா? உடனே நைட்லே வண்டி ஓட்டிட்டுப் போக முடியுமா அவராலே? உங்களுக்கு முடிஞ்சாலும் பிள்ளைங்களாலே முடியுமா? உத்தம் பிரண்ட் வீட்லே இன்னைக்கு இராத்திரி நல்லாத் தூங்கிட்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்திட்டு அங்கேயிருந்து கிளம்பிப் போங்க.” என்றார் காவேரி.
உடனே,“சரி..என் மேலே அவ்வளவு அக்கறை இருந்தா உடனே லோக்கு ஃபோன் போடுங்க..அவன் வண்டி ஓட்டட்டும்..” என்று சொல்ல, காவேரிக்கு வார்த்தை வரவில்லை.
“ஏன் வாயை மூடிட்டு இருக்கீங்க? அகிலாக்கு தான் வேலை செய்வானா லோகு? எனக்கு செய்ய மாட்டானா? நான் கூப்பிட்டா வர மாட்டானா? இப்போவே அவனுக்கு ஃபோன் போட்டு வரவழைங்க…எனக்கு இரண்டு நாள் வண்டி ஓட்டட்டும்.” என்றாள்.
‘இதென்னடா தலைவலி’ என்று நொந்து போன காவேரி கணவரின் உதவியை நாடி அவரை நோக்க சிவமூர்த்தியோ ‘நீ தானே லோகுவை அனுப்பி வைச்ச, நீயே இதையும் சமாளி’ என்று சொல்லாமல் சொல்ல, ‘எப்படி இவளைச் சரிகட்டறது?’ என்று காவேரி யோசித்துக் கொண்டிருந்த போது,
“அவசரப்படாதே க்கா..இன்னைக்கு அவனை அழைச்சிட்டுப் போய் என்ன செய்வ? லோக்கல் வேலைக்கு தான் அவனை உபயோகிச்சுக்க முடியும்..இதே அடுத்த வாரம் அவனை அனுப்பி வைச்சா அதுக்குள்ளே சின்ன ட் ரிப் போகற மாதிரி நீ பிளான் போடலாம்..உனக்கும் அது ஒரு மாற்றமா இருக்கும் லோகு டிரைவரா வேலை வாங்கின திருப்தி உனக்குக் கிடைக்கும்.” என்று உத்தம் ஆலோசனை அளித்தான்.
அதற்கு,”டேய், அடுத்த வாரம்..” என்று காவேரி ஆரம்பித்தவுடன்,
“அடுத்த வாரம் லோகுக்கு இந்திரா அக்கா வீட்லே டியுட்டி..இப்போ அவனில்லாம நீங்க எப்படி சமாளிச்சீங்களோ அதே போல அடுத்த வாரத்தை சமாளிச்சுக்கோங்க..இதுக்கு அப்புறம் லோகு யார் வீட்டுக்கும் போக மாட்டான்..போகக் கூடாது..அப்படி அவனை எங்கேயாவது அனுப்பி வைச்சீங்க அவனை மொத்தமா வீட்டுக்கு அனுப்பி விட்டிடுவேன்.” என்று அந்தப் பிரச்சனைக்கு ஓர் உத்தம முடிவை உத்தம் கொடுக்க, இந்திரா, காவேரி இருவரும் கப்சிப் ஆகிவிட்டனர். சில நிமிடங்கள் கழித்து அவனைக் கைப்பேசியில் அழைத்து சாப்பிட இடம் பிடித்து வைத்ததைத் தெரிவிக்க, எப்படியோ முட்டித் தள்ளிச் சென்று சாப்பாட்டை முடித்துக் கொண்டு நண்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்து உறங்கச் சென்றனர் அனைவரும்.
அடுத்த நாள் விடியற்காலையில் விழித்துக் கொண்ட உத்தம் மெல்லோட்டத்தில் பண்ணை வீட்டை ச் சுற்றி வந்து அவனது காலை நேர உடற்பயிற்சியை முடித்துக் கொண்ட போது வாயில் வரண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவரது கைப்பேசியோடு வந்தமர்ந்தார் காவேரி. அவரருகில் அவன் அமர்ந்தவுடன் அவரது கைப்பேசியைக் காட்டி,”அகிலா அவ வீட்டுக்கு வந்திட்டுப் போகச் சொல்றா.” என்றார்.
அதற்கு பதில் சொல்லாமல் யோசனையாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் உத்தம். மகனது தோரணையைப் பார்த்து அந்தப் பேச்சை அவர் தொடரவில்லை. அப்போது அந்த வீட்டின் காப்பாளர் வந்து காலை உணவைப் பற்றி உத்தமிடம் விசாரித்தார். ஒரு சில மணி நேரங்களுக்கு தங்குமிடம் தேவை என்று சொல்லி விட்டு ஓர் இரவு தங்கியிருந்தார்கள். எப்படியும் அவர்கள் புறப்பட்டுச் செல்ல முன் மதியமாகிவிடுமென்பதால் காலை உணவை முடித்துக் கொண்டே புறப்படலாமென்று முடிவு செய்த உத்தம்,
“அகிலா கூப்பிட்டு இருக்கா டா..அங்கே போய்..” என்றவரின் பேச்சை இடைமறித்து,”அப்போ உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் வேணாம்னு சொல்லிடறேன்.” என்று சொன்னவன் அவரின் பதிலை எதிர்பார்க்காமல்,”நாலு பெரியவங்க, இரண்டு சின்ன குழந்தைங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் தயார் செய்யுங்க.” என்று காப்பாளரிடம் சொல்ல,”இல்லை..இல்லை..எனக்கும் சொல்லிடு..நான் எங்கேயும் போகலை.” என்று அவசரமாக உத்தமிடம் மறுத்தார் காவேரி.
நேற்றிரவு நிச்சய விழாவில் மூத்த மகள் அவர்களை நடத்திய விதம் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவளை விட்டுக் கொடுக்க அவருக்கு மனது வரவில்லை. மூத்த சம்மந்தி வீடு பற்றி அவர்கள் அனைவருக்கும் தெரியுமென்பதால் நேற்று இரவோடு கோபதாபங்கள் கரைந்து போயிருக்கும் என்று அவர் கணக்கு போட்டிருக்க, உத்தம் அதை உடும்பு போல் பற்றியிருப்பான் என்று அவர் நினைக்கவில்லை. ‘வரமுடியாது போல’ என்று அகிலாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தார். அதற்குப் பின் அகிலாவிடமிருந்து வந்த அழைப்புக்களை அவர் ஏற்கவில்லை. அகிலாவிடம் மன்னிப்பு கேட்டு அவளைச் சமாதானம் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டவருக்கு அவருடைய மகள் நடந்து கொண்ட விதம் தவறு என்ற எண்ணம் வரவேயில்லை. அதே சமயம் அகிலாவின் நடத்தையைப் பற்றியாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை உத்தம். அவனைப் பொறுத்த வரை அது முடிந்து போன கதை. அதிலிருந்து அவன் கற்று கொண்ட பாடம் என்ன என்பது வேறொரு நாளில் சம்மந்தப்பட்டவர்களிடம் கண்டிப்பாக பகிர்ந்து கொண்டு அவனும் அவர்களுக்கு அதே போலொரு பாடம் கற்றுக் கொடுப்பான். அன்றைக்கு யாருடைய நிலையையும் பேச்சையும் அவன் கணக்கில் கொள்ள மாட்டான். கருணை காட்ட மாட்டான். அவன் எடுத்திருந்த தீர்மானத்தை கண்டிப்பாக செயல்படுத்தி விடுவான்.
எனவே முந்தைய இரவு நடந்ததைப் பற்றி இந்திரா மாய்ந்து மாய்ந்து பேசியதையும் அதற்கு அவனுடைய அம்மா அகிலா அக்காவிற்காக வக்காலத்து வாங்கியதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ‘நீங்க எப்போதும் இப்படித் தான்..அவளுக்கு தான் சப்போர்ட் செய்வீங்க..நான் வீட்டுக்கு வரலை.’ என்று இந்திரா பிகு செய்து கொண்ட போது அவளைச் சமாதானம் செய்து அவர்களோடு இரண்டு நாள் தங்கிச் செல்ல அவனுடைய அம்மா கெஞ்சியதையும் கட்டாயப்படுத்தியதையும் கண்டு கொள்ளவில்லை. காவேரியின் கெஞ்சலில் கொஞ்சலில் மனமிறங்கிய இந்திரா, ஏதோ ஒரு வகையில் அகிலாவை வென்று விட்டதாக நினைத்து, கணவனை கலந்தாலோசிக்காமல் ‘சரி’ என்று சம்மதம் தெரிவித்தாள்.
ஆனால் மனைவியையும் மகள்களையும் மாமியார் வீட்டிற்கு அனுப்ப கஜபதி இஷ்டப்படவில்லை. திருமணமாகி பல வருடங்கள் குழந்தை பேறு கிட்டாததால் சிகிச்சை, பிரார்த்தனை என்று மாமியார் வீடே கதியாக கிடந்திருக்கிறார். அவருடைய தம்பிக்கு குழந்தை வந்த பின் தீவிரமாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள சென்னை வீட்டில் சில மாதங்கள் தொடர்ந்துதங்கியிருக்கிறார். இப்போது சில வருடங்களாக தான் மாமனார் வீட்டிற்கு அவர் வந்து போவது குறைத்திருக்கிறது. எப்போதும் அவர்களின் வாழ்க்கையை அவளுடைய அக்கா அகிலாவோடு இந்திரா ஒப்பிடுவது அவருக்கு பிடித்ததில்லை. திவ்யாவின் நிச்சயத்தைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து,’இதுங்க வளர்ந்து வர்றத்துக்குள்ளே நான் கொள்ளுப் பாட்டி ஆகிடுவேன் போல.’ என்று சொந்த மகள்களைப் பற்றி எரிச்சலோடு பேச, கணவன், மனைவி இருவருக்கும் பெரிய சண்டை வந்து விட்டது. எத்தனை முறை புத்தி சொன்னாலும் மனைவி அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளது போக்கில் பேசுவது அவருக்கு ஏக்கச்சக்க கோபத்தை ஏற்படுத்துகிறது. ‘நமக்கு நடப்பதை, நடக்காததைப் பற்றி கவலைப்பட்டு, மற்றவர்களோடு அதை ஒப்பிட்டுப் பேசுவதால் நம்முடைய நிலை மாறப் போவதில்லை. மாறாக நம் உடலிற்கு மனத்திற்கும் தான் பாதிப்பு ஏற்படும் என்று பலமுறை இந்திராவிற்குப் புரிய வைக்க முயற்சி செய்தவருக்கு தெரியவில்லை இந்திரா புரிந்து கொள்ளும் போது அவரது உடல் நிலை கெட்டுப் போயிருக்கப் போகிறதென்று.