“நான் ஏதோ விபரீதம் தெரியாம… பின்விளைவுகளைப் பத்தி யோசிக்காம செஞ்சிட்டேன் வேதிகா… ப்ளீஸ்… என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு! என்னாலதானே நீ ஒரு சாதாரண மெக்கானிக் வேலை செய்யறவனைத் கல்யாணம் பண்ணி கஷ்டப்படுற! நம்ம குழந்தைக்கு நல்ல எதிர்காலம் இல்லாம பண்ணிட்டேனே… இதை எப்படிச் சரி பண்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. தயவுசெஞ்சு என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்…” என்றான் நரக வேதனையில் கதறலாக!

“உன்னை நான் மன்னிக்கிறதா? கடவுள் கூட உன்னை மன்னிக்க மாட்டாருடா! உன்னைப் பெத்த அம்மாவுக்கு நீ செஞ்ச காரியம் தெரிஞ்சா… அவங்ககூட உன்னை மன்னிக்க மாட்டாங்க! உன்னால ஏற்பட்ட அந்தக் கறையால் என்னைப் பார்த்து நானே அசிங்கப்பட்டேன்; அருவருப்புப் பட்டேன்!

ஆனா… என் புருஷனுக்கு நான் ஒரு தேவதைடா! என் காயங்களுக்கு எல்லாம் மருந்தா இருந்து, நான் மறந்துபோன சந்தோஷத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து… என்னை ஒவ்வொரு நாளும் கொண்டாடித் தீர்க்கிறாரு! அவரோட கால் தூசிக்குக் கூட நீ வரமாட்ட! அவரைப் பணத்தை வெச்சு குறைச்சு எடை போடுவியா நீ?” என்றாள் ஆக்ரோஷமாக.

அவளது அவதாரத்தைக் கண்டு, ஜெகன் அப்படியே மிரண்டு போய் அவளையே பார்த்தான்.

“அப்புறம் என்ன சொன்ன? நம்ம குழந்தையா? அவன் எங்க குழந்தை!” என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்தவள், “அவனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்த மாதிரி எதுவும் இன்னொருமுறை சொல்லிட்டு வந்தா… என்னை ரேப் பண்ணின கேஸ்ல உள்ளே போக வேண்டியது தான்… நீ எல்லாம் பணம் இருக்குன்னு பூமிக்கு பாரமா இருக்காத. ஏன்னா படிக்கிற இடத்துல, வெட்டவெளியில, சுயநினைவு இல்லாத பொண்ணுகிட்ட தப்பு பண்ணறேன்னா… நாளைக்கு உன் வீட்டுல கூட அப்படி செஞ்சுட போற…” என்றபோது அவன் உடல் நடுங்கியது.

“என்ன… என்ன பேசற நீ?” நெஞ்சு பலமாக அடித்துக்கொள்ள, அவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்துத் தொண்டை வறண்டது.

“உன்னை மாதிரி தரம் கெட்டவங்க என்ன வேணா பண்ணுவாங்கன்னு சொல்றேன். இன்னொருமுறை என்னைப் பார்க்கணும்னு நினைக்காதே… இன்னைக்கு உங்க அம்மா வெளிய போற வரைக்கும் காத்திருந்து பேசின மாதிரி, அடுத்த முறை நான் கருணை எல்லாம் காட்ட மாட்டேன்…” என்று பேசியவள், அவனைத் திரும்பியும் பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் வெளியே வந்ததும், அவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு பாதகத்தைச் செய்துவிட்டு, அதற்கு மன்னிப்பு என்று சாதாரணமாக கேட்க முடிகிறதோ அவளுக்கு தாங்கவே முடியவில்லை.

அன்று கோயிலில் அவனைப் பார்த்த அன்றிலிருந்தே அவளது மனதிற்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. அவளின் கணவன்தான், ‘வீட்டுப் பிரச்சனை அது இது’ என்று அவளது மனதைத் திசை திருப்பி விட்டான். ஆனாலும் அந்த உறுத்தல் அவளைக் குடைந்து கொண்டேயிருந்தது. நாளாக நாளாக அவளுக்கு உண்மை தெளிவாக விளங்கிவிட்டது! தன் மகன் கவினின் சாயலை ஒத்த உருவம் அந்த ஜெகனுடையது என்பதை அவள் கண்டறிந்துவிட்டாள்.

அவளால் அதை நம்பவே முடியவில்லை. தனக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்துவிட்டது என்று தெரிந்தபோது கூட, அவனை அவள் சந்தேகிக்கக் கூட இல்லையே! அந்தளவிற்கு காதலை தொடர்ந்து மறுத்தபோது நல்லவன் போல வேஷம் போட்டு ஒதுங்கியிருந்தவன், பழிவெறியில் அவளது வாழ்க்கையையே நாசமாக்கி இருக்கிறான்!

தன் கணவன் அருளிடம் தனக்கு இந்த உண்மை தெரியும் என்பது போலக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், இவ்வளவு நாட்களும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டுதான் இருந்தாள். இன்று தன் மனதிலிருந்த ஆத்திரத்தையும் வெறுப்பையும் வார்த்தைகளால் கொட்டிய பிறகே, வேதிகாவின் மனம் சற்று நிம்மதியானது.

அருள் நினைத்திருந்தால் பொள்ளாச்சியில் தன்னந்தனியாக ஜெகனைத் தேடி அலைந்தபோதே, துணைக்கு அவனுடைய மாமனாரை அணுகியிருக்கலாம். ஆனால், அதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. மகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று ஒவ்வொரு நாளும் கவலையில் நாட்களைக் கழித்து, அவர்களின் திருமணத்துக்குப் பிறகுதான் அந்தத் தம்பதியினர் கொஞ்சம் நிம்மதியே அடைந்திருக்கிறார்கள். அப்படியிருக்க, அவரிடம் போய் கடந்த காலக் குப்பையைக் கொட்டுவானா? மீண்டும் நிம்மதி போய், அவர் மனதிலும் தன்னைப்போல பழிவெறி வர வேண்டுமா என்று யோசித்தான்.

மாமனாரிடமே அத்தனை எச்சரிக்கையாக இருப்பவன், மனைவிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் எத்தனை கவனமாக இருப்பான்?

இதை ஏதோ ஒருவகையில் கணித்து வைத்திருந்தாள் வேதிகா. அதனால்தான், இந்த விஷயத்தை அவள் கிரகித்த அன்று, கணவனிடம் அதை வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை. அழுது அழுது ஓய்ந்திருந்தவளிடம் அவன் என்னவென்று விசாரித்தபோது, உடம்பு சரியில்லை என்று சாக்கு கூறினாள்.

இன்று மருத்துவமனைக்கு வந்ததுகூட அவனுக்குத் தெரியாமல்தான்!

ஜெகனின் தற்போதைய தோற்றத்தைக் காணும்போது, இப்பொழுதும் அவள் மனதிற்குள் பெரும் திருப்தி. அந்தப் பூவின் இதழ்களில் ஒரு குரூர புன்னகை. இருக்கத்தானே செய்யும்! ஜெகனின் முதல் விபத்து வேண்டுமானால் அவனுடைய குற்றவுணர்வில் நடந்திருக்கலாம். ஆனால், அவனின் இப்போதைய விபத்துக்கு முழுமுதற் காரணம் வேதிகாவேதான்!

வழக்கம்போல கல்லூரி முடிந்து பேருந்து நிலையம் செல்ல முற்பட்டவள், அங்கே ஜெகனைக் கண்டுவிட்டாள். தனக்கு நடந்த கொடுமையை நினைத்து அவளின் உள்ளம் எரிமலையாய் எரிந்தது.

தன்னை நோக்கி அவன் வருவது புரியவும், அவனிடமிருந்து தப்பிக்க எண்ணி தோழியோடு வண்டியில் ஏறினாள். அவளிடம் பேச்சு கொடுத்து, “இப்படிப் போ… அப்படிப் போ… இங்கே போ… அங்கே போ…” என்று அவளை அலையவிட்டாள்.

“எனக்கு வண்டி ஓட்டத் தெரியுமான்னு செக் செய்யறியாக்கும்…” எனத் தோழி கேலி செய்தாலும், இப்படி ஜாலியாகச் சுற்றுவது நன்றாக இருக்க, அவளும் வண்டியில் வித்தை காட்டிக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே முந்தைய விபத்தினால் பலவீனப்பட்டிருந்த ஜெகன், அவளைப் பின்தொடர முடியாமல் சோர்ந்து போனான். ஆனாலும் அவளிடம் பேசிவிட வேண்டும் என அவன் விடாது முயற்சிக்க, ஓரிடத்தில் அவர்கள் சென்ற வண்டி சட்டென்று நின்றுவிட, பின்னால் வந்த இவனால் வண்டியை நிறுத்த முடியாமல் எதிர்ச்சாலையில் வந்த வாகனத்தில் மோதி பெரும் விபத்தில் மாட்டிக்கொண்டான்.

இதை வேதிகா எதிர்பார்க்கவே இல்லை. உடன் வந்த தோழி பதற, “அங்கே இருக்கிறவங்க பார்த்துப்பாங்கடி, நம்ம போலாம் எனக்கு ஒருமாதிரி படபடப்பா இருக்கு…” என்று சொல்லி அழைத்து வந்துவிட்டாள்.

விதி நின்று கொல்லும் என்பார்கள்… இவளால் விதி மாற்றப்பட்டு, தன் சுயத்தை இழந்து வாழ்ந்தவளும் அவனை அழிக்கத்தானே நினைப்பாள்? யாராலும் மகாத்மாவாக இருக்க முடியாது; அதிலும் வேதிகா மகாத்மாவாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை!

என்னவோ, அந்த விபத்தைத் தான் நேரில் பார்த்த திருப்தியைக் கணவனுக்கும் கொடுக்க நினைத்தாள் போலும்! அதனால்தான் அவனுக்கு ரத்தம் தேவை என்று கேள்விப்பட்டதும், அந்தத் தகவலைத் தன் கணவனிடமும் கொண்டு போய்ச் சேர்த்திருந்தாள்.