உங்கள் மகளும் கணவனும் மட்டும் தான் அழுவார்களா என மகனுக்கும் தோன்றி விட்டதோ என்னவோ சற்று நேரத்தில் பசிக்காக கவினும் சிணுங்கத் தொடங்கி விட்டான். வேதாவுக்கு தன்னுடைய நிலையை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது.
ஏதோ நினைப்பில் அழுகை தீர்ந்த பிறகும் மனைவியின் கையை சிறை செய்து வைத்திருந்த அருள், மகனின் அழுகையில் அதிர்ந்து போய் வேகமாக கையை விடுவிக்க, இதோ இப்பொழுது சின்னவனை அள்ளியணைத்து, மடியில் கிடத்தி பாலை புகட்டத் தொடங்கிவிட்டாள் அவன் மனையாள்.
இரு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு இவள் எப்பொழுது உறங்குவாள் என அவனுக்குக் கவலையாகி விட்டது.
மீண்டும் மகனை தங்கள் இருவருக்கும் இடையில் கிடத்தி வேதிகா படுக்க, அருள் ஒன்றும் புரியாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
விடிவிளக்கின் ஒளியில் அவன் தலை தன்புறம் திரும்புவது அவளுக்கும் புரிந்தது. அவனின் கேள்வி புரிந்து, “பக்கத்துல படுக்க வைக்கலைன்னு சிணுங்கறான்” என்றாள் சன்னமான குரலில்.
“ஓ…” என்று இழுத்தான். அவளுக்கு அவன் இழுத்த தோரணையில் சிரிப்பு வந்தது. சத்தமின்றி சிரித்துக் கொண்டாள். ஆனால், அவன் மேற்கொண்டு பேசிய ஓ’வின் தொடர்ச்சியில் அவள் அவனை பிரமிப்போடு நோக்கினாள்.
“சின்ன குழந்தை தானேங்க உங்க கை சூடு இல்லாம ஏங்கிடுவான். நீங்க அவனையும் கிட்டயே படுக்க வையுங்க” என்று சின்னவனின் தலையை வருடியபடி ஆதுர்யத்துடன் சொன்னான்.
பிரமித்துப் போனவளுக்கு, ‘அம்புட்டு நல்லவனாடா நீ?’ என்று தான் அந்த நேரத்தில் தோன்றியது. தானா இப்படி இலகுவாக யோசிக்கிறோம் என்று தன்னையே வியந்தபடி, “ம்ம்” என்று மட்டும் பதில் தந்தாள்.
மகனுக்கு தட்டிக் கொடுத்துக்கொண்டு அவள் படுத்திருக்க, “ரெண்டு பேரையும் பார்த்துக்க உங்களுக்கு சிரமமா இருக்குமேங்க. நைட் தூக்கம் கெடுமே?” என பெரும் கவலையுடன் ஒலித்த அருளின் குரலில், நிமிர்ந்து அவனை வினோதமாகப் பார்த்தாள்.
“இதுல என்னங்க இருக்கு? கவினுக்காக முழிச்சு பழக்கம் தான், பகல்ல நேரம் இருக்கப்ப தூங்கிப்பேன்” என்றாள் சன்னமான குரலில். இனி அப்படி தூங்குவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்று அவளுக்குத் தெரியவில்லை பாவம். அவனும் அவனின் தாயைப் பற்றி யோசிக்க மறந்திருந்தான்.
“ஓ…” என்று இப்பொழுதும் இழுத்தான், குரல் வெகுவாக உள்ளே போயிருந்தது. ஆனால், அவன் செய்வதற்கு இதில் எதுவும் இல்லையே என அவனுக்கு மிகவும் கவலையாகத் தான் இருந்தது.
அது அவளுக்கும் புரிந்திருக்க, “குழந்தைங்க வளருற வரைக்கும் அப்படித்தாங்க இருக்கும். இதுக்கு எல்லாம் வொரி பண்ணாதீங்க” என்று சமாதானமாகச் சொன்னாள்.
“ஹ்ம்ம் சரிங்க. ஆனா, நமக்கு நம்ம ரெண்டு குழந்தைங்க மட்டும் போதும் தானேங்க?” என்று கவலையான குரலில் அருள் அவளிடம் விசாரிக்க, அவள் இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காமல் விக்கித்துப் போனாள். விழிகள் பெரிதாக விரிந்து இதயம் வேகமாக படபடத்துக் கொண்டிருந்தது இந்த கேள்வியில்.
அவள் பதில் சொல்லவில்லை என்றதும், “என்னங்க? இன்னுமொரு குழந்தை வேணும்ன்னு யோசிச்சிருந்தீங்களா என்ன?” என அவன் பாட்டுக்கு அடுத்த கேள்வியைக் கேட்க, அவளுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
அவளின் சங்கடம், அவஸ்தை எல்லாம் அவனுக்குப் புரியவில்லை. அவன் யோசித்தது எல்லாம் இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்குவதற்கே எத்தனை சிரமப்படுவாளோ இதில் இன்னும் ஒரு குழந்தையா என்றுதான்.
“என்னங்க பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க?” என அவளின் புறம் திரும்பிப் படுத்து விடிவிளக்கின் ஒளியில் அவளின் முகம் பார்த்து வினவினான்.
என்ன பதில் சொல்வாளாம் அவள்?
அவனை ஏறிட்டுப் பார்க்கவும் முடியாமல் அவள் சங்கடத்துடன் இருக்க, அப்பொழுதே தான் என்ன பேசினோம் என்பது அவனுக்கு விளங்கியது போல! “அச்சோ! சாரிங்க நீங்க ரொம்ப சிரமப்படறீங்கன்னு தோணுச்சா? அதுதான்… அதுதான்… ச்சு… ஏதேதோ பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. நிஜமா எனக்கு எந்த யோசனையும் இல்லைங்க. சும்மா பேச்சுக்குத் தான் கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க” என பதறிக்கொண்டு சொல்ல,
“ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்… விடுங்க, நான் தப்பா எடுத்துக்கலை” என்றாள் மெதுவான குரலில். இத்தனை நேரமும் ஏதேதோ பேசி அவளை சங்கடமும் படுத்திவிட்டு இப்பொழுது இவன் பதறிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு ரொம்பவும் ஒருமாதிரியாகிப் போனது. வேகமாக அவளுக்கும் மகனுக்கும் முதுகு காட்டி படுத்துக் கொள்ள, அவளுக்குக் கொஞ்ச நேரத்திற்குள் வங்கக்கடல் தாண்டி யோசித்தவனை நினைத்து சிரிப்பு தான் வந்தது.
அவனது சங்கடத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பேச்சு கொடுத்தாள். என்ன பேச என தெரியாமல், “எதுக்கு என்னை வாங்க, போங்கன்னு கூப்பிடறீங்க?” என தன்னைமீறி மனதில் உறுத்தியதைக் கேட்டுவிட, அவனுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாத தடுமாற்றம். தயங்கியபடியே, “அது அப்படிதாங்க வருது. ஏன்னு தெரியலை” என்று பதில் தந்தான்.
‘குழந்தை வேணுமா வேண்டாமான்னு யோசிக்கிற மனுஷன், பொண்டாட்டியை எப்படி கூப்பிடணும்ன்னு யோசிக்கலை’ என்று முகம் வாடியது வேதாவுக்கு.
அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கவே, “ஏங்க அப்படி கூப்பிடறது உங்களுக்கு பிடிக்கலையா?” என்று அருள் கேட்க,
அவளுக்கு, ‘இது கூட உங்களுக்குப் புரியாதா?’ என்றுதான் தோன்றியது. அவள் அவனுடைய மனைவி. அவளுக்கு உரிமை தானே தேவை! இந்த மரியாதை எதற்கு என்றிருந்தது. ஆனால், அதை அவனிடம் சொல்வதற்கு முடியவில்லை.
மீண்டும் அமைதி காத்தவளிடம், “வேற எப்படி கூப்பிடணும்ங்க?” என்று அவனே கேட்டிருந்தான்.
அவளுக்கு இந்த பேச்சை ஏன் தொடங்கினோம் என்றாகி விட்டது. அவன் அழைக்கும் முறையை ஆட்சேபித்தாகி விட்டது. இனி எப்படி அழைக்க வேண்டும் என்றும் அவளிடமே கேட்டு நின்றால்? கோபம் என்பதை விட, ஒரு மாதிரி சோர்வு!
பதிலே சொல்லாமல் இருக்கிறாளே என்று சங்கடத்தோடு திரும்பி அவளின் முகம் பார்க்க, அவள் அவனைப் பார்க்கவில்லை. இன்னமும் மகனை தட்டிக்கொடுத்துக் கொண்டு தான் இருந்தாள். “வேதிகான்னு பேர் சொல்லிக் கூப்பிட்டுவா…?” கூப்பிடுக்கவாங்க என்று தான் கேட்க வந்தான், அது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது போல தோன்றிவிட நொடியில் சுதாரித்து நிறுத்திக் கொண்டான்.
சின்னதாகிவிட்ட குரலில், “உங்க விருப்பம்” என்றாள்.
அப்படியும் கூப்பிடாதே என்று சொல்வது போல இருந்தது அவளின் குரல். என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“வேதிகா…” என்றான் அழுத்தமாக. அவள் ஏறிட்டு அவனை நோக்கினாள்.
“நீங்க ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு. அப்படித்தான் உங்களோட…” என்றவன் ஒரு நொடி தடுமாறிவிட்டு, “சாரி… உன்னோட முதல் அறிமுகம் எனக்கு. நம்ம ஊருல ஸ்கூல் முன்னாடி எல்லாம் நீ படிக்கும்போது டென்த், டவல்த் ரிசல்ட் வந்தப்ப உன்னோட போட்டோ கட்டவுட்ல இருந்தது. அப்படி பரிச்சயமானது தான் உன் முகம். இந்த பொண்ணு ரொம்ப நல்லா படிக்கும் போல அப்படின்னு நினைச்சு பார்த்திருக்கேன். அதுல தான் மரியாதை வந்திருக்கும் போல” என்றான்.
இப்பொழுது, அவள் “ஓ…” வென்று இழுத்தாள். வேண்டுமென்றே அவனை இமிடேட் செய்தது போல இருந்தது அவளின் தோரணை. அது புரியவும் அடர்ந்த மீசைக்கடியில் அவனின் இதழ்கள் லேசாக விரிந்தது.
“இனி வாங்க போங்கன்னு சொல்ல மாட்டேன் வேதிகா” என்றான் தவறை ஒப்புக்கொண்டு ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்கும் குழந்தையின் பாவனையில்.
அவள் எதுவும் பேசவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் முழு பேரை நீட்டி முழக்கி கூப்பிடறேன்னு தோணும், ஆனா நிஜமா வேற எப்படி கூப்பிடன்னு யோசிக்கத் தெரியலை” என்றான் பாவமான குரலில்.
‘அநியாயத்துக்கு நல்லவன் தான்டா நீ’ என்றுதான் மீண்டும் மனதில் தோன்றியது. அவன் சொன்னதற்கு பதிலுக்கு வேறு ஒன்றும் சொல்லவில்லை. எப்படி அழைத்தால் அவளுக்கு விருப்பம் என்றும் சொல்லவில்லை. அவனே அவன் விருப்பம் போல கூப்பிட்டுக் கொள்ளட்டும். இந்த வாங்க, போங்க அழைப்பு தான் அலர்ஜியாக இருந்தது. அதற்கு பெயர் சொல்லி கூப்பிட்டது எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணிவிட்டாள் போல!
“பேர் சொல்லியே கூப்பிட்டுக்கட்டும் தானே!” சமத்தாக அவன் கேட்கையில் மறுக்கும் எண்ணம் துளியும் வர மறுத்தது.
“அதுதான் உங்க விருப்பம்ன்னு சொல்லிட்டேனே” என்று சிறு சிரிப்புடன் இந்தமுறை சொல்ல, முன்பிருந்த சிணுக்கம் அவளது குரலில் இப்பொழுது இல்லை என்று புரிந்தவனும் புன்னகை தவழ உறங்கிப் போனான்.
மீண்டும் ஒன்றிரண்டு முறை பிள்ளைகளைக் கவனிக்க அவள் எழுந்து கொண்டது அவனுக்குத் தெரியவில்லை. காலையில் மிகுந்த சோர்வோடு காணப்பட்டவளைக் கவனித்துத் தான் அவனால் அனுமானிக்க முடிந்தது.