அர்ஜுனைச் சுட்டிக் காட்டி,“இன்னொரு அக்கா, தங்கை இல்லைன்னாலும் அண்ணன்னு ஒருத்தன் இருக்கானில்லே இவனுக்கு..அவன்கிட்டே அனுப்பி வைங்க..சாரதிக்கு ஃபோன் போடுங்க..காரியமெல்லாம் முடிஞ்ச கையோட பெங்களூருக்கு அழைச்சிட்டுப் போகாம இவளோட அனுப்பி விட்டிருக்கான்..இவளோட படிப்பு முடிஞ்சதும் அழைச்சுக்கறேன் சொன்னவன் அதுக்கு முன்னாடி அவனோட கல்யாணத்தை முடிச்சிட்டு இவளை நம்ம பொறுப்பிலேயே விட்டு வைச்சிருக்கான்..ஞானம் அவனோட சொந்த சித்தி அப்போ அவ பொண்டாட்டியும் தானே அவனோட போயிருக்கணும்..நாம எதையும் கண்டுக்கறதில்லைன்னு அவன் இஷ்டப்படி நட்க்கறான்..எல்லாத்துக்கும் இன்னைக்கு ஒரு முடிவு கட்டறேன்.” என்று பொங்கியவர், அப்படியே அவரது கைப்பேசியில் சாரதியை அழைத்து விட்டார்.
சாரதியின் கைப்பேசியில் மின்னிய பெயரைக் கண்டவுடன் அவன் கையில் இருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டாள் அவனுடைய மனைவி பல்லவி. காவேரியைப் பற்றி நன்கு கணித்திருந்தவள், அவரை எப்படிக் கையாள வேண்டுமென்று தெரியுமென்பதால், முதலில் அவரைப் பேச விட்டு, அவர் சொன்னதை அமைதியாக கேட்டு விட்டு, தேனொழுக அவளது மறுப்பை தெரிவித்து விட்டு அதற்கான காரணத்தையும்அவரிடம் பகிர்ந்து கொண்டு, அவரது வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு, அழகாக அர்ஜுனின் பொறுப்பை மணியின் தலையிலேயே கட்டி விட்டாள் பல்லவி.
“துக்க வீட்லே சந்தோஷமான விஷயத்தை எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தான் அவ அத்தை ஆகப் போற விஷயத்தை மணிகிட்டே சொல்லலையாம் சாரதி..பிள்ளை உண்டாகி இருக்கா பல்லவி..’எங்களுக்குப் புது பொறுப்பு வரப் போகுது..அதை எப்படிச் சமாளிக்கறதுன்னு தெரியாம இருக்கேன்..எங்கம்மாவாலே இங்கே வர முடியாது..என்னாலேயும் வைசாக் போக முடியாது..சாரதி சைடிலே பெரியவங்க நீங்க தான் இருக்கீங்க..உங்களுக்கு ஏற்கனவே நிறைய பொறுப்பு இருக்கு..பிரசவம் வரை நான் சமாளிச்சுக்குவேன்..பிரசவ சமயத்திலே உதவிக்கு மணியை அனுப்பி விடுங்கன்னு’ சொல்றா…அவ இருக்கற நிலைலே சாரதியாலே இவன் பொறுப்பை ஏத்துக்க முடியாது தான்..இங்கேயே நம்ம கூட இருக்கட்டும் இவன்..பாதிலே எந்தப் பள்ளிக்கூடமும் சேர்த்துக்க மாட்டாங்க..டொனேஷன் கொடுத்து மணியோட பள்ளிக்கூடத்திலே சேர்த்து விட ஏற்பாடு செய்யறேன்..எல்லோரையும் சுமக்கணும்னு என்னோட தலையெழுத்து போல.” என்று புலம்பியபடிஅந்த வீட்டின் அங்கத்தினனாக அர்ஜுமுக்கு அங்கீகாரம் கொடுத்தார் காவேரி.
அன்றிலிருந்து இன்று வரை மணியுடன் தான் இருக்கிறான். அவள் போகுமிடத்திற்கெல்லாம் அவனையும் அழைத்துக் கொண்டு அலைகிறாள். அடுத்த மாத இறுதியில் லயாவின் முதல் பிறந்த நாள். அதுவரை பெங்களூர் தான் என்று திட்டவட்டமாக சொல்லியிருந்தார் காவேரி. திடீரென்று இப்போது சென்னை பயணம். ‘அதுவும் இவங்களோட போல.’ என்று நினைத்துக் கலவரமானாள் மணி.
பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வந்தவன், கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவின் பக்கம் கூட எட்டிப் பார்க்காதவன், பெங்களூருக்கு குடிபெயர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தாலும் வீட்டுப் பக்கம் வராததால் இந்தச் சின்ன பையனின் விஷயம் அவனுக்குத் தெரிய வரவில்லை.இங்கே வீட்டோடு இருந்திருந்தால் கூட மணி சம்மந்தப்பட்ட விஷயமெல்லாம் அவன் காதுகளுக்கு வந்து சேராது. அவன் உலகத்தி மணிக்கு இடமில்லை அதனால் அவள் சம்மந்த்தப்பட்ட எதுவும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அவளுடனான இந்தப் பயணம் கூட எதிர்பாராத ஒன்று தான். அதனால் தான் அவனோடு அவளை விமானத்தில் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தான். இப்போது சின்ன பையனும் அவர்களுடன் வரப் போகிறான் என்று புரிய,”உள்ளே போய் உட்கார்..ஃபோன் பேசிட்டு வரேன்.” என்று மணியை டாக்ஸியில் அமரப் பணித்தவன் அப்படியே அவளுக்காக வண்டியின் பின் கதவைத் திறந்து விட்டான்.
தொலைவிலிருந்து அதைப் பார்த்து கொண்டிருந்த சைதன்யாவின் முகத்தில் யோசனை. ‘வேலைக்காரிக்குக் டாக்ஸி கதவைத் திறந்து விடறான்..யாரிவன்?’ என்று கேள்வியோடு மணியை வெறித்துப் பார்த்தான் சைதன்யா. அவனது செய்கையில் பிரமித்துப் போய் அவ்னை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மணியைக் கதவை நோக்கி இழுத்தான் அர்ஜுன்.
“உள்ளே போடா..நீ போய் முதல்லே உட்கார்.” என்று அர்ஜுனை முதலில் அமர வைத்து விட்டு அவளின் பையோடு அவனருகே அமர்ந்து கொண்டாள் மணி.
அதைப் பார்த்து,’திடீர்னு எங்கே கிளம்பிப் போறா? அவ அண்ணன்கிட்டே விசாரிக்கறேன்.’ என்று அங்கேயிருந்து அகன்றான் சைதன்யா.
மணியை அழைத்து சென்ற நபரை பற்றி சாரதியிடம் சைதன்யா விசாரிக்கும் போது மதியம் கடந்திருக்கப் போகிறது. சைதன்யா சொன்ன அடையாளத்தை வைத்து மணியை அழைத்துப் போக வந்திருந்தது உத்தம் தானென்று சாரதி உணரும் போது, தங்கையை வழியனுப்ப டாக்ஸி வரை செல்லாத அவனது மடத்தனத்தை நினைத்து மானசீகமாக ஓர் உதை உதைத்துக் கொள்ளப் போகிறான். அது தான் அடுத்தடுத்து விழப் போகும் உதைகளுக்கான ஆரம்பமென்று அவன் உணரவுமில்லை.
மணியும் அர்ஜுனும் உள்ளே அமர்ந்தவுடன் டாக்ஸியின் கதவை சாத்தி விட்டு, ஆத்திரத்தோடு தரையில் காலை உதைத்த உத்தம், விரல்களால் தலையைக் கோதி அவனது சினத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அடுத்து வந்த நிமிடங்களில் அவனது கைப்பேசியில் பிஸியானான்.
அர்ஜுனை உட்கார வைத்து, அவளது பையைக் காலடி வைக்க குனிந்த போது தான் உத்தம் அவனது கோவத்தை பூமிக்கு கை மாற்றி விட்டான். அதனால் அவனது ஆத்திரத்தின் வெளிப்பாட்டை மணி பார்க்கவில்லை. தலையை உயர்த்தி உத்தம் இருந்த திசையை அவள் நோக்கிய போது தீவிரமாக கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். ‘அவசரமா சென்னைக்குப் போகணும்னு காலைலேர்ந்து ஓட்டமா ஓடிட்டு இருக்கேன்..கீழே வண்டி வெயிட் செய்யுதுன்னு அண்ணன் சொன்னான்..கிளம்பாமா ஃபோன் பேசிட்டு இருக்காங்க இவங்க..என்ன நடக்குது? என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தாள் மணி.
சென்னைக்கு செல்ல வேண்டுமானால் பேருந்து இல்லை இரயிலில் முன்பதிவு செய்வது தான் வழக்கம். இரண்டிலும் உடனடியாக பயணச் சீட்டுக் கிடைப்பது கடினமென்பதால் டாக்ஸியில் போகப் போகிறோமென்று எண்ணியிருந்தாள். தாமதமாக அவள் வந்ததற்கு எரிந்து விழுந்தவன் இப்போது ஏன் தாமதம் செய்து கொண்டிருக்கிறான் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
கைப்பேசியில் பேசியபடி டாக்ஸியிலிருந்து விலகி சிறிது தூரம் சென்றவன் அந்த அழைப்பை முடித்துக் கொண்டு அடுத்து அவனுடைய அம்மாவை அழைத்து சிறுவனைப் பற்றி சொல்லவில்லை என்று அவனது கோபத்தை வெளியிட்டான். அதற்கு,
”அந்தப் பையனை அங்கேயே விட்டிட்டு வரச் சொல்லு..அவனைக் கூட்டிட்டு வருவான்னு நான் நினைக்கலை..இவ அவனுக்கு அக்கான்னா சாரதி அவனுக்கு அண்ணன் தானே..எப்படியும் உனக்கு லேட்டாகிடுச்சு..அவளோட மாடிக்குப் போய் பள்ளிக்கூடம் திறக்கும் போது அவனை அனுப்பி வைச்சா போதும்னு நான் சொன்னேன்னு சொல்லி சாரதி வீட்டிலே அவனை விட்டிட்டு நீங்க இரண்டு பேரும் வந்து சேருங்க..வீட்லே ஊர்ப்பட்ட வேலை கிடக்கு.” என்று அவர் தீர்வு கொடுக்க, டாக்ஸியின் உள்ளே அமர்ந்திருந்த சிறுவனிடம் உத்தம் பார்வையைத் திருப்பினான். மணியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த சிறுவனின் முகத்தை சில நொடிகள் பார்த்த உத்தம் அவனுடைய அம்மாவின் தீர்வை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, சிறுவனை அவர்களோடு சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
டாக்ஸிக்குத் திரும்பிய உத்தம் முன்பக்கக் கதவைத் திறந்து அமர்ந்தவுடன்,
“கிளம்பலாமா?” என்று கேட்ட டாக்ஸி டிரைவரிடம்,”ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு, பின்பக்கம் திரும்பியவன்,”இவனுக்கு ஐடி ஃப்ரூஃப் ஏதாவது இருக்கா?” என்று மணியிடம் கேட்டான்.
எதற்காக கேட்கிறானென்று கேள்வி கேட்காமல், அர்ஜுனின் அனைத்து முக்கியமான காகிதங்கள் எப்போதும் அவளுடன் வைத்திருப்பதால்,”என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“ஆதார் கார்ட்..உன்னோடதும் உன்கிட்டே இருக்கு தானே?” என்று கேட்க,
“எங்க இரண்டு பேரோடதும் இருக்கு.” என்று பதில் கொடுக்க, “குட்” என்று விசாரணையை முடித்துக் கொண்டு அவனது கைப்பேசியில் பிஸியானான் உத்தம். சில நிமிடங்கள் கழித்து,”ஏர்போர்ட் போங்க.” என்று டிரைவருக்குக் கட்டளையிட்டான்.
விமானத்தில் அழைத்துச் செல்ல தான் அடையாள அட்டை பற்றி விசாரித்திருக்கிறான் என்று மணிக்குப் பொறித் தட்டியது. இதுவரை விமானப் பயணம் செய்ததில்லை. ஒரு நாள் நடக்க வாய்ப்பிருக்கிறதென்று இந்த நிமிடம் வரை நினைத்ததில்லை. ‘ப்ளேன்லே கூட்டிட்டுப் போகப் போறாங்களா?..மாமிக்கு இந்த விஷயம் தெரியுமா?’ என்று கேள்வி வர, அதற்கு பதில் தேடுமுன்,’ஐயோ’ என்று பாதங்களை நோக்கி பார்வையைத் தாழ்த்தியவள்,’இப்போ என்ன செய்ய? டாக்ஸிலே போய் இறங்கப் போறோம்னு நினைச்சோமே..வழிலே ஏதாவதொரு கடைலே நிறுத்தச் சொன்னா என்ன சொல்லுவாங்க?’ என்ற முக்கியமான கேள்வி வர, அதற்கு,’ஒண்ணும் வேணாம்..லேட்டானதுலே ஏற்கனவே கோவமா இருக்காங்க..இப்போ போய் செருப்பு கடைக்குப் போகணும்னு சொன்னா அவ்வளவு தான்..இங்கேயே இறக்கி விட்டிட்டு ‘நீ உருண்டிட்டு வந்திடுன்னு’ டாக்ஸீயைக் கிளப்பிட்டுப் போயிடுவாங்க..என் கால்லே செருப்பு இல்லைன்னு என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியப் போகறதில்லை.’ என்ற பதில் கிடைக்க, உடனேயே’தெரிஞ்சிடுசுன்னா?’ என்ற கேள்வி வர,’என்ன நடக்கணுமோ அது நடந்து தான் தீரும்..எதை அனுபவிக்கணுமோ அதை அனுபவிச்சு தானே ஆகணும்.’ என்று எப்போதும் போல் அவளைச் சமாதானம் செய்து கொண்டாள்.