மழைவர பூமி மறுத்திடுமா? – 25

வேதிகா விடுபட்டிருந்த அந்தப் பதிமூன்று பாடங்களிலும் ஒரே தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டாள்! அதுவும் பல பாடங்களில் அவளுக்கு மிகவும் நல்ல மதிப்பெண்கள் கிடைத்திருந்தன.

கணினியின் திரையில் தன் தேர்வு முடிவுகளைப் பார்த்ததும், அவளது கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்துபோயின. இன்னும் பிராஜெக்ட் மட்டும் நல்லபடியாக முடித்துவிட்டால்… அவளுக்கான இளங்கலைப் பட்டம் கிடைத்துவிடும்! கலைந்துபோய்விட்டதாக அவள் எண்ணியிருந்த அவளது லட்சியக் கனவு… இன்று மெல்ல மெல்லக் கைகூடி வருவதைக் கண்டு, அவளுக்குச் சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை.

அவள் நெகிழ்ந்து போயிருப்பதைப் புரிந்துகொண்ட அருள்மித்ரன், “நீ கஷ்டப்பட்டதுக்கான நியாயமான பலன்தான் இது வேதிம்மா…” என்று கனிவோடு கூறியபடி, தன் மனையாளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

அவள் கஷ்டப்பட்டாள்தான், இல்லையென்று மறுப்பதற்கில்லை! அந்த கஷ்டத்தைப் படுவதற்கும் அவளுக்கு கணவனின் கண்டிப்பும் தூண்டுதலும் தேவைப்பட்டதே! விடாப்பிடியாக நின்று சாதித்துக்கொண்டானே!

“நீங்க மட்டும் இல்லாம இருந்திருந்தா… எதுவுமே சாத்தியமாகியிருக்காதுங்க…” என்று நெகிழ்ச்சியில் குரல் அடைக்கக் கூறினாள்.

“ம்ம்ம்… அப்புறம் நான் செய்யாம, வேற யார் இதையெல்லாம் செய்வாங்களாம்…” என்றான் உரிமைப்பட்டவன். அவள் அதரங்களில் அழகான புன்னகை. அவன் எதிர்பாராத நேரம் எட்டி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள் வேதிகா!

அவளது அந்தத் திடீர் செய்கையில் ஆச்சரியத்தில் அவனது விழிகள் விரிந்து போயின. கண்கள் சிரிக்க அவளைப் போலியாக முறைத்தவன், “ஏற்கனவே விரதத்துல இருக்கிறவனை இப்படிச் சீண்டலாமா? முதல்ல உன்னோட படிப்பை முடி அழகி… அப்புறம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு வட்டியும் முதலுமா உனக்குத் திருப்பிக் கொடுக்கிறேன்!” என்றான், அவள் தந்த முத்தத்தின் ஈரத்தைத் தன் விரல்களால் ரசனையாக வருடியபடியே!

பிராஜெக்ட் வொர்க் செய்ய அவளைக் கடைசி வருட மாணவர்கள் அணியுடன் அவளுடைய பேராசிரியர்கள் இணைத்து விட்டிருந்தார்கள். இவளது புத்திசாலித்தனமும் வழிகாட்டுதலும் அவர்களுக்குப் பேருதவியாக இருந்ததால்… அந்த நான்கு மாணவ, மாணவிகளும் குறுகிய காலத்திலேயே இவளோடு மிகவும் இணக்கமாகி விட்டார்கள்.

இந்த செமஸ்டருக்கு பிராஜெக்ட் மட்டும்தான் இவளுக்கு பிரதான வேலை. இந்த செமஸ்டருக்கான மூன்று தேர்வுகளையும் அவள்தான் முன்பே எழுதி முடித்துவிட்டாளே! அதனால், மீதமிருக்கும் நேரத்தை வங்கித் தேர்வுகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தினாள். ஏற்கனவே கவிதாவை அரசு வேலைக்காகப் படிப்பிக்க உதவியதால்… இவளுக்குத் தேர்வுகளுக்குத் தயாராவது மிகவும் எளிதாகவே இருந்தது.

மறுபுறம், அருள்மித்ரன் தன் கடன்களை கட்டுவதில் தீவிரம் காட்டினான். அவன் எவ்வளவு தேடியும், ஜெகன் மட்டும் அவனது கண்களில் அகப்படவே மறுத்தான். அவனைப் பற்றிப் பொள்ளாச்சியில் நேரடியாக யாரிடமும் விசாரிக்கவும் முடியவில்லை. தன் பாணியில் அவனுக்கு ஏதேனும் ஒரு தண்டனையைக் கொடுத்த பிறகு… தன் பெயரோ அல்லது தன் மனைவியின் பெயரோ எவ்விடத்திலும் வெளியாவதில் அருளுக்குச் சற்றும் உடன்பாடில்லை. அதனால் நெஞ்சு முட்டக் குரோதமும் கோபமும் இருந்தபோதும், பழி வாங்க அவன் நிதானத்தைக் கடைப்பிடித்தான்.

ஒருமுறை பொள்ளாச்சியில் இருக்கும் மருத்துவமனையில் ஒருவருக்கு ரத்த தானம் தேவை என்று கேள்விப்படவும்… அருள்மித்ரன் உடனேயே புறப்பட்டுவிட்டான். இப்படித்தான்… அந்த ஊருக்குப் போக ஏதேனும் சாக்கு கிடைத்தால் கூட, அந்தச் சந்தர்ப்பத்தை அவன் தவற விடுவதே இல்லை.

அங்குச் சென்று யாருக்கு உதவி தேவை என்று விசாரித்து வார்டுக்குள் நுழைந்தவனுக்கு… அங்கே நோயாளியாகப் படுக்க வைக்கப்பட்டிருந்த உருவத்தைக் கண்டதும் பலத்த அதிர்ச்சி!

அங்கே… வலது கால் முட்டிக்குக் கீழ்ப்பகுதி முழுமையாக அகற்றப்பட்டு, உடல் முழுவதும் பல வெள்ளை நிறக் கட்டுகளுடனும், அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு பக்கம் முழுவதும் சிதைந்த முகத்துடனும் படுக்க வைக்கப்பட்டிருந்தான் ஜெகன்! அவனது கோலத்தைக் கண்டதும்… கொடூரமான திருப்தி ஒன்று தனக்குள் பரவுவதை அருளால் தடுக்கவே முடியவில்லை!

அவன் காண விரும்பிய கோலம் அல்லவா இது!

இதற்காகத்தானே கடந்த சில மாதங்களாக அவன் ஒற்றை ஆளாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்! சத்தமே இல்லாமல் அவனது எண்ணம் ஈடேறி… இங்கே படுத்த படுக்கையாக, அதிலும் இந்த மாதிரி அவல நிலையில் கிடப்பவனைக் கண்டதும்… அவனுக்குள் ஏற்பட்ட மனநிறைவை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது!

நர்ஸ் வந்து, ரத்தம் கொடுக்க வேண்டிய புரசீஜர்களைத் தொடங்கினார்கள்.

உள்ளத்தின் துள்ளலை வெளியில் காட்டாமல், “இவருக்கு என்னாச்சுங்க சிஸ்டர்?” என்று போலி பரிதாபத்தோடு கேட்டான்.

“இந்தப்பையன் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பைக்ல இருந்து கீழே விழுந்துட்டான்னு, செஞ்சேரிமலை ஹாஸ்பிட்டல்ல இருந்து மாத்தி இங்கேதான் அட்மிட் பண்ணியிருந்தாங்க. தலையில ரொம்பப் பெரிய அடி… ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் கொஞ்சம் குணமாகி வீட்டுக்குப் போனான். அதுக்குள்ள இப்போ திரும்பவும் எங்கேயோ விழுந்து வாரி இந்த நிலமையில வந்திருக்கான், பாவம்!” என்று கூறினார் அந்தச் செவிலியர்.

‘செஞ்சேரிமலை… சில மாதங்களுக்கு முன்பு…’ என்ற சொற்றொடர்களிலிருந்து, அந்த விபத்து எப்பொழுது நடந்திருக்கும் என்பது அருளுக்குப் புரிந்துவிட்டது! ‘இத்தனை மாதங்களாக இவன் மருத்துவமனையில் இருந்தானா… அதனால்தான் இவனை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது போல!’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். இவன் செய்த பாவம்… இவனை இப்போது உருக்கத் தொடங்கியிருப்பது புரிந்தது.

பொதுவாகவே, மற்றவர்களின் கஷ்டத்தைக் கண்டு மகிழும் மட்டமான குணம் அருள்மித்ரனுக்கு என்றுமே இருந்ததில்லை. ஆனால்… இன்று ஜெகனின் கோரத் தோற்றத்தைக் கண்டபோது, அவனது நெஞ்சிற்குள் ஒரு பேரமைதியும் நிம்மதியும் சூழ்ந்து கொண்டது! அவனுக்குள் இத்தனை காலமாகப் பெரு நெருப்பாக எரிந்து கொண்டிருந்த அந்தப் பழியுணர்வும் குரோதமும்… இப்போது தானாகவே குளிர்ந்து தணிந்தது.

இனி இவனுடைய கைகளால் தனிப்பட்ட தண்டனை அந்த கொடியனுக்குத் தேவையில்லைதானே! இவனை நல்லவனாகவே இருக்க வைக்க கடவுள் நினைத்து விட்டார் போலும்.

*** ஜெகன்… தான் செய்த தவறு, இப்படி வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை போலும்! வேதிகாவை கேவலப்படுத்துகிறோம் என்று அன்று செய்த வக்கிரச் செயலால்… இன்று, அவனது சொந்த உதிரத்திலிருந்து, அவனது உருவத்திலேயே ஜனனித்த குழந்தை… இன்னொருவனின் கரத்தில் உரிமையோடு வளர்ந்து கொண்டிருக்கிறது! வசதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது; இன்னொருவனை ‘அப்பா’ என்று அழைக்கிறது! என்ன செய்தும் நேர்படுத்த முடியாத பெரும் பிழையைச் செய்துவிட்டவனால்… அந்த அதிர்விலிருந்து மீளவே முடியவில்லை.

அன்று அருள்மித்ரனையும் வேதிகாவையும் கோயிலில் சந்தித்துவிட்டு, பதற்றத்துடன் திரும்பி வரும் வழியில்தான் அவனது கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டிருந்தது. தலையில் பலத்த காயம். மூளையில் ரத்தம் உறைந்து போனதால், மருத்துவர்கள் அரும்பாடுபட்டுப் போராடித்தான் அவனது உயிரை மீட்டெடுத்தார்கள். அதனால்தான், கடந்த சில மாதங்களை அவன் மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டியதாகிவிட்டது. சுயநினைவின்றிப் படுத்துக் கிடந்து, பெற்றவர்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கி, பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்துதான் மீட்கப்பட்டிருந்தான்.