அவனும் “ஆமா நீ என்ன இப்படி சாப்பாட்டு ராமன் ஆயிட்ட,  அப்பப்ப என்னத்தையாவது  தின்னுகிட்டு இருக்க”, என்று கேட்டான்.

“எரும மாடு, கண்ணு வைக்காத, பிள்ளைக்கு சேர வேண்டாமா”, என்று சொல்லி விட்டு கிண்ணத்தோடு மாடிக்கு செல்லப் போனவளோ, அவன்  அழைப்பில் நின்றாள்.

    “ஆமா வேற என்னமோ கேட்கணும் கேட்கணும்னு சொன்னியே, என்னது”, என்றான்.

      “சொல்ல மறந்து போயிட்டேன்டா” என்றவள், “நம்ம ஸ்கூல் இருக்கு இல்ல, அது பக்கத்துல ஒரு மாமரம் உண்டு தெரியுமா, அது எந்த சீசன்ல ன்னாலும் காய் இருக்கும், அதுல இருக்கிற காய் அப்படி டேஸ்டா இருக்கும்டா, உப்பு மிளகாத்தூளும் வைத்து சாப்பிட்டால் நல்லா இருக்கும், ப்ளீஸ் எனக்காக அதுல ஒரு ரெண்டு மாங்கா எப்படியாவது, யார்கிட்டயாவது கேட்டு பறிச்சிட்டு வரியா”, என்று கேட்டாள்.

     “அடிப்பாவி வருங்கால அரசாங்க அதிகாரிய போய் மாமரத்துல மாங்கா திருட அனுப்பனும் நெனச்சியா, சரி போ எனக்கு ஏற  முடியாது, யாரையாவது மாங்கா பறிச்சிட்டு வர சொல்றேன் இரு”, என்று போனை எடுத்துக் கொண்டு தன் பள்ளி நண்பர்களை அழைத்தபடி சென்றான்.

        இவளோ மாடிக்கு செல்ல போனவள் மீண்டும் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள்,

    அவன் பேசிவிட்டு வந்து,  “ஓகே ஈவினிங் வந்துரும்”, என்று சொன்னான்.

    “சூப்பர்டா” என்று சொல்லவும்,

   “அப்படியே அந்த புளியம்பழமும் பறிச்சிட்டு வர சொல்லி இருக்கேன்”, என்றான்.

     “வாவ் சூப்பர்டா, ஆனா உங்க அண்ணனுக்கு தெரியக்கூடாது, தெரிஞ்சுச்சு என்னை தொலைச்சிடுவாரு”, என்று சொன்னாள்.

     “எனக்கு தெரியாது, போன் பண்ணி கேட்டா நான் சொல்லிடுவேன்”, என்று சொன்னான்.

     பக்கத்தில் இருந்த குஷனை தூக்கி அவன் மேல் வீசிவிட்டு, “போடா எருமை வந்தவுடன் கூப்பிடு, நான் இப்ப மாடிக்கு போறேன்”, என்று சொல்லி மாதுளம் பழக்கிண்ணத்தை எடுத்துக் கொண்டே மாடிக்கு சென்றாள்.

       படியேறும் போதே நிதானமாக யோசித்துக் கொண்டே வந்தாள், ‘எப்படி நந்தினி இடம் சொல்வது, எப்படியும் மாலை நேரம் வந்து சேர்வாள், மெதுவாக ஆரம்பிப்போம்’, என்று யோசித்தவள்,

அறைக்கு சென்று எட்டிப் பார்க்க,  சரண் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்தவள்,  மாடி ஹாலிலேயே  உட்கார்ந்து சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

பின்பு அறைக்குள் சென்று உறங்கிக் கொண்டிருந்தவனின் அருகில் படுத்தவள், அவன் தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவனும் தூக்க கலக்கத்தோடு இவள் வந்ததை கணித்தவன், அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர தொடங்கினான்.

இவ்ளோ சிவா சொன்னதிலேயே யோசித்துக் கொண்டிருந்தவள், ‘இந்த பஞ்சாயத்து மனுஷனுக்கு தெரியாம, இந்த விஷயத்தை எப்படி ஹேண்டில் பண்றது’ என்று யோசித்தாள், அப்படியே  சற்று நேரத்தில் உறங்கிப் போனாள்,

திடீரென கண்விழித்து பார்த்தாள், தான் உறங்கி இருப்பதை உணர்ந்தவள், எப்படி  தூங்கினோம் என்று யோசித்தவள், சற்று நேரத்தில் எழுந்து கொண்டாள், அரை மணி நேரம் ஆகியிருந்தது, அவன் தூங்குவதை பார்த்து விட்டு மெதுவாக எழுந்து தன்னை ரெப்ரஸ் செய்து கொண்டு மீண்டும் கீழே ஹாலுக்கு சென்றாள்.

     மணி நாலைத் தாண்டி இருக்க எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவள்,  ‘இந்த பன்னி மாடு எங்க போச்சு’ என்று சிவாவை தேடிக்கொண்டே சென்றாள்.

அவனும் படித்துக் கொண்டிருப்பதை பார்த்தவள், ‘பரவாயில்லை பிள்ள படிக்கிறான்’ என்று நினைத்துக் கொண்டே கிச்சனுக்கு சென்றாள்.

    சிவாவிற்கும் அவளுக்கும் காபியை கலந்து எடுத்துக் கொண்டவள், அவன் படிக்கும் இடத்தில் கொண்டு அவனுக்கு ஒரு கப் காபியை வைத்து விட்டு இவள் ஹாலில் அமர்ந்து காபி குடிக்க தொடங்கினாள்.

      அப்போது இவள் அலைபேசியில் அழைப்பு வர எடுத்து பார்த்தவள்,

      நந்தினி என்ற உடன் அவளிடம்,  “என்ன மேடம் எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள்.

         “உங்க வீட்டுக்கு தாண்டி வந்துட்டு இருக்கேன், நேரில் வந்து சொல்லுறேன்,உனக்கு என்ன வேணும், என்ன பிடிக்கும் சொல்லு”, என்றாள்.

      “மேடம் நீங்க இன்னும் படிச்சிட்டு தான் இருக்கீங்க, நீங்க வேலைக்கு போயிட்டு அதுக்கு அப்புறமா எனக்கு வாங்கித் தாங்க”, என்று சொல்லி விட்டு “நீ மட்டும் வா, எனக்கு உன்ன தான் பிடிக்கும்”, என்று சொல்லி அவளை கலாய்த்து கொண்டிருந்தாள்.

    அவளும் “வாறேன் வாறேன், அதுக்காக என் கைய கால கடிச்சு தின்றாதே” என்று சொன்னாள்,

   “ஹலோ நானும் பிள்ளையும், அப்படி ஒன்னும் கடிச்சதுக்கு ஆள் இல்லாமல் இல்லை. நீ வந்து சேரு”, என்று சொல்லி சிரித்தபடி வைத்து விட்டு சிவா இருந்த அறையைப் பார்த்தவள், சிரித்துக்கொண்டே அலைபேசியை வைத்து தலையில் தட்டியபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.

    சற்று நேரத்தில் நந்தினி வர, அவளுக்கும் ஒரு காபியை கலந்து கொடுத்து விட்டு ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது தான், சிவா அம்மா எழுந்து வந்தார்.

       “என்னம்மா நீயே காபி போட்டுட்டியா, கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே”, என்றார்.

    “இருக்கட்டும் அத்த,  இதில் என்ன இருக்கு” என்று சொல்லி விட்டு நந்தினியோடு பேசிக் கொண்டிருந்தாள்.

     பின்பு நந்தினியை பார்த்து “படிப்பு எப்படி போகுது, கோச்சிங் கிளாஸ் எல்லாம் எப்படி இருக்கு”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

      அவளும் “படிப்பு ஓகே தான் , முடிய இன்னும் 6 மாத்ஸ் தான் இருக்கு”, என்று சொல்லும் போது இவள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

   “ஏண்டி படிப்பு போச்சுன்னு யோசிக்கிறாயா”, என்று கேட்டாள்.

   “அப்படி ஒன்னும் இல்ல, அதெல்லாம் பிரச்சனை இல்ல, நீ கோச்சிங் கிளாஸ் போறியா”, என்று கேட்டாள்.

    “கோச்சிங் கிளாஸ் போறேன், ஆனா சிவா அளவுக்கு போக முடியல, படிப்பும் இருக்குல்ல பார்க்க வேண்டியது இருக்கு”, என்றாள்.

    “சரி இப்ப இல்லாட்டி என்ன, அடுத்த முறை எக்ஸாம் கிளியர் பண்ணிடலாம்”, என்று சொன்னாள்.

      “அப்படித்தான் யோசிச்சிருக்கேன்”, என்று சொல்லி விட்டாள்.

    இவளோ அவள் அக்காவின் வாழ்க்கையை பற்றி கேட்டு விட்டு,  ‘எப்படி இவளிடம் பேச்சை ஆரம்பிப்பது’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

சரண் இறங்கி வந்து அவனும் வரவேற்று விட்டு அவன் அம்மாவை தேடி கிச்சனுக்கு சென்றான்.

    இவளோ “வாயேன் அப்படி எங்க அம்மா வீட்டு வரைக்கும் போயிட்டு வரலாம்”, என்று கூப்பிட்டாள்.

      “சரி வா போகலாம் ” என்று நந்தினி சொன்ன உடனே மது சரணிடமும் , அவன் அம்மாவிடமும் சொல்லிவிட்டு அவள் அம்மா வீட்டிற்கு மெதுவாக இவளோடு நடக்க தொடங்கினாள்.

    சிவா உள்ளிருந்து மெதுவாக எட்டிப் பார்த்தாலும்  வாயே திறக்கவில்லை,

    யோசனையோடு நந்தினி கையைப் பிடித்த படியே நடந்தாலும்,

    நந்தினி தான், “ஏண்டி எதுவோ யோசிச்சுட்டே வர்ற” என்று கேட்டாள்.

        “ஒன்னும் இல்ல, இந்தா பக்கத்து வீடு, அங்க இருந்து இரண்டு எட்டுல் இந்த வீட்டுக்கு வந்துட்டோம், கொஞ்ச தூரம் நடக்கலாம் ன்னு பார்த்தேன்”, என்று சொன்னாள்,

     “அதுக்கு என்ன வாயேன், ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்”, என்றாள் நந்தினி .,

    “அய்யோ அத்தைக்கு தெரிஞ்சா ஏன் வெளியே போன, வீட்டுக்குள்ளே நடக்க வேண்டியது தானே ன்னு சொல்லுவாங்க, அதுக்கு மேல சரண் வேண்டாம்”, என்று சொன்னாள்.

    மது தான் “நீ படிப்பு முடிச்ச பிறகு கல்யாணமா” என்று கேட்டாள்.

       “அவளோ அய்யய்யோ கல்யாணமா, நோ நோ கண்டிப்பா வேலைக்கு போயிட்டு தாண்டி கல்யாணம், முன்னாடி  அப்பா சொல்லிட்டு இருந்தார், இப்ப எங்க அக்கா லைப்ப இப்படி பார்த்ததுக்கு அப்புறம் வேலையில்லாமல் கல்யாணம் பண்ணக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துட்டேன்”, என்று சொன்னாள்.

      “ஒருவேளை உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் நல்ல பையனா கூட இருக்கலாம் இல்லையா”,  என்று கேட்டாள்.

     “நல்லவனோ,  கெட்டவனோ கண்டிப்பா வேலைக்கு போயிடனும்”, என்றாள்.

         “அப்ப சரி உன் இஷ்டம்” என்று சொல்லி விட்டு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும் நந்தினி தான்,

      “நீ ஏதோ சொல்ல வர்ற, ஏதோ கேட்க நினைக்கிற ன்னு  தோணுது, ஆனா அதை ஏன் பேச்ச மாத்தி நிப்பாட்டிட்ட, என்று  பேசணும் நினைக்கிற”, என்று கேட்டாள்.

     “கேட்கணும், ஆனா எப்படி கேட்கணும்  ன்னு தெரியலையே”, என்று சொன்னாள்.

     அவள் அம்மா, ” இரண்டு பேரும் டீ குடிக்கிறீங்களா”, என்று கேட்டார்.

     “இப்ப தான் ம்மா காபி குடிச்சிட்டு வந்தோம்”, என்று சொல்லி விட்டு ஹாலிலேயே அமர்ந்தனர்.

     அவர்கள் அமரவும் மது அம்மாவும் பழத்தைக் கொண்டு வந்து வைத்து நந்தினியும் மதுவையும் எடுத்து சாப்பிட சொன்னார்.