மாப்பிள்ளை வீட்டைப் பற்றிய விவரங்களை அகிலா பகிர்ந்து கொள்ளவில்லை என்ற சிறு மனக்குறை நேற்று விழா நடந்த விதத்தையும் அதில் அவர்களை நடத்திய விதத்திலும் மிகப் பெரிய குறையாக மாறியிருந்தது இந்திராவிற்கு. இந்த மனநிலையில் அவளை அவளுடைய தாய் வீட்டில் விட கஜபதிக்கு விருப்பமிருக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் உத்தம் தான். மனைவியின் வாயால் தம்பியுடனான உறவில் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணி அவளின் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தவருக்கு தெரியவில்லை அவருடைய வாயால் தான் உத்தமின் மதிப்பிலிருந்து சடசடவென்று சரிந்து பெரும் நஷ்டம் ஏற்படப் போகிறதென்று.
லாப, நஷ்டக் கணக்கை எல்லாம் சரி பார்த்து அவருடைய பிள்ளைகள் மூவருக்கும் கொடுக்க வேண்டியதை எப்போதோ கொடுத்து விட்டார் சிவமூர்த்தி. அதன் பிறகும் மகள்கள் இருவருக்கும் கணக்கில்லாமல் கொட்டிக் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்திராவின் அனைத்து மருத்துவ செலவுகளையும் சிவமூர்த்தி தான் பார்த்துக் கொண்டார். அதே போல் அகிலாவிற்கும் இப்போது வரை நகை, ரொக்கம் என்று எண்ணிக்கையில்லாமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார். வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு செய்வதை பற்றி ஒரு நாளும் கேள்வி கேட்டதில்லை உத்தம். தேவைக்கு அதிகமாகவே லக்ஷ்மிகடாட்சம் இருந்ததால் கேட்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.இரண்டு மகள்களையும் வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் பிறந்த வீட்டிற்கு அவர்கள் வரும் போதெல்லாம் நிறைக்க நிறைக்க கொடுத்து அனுப்பி விடுவார் காவேரி.
இந்திராவின் கணவன் விரும்பவில்லை என்றாலும் இந்திரா அடம் பிடித்ததால் ‘நான் வியாபாரத்தைப் பார்க்கணும்..ஒரு நாள் தானேன்னு புறப்பட்டு வந்திருக்கேன்..என்னாலே உங்களோட வரவே முடியாது..இவளையும் குழந்தைகளையும் அழைச்சிட்டுப் போங்க..இரண்டு நாள் கழிச்சு அனுப்பி வைச்சிடுங்க.’ என்றார் கஜபதி. அந்த திட்டம் இந்திராவிற்குப் பிடிக்கவில்லை. அவளில்லாமல் அவளுடைய கணவருக்கு கஷ்டப்படுவார் என்பதால் .’நீங்க அங்கே கஷ்டப்பட்டிட்டு இருக்கும் போது இங்கே நான் சந்தோஷமா இருக்க முடியுமா? இன்னைக்கு நைட் மட்டும் தங்கிட்டு..நாளைக்கு விடியற்காலைலே நாம கிளம்பிடலாம்.’ என்றாள். அவருக்காக மனைவி யோசித்தது கஜபதிக்கு பிடித்திருந்தாலும் அவருடைய பெற்றோரைப் பற்றி இப்போதும் யோசிக்காதவள் மீது லேசாக கோபம் வர, அதை,’அப்பா, அம்மானாலே முடியாது இந்து..தம்பி வீட்லே அவங்களுக்கு வசதிப்படாதுன்னு உனக்கு தெரியுமில்லே.’ என்று காட்ட, உடனே அவளது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கணவனோடு அவளுடைய வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள் இந்திரா.
அவர்களை வழியனுப்பி வைக்க வந்த உத்தமிடம்,”அடுத்த வாரம் கண்டிப்பா லோகுவை அனுப்பி வைச்சிடு.” என்று சொல்ல அதுவரை அவர் மீதிருந்த மரியாதை அந்த நொடியே காணாமல் போக, அதை அவரிடமிருந்து மறைத்து, முகத்தில் சின்ன புன்சிரிப்போடு,”கண்டிப்பா” என்றான் புருஷோத்தம்.
வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது அவனுடைய திட்டமென்ன என்று எத்தனை முறை காவேரி கேட்டும் உத்தமிடமிருந்து ஒரு வார்த்தை வெளி வரவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவரது விசாரணையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்,”இவ்வளவு நாளா வீட்டுக்கு வரலை வரலைன்னு என்னைக் கடுப்பேத்திட்டு இருந்தீங்க..இப்போ எப்போ புறப்படப் போறேன்னு கடுப்பேத்தறீங்க.” என்று கடுப்பாக பதில் அளிக்க,
“ஏன் டா இப்படி அபாண்டமாப் பேசற..உன்னோட பயணத் திட்டத்தைப் பற்றி கேட்கலை..பெங்களூர்லே என்ன செய்திட்டு இருக்கேன்னு கேட்டேன்.” என்று விளக்கம் கொடுக்க,
“இன்னும் எதுவும் முடிவு செய்யலை..இப்போதைக்கு செய்ய முடியாது..மாசக் கணக்கு எடுக்கும்..தனியா ஆரம்பிக்கப் போகறதுனாலே நிறைய வேலை இருக்கு.” என்று அவனது திட்டத்தை வெளியிட்டான்.
பெரிய திட்டத்தோடு தான் தாய்நாடு திரும்பியிருக்கான் மகன் என்று புரிந்து போனது சிவமூர்த்திக்கு அதை அறிய ஆவல் உண்டானது. எனவே,
“புது வேலைன்னு நினைச்சேன்..சொந்தமா செய்யப் போறேயா டா?” என்று அவர் கேட்க,
தலையசைவில் அதை ஆமோதித்தான் உத்தம்.
“சொந்த வியாபாரமா? நீ பண்ணப் போற தொழில் பற்றி நம்ம குடும்பத்திலே யாருக்கும் எந்த விவரமும் தெரியாது..கல், மண்ணு தான் நமக்கு வரம்.. அதுதான் கைவரும், கை கொடுக்கும்..புது வியாபாரத்திலே பிரச்சனை வந்திச்சுன்னா யார்கிட்டேயும் போய் நிக்க முடியாது..வேணவே வேணாம்..” என்று கோபமாக மறுப்புத் தெரிவித்தார் காவேரி.
அதற்கு உத்தமிடமிருந்து எந்த பதிலும் வராததால்,”காலம் காலமா செய்திட்டு இருந்த பெரிய வியாபாரத்தை அப்படியே கை மாத்தி விட்டிட்டு இப்போ இத்தனை வருஷம் கழிச்சு வேறொரு வியாபாரம் செய்யப் போறேன்னு சொல்றான்..உங்களுக்கு ஏதாவது கவலை இருக்குதா? அப்போவும் வாயை மூடிக்கிட்டு அவன் சொன்னபடி செய்தீங்க..இப்போவும் அப்படியே இருந்தா எப்படி? இன்னும் இவனுக்கு கல்யாணம் செய்யணும்..அந்த நினைப்பு இருக்குதா இல்லையா?..காசு போயிடுச்சுன்னா காலம் போன காலத்திலே நாம எங்கே போகறது?” என்று கணவனிடம் காவேரி பாய, பொறுமை இழந்த உத்தம், அவனது ஆள் காட்டி விரலை காவேரியின் உதடுகள் மீது வைத்து,
“அம்மா, வீடு போய் சேரறவரை நீங்க வாயைத் திறக்கக் கூடாது..ஓகே.” என்று அந்த வாதத்தை முடித்தான்.
இவர்கள் மூவரும் இன்றே திரும்பி வருவது பற்றி தெரியாமல் சிம்பிலாக சமையலை முடித்து விட்டு வெளி வேலைகளில் இறங்கியிருந்தாள் மணி. வீட்டினுள்ளே இருந்தால் மீனாம்மாவை தொந்தரவு செய்வான் என்று அர்ஜுனை அவளுடன்வைத்துக் கொண்டாள். சுற்று சுவரோரம் கிடந்த தென்னை ஓலைகளில் சிலவற்றைக் கொண்டு வந்து பின் வராந்தாவில் போட்டு, பின்கதவருகே அமர்ந்து அதை சீவி, ஈர்க்குச்சிகளை அர்ஜுனிடம் கொடுத்தாள். அவைகளைக் கவனமாக எண்ணி, “அக்கா, டூவண்ட்டி ஃபைவ் இருக்கு..இன்னும் டூவண்ட்டி வேணும்.” என்றுதனித் தனியாக சிறிது இடைவெளி விட்டு குவித்து வைத்து துடைப்பம் செய்ய அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.
காரின் ஹாரன் சத்தம் கேட்டதும் மணி எழுமுன் பறந்து சென்றிருந்தான் அர்ஜுன். “இரு டா நான் வந்து திறக்கறேன்.” என்று கத்தியபடி மணி வர அதற்குள் காரிலிருந்து இறங்கி வந்த உத்தம் கேட்டை திறக்க அர்ஜுனிற்கு உதவி செய்திருந்தான். கார் வீட்டை நோக்கி செல்ல அதன் பின்னே மணி ஓடிச் செல்ல, அர்ஜுனுடன் சேர்ந்து கேட்டை மூடிய உத்தம்.”என்ன டா இப்படி வேர்க்குது உனக்கு? என்ன செய்திட்டு இருந்த?” என்று கேட்டான்.
“ப்ரூம்” என்று பதில் அளித்தான் அர்ஜுன்.
வீட்டு வாசலில் நின்ற காரிலிருந்து இறங்க அவனுடைய அம்மாவிற்கு மணி உதவி செய்வதைப் பார்த்து வேகமாக அர்ஜுனின் கரத்தைப் பற்றியபடி வேகமாக வந்த உத்தம்,”நகரு” என்று மணிக்கு கட்டளையிட்டு, காவேரியிடம்,”நீங்களே இறங்குங்க..இதுக்கு எதுக்கு உதவிக்கு ஓர் ஆள்.”என்றான்.
“டேய், முடியலை டா எனக்கு..கால் ஸ்டிஃபாகிடுச்சு..தூக்க முடியலை..அசைக்காம அப்படியே உட்கார்ந்திருந்தேன்.” என்று காவேரி காரணம் சொல்ல, உத்தமின் கட்டளையை மீறி,”என்னைப் பிடிச்சுக்கோங்க மாமி..அப்படியே திரும்பி உட்கார்ந்து மெதுவா காலை எடுத்துக் கீழே வைங்க.” என்று அவருக்கு உதவிக்கரம் நீட்டினாள் மணி. அதற்குள் மற்றொருபுறத்திலிருந்து இறங்கி வந்த சிவமூர்த்தி,”எனக்கு தான் உதவி தேவைப்படும்னு நினைச்சேன்..உனக்கு என்ன ஆச்சு? முடியலைன்னா உடனே சொல்ல மாட்டேயா?” என்று கேட்டார்.
“இவன் தானே வாயைத் திறக்கக் கூடாதுன்னு சொன்னான்..அதான்.” என்று காவேரி பாவமாக சொல்ல,
அர்ஜுனின் கரத்தை விடுவித்து காவேரி அருகில் வந்த உத்தம், அவரது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,”செம கியூட் ம்மா நீங்க.” என்று சொல்லி, என்ன நடக்கிறது என்று யாரும் உணரும் முன் காவேரியை இரு கரங்களில் ஏந்தி வீட்டிற்குள் சென்றிருந்தான்.