“உருப்படியா ஒரு வேலையைச் செய்யத் தெரியாது… இருக்கிற பாத்திரத்தை எல்லாம் உடைச்சுத் தள்ளுறயா? இப்ப பாலுக்கு யாரு உங்க அப்பனா காசு தருவான்? ஏற்கனவே இருக்கிற லட்சணத்துக்கு, நீ இப்படி உருப்படியில்லாம இருந்தா உன்னை எவன் வந்து கட்டிக்குவான்? பெத்த கடனுக்கு உன்னை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் சோறு போட்டு வீட்டுல தண்டமா வைப்பனோ தெரியலையே!” என்று விஷத்தைக் கக்கினார் கல்யாணி.

அன்னையின் சொற்கள் தந்த வேதனையில் கவிதா விக்கித்துப்போய் நிற்க, அவளது கண்கள் கலங்கித் துளித்தன. அத்தையின் குரல் உயரவுமே சமையலறைக்கு விரைந்து வந்த வேதிகாவிற்கு, கவிதாவின் அந்தத் தவிப்பான தோற்றம் பெரும் ஆத்திரத்தை மூட்டியது.

ஒதுங்கிப் போக வேண்டும் என்ற தன் சுயக்கட்டுப்பாட்டையும் மீறி, “அத்தை… தெரியாமத்தானே கை நழுவிச்சு? அதுக்காகப் பிள்ளையை இப்படி எல்லாம் பேசிக் காயப்படுத்தணுமா?” என்று வேதிகா மெல்லக் கேட்க, கல்யாணி அவளையும் விட்டுவைக்கவில்லை.

“நீ வேற அவளுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டியா? உன் மூத்த நாத்தனார் மாலதியைப் பாரு… அவ வந்தா மகாலட்சுமியே வந்த மாதிரி இருக்கும்! அவளோட நிறத்துக்கும் குணத்துக்கும் தான் அந்த வீட்ல அவளை மகாராணி மாதிரி வச்சிருக்காங்க. இவளைப் பாரு… கரிக்கட்டை மாதிரி இருந்துட்டு, காரியத்துலயும் கண்ணில்லையே! இவளை எல்லாம் எப்படி கரை சேர்க்கப் போறேனோ? இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்க வழியில்லை… இதுல அண்ணன்காரன் மட்டும் வக்கணையா ஒண்ணுக்கு ரெண்டா கல்யாணம் கட்டிக்கிட்டான்!” என்று ஏளனமாக பேசினார் கல்யாணி.

கவிதா தன் கைகளாலேயே முகத்தை மறைத்துக்கொண்டு விம்மிக் கொண்டு தலைகுனிய, அவளது அந்த வாடி வதங்கிய தோற்றம் வேதிகாவின் நெஞ்சைப் பிழிந்தது. வேதிகா மெல்ல கவிதாவின் தோளைத் தொட்டு அணைத்துக்கொண்டாள்.

அதுவும் தன் கணவனைப் பற்றி அவர் கண்டபடி பேசியதை வேதிகாவால் துளியும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், கல்யாணியிடம் பதில் பேசுவது என்பது சேற்றில் கல் எறிவது போலத்தான்! கொஞ்சமும் மகன், மகள் என்கிற இணக்கமோ பரிவோ இன்றி, கண்டபடி பேசி நோகடித்துவிடுவார் என்பதால், வேதிகா தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துப் போனாள்.

கவிதாவிடம் ஆறுதலாக, “அவங்க பேச்சை விடு கவி… நீ ஏன் இதுக்கெல்லாம் போய் அழற? நிறம் என்னைக்குமே ஒருத்தரோட அழகையோ இல்ல குணத்தையோ தீர்மானிக்காது. போ… போய் முகத்தைக் கழுவிட்டு வா, இங்கே மீதி வேலையை நான் பார்த்துக்கிறேன்” என்று பேசினாள் வேதிகா.

கவிதா தேம்பியபடியே, “அண்ணி, நிறம் குறைவா பொறந்தது என்னோட தப்பா? இந்த வருஷம்தான் படிப்பையே முடிச்சேன். அக்கா கல்யாணத்துக்காக அண்ணன் வாங்கின கடனையே இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சுட்டு இருக்காங்க. இதுல என்னோட கல்யாணத்துக்கும் காசு சேர்க்கணும்ல? அதுக்குள்ள கல்யாணம், கல்யாணம்னு அடம் பிடிக்கிறாங்க. பாவம்… ஒத்தை ஆளா அண்ணன் எவ்வளவுதான் அல்லாடுவாங்க? இதுல தீபாலியைப் பார்த்துக்க மாட்டேன்னு அத்தனை சண்டை… அவளைக் கொண்டு போய் ஆசிரமத்துல சேர்த்துடுன்னு ஒத்தைக் கால்ல நிக்கிறாங்க. கடவுள் புண்ணியத்துலதான் அண்ணன் கண்ணுல நீங்க பட்டீங்க… உங்க அப்பாகிட்ட பேசி உங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது” என்றாள் விம்மிக் கொண்டே.

அதைக் கேட்டதும் வேதிகாவிற்கு மனதிற்குள் என்னவோ செய்தது. தங்கள் திருமணம் ஒரு ‘ஃபேரி டேல்’ கதை இல்லை என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் அருள்மித்ரன் சிக்கித் தவித்ததால்தான், வேறு வழியின்றி ஒரு மணமகளைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று நினைக்கும்போது அவளது இதயம் கனத்தது. இதைக் குறித்துத் தன் கணவன் இதுவரை ஒருமுறை கூடப் பேசியதில்லையே என்று எண்ணி அவள் வருந்தினாள்.

தன் மனப்பாரத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “உன்னோட நிறமும் உன் தப்பு இல்லை; அதுக்காக உனக்குக் கல்யாணம் நடக்காதுன்னு அவங்க சொல்றதுலயும் அர்த்தம் இல்லை. அவங்க பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துக்காத கவிதா. நானும் உன் அண்ணனும் சேர்ந்து உன் கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி வைப்போம். நீ உனக்கு என்ன ஆசைன்னு சொல்லு… மேற்கொண்டு எதுவும் படிக்கணுமா? இல்ல வேலைக்கு எதுவும் போகணுமா?” என்று பேச்சை மாற்றினாள்.

“வேலைக்கா?” என்று திருதிருவென விழித்தாள் சின்னவள்.

‘இதென்ன இப்படி முழிக்கிறா?’ என்று புரியாமல் பார்த்தவள், “ஏன் கவிதா… எதிர்காலத்தைப் பத்தி நீ எதுவுமே யோசிச்சது இல்லையா?” என்றாள் வியப்புடன்.

அதற்குள் கல்யாணி, “ரெண்டு பேரும் என்னத்தை சமையல் கட்டுக்குள்ள உருட்டிட்டு இருக்கீங்க?” என்று எட்டிப்பார்த்துக் கேட்டார். வேதிகா கவிதாவை ஆறுதலாகப் பிடித்தபடிப் பேசிக்கொண்டிருப்பது தெரியவே, “ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டு ரொம்பத்தான் ஆட்டம்!” என்று சீறினார். “சீக்கிரம் வேலையைப் பாருங்க… மாலதி குழந்தைங்க வருவாங்க. என் பேத்திங்க பசி தாங்க மாட்டாங்க!” என்று அதட்டினார்.

‘பேத்திகள் பசி தாங்க மாட்டார்கள் என்றால் இவர் சமைக்கட்டும்; இல்லையா அவர்களைப் பெற்ற அம்மா சமைக்கட்டும்! கவிதா இத்தனை வேலைகளைச் செய்து வைப்பதே பெரிய விஷயம்… இதில் அவளையே குறை சொல்லிக்கொண்டு…’ என்று வேதிகாவிற்கு ஆத்திரமாக வந்தது.

கவிதாவிடம் பிறகு நிதானமாகப் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தவள், “குழந்தைங்க தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள எதையாவது செய்வோம் வா கவி… முதல்ல போய் முகத்தைக் கழுவிட்டு வா” என்று அவசரப்படுத்தினாள். வேலையை முடிக்காத வரை வீட்டில் இப்படித்தான் இரைச்சலாக இருக்கும் என்பதைத் தன் கடந்த சில நாட்கள் அனுபவத்தில் அவள் பாடமாகக் கற்றுக்கொண்டிருந்தாள்.

வேதிகாவும் கவிதாவும் சேர்ந்து கல்யாணி இட்ட கட்டளைகளை எல்லாம் முடித்து வைத்துவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டனர். பெற்ற மகள் தான் பேசிய பேச்சால் நிலைகுலைந்து போயிருக்கிறாளே, அழுது அழுது அவளது முகம் வாடிச் சோர்ந்து கிடக்கிறதே என்கிற எந்த இரக்கமோ பரிவோ துளியும் அற்றவராக இருந்தார் கல்யாணி. அவருக்கு வேண்டியதெல்லாம், தான் ஏவிய வேலைகள் அனைத்தும் செவ்வனே முடிந்ததா என்பது மட்டுமே; அதிலேயே அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

தங்களின் அறையில் ஒரு ஓரமாகத் தன் எம்பிராய்டரி வேலைகளுக்காக வேதிகா ஒரு மேஜையைப் போட்டிருந்தாள். கவிதா மனதளவில் தளர்ந்து போய், அதில் தலைசாய்த்துப் படுத்துக்கொண்டாள். அவள் சற்று ஓய்வெடுக்கட்டும் என்று வேதிகாவும் அவளைத் தொந்தரவு செய்யாமல் தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

“ஏன் அண்ணி… நானும் அவங்க இரத்தம் தானே? அதுவும் அவங்களை மாதிரியேதான் பிறந்திருக்கேன்… அப்புறம் எப்படி என்னைத் துச்சமா நினைச்சு வெறுக்க முடியுது அண்ணி?” எனச் சட்டென்று கவிதா ஆற்றாமையோடு கேட்க, வேதிகாவிடம் ஒரு நீண்ட பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.

இதெல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. கல்யாணியின் மனதில் படிந்திருக்கும் வறட்டு கௌரவமும் அழுக்குமே அவரை இப்படியொரு பாரபட்சம் காட்டத் தூண்டுகிறது. எத்தனை ஆண்டுகளாக இதுபோன்ற இழிச்சொற்களைக் கேட்டு இந்தக் குழந்தை வளர்ந்திருப்பாளோ என்று எண்ணியபோது, வேதிகாவிற்கு கவிதாவின் மீது சொல்லொணாப் பரிவு தோன்றியது.

இவளின் இந்த மனப்போக்கு, தாழ்வு மனப்பான்மை சரியில்லையே என்று எண்ணிய வேதா, “கவி… இதுவரை எத்தனையோ பேர் தமிழ்நாட்டை ஆட்சி செஞ்சிருப்பாங்கதானே? உனக்கு எந்த முதலமைச்சரை பிடிக்கும்?” என்று சற்றும் சம்பந்தமே இல்லாமல் கேட்க, கவிதா அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.

“ம்ப்ச்… நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன கேட்கறீங்க அண்ணி?” என்று அயர்வோடு சொன்னவள், “எனக்கு காமராஜரைத்தான் ரொம்பப் பிடிக்கும்” என்றாள் மருந்துக்கும் முகபாவனையை மாற்றாமல்.

“ம்ம்… சரி பிடிச்ச ஹீரோ?” வேதிகா விடுவதாக இல்லை.

“அண்ணி…” என்று அலுத்துக்கொண்டவள், “அதெல்லாம் நிறைய பேர் இருக்காங்க. ரஜினி பிடிக்கும், விஜய் பிடிக்கும்… அப்புறம் விஜய் சேதுபதி! ஒருத்தரை மட்டும் சொல்ல முடியாது அண்ணி… படம் பிடிச்சிருந்தா பார்ப்பேன்” என்று அவள் சொன்னபோதே கொஞ்சம் தேறியிருந்தாள்.

“அதென்ன கவி… எந்த சி.எம். பிடிக்கும்னு கேட்டா, ஊழல் வாசனையே இல்லாத காமராஜரைச் சொல்ற… ஆனா அவரு ரொம்பக் கருப்பா இருப்பாரே! எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லாம் எத்தனை அழகா, வெள்ளையா, பளபளன்னு இருப்பாங்க… அவங்க பேரை ஏன் சொல்லலை நீ?” என வேதிகா கேட்டதும், கவிதா அண்ணியை முறைத்தாள்.

அவளது முறைப்பைச் சிரித்தபடியே ரசித்தவள், “ஹீரோ பேரு கேட்டா ரஜினி, விஜயாம்… லிஸ்ட் நீண்டுட்டே போகுது. இவங்களை விட ஹேண்ட்ஸம்மா எத்தனை ஹீரோஸ் இருக்காங்க… அவங்க எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையாக்கும்?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.

கவிதா உடனே கையெடுத்துக் கும்பிட்டுவிட்டாள். “போதும் அண்ணி, போதும்! நிறத்தை வெச்சு ஒண்ணும் இல்லைன்னு எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு. இப்படி விம் ஜெல் போட்டு நீங்க விளக்க வேண்டாம்” என்று சிரிப்போடு கவிதா சொன்னபோது, அவள் முகத்திலிருந்த வருத்தமெல்லாம் சுத்தமாக மறைந்து போயிருந்தது.

கவிதா மனம் விட்டுச் சிரித்த பிறகே வேதிகாவின் மனமும் நிறைவடைந்தது. தீபாலியின் வாழ்வில் மட்டுமல்ல… இப்போது கவிதாவின் மனதிலும் துயர் துடைக்கும் அன்னையாகவே வேதிகா குடியேறினாள். ஆனால், இவர்கள் இணைந்திருப்பதும், சிரித்துப் பேசி மகிழ்வதும் அங்கே கல்யாணியின் வயிற்றில் அமிலத்தைச் சுரக்கிறது என்பது புரியாமல், அந்த இரு பெண்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.