13

    தேடித் தொலைத்த
காலங்களை தேடி
அலைகிறது.,

      தொலைந்தது கிடைக்காது
என்று தெரிந்தும்
தேடித் திரிகிறது.,

        எப்போதும் ஏதோ
ஒன்றை தேடிக்
கொண்டிருக்கும்
மனம்.

      அதன் பிறகு அவ்வப்போது ஊருக்கு சென்று வந்தாலும்,  அந்த முறை சென்றிருக்கும் போது சரண் அவன் அப்பாவோடு வெளியே சென்று இருந்தான்.

   வீட்டில் மது அம்மாவும் சரண்  அம்மாவும் பேசிக் கொண்டிருக்க,  இவளோ அவர்களது அறைக்கு சென்றவள் கபோர்டு ஒதுங்க வைக்கும்  எண்ணத்தோடு வேறு ஏதேனும் சுத்தம் செய்ய வேண்டுமா என்று பார்த்தவள், கேட்காமல்  வேற எதுவும் செய்தா திட்டு விழும், இதை மட்டும் செய்வோம் என்று அவனது கபோர்டு திறந்தவள் ஒதுங்க வைக்கும் வேலையை தொடங்கினாள்,

           அப்போது தான் அவளுடைய காணாமல் போன ஷால் அவனின் கபோர்டுக்குள் இருப்பது தெரிந்தது, அது இவள் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் போது காணாமல் போன ஷால், அதை பார்த்தவுடன் இவளுக்கு சரண் அம்மா அவள் மருத்துவமனையில் தூக்கத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு மது அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது தான் நினைவுக்கு வந்தது.

     கரு கலைந்தது என்பது தெரிந்த பிறகு, அதற்கும் சேர்த்து வலி குறைய மாத்திரை கொடுத்து அவளை தூங்க வைத்திருக்க, அவள் அரைத் தூக்கமும் விழிப்புமாக இருக்கும் போது அவள் தூங்குகிறாள் என்று எண்ணத்தோடு சரண் அம்மா தான் புலம்பிக் கொண்டிருந்தார்,

     “உன்கிட்ட சொல்றதுக்கு என்ன மதுவம்மா, நான் சரணுக்கு உங்க பொண்ண கேட்டது மட்டும் தான் உங்களுக்கு தெரியும், அவனுக்கு புடிச்சு தான் நான் மதுவை கேட்டேன். ரொம்ப லேட்டா தான் கண்டுபிடிச்சேன் ,

அவனுக்கு அலெயன்ஸ் நிறைய வந்துச்சு,  அப்போ பாக்கலாமாடா அப்படி ன்னு  கேட்கும் போது எல்லாம் வேண்டாம் ன்னு சொல்லுவான்,  அப்ப தான் ஒரு நாள் புக்கை வாசிச்சிட்டு இருந்தான்,  நான் பக்கத்துல இருக்கேன் என்பதை யோசிக்கவே இல்ல, அந்த புக்ல ஒரு ரெண்டு இடத்துல மது மது ன்னு எழுதுவதை நான் பார்த்தேன், அதை பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தோணவே செஞ்சுச்சு ஒருவேளை அவனுக்கு புடிச்சிருக்கோ அப்படின்னு,

     அப்போ சிவா கிட்ட தான் மெதுவா கேட்டேன், ஏன்டா சிவா, சரணுக்கு மதுவை கேட்டா தருவாங்களான்னு கேட்டேன், அவளை நான் சம்மதிக்க வைக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டான்,

அவன் என்னமோ ஃப்ரெண்ட்ஷிப் காக அவ சம்மதித்திடுவான்னு நினைச்சிட்டான் போல, அதாவது உங்க கிட்ட கேட்டுட்டு தான், நான் சரண் கிட்ட சொல்லணும்னு சொல்லாமலே இருந்தேன், அதுக்கப்புறம் தான் உங்ககிட்ட கேட்டு நீங்களும் பார்க்கலாமே இதுல என்ன இருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் தான், சரண் ட்ட சொன்னேன்,  அப்போ அவன் முகத்தில் ஒரு அதிர்ச்சி தான் இருந்துச்சு, “அம்மா நெஜமாவா சொல்றீங்கன்னு கேட்டான், ஏன்டா உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு, வேற பொண்ணு பாப்போம்னு சொன்னதும், நான் அப்படி சொல்லல மா, நீங்க நிஜமா சொல்றீங்களா இல்ல கிண்டலுக்கு சொல்றீங்களா ன்னு கேட்டேன், அப்படின்னு சொல்லி தயங்கினான், அப்போ முகத்தில் அந்த சந்தோஷத்தை கூட வெளிப்படையா எங்க கிட்ட காட்டிக்கல்லை, ஆனா அதுக்கு அப்புறம் அவன் பேச்சு சந்தோஷம் எல்லாமே வித்தியாசமா இருந்துச்சு,

    ஆனா அதுக்கு அப்புறம் இவ சம்மதிக்க மாட்டா அப்படின்னு தெரிஞ்சதுக்கு பிறகு அவன் இங்க வர்றதே நிப்பாட்டிட்டான்,  ஊருக்கு வருவது நிப்பாட்டிய அப்ப எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு, அதனால தான் எப்படியாவது இவள சம்மதிக்க வச்சிரணும்னு நினைச்சேன்,

      ரெண்டு பேரும் இப்ப சந்தோஷமா தான் இருக்காங்க, ஆனா இவளுக்கு எதுவும் லேசா முடியல அப்படின்னா கூட அவனால தாங்க முடியாது அவனுக்கு எனக்கு தெரியும் இவன் எந்த அளவுக்கு விரும்புறான்ங்கிறது மட்டும் எனக்கு தெரியும், மத்தபடி அவனுக்கு எப்படி இந்த விருப்பம் மது மேல வந்துச்சுன்னு எனக்கு தெரியாது பார்த்துக்கோங்க”, என்று சொன்னார்.,

    மதுவின் அம்மாவும் “விரும்புற மாப்பிள்ளை கிடைக்கிறது, எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் உங்களுக்கு தெரியாதது இல்ல,  இப்போ உள்ள லைஃப்ல எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு, ஏன் நம்ம நந்தினி பொண்ணோட அக்காவை எடுத்துக்கோங்க அவ்வளவு பிரச்சனை அவங்க அம்மா சொல்லும் போது கேட்கிறதுக்கு கஷ்டமா தான் இருக்கும். கட்டாயப் படுத்தி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினாலும், இவங்க லைஃப் நல்லா இருக்கும் ன்னு என்று நினைத்தேன்.,  நல்லா தான் இருக்கா  சரியாயிடுவாங்க, இப்பவும் ரெண்டு பேரும் எந்த விஷயத்தை பற்றியும் பேசலை.,

     எது பத்தியுமே தம்பி கேக்க மாட்டேன்னு சொல்லிட்டாப்ல,  அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, அவளுக்கு அத பத்தி ஞாபகப்படுத்தாதீங்க, எந்த விஷயத்தையும் அவளிடம்  பேசாதீங்க, முக்கியமா அவ முன்னாடி அதை பத்தி எதுவும் கேட்காதீங்கன்னு சொல்லிட்டாப்ல,

எனக்கும் கோபம் தான் , என்ன ஒரு பொம்பள பிள்ளைக்கு இது கூட தெரியாதான்னு தோணுச்சு, ஆனா டாக்டரே சொல்றாங்களா, தெரிய வாய்ப்பில்லை ன்றாங்க, அப்ப என்ன பண்ண அதுதான் வருத்தமா இருக்கு”, என்று சொன்னார் .

இருவரும் பேசிக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துக் கொண்டவள் சிரித்துக் கொண்டே தன்னுடைய ஷாலை எடுத்து பார்த்துவிட்டு அது போலவே திரும்பவும் வைத்துவிட்டாள்.

கபோர்டு நீட் செய்தவள், ‘வரட்டும் இன்னைக்கு உட்கார்ந்து கதை கேட்டே ஆகணும்’ என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தாள்.

      சரண் தன் அப்பாவோடு சென்றவன், மதிய உணவை வெளியவே முடித்துக் கொண்டு மாலை சிற்றுண்டி நேரத்தில் தான் வந்து சேர்ந்து இருந்தனர்.

     காபியும் வடையுமாக மாலை நேரம் சென்று கொண்டிருக்க,  மது அப்போது தான் அவள் அம்மா வீட்டில் இருந்து வந்து சேர்ந்தாள்.

   சரணைப் பார்த்தவுடன் “எப்போ நீங்க வந்தீங்க”என்று கேட்டாள்.

      “இப்பதான்” என்று சொல்ல, அதே நேரம் சரண் அம்மாவோ, “மது வடை சுடா போட்டுட்டு இருக்கேன் டா, வா”, என்று அழைத்தார்.

    “அத்த ஒண்ணே ஒண்ணு மட்டும் போதும்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றவள், சூடாக ஒன்றை எடுத்துக் கொண்டு “காபி வேண்டாம்” என்று சொல்லி விட்டு வந்து சிவாவின் அருகில் அமர்ந்து அவனிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தாள்.

        “சரி எக்ஸாமுக்கு படிக்கிறேன், சொன்னீயே, நீ மாடல் எக்ஸாம் எழுதுறியா இல்லையா”, என்று கேட்டாள்.

      “எழுதுறேன் எழுதுறேன், இந்த முறை சூப்பரா எழுதிடுவேன்”, என்றான்.

     “அப்போ, இந்த தடவை எக்ஸாம் எழுதி கிளியர் பண்ணி வேலைக்கு போயிருவீயா” என்று கேட்டாள்.

      “ஓய் நானெல்லாம் வேலைக்கு போய்டுவேனாக்கும்”, என்று சொன்னான்.

    “படிச்சது இன்ஜினியரிங், எழுதுறது குரூப் எக்ஸாம், இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”, என்று சொன்னாள்.

     “அதுக்கு என்ன பண்ண, கேம்பஸ் ல  கிடைக்கல, அப்புறம் இந்த மாதிரி எக்ஸாம் எழுதி தான் போகணும்”, என்று சிவா சொன்னான்.

   “அது சரி எத்தனை வடை காலி பண்ண”, என்று கேட்டாள்.

“ஏன் உனக்கு என்ன, உன் புருஷன் சம்பாத்தியத்தில் சாப்பிடுறேனா என்ன?, எங்க அப்பா சொத்துல சாப்பிடுறேன்”, என்றான்.

      “அட எருமை நீ தின்னு கரைப்பதற்கு எல்லாம் இங்க நிறையவே இருக்கு, ஆனா தொப்பை வளர்ந்துச்சினா கரையாதே,  அதுக்கு தான் கேட்டேன்”, என்றாள்.

     அவசரமாக தன் வயிறை சிவா குனிந்து பார்த்தவன், “இல்லையே நான் கரெக்டா தானே இருக்கேன்” என்று சொன்னான்.

     “பாத்துட்டே இருடா, இப்படி உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே இரு, தொப்பை எப்படி வளருதுன்னு மட்டும் பாரு”, என்று சொன்னாள்.

     சரண் தான் அவளிடம், “நீ சும்மா இரு, அவன் சாப்பிட்டா உனக்கு என்ன” என்று கேட்டான்.