ஆனாலும்… அவனது உடம்பு தேறியதே தவிர, அவனால் தான் செய்த தவறின் பாதிப்பிலிருந்து தன் மனதை மீட்கவே முடியவில்லை. ‘வேதிகாவைப் பார்க்க வேண்டும்… தன் மகனை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும்…’ என்றெல்லாம் குற்றவுணர்ச்சியில் ஓயாமல் அரற்றிக்கொண்டே இருந்த மனதோடுதான் அவன் ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கடத்தினான். அவனது பெற்றோர்களோ… மரணத்தின் விளிம்பு வரை சென்று குணமாகி வந்த மகனை, மீண்டும் வீட்டை விட்டு வெளியே அனுப்பவே பயந்தார்கள்!

அத்தகைய சூழ்நிலையில்தான், ஜெகன் மெல்ல மெல்ல வெளியுலகம் பார்க்கத் தொடங்கினான். அப்படி ஒருநாள் வெளியே வந்தவன், மீண்டும் கல்லூரிக்கு வந்து போகும் பெண்ணாக வேதிகாவைக் கண்டதும் பெரிதும் பரிதவித்துப் போனான். அவன் மனம் ஒரு நிலையிலேயே இல்லை. அவளோடு எப்படியாவது பேச வேண்டும் என்ற உந்துதலில் வேகமாக அவளைப் பின்தொடர்ந்த நேரத்தில்தான்… அவனுக்கு மீண்டும் இந்த கோர விபத்து நேர்ந்தது!

அன்று முதல் விபத்தின்போது, உயிருக்குப் போராடுமளவிற்குச் சூழ்நிலை என்றால்… இன்று இந்த இரண்டாவது விபத்திற்குப் பிறகு, ‘நாம் ஏன் உயிர் பிழைத்தோம்?’ என்று எண்ணுமளவிற்கு நிலைமை இருந்தது. அந்த அளவிற்கு கொடூரமான விபத்து! அவனது வலது காலை முட்டிக்குக் கீழ் முழுமையாக அகற்றியிருந்தார்கள்; முதுகுத்தண்டிலும் பலத்த அடி விழுந்து அசைவற்றுப் போயிருந்தான்; அவனது முக அமைப்பே சிதைந்து போயிருந்தது.

வலி… வலி… மரண வலி! அவனது உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த வலி நரக வேதனையாகப் பாய்ந்தது. தன் ஒற்றை மகனின் அவல கோலத்தைக் கண்டு பெற்றவர்கள் முற்றிலும் இடிந்து போய்விட்டார்கள்.

மருத்துவமனையின் சுவர்களுக்குள் மீண்டும் நாட்கள் மெல்லக் கழிந்தன. ஓரளவிற்கு அவனது உடல்நிலை தேறியதும்… தன் நண்பன் ஒருவன் மூலம் எப்படியாவது வேதிகாவைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி ஜெகன் கேட்டுக்கொண்டான்.

“இப்ப இருக்கிற நிலைமையில அந்தப் பொண்ணை எதுக்குடா நீ பார்க்கணும்? அதுவும் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு வேற சொல்றாங்களே…” என்று அவனது நண்பன் எதுவும் புரியாமல் கேட்க…

“இல்லைடா… எனக்கு பார்க்கணும் போல இருக்கு… தயவுசெஞ்சு அவளை ஒருமுறை இங்க வர வைடா…” என்று தன் சிதைந்த குரலில் கெஞ்சினான் ஜெகன்.

ஒன்றும் புரியவில்லை என்றாலும்… இந்தச் சூழ்நிலையில் இருப்பவனிடம் மறுக்கவும் மனம் வராமல், வேதிகாவை மருத்துவமனைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தான்.

ஜெகனுக்கு மிகவும் கொடூரமான விபத்து என்று தெரியப்படுத்தவுமே, “எந்த ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்க, நான் வந்து பார்த்துட்டு வரேன்” என்று வேதிகாவே கேட்டிருக்க, அவனுக்கு பெரும் ஆசுவாசம்.

அவன் மருத்துவமனையின் விவரங்களை அவளிடம் கூறிவிட்டு அவள் வருவதாக ஒப்புக்கொண்டாள் என ஜெகனிடமும் தெரிவித்தான்.

‘அவள் நிஜமாகவே வருவாளா?’ என்ற சந்தேகம் ஜெகனுக்கு இருக்கத்தான் செய்தது; வெறும் பேச்சுக்காகச் சொல்லியிருப்பாளோ என்றும் எண்ணினான். ஆனால், அன்று மாலையே வேதிகா மருத்துவமனைக்கு வந்திருந்தாள்!

ஜெகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை எண் எதுவென்று அங்கிருந்த வரவேற்பறையில் கேட்டுத் தெரிந்து கொண்டவள், அவனைப் பார்ப்பதற்காக அந்த அறைக்கு சென்றாள். அங்கே அவனது தாய் மட்டும்தான் அவனது படுக்கைக்கு அருகில் துணையாக அமர்ந்திருந்தார். தான் கொண்டு வந்திருந்த பழங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, “இப்ப உடம்பு எப்படி இருக்கு ஜெகன்?” என்று மிகுந்த கவலையுடன் விசாரித்தாள் வேதிகா.

சிறிது நேரம் அவனது தாயிடமும் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அவனது தாய், அவளுக்குத் தேநீர் வாங்கி வருவதற்காக வெளியில் செல்லவும்… இருவருக்கும் பேசிக்கொள்ள ஒரு தற்காலிகத் தனிமை கிடைத்தது.

“வேதிகா…” என்று அவளது பெயரை அழைத்தவனின் குரலில் பெரும் நடுக்கம்! அவளிடம் எப்படித் தன் பேச்சைத் தொடங்குவது, எப்படி மன்னிப்புக் கேட்பது என்று யோசித்த மாத்திரத்திலேயே… அவனது ஒட்டுமொத்த உடம்பும் நடுங்கியது. அவளுக்கு எவ்வளவு பெரிய அநீதியையும் பாவத்தையும் இழைத்திருக்கிறான்! அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்கு அவனுக்கு தகுதி இருக்கிறதா என்ன?

வேதிகாவோ, “சொல்லுங்க ஜெகன்… வண்டி ஓட்டும்போது கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமில்லை?” என்று பரிதாபத்துடன் தொடங்கியவள்… ஒரு நொடி இடைவெளி விட்டு, அவனை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்த்தாள். அவளது கண்கள் பளபளக்க, இதழ்களில் லேசான புன்னகை அரும்பியது. அவளது முகத்தில் தான் எத்தனை வெறுப்பு! அவளது அந்தப் பார்வையின் வீரியத்தில் அவனுக்கு திக்கென்று இருந்தது!

“என்னதான் பார்த்துப் பார்த்துப் போனாலும்… நாம் செஞ்ச பாவம்னு ஒன்னு இருக்குதானே? அது எப்படியும் ஒருநாள் அதோட வேலையைக் காட்டத்தானே செய்யும்?” என்றாள், இன்னதென வரையறுக்க முடியாத விசித்திரமான குரலில்!

‘இவளுக்கும் உண்மை புரிந்து விட்டதா?’ அவனால் இயல்பாக மூச்சுவிடக்கூட முடியவில்லை.

உண்மையில் அவனுக்கும் அந்த உறுத்தல் தானே! ‘நான் செய்த மகா பாவம்தான் என்னை இப்படி முடக்கி வைத்திருக்கிறதோ’ என்றுதானே தினம் தினம் குற்றவுணர்வில் செத்துக் கொண்டிருக்கிறான்! அதற்காகத்தான்… அவளிடம் மன்னிப்பாவது கேட்டுவிடுவோம் என்று நினைத்து, அவளை சந்திக்க முயற்சி செய்தான்.

“நான்… நான்… அது வந்து…” என ஜெகன் வார்த்தைகள் வராமல் தடுமாறவும்…

“இத்தனை வருஷமும் யாரு… யாருன்னு… நான் எவ்வளவு துடிச்சிருப்பேன் தெரியுமா? என்னோட ஒட்டுமொத்தக் கனவையும் அநியாயமாக் கலைச்சிட்ட! என்னோட எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிட்ட! எங்க குடும்பத்தோட சந்தோஷத்தையும் நிம்மதியையும் நெருப்புல வச்சு கொளுத்திட்டு… நீ மட்டும் நிம்மதியா வாழணும்னு நினைச்சா, அது பேராசை இல்லையா?” என்றவளின் வார்த்தைகளில்… அத்தனை ஆதங்கமும், கோபமும்!

அவனுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை. “வேதிகா… நான் உன்னை உண்மையா விரும்பினேன்! நீ என்னோட காதலைப் புறக்கணிச்ச கோபத்துல… அன்னைக்கு என்னையும் அறியாம… தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடு… இப்படி நடக்கும்னு நான் நினைக்கலை…” என்று அவன் தன் தவறை நியாயப்படுத்தத் தொடங்கியவன், “ச்சீ… வாயை மூடு!” என்றவளின் கடுமையான சீறலில்… அதிர்ந்து வாயடைத்துப் போனான்!

“காதலா? நீ என்னை காதலிச்சியா?” அவளது இதழ்கள் ஏளனத்தோடு வளைந்தன. “காதலிக்க முடியாது, எனக்கு விருப்பம் இல்லைன்னு சொன்ன பெண்ணை… அவ சுயநினைவோட இல்லாத நேரம், உன் காம இச்சைக்குப் பலியாக்கியிருக்க! பிணந்திண்ணிக் கழுகைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா? அதுக்கும் உனக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லை!” என்று அவள் சொன்னபோது… தன் முகத்திலேயே உமிழ்ந்தது போல உணர்ந்தான் ஜெகன்!

அவனது முகம் அவமானத்திலும் குற்றவுணர்ச்சியிலும் கன்றிச் சிறுத்தது. அவளது முகத்தை ஏறிட்டுப் பார்க்கக் கூடத் துணிவில்லாமல் அவன் தலை குனிய…

“காதல்ன்னு சொல்லி காமத்தைத் தீர்த்து, எனக்கு ஆறாத காயத்தைக் கொடுத்த நீயெல்லாம்… எந்தத் தைரியத்தில் என் முகத்தைப் பார்த்து மன்னிப்புக் கேட்கிற? உனக்கெல்லாம் கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமே இல்லையா? காதல்ங்கிற பேருல காமத்தைத் தேடுற உனக்கெல்லாம் எங்கே அசிங்கமா இருந்துட போகுது?! இல்லாட்டி படிக்கிற இடத்துல ஒரு பொண்ணை மானபங்கம் செஞ்சிருப்பியா?”