வேதிகா மௌனமாக அனைவருக்கும் உணவு பரிமாறினாள். அருள்மித்ரன் அருகில் இருந்ததால், வழக்கம்போலத் தரம் தாழ்ந்த பேச்சுக்களைப் பேச முடியாமல் மாலதி சற்று அடக்கி வாசித்தாள். இருப்பினும், வேண்டுமென்றே வேதிகாவின் சமையலைக் குறை கூறித் தன் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்படி ஏனோதானோன்னு சமைச்சு வச்சா குழந்தைங்க எப்படிச் சாப்பிடுவாங்க?” என்று முகம் சுளித்து அவள் கூற, வேதிகா ஒரு நீண்ட பெருமூச்சுடன் குழந்தைகளைப் பார்த்தாள். அங்கே கவிதா ஊட்டிவிட, குழந்தைகள் மூவரும் தங்களுக்குள் விளையாடிக்கொண்டே சிரிப்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உணவு பிடிக்காதது போல தெரியவில்லை.
அருள் அங்கே இல்லாவிட்டால், மாலதி தன் மகள்களைக் கவினின் அருகில் கூட விடமாட்டாள். தீண்டத்தகாதவர்களைப் போலத் தன்னையும் தன் மகனையும் அவர்கள் நடத்தும்போது, தன் மனதில் ஒரு முள் கிரீடத்தைச் சுமக்கும் வேதனையை வேதா அனுபவிப்பாள்.
ஏனோ இந்த அவமானத்தைப் பொறுத்துப் போக அவளுக்கு மனம் வரவில்லை. அதே சமயம், கணவன் சொல்வது போல இவர்களை விட்டு விலகிச் செல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை.
“கொஞ்சம் நல்லா சமைச்சாத்தான் என்ன? எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைச்சிருக்கு… அதைத் தக்க வச்சுக்கணும்ன்ற பொறுப்பே இல்லாம!” மாலதி கடைசி வரியை வாய்க்குள் முணுமுணுத்தாலும், அந்தச் சொற்கள் அங்கே இருந்த அனைவருக்கும் தெளிவாகவே கேட்டது.
“ஆமாம்! சீவிச் சிங்காரிக்கவே நேரம் சரியா இருக்கும்… இதுல இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகுது?” என்று கல்யாணியும் தன் பங்கிற்கு வார்த்தைகளைக் கொட்டினார்.
இரவெல்லாம் பிள்ளைகளுக்குப் பாலூட்ட அடிக்கடி எழுவதால் ஏற்படும் சோர்வை விரட்டவும், காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தன் எம்பிராய்டரி வேலைகளில் கவனம் செலுத்தவும் வேதிகா அதிகாலையிலேயே குளித்துவிடுவாள். ஓயாத வேலைகளின் கசகசப்பை நீக்க, மாலையிலும் ஒருமுறை குளியல் போடுவது அவளது வழக்கம். இதையே கல்யாணி ‘சீவிச் சிங்காரிக்கிறாள்’ என்று கண்டபடி பேசி வந்தார்.
கேட்டுச் சலித்துப் போன குற்றச்சாட்டுதான் என்றாலும், ஒவ்வொரு முறையும் வேதிகாவின் முகமும் மனமும் வாடித்தான் போயின.
வேதிகா மௌனமாகவே இருக்க, “என் பொண்டாட்டியை விட உனக்கு நல்லா சமைக்க வரும்னா, நீயே சமைக்க வேண்டியதுதானே மாலதி?” என்று அருள் நிதானமாகக் கேட்க, கல்யாணி மகனை முறைத்தார்.
“நல்லா இருக்குடா கதை! வீட்டுக்கு வர்ற என் பொண்ணு, உன் பொண்டாட்டிக்கும் அவ எவனுக்கோ பெத்த பையனுக்கும் சமைச்சுப் போடணுமா?” என்று கல்யாணி கத்தினார்.
இதுபோன்ற மட்டமான பேச்சுக்களைக் கேட்க நேரிடும் என்று தெரிந்தேதான் வேதிகா வாயைத் திறக்காமல் இருப்பாள். இன்று கணவன் பேசத் தொடங்கவும், ‘பேச வேண்டாம்’ என்பது போலக் கெஞ்சலாக அவனைப் பார்த்தாள்.
அவளைத் தீயாக முறைத்த அருள், “எப்போ என் கையால அவ தாலி வாங்கிட்டாளோ, அப்பவே கவின் என் பையன்! என் பொண்ணுக்கு எந்தப் பாகுபாடும் காட்டாமத் தன் சொந்த மகளா அரவணைக்கிறவளைப் பார்த்து, இப்படி மட்டமா பேச உங்களுக்கு உறுத்தலையா அம்மா?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.
அவனை அவன் அன்னை என்ன பேசினாலும் அதுவரை அனுசரித்துப் போனவன்தான் அருள். ஆனால், தன் மனைவி, பிள்ளைகளின் கௌரவம் என்று வரும்போது அவனது பொறுமை எல்லைக்குள் நிற்க மறுத்தது.
“கல்யாண மண்டபத்துல இவளை முதல் முதலா பார்க்கும்போதே இவளுக்காகப் பரிஞ்சிட்டு வந்தவன் தானடா நீ! ஒரே நாள்ல உன்னை மயக்கி, குடும்பத்தையே எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு பண்ணிட்டா… இப்ப அவளைக் கட்டிக்கிட்டுக் குடித்தனம் பண்ணிட்டு இருக்க, உன் பேச்சு எப்படி இருக்கும்னு சொல்லவா வேணும்?” என்று கல்யாணியும் பதிலுக்கு சீற, அருள் தன் அன்னையை வெறித்து நோக்கினான்.
“நான் பொறுமையா போனா, என்ன வேணும்னாலும் பேசுவீங்க அப்படிதானேம்மா!” என்று அவன் பல்லைக் கடித்தான்.
“ஆமாம், ஆமாம்! ரொம்பப் பொறுமைதான்… அதுதான் கல்யாணம் கூட ஆகாமப் பிள்ளை பெத்தவளை, ஒரே மாசத்துல வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்ட!” என்று கல்யாணி மீண்டும் விஷத்தைக் கக்கினார்.
“ஏன் அவ்வளவு அவசரமா நான் கல்யாணம் செஞ்சேன்னு உங்களுக்குத் தெரியாதா? அதுக்கு முழு காரணமே நீங்கதானே! என் மகளை உங்களாலப் பார்த்துக்க முடியாதுன்னு கைவிட்டுட்டீங்க. கவிதா பார்த்துக்கிறேன்னு முன்னாடி வந்தா, அவளையும் கறிச்சுக் கொட்டி… அவ என் மகளுக்கு வேலைக்காரின்னு கேவலமா பேசினீங்க.
உங்க கணக்குப்படி என் மகளைப் பார்த்துக்கிட்டா மட்டும் அது வேலைக்காரி வேலையா? இதே நம்ம குடும்பத்துக்காக நான் ராப்பகலா மாடு மாதிரி உழைச்சு கொண்டு வர்ற பணம் மட்டும் என்னவாம்? அப்போ நம்ம குடும்பத்தைக் கரை சேர்க்க உழைக்கிற நான் மட்டும் உங்களுக்கு வேலைக்காரன் இல்லையா?” என்று அருள்மித்ரன் ஆத்திரமும் ஆதங்கமுமாகக் கேட்டான்.
“சொந்தக் குடும்பத்துக்கு உழைச்சுப் போட்டதை இப்படிச் சொல்லிக் காட்டுறியே… நீயெல்லாம் என்ன ஜென்மம்டா?” என்று கல்யாணி ஆங்காரமாகக் கேட்க, அருளின் இதழ்களில் ஒரு கசப்பான புன்னகை அரும்பியது.
“நானும் அதையேதான் கேக்குறேன் அம்மா! சொந்தப் பேத்தியை வளர்க்க நீங்க முன்வரலை. கவிதா அவளைப் பார்த்துக்கிட்டா… அவளையும் ‘வேலைக்காரி’ன்னு கேவலமா பேசுறீங்களே, நீங்க எல்லாம் என்ன ஜென்மம்? என் மகளைப் பார்த்துக்கிட்டே இருந்தா கவிதாவுக்குக் கல்யாணமே ஆகாதுன்னு பயமுறுத்துனீங்க. இதைக் கேட்டுட்டு ஒரு அண்ணனா என்னால எப்படிச் சும்மா இருக்க முடியும்? என் மகளைப் பார்த்துக்க ஒரு அம்மாவை முறைப்படி அழைச்சிட்டு வரணும்னுதான் நான் இந்த முடிவை இவ்வளவு சீக்கிரம் எடுத்தேன். இப்போ அதுவும் உங்களுக்குப் பொறுக்கலையா? அதுக்கும் குறை சொல்லுவீங்களா?
என்னோட உழைப்பு மட்டும்தான் இந்தக் குடும்பத்துக்கு வேணும்னு நீங்க நினைச்சிருந்தா, என்னை ஒரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தாமலேயே இருந்திருக்கலாமே! காலத்துக்கும் உங்களுக்குச் சம்பாதிச்சுப் போட்டுட்டு, ஒரு மெஷின் மாதிரி இருந்திருப்பேன் தானே!” என்று தன் மனக்குமுறலை மொத்தமாகக் கொட்டித் தீர்த்தான் அருள்.
மகளுக்காகத்தான் இந்தத் திருமணம் என்பது வேதிகாவிற்கு ஏற்கனவே தெரியும். கவிதா இதைச் சொன்னபோதே அவள் மனம் சங்கடப்பட்டது. இப்பொழுது கணவன் வாயாலேயே அந்த நிதர்சனத்தை மீண்டும் கேட்கும்போது, அவளது இதயம் வலித்தது.
இதற்கும் அவள் திருமணத்திற்கு சம்மதித்த காரணமும் பெற்றவர்கள் தான், ஆனாலும் இருவருமே இப்படி கட்டாயத்தில் இணைந்திருக்கிறோமோ என்கிற எண்ணம் அவளை என்னவோ செய்தது. ஒரு பக்கம் தன் கடந்த காலக் காயம், மறுபக்கம் தன் திருமணத்தின் பின்னால் இருக்கும் இந்தத் தேவை என வேதிகா நிலைதடுமாறிப் போனாள்.
மேற்கொண்டு அதைப்பற்றி சிந்திக்க முடியாத வகையில், அங்கே சண்டை வலுத்துக் கொண்டிருந்தது. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தன் கைகளைப் பிசைந்துகொண்டு செய்வதறியாது நின்றிருந்தாள் வேதிகா.
“ஆமாம்! இவன் சம்பாதிச்சுதான் இந்த வீடு நிறைஞ்சு போச்சு… என் புருஷன் விட்டுட்டுப் போன மெக்கானிக் கடை இருக்கப்போய்த்தான் இவன் பிழைப்பே ஓடுது. அந்த நன்றியில்லாம எப்படிப் பேசுறான் பாரு!” கல்யாணி மீண்டும் குத்தலாகப் பேச, அருளின் பொறுமை எல்லை மீறியது.
“என் அப்பா விட்டுட்டுப் போனது கடையை மட்டும் இல்லம்மா… அவரோட பொறுப்புகளையும் சேர்த்துதான்! என்னோட கனவுகள் அத்தனையையும் சிதைச்சுட்டுதான்… நான் இதையெல்லாம் செஞ்சிட்டு இருக்கேன். அது ஏன் உங்க கண்ணுக்குத் தெரியமாட்டேங்குது?” என்று அருள் மனம் கேட்காமல் ஆத்திரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…
“அப்பா…!” என்று மாலதியின் பிள்ளைகள் உற்சாகமாகக் கத்தினார்கள்.
அனைவரும் வாசலை நோக்கித் திரும்ப, அங்கே முரளி நின்றிருந்தான். நொடியில் வீட்டின் சூழல் தலைகீழாக மாறியது. “வாங்க மாப்பிள்ளை!” என்று பணிவுடன் கல்யாணி வரவேற்க, “வாங்கண்ணா”, “வாங்க மாமா” என மற்றவர்களும் அவரை வரவேற்றார்கள்.
மாலதிக்கும் கல்யாணிக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர் ஏன் இத்தனை கோபமாகப் பேசுகிறார் எனத் திக்கென்று இருந்தது. முரளிக்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த வேதிகாவிற்கும் அவரின் பேச்சின் சாராம்சம் ஒன்றும் புரியவில்லை.
“நீங்களும் சாப்பிடுங்கண்ணா…” என்று வேதிகா வீட்டுப்பெண்ணாக உபசரிக்க, “அதெல்லாம் வேண்டாம்மா… நான் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கிறேன்” என்று முரளி மறுத்தான்.
“கொஞ்சம் இங்கேயும் சாப்பிடுங்கண்ணா” என்று வற்புறுத்தி வேதிகா அவருக்கு உணவு பரிமாறத் தொடங்கினாள்.
வேறு வழியில்லாமல் முரளியும் உண்ண அமர, அதற்குப் பிறகு எந்தவித காரசாரமான விவாதங்களும் இன்றி அந்த உணவுவேளை அமைதியாகக் கழிந்தது.
உண்டு முடித்ததும், “சீக்கிரம் கிளம்பு மாலதி!” என்று முரளி மனைவியை அவசரப்படுத்தினான்.
“இன்னைக்குத்தானே மாப்பிள்ளை வந்திருக்கா… நாளைக்கு வேணா அனுப்பி வைக்கிறேன்” என்று கல்யாணி மெல்ல இழுத்தார். மாலதியும் விடாமல், “நான் அம்மா வீட்டுக்குத்தானேங்க வந்திருக்கேன்? இப்போவே என்ன அவசரம்?” என்று தயங்கியபடித் தொடங்கினாள்.
“பக்கத்துலதானே வீடு இருக்குங்கிற தைரியத்துல இங்கேயே டேரா போட்டுட்டு, இவங்களை வேலை ஏவலாம்னு பாக்குறியா? இனி தேவையில்லாம இந்தப்பக்கம் வந்தா உன்னைத் தொலைச்சுக் கட்டிடுவேன்!” என்று முரளி கோபத்துடன் சீறினான்.
மாலதி அதிர்ந்து போய் நிற்க, “பொம்பளையைப் பாரு… லட்சணத்தைப் பாரு! சொந்தப் பிள்ளைங்களை வளர்க்கத் திராணி இல்லை… இதுல அடுத்தவங்களை வேலை ஏவறதுக்கு மட்டும் கிளம்பி வந்துடுறது! நம்ம வீட்டுக்கு கிளம்பு முதல்ல!” என்று முரளி ஆத்திரத்துடன் கத்த, மாலதியின் முகம் பேயறைந்தது போலானது.