மகள் வாழ்க்கை என்னாகுமோ என்ற அச்சத்தில், “சம்பந்தி… ஏதோ கெட்ட நேரம், இப்படி ஆயிடுச்சு…” என்று செல்வி மிகவும் தயங்கியபடி, கெஞ்சும் குரலில் பேச்சைத் தொடங்க…
“ஆமாம்! ரொம்ப ரொம்பக் கெட்ட நேரம்தான்! எங்க குடும்பத்துக்கே… அதுதான் இப்படி ஒரு சனிய…” என்று அதற்கு மேல் ராகவனின் தந்தையால் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை; கோபத்தில் ஆத்திரத்தோடு தன் பல்லைக் கடித்தார். செல்விக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல், குற்றவாளியைப் போலத் தலையைக் குனிந்து கொண்டார்.
சாமியண்ணனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. மூத்தவள் பிரீத்தி… அருளின் மகளைப் பெற்றெடுக்கும் பிரசவப் போராட்டத்தில்தான் தன் உயிரையே விட்டிருந்தாள்! ஆனால் இவளோ… கோபம் என்ற பெயரில், தன் சொந்த குழந்தையை கருவிலேயே அழித்திருக்கிறாள்! சின்ன வயதிலிருந்தே இவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி, இவளது அத்தனை பிடிவாதங்களுக்கும் கொம்பு சீவி விட்டுவிட்டோமோ என்று இப்பொழுதுதான் அவருக்கு உறைத்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்?
ராகவனும் எதுவுமே பேசவில்லை; பாறாங்கல்லைப் போல இறுகிப் போய் நின்றிருந்தான். காவ்யாவுடனான வாழ்க்கை சுத்தமாக சரிப்பட்டு வராது என்பது, திருமணமான சில மாதங்களிலேயே அவனுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆனாலும், குடும்ப கௌரவத்திற்காகப் பொறுத்துப் போகப் பார்த்தான்; எப்படியாவது இந்தத் திருமண பந்தத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் தன்னை மாற்றிக்கொண்டு, அவளது பிடிவாதங்களை அனுசரித்துப் போகவும் முயற்சி செய்தான்.
ஆனால், அவனது நற்குணங்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை! அவள் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்கு ஓடும்போதெல்லாம் அவனது சுயமரியாதையும் தன்மானமும் பெரிதாக அடிவாங்கும். அவள் அப்படி சென்றது பிடிக்காமல், ‘அவளாக வரட்டும்’ என இவன் வீம்பு பிடித்து நிற்கும்போது… அவனது அன்னையோ, ‘போய் மருமகளை அழைத்து வா’ என்று ஓயாமல் நச்சரிப்பார். குடும்ப கௌரவத்திற்காக பெற்றவர்களின் நிம்மதிக்காக அவளை அனுசரித்து வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு… இன்று எவ்வளவு பெரிய பேரிடி!
அவன் வாரிசை அவனது அனுமதியும் சம்மதமும் இல்லாமல் இவளாக முடிவெடுத்து அழிப்பதா? அதை நினைத்த கணமே அவனது உடம்பில் ரத்தம் கொதித்தது.
“இனிமேலும் நாம இங்கே நின்னு என்ன பண்ணப் போறோம்? கிளம்புங்க, போலாம்!” என்று கட்டளையிடும் குரலில் கூறினார் ராகவனின் தந்தை.
ராகவனும் அதற்கு மறுத்து எதையும் பேசவில்லை; சுயநினைவின்றிப் படுத்திருக்கும் காவ்யாவை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. பாறாங்கல்லாய் இறுகிய முகத்தோடு, மனம் முழுதாய் வெறுத்துவிட தன் பெற்றோருடன் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டான்.
சில நாட்களுக்குப் பிறகு, காவ்யா உடல்நிலை தேறித் தன் பிறந்த வீட்டிற்கு வந்தாள். ஆனால், சாமியண்ணனோ அவளது முகத்தைப் பார்க்கக் கூடப் பிரியப்படாமல் முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டார். செல்வி மட்டும்தான், ஓயாமல் அவளது நிலையை எண்ணிப் புலம்பித் தீர்த்தார். அன்று மருத்துவமனையில் அவளது கணவனும் மாமனாரும் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அத்தனை ஆத்திரத்தோடு சென்றதைச் சொல்லி எப்படி அவர்களை சமாளிப்பது என வருத்தப்பட்டார்.
ஆனால் காவ்யாவோ சற்றும் மனம் மாறாமல், “அம்மா… அதெல்லாம் ஒரு வீடா? மனுஷன் இருப்பானா அங்கே? கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாம அங்கே போய் அடிமை வாழ்க்கை வாழறதுக்கு… நான் பேசாம இங்கேயே என் வாழ்நாள் முழுக்க இருந்துப்பேன்!” என்று பேசினாள். அவள் புகுந்த வீட்டின் மீது அடுக்கடுக்காக அள்ளி வீசிய குற்றச்சாட்டுகள் எல்லாமே முற்றிலும் உப்புச்சப்பில்லாத, அர்த்தமற்ற வறட்டு வாதங்கள்!
‘ஒன்றுமே இல்லாத விஷயங்களையெல்லாம் இவள் இப்படிப் பெரிதாக்கித் தன் வாழ்க்கையைத் தானே அழிக்கிறாளே!’ என்று செல்வியின் நெஞ்சம் வருந்தியது.
மகளின் அந்தப் பொறுப்பற்ற பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாமியண்ணனுக்கு, அதுவரை காத்துவந்த அத்தனை பொறுமைகளும் காற்றில் பறந்தன. ஆவேசமாக உள்ளே வந்தவர், தன் மகளின் கன்னத்தில் பளார் பளாரென ஓங்கி அறைந்தார்!
“என்னங்க இது… அவளே இப்பத்தான் உடம்பு சரியில்லாம வீட்டுக்கு வந்திருக்கா!” என்றபடி கணவனை தடுக்க வந்த செல்வியால் அவரை தடுக்க முடியவில்லை.
அடி வாங்கிய கோபத்தில் காவ்யா ஆங்காரத்துடன் தன் தந்தையை உறுத்துப் பார்த்தாள்.
“உங்களுக்கெல்லாம் ஒரு குறையும் வைக்காம, இத்தனை வருஷமாக வெச்சிருந்த என்னை… கடைசி காலத்துல நிம்மதி இல்லாம பண்ணிட்டீங்களே…” என்று ஆத்திரத்தில் சொன்ன சாமியண்ணனின் ஒட்டுமொத்த உடம்பும் நடுங்கியது.
“இவ என்ன அங்கே வாழ முடியாதுன்னு வறட்டுப் பெருமை பேசறது? இவளை மாதிரி ஒரு பஜாரி, குழந்தையைக் கொன்ன கொலைகாரி எனக்கு வேணாம்ன்னு… மாப்பிள்ளை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்காரு!” என்று தற்போதைய சூழலை மனைவியிடம் சொல்லி வெடித்தார் சாமியண்ணன்.
“ஏம்பா… அந்த ஆளு விவாகரத்து கேட்டான்னு என்னை இப்படியா போட்டு அடிப்பீங்க நீங்க?” தன் தவற்றை உணராமல், ஆத்திரம் சற்றும் குறையாமல் சீறினாள் காவ்யா.
“ச்சீ… வாயை மூடு! நீயும் ஒரு பொண்ணா? ஒரு சின்னக் குழந்தை… அம்மா இல்லாத பச்சைப்புள்ளன்னு கூடப் பார்க்காம… உன்னோட சொந்த அக்கா மகளை எங்களைப் பார்த்துக்க விடாம செஞ்சவ தானே நீ! உங்க அம்மாகிட்ட, ‘இவ இங்கேயே இருந்தா… கடைசியில அக்கா வீட்டுக்காரருக்கே என்னை எதுவும் கட்டி வச்சுடப் போறாங்க! அதனால குழந்தையைக் கொண்டு போய் அத்தை வீட்டுலயே கொடுத்துட்டு வந்துடுங்க’ன்னு சொல்லி… அவளைத் தினம் தினம் பாடுபடுத்தி தூண்டிவிட்டு, எங்களை எங்களோட சொந்தப் பேத்தியை விட்டே பிரிச்சு வச்சவ தானே நீ!
அப்பவே உன்னோட பேச்சைக் கேட்காம இருந்திருக்கணும். உன் பேச்சைக் கேட்டு நாங்க ஆடுனதுதான் நாங்க செஞ்ச பெரிய தப்பு! நல்லபடியா ஒரு பையனைப் பார்த்து உனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சா… அங்கே போயும் இல்லாத வம்பையெல்லாம் வளர்த்துட்டு வந்ததோட இல்லாம… இப்ப நீ பண்ணியிருக்கற இந்தக் காரியம் இருக்கே… ச்சீ… ச்சீ…” என்று அருவருப்பாக முகத்தைத் திருப்பிக் கொண்டார் சாமியண்ணன்.
அவர் சொன்ன உண்மைகளில் அவளது முகம் அப்படியே கறுத்துப் போனது. “அப்பா… ராகவன் வந்து…” என மீண்டும் ஏதோ தன் கணவனைப் பற்றி குறையை சொல்லப் போனவளை, சொல்லவிடாமல் வேகமாக இடைமறித்தார்.
“ச்சீ… நிறுத்து! மாப்பிள்ளை என்ன வேணா பண்ணியிருக்கட்டும், அவங்க வீட்டுல என்ன வேணா நடந்திருக்கட்டும்! அந்தப் பிஞ்சு குழந்தை உனக்கும் தானே குழந்தை? அதை எப்படி அழிச்ச நீ? உன்னோட அக்கா பிரீத்தி உன்னைவிட மூர்க்கமானவள்தான்; அவளுக்கும் அவ புகுந்த வீடு பிடிக்காது, புருஷனோட வேலையோ சம்பாத்தியமோ எதுவும் அவளுக்குப் பிடிக்காதுதான்! ஆனா அவ கூடப் பிள்ளை பெத்துக்க மாட்டேன்னு சொல்லலை!
ஆனா நீ… உன் வயித்துல ஒரு உயிர் வளருதுன்னு யாருக்கும் சொல்லாம… எங்க யாருக்கும் தெரியறதுக்கு முன்னாடியே ஒரு தடயமும் இல்லாம அதை அழிக்கப் போயிருக்க! அன்னைக்கு மட்டும் உன்னோட நிலைமை அவ்வளவு சீரியஸ் ஆகாம இருந்திருந்தா… இந்த விஷயம் எங்க யாருக்குமே தெரியாம நீ மறைச்சிருப்ப, அப்படித்தானே?” என்று ஆத்திரத்தோடு கேட்டார்.
காவ்யாவிற்கு கிராமத்துச் சூழலில் வாழக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. மாமனார் மற்றும் மாமியாரின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி நடப்பது அவளுக்கு வேம்பாய்க் கசந்தது. இதற்கெல்லாம் மேலாக, தன் கணவனுக்கு கடந்த கால காதல் இருந்தது வேறு தெரிய வரவும் அதை வைத்து தினமும் சண்டை. நினைத்த நேரத்திற்குத் தன் தோழிகளையும் நண்பர்களையும் நேரில் சென்று பார்க்க முடியாதது வேறு சிறைச்சாலைக்குள் அடைபட்டிருப்பது போலத் தோன்றியது.
இந்த முறையும் அவள் தன் கணவனிடம், அவனது பழைய காதலியைப் பற்றி அநாவசியமாக எதையோ சொல்லி வம்புக்கு இழுத்துச் சீண்டிவிட்டாள். அதற்கு மேல் அவளது பேச்சைப் பொறுத்துக் கொள்ள முடியாத ராகவன், “சந்தேகப் பிராணி… எனக்குன்னு எப்படி ஒருத்தி வந்து வாய்ச்சிருக்கா பாரு!” என ஆத்திரத்தோடு சீறிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
‘என்னைப் பார்த்தா உனக்கு அவ்வளவு இளக்காரமா இருக்கா? அவளுக்காக என்னையே இந்த அளவுக்கு மட்டமாப் பேசுவியா?’ என்ற அகங்காரமும், அடங்காத ஆத்திரமும் அவளுக்குள் எரிமலையாய்ப் பொங்கிக் கொண்டு வர… அந்த கோபத்தின் உச்சக்கட்டத்தில்தான், தன் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த உயிரைக் கருவிலேயே கலைத்து விட்டாள்!
தந்தையின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், அவளது தலை குனிந்தது சில நொடிகள் மட்டும்தான்! அடுத்த கணமே, தன் முகத்தை வேகமாக நிமிர்த்தி, “அவங்க எப்படா எனக்கு விரோதமா ஒரு காரணம் கிடைக்கும்னு காத்துட்டே இருந்திருக்காங்கப்பா! இப்ப ஒரு சின்னக் காரணம் கிடைச்ச உடனே… எவ்வளவு சுலபமா என்னை வேண்டாம்னு சொல்லிட்டுப் போறாங்க பாருங்க! அப்படின்னா… அவங்க வீட்டுல வச்சு என்னை எவ்வளவு மோசமா நடத்தியிருப்பாங்கன்னு நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கப்பா!” என்று தன் தந்தைக்கே பாடம் எடுத்தாள்.
“பின்னே… உன்னைப் மாதிரி ஒரு மருமகள் அவங்க குடும்பத்துக்குக் கிடைச்சதே ஒரு சாபக்கேடுதான்! நீ இத்தனை பாதகங்களைச் செஞ்ச பிறகும், உன்னை அவங்க தலைமேல தூக்கி வச்சுத் திரும்பவும் குடும்பத்துல சேர்த்துப்பாங்கன்னு வேற நினைக்கிறியா?” என்று ஆத்திரத்தின் உச்சியில் அவளைக் காய்ச்சி எடுத்தார்!
“அருள் இப்ப கட்டியிருக்கானே ஒரு பொண்ணு… அவ காலேஜ் படிக்கும்போது யாரோ ஏமாத்தி அவ வாழ்க்கையைக் கெடுத்துட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு அது யாருன்னு கூடத் தெரியாத சூழ்நிலையிலும்… அந்தப் பிள்ளையைப் பெத்து, தனியாளா வளர்த்திருக்கு! ஆனா நீ… உன் வயித்துல வந்த உன்னோட குழந்தையையே கோபத்துல கலைச்சிருக்க! உன்னை எல்லாம் என் பொண்ணுன்னு சொல்லிக்கவே எனக்கு அசிங்கமா இருக்கு! உன்னால எங்களோட சொந்தப் பேத்தியைக் கூட நாங்க அநியாயமா ஒதுக்கி வச்சோம். கண்டிப்பா பிரீத்தியோட ஆத்மா கூட எங்களை மன்னிக்காது!” என்று சாமியண்ணன் மனம் வெறுத்துப் பேச… பேத்தியின் நினைப்பில் செல்வியும் மௌனமாகத் கண்ணீர் உகுத்தார்.
‘அருளின் மனதில் காவ்யா மீது அப்படியொரு எண்ணம் துளி கூட இல்லை’ என்று நன்றாகத் தெரிந்திருந்தும்… எங்கே அப்படி நடந்துவிடுமோ என அஞ்சி, சுயநலமாக யோசித்து, அன்று சொந்த பேத்தியின் பொறுப்பை உதறித் தள்ளிவிட்டோமே! பிரீத்தியின் ஆன்மா எப்படி நிம்மதியாக இருக்கும்? இந்த பாவத்தை எப்படித் தீர்க்கப் போகிறோம் எனச் செல்வி வெகுவாகக் கலங்கிப் போனார்.
காவ்யாவுக்கோ, தன் கணவனோடு இனி ஒத்துவரவே போவதில்லை என்று புரிந்ததால்தான் கருவைக் கலைத்தாள். ஆனால், இப்படியொரு விபரீதமான முடிவை எடுக்கும் முன்பு… கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டுமோ? ஒரு கணம் நிதானமாக இருந்திருக்க வேண்டுமோ என்று இப்பொழுது பரிதவித்தாள். சிந்திய பாலை அள்ள முடியாதே!