அப்படி ஒருவழியாக பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெளியில் வந்தததற்கு, இன்று ஒரே நாளில் நிறைய பேச்சுக்களை போதும் போதும் என்றளவில் கேட்க நேர்ந்தாயிற்று! ஒரே ஒருவனின் நம்பிக்கையான வார்த்தைகள் மட்டும் அந்த காயங்களுக்கு மயிலிறகில் மருந்திடுவது போல இருப்பது கடவுள் அவள்மீது காட்டிய கருணையாக இருக்கக்கூடும்.

இந்த உலகத்தில் எல்லா தவறுகளையும் பெண் மீது மட்டுமே சுமத்தாத சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று எண்ணியவள், வாயிற்கு வந்ததை வரைமுறையின்றி பேசிக் கொண்டிருக்கும் அந்த அம்மாவின் வார்த்தைகளை அதற்கு மேலும் செவியில் போட்டுக் கொள்ள விரும்பாதவளாய் தன் பெற்றோர் இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.

முகத்தில் வாட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் அங்கு சென்றும் அமைதியாக அமர்ந்து கொண்டாள். ஆனால், அவளின் பேரமைதியே என்ன நடந்திருக்கும் என்று பெற்றவர்களுக்குப் புரிய வைத்திருந்தது. கவிதா வேறு தீபாலியோடு அங்கு அவர்கள் கூடவே இருக்கையில், மகளிடம் அவர்களால் எதுவும் கேட்டுக் கொள்ளவும் முடியவில்லை.

ஆனால், என்றானாலும் மகள் இதனை எதிர்கொண்டு தானே ஆகவேண்டும்! பார்க்கும் போதெல்லாமா மகளைப் பேசப் போகிறார்கள்? அவளின் மனம் நோக ஓரிரு முறை பேசிவிட்டு, வேறு பேச்சிற்குத் தாவி விடப்போகிறார்கள். அதற்காக அவள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தால், அவள் எப்பொழுது வெளியில் வருவது என்பது அவர்களின் எண்ணம். இந்த உலகம் அவர்கள் எண்ணியதை விடவும் பொல்லாததாயிற்றே!

யமுனா பேச்சுவாக்கில் கவிதாவிடம் சில விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்க, மனதில் எந்த விகல்பமும் இல்லாத அவளும் ஏற்கனவே வீட்டில் உள்ள பிரச்சனையில் பெருமளவில் மனக்காயப் பட்டிருந்ததால், அந்த கலக்கத்தினால் தன்னிடம் பரிவுடன் விசாரித்தவரிடம் உள்ளது உள்ளபடி அனைத்தையும் சொல்லி விட்டாள்.

தீபாலியின் பொறுப்பை அண்ணியின் பெற்றவர்கள் உதறிச் சென்றதிலிருந்து, தன் அன்னையும் சின்னவளை ஏற்றுக் கொள்ளாதது வரை சோகத்துடன் சொன்னவளை யமுனாவிற்கு என்ன சொல்லித் தேற்றுவது என்றே தெரியவில்லை.

“நான் கருப்பா பொறந்திட்டேனாம், அதுனால எனக்கு கல்யாணமே நடக்காதாமா. இப்ப அண்ணன் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்கிறதால யாரும் திரும்பியும் பார்க்க மாட்டாங்களாம். என்னை தான் இப்படியெல்லாம் பேசறாங்கன்னா எங்க அண்ணா, எங்களுக்காகவே உழைச்சவரு அவரையும் ரொம்ப பேசறாங்க. வாழ்க்கையில சின்ன சந்தோஷத்தைக் கூட எங்க அண்ணன் அனுபவிச்சது இல்லை. எங்க அம்மா வற்புறுத்தி பிரீத்தி அண்ணியை கட்டி வெச்சாங்க, அண்ணி குணத்துக்கு எங்க அண்ணன் கூடவும் ஒத்துப் போகலை, எங்க வீட்டுலேயும் ஒத்துப் போகலை. பாவம் எங்க அண்ணனும் வாழ்க்கையை தக்க வெச்சுக்க போராடி கடைசியில இப்ப குழந்தை கூட தனியா நிற்கிறாங்க. இப்ப எங்க அம்மாவும் குழந்தையை பார்த்துக்க மாட்டாங்களாம், நானும் பார்த்துக்க கூடாதாம், அண்ணன் என்ன பண்ணுவாருன்னு யோசிக்க வேண்டாம்” என்று அவள் வருத்தத்தோடு சொல்ல, யமுனா ஆறுதலாக அவளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

வரும் வழியில் அந்த அம்மா பேசியது இவர்களைக் குறித்துத் தான் என்று வேதிகாவுக்கு புரிந்தது.

கவிதாவின் கையிலிருந்த பால் மணம் மாறாத குழந்தை அவளை வெகுவாக அசைத்துப் பார்த்தாள். இந்த சின்ன சிட்டுக்கு அம்மா இல்லையா? உறவுகளும் இவளின் பொறுப்பை ஏற்க முன்வர மறுக்கிறார்களா? தன் கவலை பின்னுக்குப் போய் வேதாவின் மனதில் சின்னவளை நினைத்து பாரம் ஏறிக் கொண்டது.

அந்த சின்னவளையே பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன் தாய்மை சுரப்பது போல எண்ணம். சட்டென்று வலது கையை உயர்த்தி, மார்பின் நடுவில் வைத்து லேசாக அழுத்திக் கொண்டாள். மார்பின் கனம் திடீரென்று கூடுவதைப்போலத் தோன்றியது. மூச்சு விட சற்று சிரமமாக இருந்தது.

“நீ கவலைப்படாதம்மா… எல்லாம் சீக்கிரம் சரியாயிடும். கடவுள் எல்லாருக்கும் ஒரு வழி விடுவாரு” என்று கவிதாவுக்கு ஆறுதலாகச் சொல்லிக் கொண்டிருந்த யமுனா, மகளின் நிலையைக் கவனித்து, “என்ன செய்யுது வேதா?” என்றார் அருகில் நெருங்கி.

“ஒன்னும் இல்லைம்மா” என்றவள், “திடீர்ன்னு பால் கட்டிட்ட மாதிரி வலிக்குது” என்று மெல்லிய குரலில் சொன்னதும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. கவினுக்கு ஒன்றே முக்கால் வயதாகிறது. பால் சுரப்பது குறைந்து விட்ட நிலையில், மகளுக்குப் பால் கட்டிக் கொள்கிறது என்றால் என்னவானதோ என கவலை கொண்டார்.

“என்னம்மா திடீர்ன்னு இப்படி சொல்லற? நாம வேணா டாக்டரை பார்த்துடலாமா?” என்றார் பயந்தபடி.

அம்மாவிடம் தன் தாய்மை நிலையை எப்படி விளக்குவது என்று புரியாமல் தவித்தவள், அந்த சின்ன குழந்தையை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு பிறகு அம்மாவிடம் திரும்பி, “அம்மா… இன்னைக்கு தானே இப்படி ஆகியிருக்கு. பெருசா எதுவும் இருக்காது விடுங்க. கவின் சாப்பிட்டு முடிச்சிட்டா கொடுங்க, கொஞ்சம் அவனுக்கு பால் கொடுத்துப் பார்க்கிறேன்” என்றாள்.

சரி இன்று தானே வெளியில் வந்திருக்கிறாள், அதனால் கூட இருக்கலாம் என்று அவரும் எண்ணிக்கொண்டு, “வேணாம், வீட்டுக்கு போயி கொடுப்பியாம், மண்டபத்துல எங்கே கொடுப்ப? உனக்கு தான் சிரமம்” என்று மெல்லிய குரலில் மகளிடம் சொன்னவர், ‘புறப்படலாமா?’ என்பது போல கணவனைப் பார்த்தார்.

அசோகனுக்கும் மனைவியின் பார்வை புரிந்திருக்க, அவரிடம் சம்மதமாக தலையசைத்தவர், “சரிம்மா உங்க அண்ணா வந்தா நாங்க கிளம்பிட்டோம்ன்னு சொல்லிடறயா?” என்று கவிதாவிடம் விடைபெறும் விதமாகக் கூறியவர், வாஞ்சையுடன் தீபாலியின் தலையை வருடி விட்டார்.

யமுனாவிற்கும் சின்னவள் மீது இரக்கம் சுரந்தது.

அவர்கள் இருக்கும் ஊரில் தான் மாப்பிள்ளை வீடும் இருக்கிறது. அதோடு நீண்ட கால நல்லுறவும் அவர்களோடு இருந்தது. அந்த பழக்கத்தில் தான் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். பெண் வீட்டார்களைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்றபோதும், இங்கு சந்தித்த தீபாலியைப் பார்த்ததும், அம்மா இல்லாத குழந்தையின் பொறுப்பை இப்படி உதறி விட்டார்களே என ஆதங்கமாக இருந்தது.

கவிதாவின் கையை ஆறுதலாகப் பற்றி, “உங்க அம்மா பேசறதை எல்லாம் மனசுல வெச்சுட்டு அழக் கூடாது, புரியுதா? யாருக்கு எப்ப என்ன நடக்கணும்ன்னு ஆண்டவன் போட்ட கணக்கு இருக்கும்போது எதுவும் தப்பாது. நம்ம ஊருல எல்லாரும் இந்த நிறம் தான், ஏதோ ஒன்னு ரெண்டு பேரு முன்ன பின்ன இருக்கிறதால நம்ம ஊரு நிறத்தை அழகில்லைன்னு சொல்லறதா? அவங்க தான் அப்படி சொல்லறாங்கன்னா நீயும் நம்பிடறதா?” என்று அவளிடம் இதமாக சொன்னவர், “உன் மனசுக்கும் உங்க அண்ணன் மனசுக்கும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருப்பீங்க” என்றார் மனதார.

கவிதாவின் முகம் அவரின் இதமான ஆறுதலான பேச்சில் தன் வாட்டத்தைக் களைந்து புன்சிரிப்பை சிந்தியது. “ஏதோ மனசு கஷ்டத்துல எல்லாம் சொல்லிட்டேன் மா, முதல் தடவை பார்க்கும் போதே எல்லாத்தையும் இந்த புள்ளை சொல்லுதுன்னு நினைச்சு தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள் முகத்தில் வருத்தத்தைக் காட்டி.

சொல்லிவிட்டோமே என வருந்துகிறாள் என்று புரிந்தது. “உனக்கு வீட்டுல சொல்ல ஆள் இருந்திருக்காது, அதெல்லாம் நான் தப்பா எடுத்துக்கலை. கவனமா இரு. வரோம்” என்று பேசிவிட்டு நகர, அதற்குள் அருள்மித்ரனும் உணவை உண்டுவிட்டு வந்துவிட்டான், தம்பதிகள் முறையே அவனிடமும் விடைபெற்றுச் சென்றார்கள்.

வேதிகாவிற்கும் கவிதாவிடம் ஆறுதலாக எதையாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது தான், ஆனால், இங்கே அவளுக்கே பத்து பேரின் ஆறுதல் தேவை, இதில் அவள் போய் இன்னொருவருக்குச் சொல்லலாமா என்று தோன்றிவிட்டது. அதற்குள் அருள் வேறு வந்திருக்க, தன் எண்ணத்தை முற்றிலும் அழித்து விட்டு அமைதியாகி விட்டாள்.

யாரிடமும் பெயருக்குக் கூட எதுவும் பேசாமல் அமைதியாக அவள் பெற்றோரைத் தொடர்ந்து நடக்க, அருளின் பார்வை தன்னை மீறி அவளைத் தான் பின்தொடர்ந்தது.

இந்த பெண்ணை இந்த கதிக்கு ஆளாக்கியவன் எங்கோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பான், அவனால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணுக்கு எப்படியொரு நிலை என்று எண்ணி பெருமூச்சு வந்தது.