அன்று மாலையே எப்போதும் போல சாதாரணமாக வந்தவன் அவளிடம் எப்போதும் போல வம்பு வளர்கங தொடங்கியிருந்தாலும்,
இன்று அவனது அணைப்பிலும் முத்தத்திலும் சில மாற்றங்கள் தெரிய தொடங்கியிருந்தது, அவன் கைகள் அவ்வப்போது எல்லை மீற, அவன் முத்தமும் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது போல தோன்றியது.
மனதிற்குள் ‘நம்ம கிஸ் பண்ணது தப்பு’ என்று தோன்றினாலும் ‘இது தான் வாழ்க்கை, இதற்கு பிறகு மாறி தானே ஆக வேண்டும்’ என்று அவளே அவள் மனதிற்கு சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.
அன்றைய நாளிலேயே, அவளது அனுமதியோடு வாழ்க்கையைத் தொடங்கி கொண்டவனுக்கு என்றுமில்லாத மன நிம்மதி இருந்தது போல தோன்றியது.
அவள் உறங்கிய பின்னும் அவள் முகத்தையே இரவு விளக்கின் வெளிச்சத்தில் பார்த்து கொண்டிருந்தவனுக்கு ஏதேதோ எண்ணங்கள் தோன்றினாலும், தூக்கத்தில் கூட தன் கை வளைவில் இருந்து விலகாமல், தன் மார்பில் தலை சாய்த்து தூங்கும் அவளை தான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
எத்தனை முறை சிவாவோடு சேர்ந்து வம்பு செய்துவிட்டு தன் முன் நின்றிருக்கிறாள், திட்டு வாங்கியிருக்கிறாள் என்று யோசிக்கும் போது சிரிப்புதான் வந்தது.
சிறுபிள்ளைத்தனமாக அவள் விளையாடியது என்ன, இப்போது அவளுக்கே உரிய பொறுப்புடன் குடும்பத்தை கவனித்துக் கொள்வது என்ன, என்று தோன்றினாலும் அவள் அவளாகவே இருக்க வேண்டும்.
எந்த விதத்திலும் தன்னால் அவள் மனதளவில் இழந்து விட்டோமோ என்று நினைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
இன்னும் ஒரு மாதம் கழித்து அவளுக்கு பரிட்சை வரும் நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
நாள்கள் செல்வது வேகமாக போவது போல தெரிந்தது, இருவரின் வாழ்க்கையும் ஒருவர்க்கொருவர் என்று மாறி வாழத் தொடங்கிய இந்த ஒரு மாத காலத்தில் அவனிடம் இப்பொழுதெல்லாம் நிறைய பேச தொடங்கியிருந்தாள்.
முன்பு போல அமைதி காக்காமல் நன்றாக வாய் அடிக்கத் தொடங்கி இருந்தாலும், அவ்வப்போது சில தவறுகளை செய்துவிட்டு அவனிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் சிவாவிடம் அரட்டை அடித்துவிட்டு “டேய் பஞ்சாயத்து தலைவர் சரியே இல்லடா, பஞ்சாயத்து பண்ண போனாலே டென்ஷனா கிளம்புறாரு, இவரெல்லாம் எதுக்குடா பஞ்சாயத்து தலைவர் ஆனாரு” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
சிவாவோ “பக்கத்திலேயே உட்கார்ந்து அவனை கிண்டல் பண்ணிட்டு இருக்க”, என்று கேட்டான்.
ஆபிஸ் ரூமுக்குள் இருக்காருடா, ஆபீஸ் ரூம் குள்ள இருக்காரு, வெளியே அவர் இருக்கும் போது நான் இப்படி பேசினா, மண்டையிலேயே நங்கு நங்குன்னு குட்டு விழும் தெரியுமா,
முன்னாடி திட்டு மட்டும் தான்டா வாங்கினேன், இப்ப அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு செய்றாரு உங்க அண்ணன்” என்று சொல்லி அவனிடம் புகார் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ “நீ பதிலுக்கு கொட்டிடு, அது தான் இப்ப உனக்கு ரைட்ஸ் இருக்கே, கீழே இழுத்து போட்டு கூட அடிக்கவே செய்யலாம்”, என்று சொன்னான்.
“இல்லையே நீ என்னமோ சொல்லிட்டு இருந்த இல்லையா” என்று கேட்டான்.
“இல்ல நீங்க மண்டையில கொட்டினத சொன்னேன்” என்று சொன்னாள்.
“அதுக்கு அவன் என்ன சொன்னான்” என்று கேட்டான்.
“பதிலுக்கு கொட்டு போட சொன்னான், இப்ப எனக்கு ரைட்ஸ் இருக்கு, ஆதனால உங்களை அடிக்கவே செய்யலாமாம், அப்படி சிவா தான் சொன்னான்”,என்றாள்.
“ஊருக்கு போய்விட்டு அவனுக்கு இருக்கு” என்று சொல்ல,
‘மறுபடியும் இவர வெச்சு பஞ்சாயத்தா முடியாது’, என்று மனதிற்குள் அலறிக்கொண்டவளை பார்த்தவன் மெல்லிய சிரிப்போடு , அவளை மிரட்டுவது போல பேசினாலும் அவள் திருதிருவென முழிப்பதை பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் நினைத்ததும், ‘அவள் அவள் குணத்திலிருந்து மாறக்கூடாது, எப்போதும் அதே துறுதுறுப்போடு இருக்க வேண்டும்’ என்று தானே என்று நினைத்துக் கொண்டான், ‘எப்போது அப்படியே இருக்கட்டும் ‘என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
இன்னும் நான்கு நாட்களில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றவுடன் அனைவரிடமும் பேசிவிட்டு இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டியதை மட்டும் எடுத்து பேகில் எடுத்து வைத்தவள் வீட்டில் உள்ளவர்களிடம் “நீங்க வீட்டை எப்போதும் போல பார்த்துக்கோங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவர்களோ சிரித்துக் கொண்டே சரி என்றனர்., ஏனென்றால் அவன் ஊருக்கு சென்றாலும் சாவியைக் கொடுத்து விட்டு தான் செல்வான், அவர்கள் வீட்டை சுத்தம் செய்து வைக்க என்று தினமும் வந்து வீட்டைப் பார்த்துக் கொள்வார்கள்,
அதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தான்,
கோர்ட்டில் வேலை செய்யும் பெண்மணி, வீட்டிற்கு உதவிக்கு வருபவர், “வேற வேலை இருந்தா சொல்லுங்க” என்றார்.
“இல்ல வேற ஒரு வேலையும் இல்ல, நீங்க மெதுவா கூட வாங்க அவசரம் இல்லை”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
சரிமா என்று கோர்ட் க்கு சென்றவர், மதியம் போல் திரும்பி வந்தார்.,
“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றார்.
“கேளுங்க” என்றாள்.
“எதுவும் விசேஷமா மா”, என்று அவளை பார்த்து கேட்டார்.
அவளோ “இல்லையே ஊருக்கு சும்மா தான் போறோம்”, என்றாள்.
“அதைச் சொல்லல மா, உங்களுக்கு எதுவும் விசேஷமா”, என்று கேட்டார்.
“எனக்கு என்ன விசேஷம்” என்று நினைத்தவள் அவர்கள் வேறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவர்களும் “இல்லம்மா உங்க முகம் ரெண்டு மூணு நாளா, நல்ல பள பள ன்னு இருக்கு, கொஞ்சம் வித்தியாசமா இருக்கீங்க”, என்று சொன்னார்.
அவளோ “அது இல்ல, கல்யாணம் முடிஞ்சு நாலு மாசம் கழிச்சு, இப்ப தான் ஊருக்கு போறேன், ரொம்ப நாள் கழிச்சு என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் பார்க்க போறேன், வீட்டுக்கு போறேன் அதுதான்” என்று சொன்னாள்.
அவர் “ஓ அப்படியா” என்று கேட்டுக்கொண்டே கிளம்பிவிட்டார்.
ஆனாலும் அவளை இரண்டு மூன்று முறை அழுத்தி கேட்க, அவளும் இல்லை என்று சொன்னவுடன் போய்விட்டார்.
அவளும் சிரித்துக்கொண்டே ‘ஐயோ கல்யாணம் ஆனாலே, உடனே எதுவும் விசேஷமா ன்னு கேக்குறது, வேற வேலையே இல்லை”, என்று நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து மற்ற எதுவும் செய்ய வேண்டியது உள்ளதா என்று பார்த்து கொண்டாள்.
அவள் கல்யாணம் முடிந்த புதிதில், இவர்கள் அம்மா என்றும் அவனை ஐயா என்றும் கூப்பிடுவதை ஏன் என்று நினைத்து அவனிடம் கேட்டாள்.
“இங்கெல்லாம் அப்படித் தான் கூப்பிடுவாங்க, சார் ன்னு கூப்பிட மாட்டாங்க, மேடம்னு கூப்பிட மாட்டாங்க, ஐயா, அம்மா இப்படி தான் கூப்பிடுவாங்க, உன்னை கூட சில நேரம் மேடம் ன்னு கூப்பிடுவாங்க, ஆனால் என்னை சார் ன்னு கூப்பிட கூட மாட்டாங்க” என்று சொன்னான்.
“ஏன் அப்படி” என்று கேட்டாள்.
“அது அப்படித்தான், இங்க இதுக்கு முன் உள்ளவங்க பழக்கி வச்சிருக்காங்க, இப்ப நம்ம போய் சொன்னா நம்மள வித்தியாசமா எல்லாரும் பார்ப்பாங்க., அதனால தான் நான் கண்டுக்க மாட்டேன்., அதெல்லாம் ஆபீஷியல், இதுல நம்ம கேட்க கூட முடியாது, கேட்டா நம்மள வித்தியாசமாக பார்ப்பாங்க, அதனால நானும் கண்டுக்கறதில்ல, அப்படியே விட்டுட்டேன்”, என்று சொன்னான்.
“ஓஹோ”, என்று கேட்டுக் கொண்டான். அதை இப்போது நினைத்துக் கொண்டவள்,
“நல்லா பழகியிருக்காங்கப்பா, இப்படித்தான் கூப்பிடனும், அப்படி தான் கூப்பிடனும் ன்னு ரூல்ஸ் வச்சுக்கிட்டு” என்று நினைத்து சிரித்துக் கொண்டே அவள் வேலையை பார்க்க தொடங்கினாள்.
அன்று கூட்டம் முடிந்து வந்தவன், டிரைவர் வரவா என்று கேட்க,
“நீங்க வர வேண்டாம், நான் போய்க்கிறேன்,நாலு நாள் கழிச்சு நாங்களே வந்து விடுவோம், இதுக்கு நீங்க அலைய வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்”, என்று சொல்லி டிரைவரை வேண்டாம் என்று சொல்லி விட்டு காரை எடுத்தான்.
காரில் முன் பக்கமாக அவள் ஏறி அமர்ந்தவுடன், “சீட் பெல்ட் போடு மது” என்று சொல்லி அவளை சீட் பெல்ட் போட வைத்தவன்.
அவளோடு பேசிக்கொண்டே சென்றான்.
அன்று மதியம் வேண்டுமென்றே வீட்டிற்கு வந்தவன், அவளிடம் செய்த வம்புகளை அவன் ஜாடைமாடையாக பேச,
அவளும் சிரித்தபடி “ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க, ட்ரைவிங் ல இருக்கும் போது ஒழுங்கா பேசுங்க”, என்று சொல்லியவள், சிரித்துக்கொண்டே திரும்பியவள் காரின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தாள்.
இவனைத் திரும்பிப் பார்த்தால் ஏதாவது சொல்வான் என்று மனதிற்குள் அவன் செய்த வம்புகளை பற்றி யோசித்துக் கொண்டாள்.
‘கடவுளே இந்த மனசு’ என்று நினைத்து ‘வெளியே சொல்லக்கூடாது’ என்று நினைத்துக்கொண்டாள்.
அவனோ “மது இப்ப என்ன நெனச்ச, நான் சொல்லட்டுமா”, என்றான்.
“வேண்டாம் வேண்டாம், நான் நினைத்ததெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம்” என்றாள்.
அவனோ “கோர்ட்டில் தான் மது ஜட்ஜ், வீட்ல உன் ஹஸ்பன்ட் மது”, என்று சொல்லி மேலும் பேசத் தொடங்கினான்.
இவளோ, “ஐயோ போதும் போதும் நிறுத்துங்க”, என்று சொல்லி சிரித்துக் கொண்டே மீண்டும் திரும்பி கொண்டாள்.
அவளின் வெட்கச் சிரிப்பை பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு புரியவில்லை, இன்னும் சற்று நேரத்தில் அத்தனை சிரிப்பையும் இழக்கப் போகிறான் என்று.
துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது.