நாட்கள் தெளிந்த நீரோடையாகச் செல்ல, வேதிகா தன் கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தாள். அவள் ஆசைப்பட்டபடியே வங்கித் தேர்வையும் நல்லபடியாக எழுதி முடித்தாள். அருள்மித்ரனும் தன் தங்கை மாலதியின் திருமணத்திற்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைத்து, அடமானத்திலிருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்டுத் தன் அன்னையிடம் கொடுத்திருந்தான்.
சாமியண்ணன், செல்வி தம்பதி, தன் பேத்தியைக் காண்பதற்காக வந்திருந்தார்கள். தீபாலியை ஆசையாகத் தூக்கிக் கொஞ்ச நினைத்தபோது, அவள் வீறிட்டு அழுதாள். இப்போது அவளுக்கு நன்கு விவரம் தெரியத் தொடங்கிவிட்டதால், அவர்களிடம் செல்லவே மறுத்தாள். வேதிகாவுக்கு அவர்கள் செய்த காரியம் நன்றாகத் தெரியும் என்பதால், சின்னவளைச் சமாதானப்படுத்தி அவர்களிடம் கொடுக்கும் எந்த முயற்சியையும் அவள் எடுக்கவில்லை.
அருள் அவர்களிடம் முகம் கொடுத்துக்கூடப் பேச மறுத்துவிட்டான். அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவன் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான்.
தாங்கள் அங்கே ஒரு வேண்டாத விருந்தாளி என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அன்று அவர்கள் மாப்பிள்ளையையும் பேத்தியையும் ஒதுக்கிவைக்க நினைத்தார்கள்; இன்று இவர்களாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்.
மனம் வலித்தது. தாங்கள் செய்த பாவம்தான், இன்று தங்களை இந்த நிம்மதியற்ற நிலையில் நிறுத்தி வறுத்துகிறது என்பதை உணர்ந்து விட்டார்கள். மூத்தவள் உயிரோடு இல்லை; அவளது வாரிசை உரிமை கொண்டாடும் இடத்திலும் அவர்கள் இல்லை. சின்னவளோ தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இப்போது பெற்றவர்களும் வேண்டாம் என்று தனித்துப் போய்விட்டாள்.
வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியிருந்தது. இதற்கு என்றாவது ஒருநாள் விமோசனம் கிடைக்குமா என்றே தெரியவில்லை!
கவிதாவுக்கு அரசு வேலையில் இருக்கும் ஒரு நல்ல வரன் அமைந்தது. ‘மூத்த தங்கை மாலதிக்குச் செய்த அளவிற்குத்தான் என்னால் சீர் செய்ய முடியும்’ என்ற அருளின் நிபந்தனையையும் மாப்பிள்ளை வீட்டினர் அப்படியே ஏற்றுக்கொண்டதால் இவனுக்குப் பூரண திருப்தி. விசாரித்த வரையில் அது நல்ல குடும்பமாக இருக்க… கவிதாவின் திருமணத்திற்காகத் தான் சேர்த்த சேமிப்பு போதுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. மீண்டும் கடன்பட வீட்டுப் பத்திரமும் கையில் கிடைக்காது என்ற நிலையில், அவனுக்கு மாமனார் அசோகன் உதவ முன்வந்தார்.
“இல்லை மாமா… நானே எப்படியாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்” என்று சொன்னவனை, மாமனாரும் மாமியாரும் எவ்வளவு பேசியும் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை.
பிறகு வேறு வழியில்லாமல், “கல்யாணத்தை பயமில்லாம நடத்துங்க… கடன் வாங்க நான் ஜாமீன் கொடுக்கிறேன்” என்று அவர் சொன்னதை மட்டும் அருள் ஒப்புக்கொண்டான்.
பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்ற தகவலை வீட்டில் சொன்னான். கவிதாவுக்கு அமையவிருக்கும் மாப்பிள்ளையின் தகுதி பெற்றவளுக்குப் பொறுக்கவில்லை. ‘இவளுக்கு இப்படியொரு வாழ்வா?’ என்று கல்யாணிக்கு வயிறு எரிந்தது. மாலதிக்கு அமைந்த வாழ்க்கையை விடக் குறைவான வாழ்க்கைதான் மற்ற இரு பிள்ளைகளுக்கும் அமைய வேண்டும்; அதில் பாதகம் வருவதைக் கல்யாணியால் ஒப்புக்கொள்ளவே முடிவதில்லை.
ஏனென்றால், அவர் பார்வையில் மாலதிதான் இரு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறாள்; அவள்தான் மூவரில் சிறப்பானவள். ஆக, ஆகச்சிறந்த வாழ்க்கையும் அவளுக்கே உரித்தானது!
உண்மையில் அவளின் வாழ்க்கை சிறப்பாகத்தான் அமைந்திருக்கிறது. அது சிறப்பாகவே இருக்க, மற்றவர்களின் வாழ்க்கை அவளுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற இவரின் எண்ணத்தை எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வதோ?
அந்த வன்மத்தில் கல்யாணி மாலதியோடு சேர்ந்து சில கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய, அது நிறைவேறும் முன்பு நல்லவேளையாகச் சூழ்நிலை மாறியது.
அன்று வேலையில் இருந்த அருள்மித்ரனுக்கு முரளியிடமிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக வீட்டுக்கு வரச்சொல்லி அவர் சொல்லவும், என்னவோ ஏதோவென்று அடித்துப் பிடித்துத் தாய்வீடு சென்றான்.
அறைவாங்கிய தடங்கள் கன்னத்தில் தெரிய, அழுது தேம்பியபடி மாலதி அமர்ந்திருந்தாள். கூடப்பிறந்த தங்கையின் நிலையைக் கண்டதும் அருள்மித்ரன் பதறிப் போனான். “என்ன ஆச்சு மாலதி?” என்று கேட்டபடியே வேகமாகத் தங்கையிடம் ஓடினான். அங்கே முரளியோ முகம் இறுகிப் போய் நின்றிருந்தான்.
“என்ன ஆச்சு மச்சான்?” தன் தங்கை மாலதியை மாப்பிள்ளைதான் அடித்தாரோ என்ற கோபம் அவனுக்குள் எரிமலையாய்ப் பொங்கியது. ஆனால், உடனடியாக அவனால் அதைக் காட்டவும் முடியவில்லை. அவள் என்ன தவறு வேண்டுமானாலும் செய்திருக்கட்டுமே… அதற்காக இப்படி அடிப்பாரா? அவளுக்குக் கேட்க ஆளில்லை என்று நினைத்துவிட்டாரா என்று அவனது உள்ளம் கொந்தளித்தது.
அருளின் இறுகிய முகம் அவனது உள்மன எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்க… “இந்த வீட்டையும், சுத்தியிருக்க இடத்தையும் இவ பேருல மாத்தறதுக்கும்… உங்க கடையை விக்கிறதுக்கும் அம்மாவும் மகளும் சேர்ந்து ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க அருள்…” என்று முரளி கோபத்துடன் சொல்லவும், தன் தலையில் ஒரு பேரிடி விழுந்த உணர்வு ஏற்பட்டது அருள்மித்ரனுக்கு!
அவன் மூச்சு விடவும் மறந்து, அப்படியே அதிர்ந்து போய் நின்றிருந்தான். தன் பிழைப்பில் கூடவா இப்படிப் பெற்ற தாயும் கூடப்பிறந்தவளும் மண்ணள்ளிப் போட வேண்டும்? அப்படி அவர்கள் இருவருக்கும் அவன் செய்த பாவம் தான் என்ன?
அவனை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் தன் மனைவி, பிள்ளைகள் என மூவரின் முகமும் அவனது நெஞ்சில் மின்னி மறைந்தது. அடுத்துத் திருமணத்திற்குத் தயாராக நிற்கும் தங்கை கவிதாவின் முகம் நினைவிற்கு வந்தது. அந்த ஆண்மகனின் கண்கள்… தன் சொந்தக் குடும்பமே தனக்கு செய்த மாபெரும் துரோகத்தை ஏற்க மாட்டாமல், கண்ணீரில் கலங்கிச் சிவந்தன!
“என்ன சொல்றீங்க மச்சான்?” குரல் கூட எழும்பாமல் தவிப்போடு கேட்டான் அருள்.
“இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு நீங்க கையெழுத்து போட்ட பத்திரத்துல… நீங்க தொழில் செய்யற இடத்துலயும் உங்களுக்குப் பங்கில்லைன்னுதான் ஆத்தாளும் மகளும் சேர்ந்து எழுதி வாங்கியிருக்காங்க அருள்!” என்று ஆத்திரமும் வெறுப்புமாக முரளி கூறினான்.
சில நொடிகள் மேற்கொண்டு அவனுக்குப் பேச்சே வரவில்லை; தன் இரு கரங்களால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான். ‘உனக்குத்தான் கடையிருக்கே… அதனால இந்த வீட்டுல உனக்குப் பங்கில்லை’ என்று சொல்லித் தான் அன்று அவனது அன்னை கையெழுத்து வாங்கினார். அவனும் அவரது வார்த்தைகளுக்கு அப்படியே உடன்பட்டான். ஆனால், இன்று அவனது வாழ்வாதாரமான அந்தக் கடையும் அவனுக்குச் சொந்தமில்லை என்றால்…?
“கடையை எழுதி வாங்கினது போதாதுன்னு… அந்தக் கடையை இப்ப இவங்களுக்கு விக்கணுமாம்! கவிதாகிட்ட இருந்து எப்படி கையெழுத்து வாங்கறதுன்னு அம்மாவும் மகளும் சேர்ந்து சதியாலோசனை செஞ்சிட்டு இருக்காங்க… அவங்க பேசுனதையெல்லாம் கேட்டுட்டுப் பொறுமையா போறதுக்கு… நான் ஒன்னும் நீங்க இல்லை!” என்றான் முரளி இன்னும் அடங்காத ஆத்திரத்தோடு.
மேற்கொண்டு என்ன பேசுவது என்றே அருள்மித்ரனுக்குத் தெரியவில்லை. அப்படியென்ன கவிதாவும் அவனும் அவர்களைப் பெற்ற தாய்க்கு வேண்டாதவர்களாகப் போய்விட்டார்கள்? அவரது சொந்தப் பிள்ளைகள்தானே நாங்கள்? அவனது அகம் நெருப்பில் விழுந்தது போலத் தவித்தது.
தளர்ந்து போய் ஓர் இருக்கையில் அமர்ந்தான். கடை இல்லாது போனால் மேற்கொண்டு அவன் என்ன செய்வானாம்? இதுவரை சம்பாதித்ததை எல்லாம் குடும்பத்திற்குத்தானே செலவு செய்திருக்கிறான்! ஏன்… கவிதாவின் திருமணத்திற்குக்கூட ஓரளவிற்கு அவனிடம் சேமிப்பு இருக்கிறது. ஆனால், அவனுக்கென்று இதுவரையிலும் ஒரு பைசா கூட அவன் எடுத்து வைத்ததில்லையே!
சற்று நேரத்தில் கவிதாவும் தன் பணி முடிந்து வீட்டிற்கு வந்திருந்தாள். அவளுக்கும் அந்த இறுக்கமான சூழல் புரியவில்லை. முரளி அருள்மித்ரனுக்கு மட்டுமில்லாது வேதிகாவுக்கும், அவனின் அத்தைமார்களான புவனா, சந்திரா ஆகியோருக்கும் கூடத் தகவல் தந்திருந்தான். அதனால், சற்று நேரத்தில் வேதிகாவும் பதற்றத்தோடு அங்கு வந்து சேர்ந்தாள்.
தளர்ந்து அமர்ந்திருந்த கணவனைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பதறியபடி வேதிகா அவனிடம் விரைந்து சென்றாள். “என்ன ஆச்சுங்க?” என்று பதறியபடி கேட்டவளிடம், பதில் சொல்லும் நிலையில் அவன் இருக்கவில்லை. அவளோ வேகமாக கவிதாவைக் கேள்வியாக நோக்கினாள். கவிதா வரும்போதும் இதே சூழல்தான் என்பதால், அவளாலும் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லையே! அதனால், ‘தனக்குத் தெரியாது’ என்பது போலக் கலக்கத்துடன் தலையசைத்தாள் கவிதா.
அவளுக்குத் தன் திருமணத்திற்கு அண்ணன் வரன் பார்ப்பது தெரியும்தான். ‘இப்பொழுதுதான் அக்காவின் திருமணக் கடனை அடைத்தான்; அதற்குள் தனக்கும் திருமணத்திற்குப் பார்த்தால், அண்ணனால் பொருளாதார ரீதியாகச் சமாளிக்க முடியுமா? நானும் இன்னும் கொஞ்ச நாட்கள் வேலைக்குப் போனால் பணம் சேருமே!’ என்பதுதான் அவளது எண்ணமாக இருந்தது.
அதை அவள் சொன்னபோது, அண்ணன் மற்றும் அண்ணியிடமிருந்து அதற்கு வேகமான மறுப்பு வந்தது. ஏனென்றால், அந்த மாப்பிள்ளையை அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. நல்ல குணமானவன், நல்ல குடும்பம் என்பதே அவர்கள் இருவரின் மனதையும் கரைக்கப் போதுமானதாக இருந்தது.
ஓரளவிற்குத் திருமணத்திற்குத் தயார் என்னும் மனநிலைக்குக் கவிதாவும் வந்திருந்தாள். ‘உனக்கெல்லாம் மாப்பிள்ளையே கிடைக்காது’ என்று வசைபாடிய பெற்ற தாயின் சொற்கள் தந்த ஆழமான காயத்திற்கு… இன்று அவளது தகுதி பார்த்து அவர்களாகவே மணக்க விருப்பப்பட்டுக் கேட்கிறார்கள் என்பது பெரும் ஆறுதலாக இருந்தது. அவளது நிறம் இப்பொழுது எதற்கும் ஒரு தடையாக இருக்கவில்லை. என்னவொரு வினோதம்?!
‘நம்முடைய நிலை என்ன என்பதைப் பொறுத்துதான் சமுதாயத்தில் எல்லாமே மாறுபடும் போல!’ வாழ்வின் மிகப்பெரிய பாடம் அவளுக்கு!
திருமணம் என்று பேச்சுத் தொடங்கிய சில தினங்களிலேயே வீட்டில் இப்படி ஒரு பதற்றமான சூழல்! என்னவோ ஏதோ என்று கவிதாவுக்கு நெஞ்சம் பதறியது. ‘அண்ணன் மீண்டும் கடன் வாங்குவதற்காக வீட்டுப் பத்திரத்தைக் கேட்கிறாரோ? அதை அம்மாவுக்குக் கொடுக்க மனமில்லாமல் வந்த சண்டையோ? பாவம் அண்ணன்! இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?’ அவளது யோசனை இப்படித்தான் இருந்தது.
வேதிகா கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன விஷயம் அண்ணா?” என்று முரளியிடம் நேரடியாகவே கேட்டுப் பார்த்தாள்.
“புவனா, சந்திரா பெரியம்மாக்களையும் இங்க வர சொல்லியிருக்கேன் மா… அவங்களும் வந்துடட்டும்… ஆமா குழந்தைங்க எங்கே? நல்லா இருக்காங்களா?” என்றான் முரளி. அவனது கேள்விகள் இயல்பாக இருந்தாலும், அவனது முகமும் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது.