11

கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து போகிறேன்.,
புரிதல் என்பது
விலகலில் இல்லை
நெருக்கத்திலும் இல்லை.,

அமைதியாக உற்றுநோக்கும்
போது அழகாக
உட்புகுந்து கொள்கிறது.,

      வேலை செய்யும் ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் அங்கு அவளுக்கு அந்த இடம் பாதுகாப்பாகத்தான் தோன்றியது. ஏனெனில் அது கோட்ரஸ் பகுதி, அங்கு பாதுகாவலரை மீறி யாரும் இந்த பக்கம் வரமுடியாது என்னும் அளவில் இருந்தது.

       அது மட்டுமல்லாமல் வரிசையாக ஒன்று போல உள்ள வீடுகள் அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் டிரைவர் மற்றும் உதவி ஆட்கள் என்று இருந்தனர்.

       வீட்டிற்கு வந்தவளுக்கு எப்படி உணர்ந்தால் என்பது புரியவே இல்லை, இரு வீட்டு உறவினர்களும் வந்து இருக்க தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் இங்கு வந்த பிறகு மற்றவர்கள் முன்னிலையில் அவன் அவனுடைய நிலையில் தான் இருந்தான்.

     வீட்டிலிருந்த சரண் போல இருக்கவில்லை. இங்கு அவனுக்குரிய நிலை என்னவோ அது போல தான் மாறி இருந்தான்.

அவனைப் பார்ப்பதும் வீட்டில் நடக்கும் வேலைகளை பார்ப்பதுமாக சுற்றி வந்து கொண்டிருந்தாலும்,  ஒரு புறம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணமும் இருந்தது.

     மறுநாளிலிருந்து அவன் அவனுடைய வேலையை தொடங்க வேண்டும் என்ற சூழலில் தான் முதல் நாளே வந்து சேர்ந்திருந்தனர்.

    இரண்டு நாள்கள் மதுவின் அம்மா அப்பாவும், சரணின் அம்மா அப்பாவும் சிவாவும் அங்கு இருப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.

  மற்றவர்கள் அனைவரும் அன்று மாலையே கிளம்புவதாக இருந்தது.

     வீட்டில் உறவினர்கள் இருக்கும் போதே ஓரளவுக்கு வீட்டை ஒழுங்கு செய்திருந்தனர். அவனுக்கென்று ஒரு அலுவலக அறை போல ஒதுக்கி வைத்திருந்தான். அதில் டேபிள் சேர் மற்றும் அவனுடைய அலுவலகத்தின் பொருள்கள் மட்டும் இருந்தாலும், வேறு எந்த பொருளும் எந்த இடத்திலும் இல்லை.

    யோசித்துக்கொண்டே அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கே இருப்பதை அறிந்து உள்ளே வந்தவன் கதவை சாத்திவிட்டு அவளை பின்னிருந்து இருக்கமாக அணைத்து கொண்டான்.

   அவள் கழுத்தில் ஒரு முத்தம் வைத்து பின்பு கன்னத்தில் இதழ் பதித்தவன், “என்ன ஆச்சு மது அப்படியே யோசிச்சிட்டே இருக்க”, என்று கேட்டான்.

     “இல்ல ஆபீஸ் ரூம் மாதிரி இருக்கு, ஆனா உங்களுக்கான நிறைய திங்க்ஸ் இல்லையே” என்றாள்.

என்னுடைய முக்கியமான ஒர்க் சம்பந்தமானது,  கேஸ் நடக்கும் போது உள்ள விஷயங்கள், நான் பார்க்க வேண்டிய முக்கியமானது இருந்தால் தான்  இங்கே வருவேன்,  இந்த ரூமுக்கு நான் பொதுவா யாரையும் அலவ் பண்ண மாட்டேன்,  நான் இருக்கும் போது டிரைவர் வைத்து மட்டும் கிளீன் பண்ணிப்பேன். மற்றபடி ஆபீஸ்ல கொடுத்து இருக்க வேற எந்த ஸ்டாப் ம் இங்க அலவ் பண்ண மாட்டேன்,  அதுமட்டுமில்லாம எனக்கு ஒர்க் அதிகமா இருந்துச்சுன்னா இந்த ரூம்ல தான் இருப்பேன், வெளியே வர மாட்டேன், யார் வரதா இருந்தாலும் கதவை தட்டிட்டு உள்ள வருவாங்க, அதே மாதிரி ஜட்ஜ்மெண்ட் எழுதும் போது மேக்சிமம் நான் தனியா உட்கார்ந்து தான் கேஸ் வாசிப்பேன்,  யாரையுமே வர விட மாட்டேன்”, என்று சொன்னான்.

    அவனை திரும்பி பார்த்தவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். “என்ன மது” என்று கேட்டான்.

“இல்ல, அப்ப நானும் வரக்கூடாது அப்படித்தானே”, என்று அவள் சொல்லவும்,

    சிரித்தவன் “இல்ல மது யார் வருவதையும் நான் பொதுவாக விரும்ப மாட்டேன்,  இப்பவுமே நீ பார்க்க வந்த, அதனால தான் அமைதியா இருக்கிறேன், மற்றபடி இந்த ரூமுக்குள்ள யாருக்கும் அனுமதி கிடையாது”, என்று சொன்னான்.

   “பெரிய ரூம் தான் நீங்களே வச்சுக்கோங்க”, என்று சொல்லி விட்டு நகர போனவளை இழுத்தவன்,

    “மது என்னோட சிட்டுவேஷன் அப்படி”, என்றான்.

அவன் வேலைகளை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்ததால் அவளும் எதுவும் பேசாமல் “புரியுது”, என்று சொல்லிவிட்டு நகர போனவளை பிடித்தவன் ஒரு பெருமூச்சோடு “என் கோபம் டென்ஷன்  எல்லாத்தையும் காட்டத்தான் செய்வேன்.,  அதுமட்டுமில்லாம என்னோட வொர்க் பிரஷர் ஜாஸ்தியா இருக்கும், புரிஞ்சிப்ப ன்னு நம்புறேன், அது மட்டுமில்லாமல் மற்றவங்க ட்ட நான் காட்டும் முகத்தை நார்மலா உன்கிட்ட காட்ட முடியாது.,  நீ ரொம்ப பீல் ஆகிடுவ, உன் கிட்ட காட்டுற முகத்தை மத்தவங்க ட்ட காட்ட முடியாது, என்னை இளிச்சவாயனா ஆக்கிடுவாங்க, சோ நான் நானா இருக்கிறது உன்கிட்ட மட்டும் தான் மத்தவங்க அப்படி இருக்க முடியாது., நான் ஆசைப்பட்டு வந்த வேலை தான்,  ஆனா இந்த வேலைகளை வந்ததுக்கு அப்புறம் தான் கஷ்டம் என்ன அப்படிங்கறது தெரிஞ்சுச்சு,  ஆனா அதுக்காக  நான் ஆசைப்பட்டு வந்த வேலைய இந்த மாதிரி சின்ன கஷ்டங் களுக்காக என்னால மாத்திக்க முடியாது.,  நான் பார்த்துகிறேன்.

     நீ இதுல எல்லாம் தலையிடாத நான் உன்கிட்ட அதே சரணா மட்டும் தான் இருப்பேன்., இங்க இருக்க சரண் வேற,  உன் கூட இருக்கும் போது இருக்குற சரண் வேற புரியுதா”, என்று சொன்னான்.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவள், மெதுவாக தலையை ஆட்டியபடி நகரப் போக அவளை மீண்டும் இழுத்து அணைத்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு  “எந்த சந்தேகம் இருந்தாலும் என்ட்ட கேளு, அதை விட்டுட்டு நீயா எதையாவது யோசிச்சி வைக்காத சரியா”, என்று சொல்லிவிட்டு அவளை வெளியே அனுமதித்தான்.

     அலுவலக அறையில் இருந்து வெளியே வந்தவளைப் பார்த்த சிவா தான்., “அந்த ரூமுக்குள்ள அண்ணன் யாரையும் விட மாட்டானே, நீ எப்படி போன” என்று கேட்டான்.

     “இல்ல சும்மா ஜஸ்ட் பார்க்க போனேன். உள்ள எல்லாம் போகல,  வாசல்ல நின்னு பாத்துட்டு வந்துட்டேன்”, என்று சொன்னாள்.

“அண்ணன் உள்ள இருக்கானா” என்று கேட்டாள்.

   “ஆமா” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்.

அப்போது அவளுக்குப் புரிந்தது., அவளுக்கும் தெரியும் அவன் வேலையின் பளுவை பற்றி, ஏற்கனவே முன்பே சரணின் அம்மா சொல்லியிருந்ததை நினைத்துக் கொண்டவள்,

     அப்போதெல்லாம் சிவாவோடு சேர்ந்து கிண்டல் செய்ததை நினைத்து கொண்டு அமைதியாக வந்து ஹாலில் அமர்ந்து கொண்டாள்.

     ‘அய்யய்யோ இவங்க எல்லாம் போய்ட்டாங்க னா போர் அடிக்குமே’ என்று நினைத்துக் கொண்டாலும், ‘வேற வழி இல்ல, எப்படியாவது சமாளிக்கணும், சமாளிச்சு தான் ஆகணும்’ என்றும் நினைத்துக் கொண்டாள்.

  அன்று மாலையே உறவினர்கள் கிளம்பி விட வீட்டினர் மட்டும் இருந்தனர்.

இரண்டு நாள் இருந்து  தேவையானவற்றை சொல்லிக் கொடுத்த பின்னர் அவர்களும் கிளம்பிவிட்டனர்.

இவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக தொடங்கியது.

ஏனெனில் மற்றவர்கள் வீட்டில் இருக்கும் போது அவன் கோர்ட்டுக்கு செல்வது வழக்கமாகி விட்டதால்,  இரண்டு நாள் அவர்கள் இருக்கும் வரை ஒன்றும் தோன்றவில்லை, அதன் பிறகு பகலில் சற்று தனிமை உணர்ந்தாலும், மதியம் உணவுக்கு முடிந்த அளவு அவன் வீட்டிற்கு வர பார்ப்பான்.  இல்லை என்றால் சாப்பாடு கொடுத்து விட சொல்வான்.

காலை செல்பவனுக்கு மாலை வரை அங்கு வேலை சரியாக இருக்கும். அதிகமான வேலை இருக்கும் நாட்கள், அல்லது மறுநாள் முக்கியமான கேஸ் என்றாலோ முதல் நாள் இரவு அவன் அலுவலக அறையில் இருந்து வெளியே வருவதற்கே நேரம் எடுக்கும்.

    இங்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களிடம் பழகி கொண்டாலும்,  சிவாவிடம் வீட்டில் யாரிடமும் பேசுவது தவறு இல்லை, இப்பொழுது எல்லாம் இவர்கள் அங்கு செல்வதை விட,  வீட்டில் இருந்து தான் அவ்வப்போது வந்து பார்த்து செல்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் வீட்டினர் தான். அவள் இங்கே ஊர் பக்கம் வந்து சென்று கொண்டிருந்தாள் என்றால் அதிகமாக தேடும், என்று எண்ணியே அவளை அங்கேயே விட்டு வைத்தனர்.

   அப்போது தான் அவனோடு இருக்கப் பழகுவாள், இங்கு அவனுமே அவனை அவளுக்கு பழக்கிக் கொண்டு தான் இருந்தான்.

  தினமும் அதிகாலை எழுந்து வாக்கிங் சென்று விட்டு வரும் நேரத்தில் தான்,  அவள் எழுந்து கொள்ளவே செய்வாள்.

அதன் பிறகு  அவனோடு சேர்ந்து காபி கலந்து கொண்டு உட்கார்ந்து அவன் பேப்பர் படிக்கும் போது ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டிருப்பாள். கேட்கும் விஷயங்களில் தெரிந்ததற்கு பதிலளிப்பான்,  தெரியாததற்கு “புதுசு புதுசா உனக்கு மட்டும் தான் எங்க இருந்து தோணுமோ, இப்படி எல்லாம் சந்தேகம்” என்று கேட்டு விட்டு அவளை கிண்டல் செய்துவிட்டு அவன் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பான்.

      காலை உணவுக்கான வேலைகளை பாதி முடிக்கும் நேரத்தில் வீட்டிற்கு வேலைக்கு ஆட்கள் வந்து விடுவார்கள். அதன் பிறகு அவர்கள் பார்த்துக்கொள்ள இவன் கிளம்பும்போதே இவளும் குளித்து தயாராகி அமர்ந்திருப்பாள்.

அதன்பின்பு இவன் கிளம்பி வேலைக்கு போன பிறகு, வீட்டில் எதை ஒதுங்கி வைக்கலாம் என்று சுற்றிக் கொண்டு வருவாள்.