16

        நீங்காத நினைவுகளாக
நீ மட்டுமே,
நெஞ்சம் எல்லாம்
வண்ணக் கலவையாக
உன் காதல்,
காதல் சொல்லாமல்
காதல் கூட்டும்
கள்வனே,

      இரண்டு நாள் சென்றது தெரியாமல் நன்றாகவே அவளுக்கு நேரம் சென்றது,

அந்த நாட்களில் சிவாவிடம் நந்தினியிடம் பேசியதை சொல்லிவிட்டாள்,

      அவனும் “சரி பார்ப்போம், இன்னும்  டைம் இருக்கு இல்ல”,என்று சொல்லிக் கொண்டான்.

        இவளும் “எல்லாம் நல்லபடியாக நடக்கும் பேசாம இரு, முதல்ல வேலைக்கு போ, அவளும் படிப்பு முடிக்கட்டும், நான் பேசுறேன், நீ ரொம்ப யோசிக்காத”, என்று சொல்லிவிட்டாள்.

    அவள் ஆசைப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள் கூட அனைவரும் சேர்ந்து அவளுக்கு நடத்திக் கொடுத்தனர்,

     அவர்கள் இடத்திற்கு சென்ற பிறகு எப்போதும் போல நாட்கள் சென்றாலும், மருத்துவப் பரிசோதனை ஸ்கேன் என்று எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது.

     அதன் பிறகு வீட்டினர் தான்  அவளை அங்கு சென்று பார்த்து வந்தனர்.

     ஏழாவது மாதம் வளைகாப்பு வைக்கலாம் என்று சொல்லும் போது,

       சரணோ “அவள்ட்ட கேட்டுக்கோங்க, அவளுக்கு ஓகேன்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னான்.

    அன்று இரவு அவன் அவளிடம் அடி வாங்காத குறை தான்.,

      “ஓஹோ ஏழாவது மாசம் என்ன வளைகாப்பு போட்டு அனுப்பிட்டு ஜாலியா இருக்கலாம்னு நினைச்சு இருக்கீங்க.,  அப்படித்தானே” என்று அவனிடம் வம்பு இழுத்தாள்.

    அவனும் “நான் எப்ப அப்படி சொன்னேன்”, என்றான்.

     “அப்ப ஏழாவது மாசம் வளைகாப்பு வைக்கலாமான்னு கேட்கும் போது ஓகே சொல்றீங்க”, என்றாள்.

      “நான் எப்போ ஓகே சொன்னேன்”, என்றான்.

       “எனக்கு ஓகே னா, உங்களுக்கு ஓகே ன்னு சொன்னீங்களா இல்லையா”, என்றாள்.

    “ஏன் வளைகாப்பு ன்றது நார்மலா வைக்கிறது தானே, அது ஏழாவது மாசம் வச்சா என்ன, ஒன்பதாவது மாசம் வச்சா என்ன”, என்றான்.

“தெரிஞ்சு தான் பேசுவீங்களா” என்று இவளும் கேட்டாள்.

      “ஏன் என்ன ஆச்சு”, என்றான்.

    “எனக்கு வளையல் போட்டாங்கன்னா, எங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவாங்க, அங்கே அத்தை வீடு பக்கம் இருக்கு ஓகே, ஆனா நீங்க என்ன விட்டுட்டு இருப்பீங்க அப்படித்தானே, சரி நான் போறேன், ஆனால் என்னைய கூப்பிட அதுக்கப்புறம் வரக்கூடாது ஓகேவா,  நான் அங்கேயே  இருந்துக்கறேன்”, என்று சொன்னாள்.

       “ஏய் மது நான் அப்படி சொல்லல”, என்றான்.

       “பின்ன எப்படி  சொன்னீங்க”, என்றாள்.

     “வளைகாப்பு போட்டு நான் இங்க கூட்டிட்டு வந்துடுவேன், சரியா அப்புறம் டெலிவரிக்கு ஒரு பத்து நாள் முன்னாடி நம்ம போனா போதும்”, என்று சொன்னான்.

   “ஓஹோ டெலிவரிக்கு பத்து நாள் முன்னாடி உங்களுக்கு யாரு சொல்லுவா, உள்ள இருக்க பாப்பா வந்து நான் பத்து நாள் கழிச்சு வந்துருவேன் சொல்லுமா”, என்றாள்.

    அவனும் ‘சரி மேடமுக்கு  கோவம் வந்துருச்சு, இப்போ மலை இறக்கணும், என்ன பண்ண’ என்று யோசித்தவன் பின்பு அவளை கெஞ்சி கொஞ்சி தாங்கி, “கூடவே நான் உன்னை கூட்டிட்டு வந்துருவேன்,  கவலைப்படாதே”, என்று சொல்லியவன்,

      “நீ தானே என்னை கல்யாணம் பண்ண மாட்டேன் ன்னு சொன்னது”,என்றான்.

     “தெரியாம பண்ணிட்டேன் போதுமா”என்று எழுந்து சென்று மீண்டும் சமாதானம் செய்து பேச்சை மாற்றி விட்டான்.

      ” நான் ஒன்னும் எங்க அம்மா வீட்ல இருக்க மாட்டேன்னு சொல்லலையே, அப்புறம் நீங்க தான் வாரம் வாரம் அலையனும்”, என்று சொன்னாள்.

     அவனும் “சரி நான் பேசுகிறேன் விடு”, என்று சொல்லி விட்டு வீட்டில் பேச அவர்களும் “சரி வளைகாப்பு போட்டு கூட்டிக்கொண்டு போ, ஒன்பதாவது மாதம் இந்த பத்து நாள் முன்னாடி கொண்டு வந்து விடுறேன் ன்ற பேச்சு எல்லாம் இருக்க கூடாது, ஒன்பதாவது மாசம் ஸ்டார்டிங்கிலேயே இங்க கொண்டு வந்து அவள விட்டுரனும்”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.

    அதை இவளிடம் தெரிவிக்க இவளோ அவனையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இவளோ அவர்கள் முடிவுப்படி செய்யட்டும் அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணத்தோடு அமைதியாகிவிட்டாள்.

   ஏழாவது மாதம் வளைகாப்பு மிகச் சிறப்பாக நடந்தது, வளைகாப்பு முடிந்த பிறகு உறவினர் விருந்தினர் என்று ஆளாளுக்கு பேசி விட்டு சென்றனர்.

அனைவரிடமும் சிரித்த முகமாக தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்., அதிகமாக பேசவில்லை, அன்று  வீட்டிக்கு கூட்டிப் போகும் சடங்கு எதுவும் செய்யாத காரணமாக சரண் வீட்டிலேயே தான் இருந்தாள்.

  அன்று காலையிலிருந்து சீக்கிரமாக எழுந்தது,  பங்க்ஷனில் உட்கார்ந்து இருந்தது என மிகவும் சோர்ந்து போய் தெரிந்தவள், படுத்த உடனே உறங்கி விட்டாள்.

    மறுநாள் காலை சீக்கிரம் எழுந்தவள் கீழே இறங்கி வர வீட்டில் இருந்த முக்கிய உறவினர் சிலரை தவிர வேறு யாருமில்லை, அதுபோலவே அவள் அம்மா வீட்டிலும் இருக்க, மெதுவாக அங்கும் இங்கும் ஆக நடை பயின்றவள், பின்பு சரண் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

   சிவா தான் காலையிலிருந்து படித்துக் கொண்டிருந்தவன், “ஆமா நீ எதுக்கு அங்கங்கே நடந்துட்டே இருக்க, இங்க ஒரு காபி அங்க ஒரு காபி ன்னு குடிச்சிட்டு சுத்துறீயா”, என்றான்.

    “காபி எல்லாம் குடிக்கலடா, பிளான் பண்ணிட்டு இருக்கேன்”, என்று சொன்னாள்.

    “என்ன பிளான், அப்படி என்ன யோசனை”, என்று கேட்டான்.

அவன் படித்துக் கொண்டிருந்த இடத்தில் சென்று அமர்ந்தவள்,

     “உங்க அண்ணன் ஒன்பதாம் மாசம் வளைகாப்பு போடலாம் ன்னு சொன்னதுக்கு, இல்ல ஏழாவது மாசம்  போட்டு உன்னை கூட்டிட்டு வந்துடுவேன் ன்னு என்கிட்ட பொய் சொல்லிட்டாரு”, என்று சொன்னாள்.

     “எப்படி சொல்ற, இன்னும் வீட்ல அவன் பேசவே இல்லையே”, என்றான்.

    “உனக்கு தெரியாது, நேத்து எல்லாரும்  சொன்ன அட்வைஸ் தெரியுமா, நீ பொறுப்போடு அவன் என்ன சொல்றான்னு அதுபடி பாத்துக்கோ, அவசரப்பட்டு நீயா பேசாத”, என்று சொன்னவள்.

       “அப்படி மட்டும் உங்க அண்ணன் விட்டுட்டு போனார் ன்னு வை, மவனே நீ தொலைஞ்ச, படிக்கவே முடியாது”, என்று சொன்னவள்,

      “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா”, என்று கேட்டாள்.

    “என்ன செய்யனும்”, என்றான்.

     “நீ இந்த காரியத்தை செய்றதுனால ரெண்டு பேரையும் பஞ்சாயத்தில் கூட உங்க அண்ணன் நிறுத்துவார்”, என்று சொன்னாள்.

   “அதான் முடிவு பண்ணிட்டியே, சொல்லு என்ன செய்யணும்”, என்று கேட்டான்.

     “இபக்கோ ல நல்ல ஐஸ்கிரீம் ஒன்னு வாங்கிட்டு வா, நிறைய சாக்லேட் சிப்ஸ் இந்த மாதிரி  டாபிங்ஸ் நிறைய போட்டு ஒரு ஐஸ்கிரீம் வாங்கணும்”, என்று சொன்னாள்.

“என் கையில இருக்குற பாக்கெட் மணி புள்ளா செலவாயிடும்”, என்று சொன்னான்.

      “நீ வாங்கித் தந்தா, நான் போகும் போது வட்டி போட்டு  கலெக்ட் பண்ணி தருவேன் உனக்கு”, என்று சொன்னாள்.

      “சரி ஏதோ சொல்லுத அதனால போய் வாங்கிட்டு வர்றேன்”, என்று சொன்னான்.

     “இப்ப வாங்காத கெஸ்ட் எல்லாம் போகட்டும், ஈவ்னிங் வாங்கிட்டு வந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடு, மீதியை நான் பார்த்துக்கிறேன்”, என்று சொன்னாள்.

      “பிரிட்ஜ்ல வைக்கனுமா, ஃப்ரீசரில் வைக்கணுமா”, என்று கேட்டான்.

   “ஃப்ரீசரில் வை” என்று சொன்னாள்.

     அதுபோலவே அன்று இருந்த உறவினர்கள் மதியத்திற்கு மேல் கிளம்பி சென்றுவிட, இவளோ அவனைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமைதியாக இருந்து கொண்டாள்.

     வாங்கி வந்தவன் யாரும் இல்லாத நேரத்தில் ஃப்ரீசரில் சென்று வைத்து விட்டு வந்து விட்டான்.

  பொதுவாக ஃப்ரீசரில் பொருளை அதிகம் வைக்காததால் யாரும் அதை பார்க்கவில்லை, அனைவரும் உணவை முடித்துக் கொண்டு படுக்க சென்றுவிட்டனர்.

   இவன் படித்துக் கொண்டே இருந்தவனும், அன்று சீக்கிரமாக உறங்க செல்வதாக சொல்லி விட்டு சென்றான்.

    இவளும் எப்போதும் போல அறைக்கு சென்றாள். சரண் தான் அம்மா ஒரு வாரத்துக்கு உன்ன இங்க இருக்க சொல்றாங்க, அதுக்கப்புறம் உன்னை கூட்டிட்டு போறேன்னு”, என்று சொன்னான்.

     எதுவுமே சொல்லாமல் நல்ல பிள்ளையாக தலையாட்டிவிட்டு போய் அமைதியாக படுத்துக்கொண்டாள்.