மழைவர பூமி மறுத்திடுமா? – 24

சாமியண்ணன், செல்வி தம்பதியினர் அப்படியே இடிந்து போயிருந்தனர். படிப்பு, அழகு, புத்திசாதுரியம் என அனைத்தும் நிறைவாகப் பெற்ற தங்களின் இளைய மகள் காவ்யா மீது அவர்களுக்கு எப்போதுமே ஏகப் பெருமை உண்டு. அவளைப் பெற்றெடுத்ததிலேயே இப்பிறவியின் பயனை அடைந்துவிட்டதாக நினைப்பவர்கள்.

ஆனால், இன்று அவர்களையே ஒட்டுமொத்தமாக நிலைகுலைய வைத்த பெருமை… அவர்களின் அருமை மகள் காவ்யாவையே சாரும்!

நல்ல வசதியான, அந்தஸ்துள்ள குடும்பத்தில் தீர விசாரித்துத்தான் பெண்ணைக் கட்டிக்கொடுத்தார்கள். மாப்பிள்ளையும் மிகவும் நல்லவர். ஆனால், பெண்ணுக்கு பிழைக்கத் தெரிய வேண்டுமல்லவா?

‘புத்தியற்ற, மூர்க்க குணம் கொண்ட தங்களின் மூத்த மகள் பிரீத்தி எப்படிப் புகுந்த வீட்டில் நடந்துகொண்டாளோ… அதே போலவே இவளும் நடந்துகொண்டால் என்ன செய்வது? மூத்தவளுக்காவது வேறு வழியே இல்லாமல், அந்தஸ்தில் பொருந்தாத, வசதி குறைவான அருளின் வீட்டில் திருமணம் செய்து வைத்ததால்… என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், சகல வசதிகளும் நிறைந்த இவளுக்கு என்ன குறை என்று… சுவற்றில் அடித்த பந்து போல, அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கோபித்துக்கொண்டு வர வேண்டும்?’ என சாமியண்ணனின் அகம் தவித்தது.

பெற்றவர்கள் எதையாவது கண்டித்துக் கேட்டால் போதும்… “அக்கா வரும்போது மட்டும் அவளை ஒரு கேள்வியும் கேட்காம கவனிச்சுக்கிட்டீங்க; இப்ப நான் வந்தா ஏன் என்னை இப்படித் துரத்திவிடப் பார்க்கறீங்க?” என்று பெற்றவர்களிடமே திருப்பிப் பாய்ந்தாள் காவ்யா.

‘உயிரோடு இல்லாத தன் சொந்த அக்காவுடனேயே இப்படிப் போட்டிக்கு நிற்கிறாளே!’ என்று பெற்றவர்களுக்கு அத்தனை மனவேதனை! ஆனால், அதை கேட்கவும் முடியவில்லை. தங்கள் இரு பிள்ளைகளுக்கும் அளவுகடந்த செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்ததன் விளைவு!

அவளது போக்கிலேயே, “அக்கா பிரீத்தியோட நிலைமை வேறம்மா… உன் நிலைமை வேற! நல்லபடியா குடும்பம் நடத்திப் பிழைக்கப் பாரு… நீ புகுந்த வீட்டில் கௌரவமா இருந்தால்தானே எங்களுக்கு மரியாதையா இருக்கும்” என்று அவளின் அன்னை செல்வி மிகவும் பொறுமையாக எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்டதும் காவ்யாவுக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது. “என்ன வேற வேற நிலைமை? அங்கே என்னை இடுப்பு ஒடிய வேலை செய்ய வைக்கிறாங்க! இவர் அதை என்னன்னு கூட கேட்க மாட்டேங்கிறாரு… சரி, தனிக்குடித்தனம் போலாம்ன்னு சொன்னாலும் என்கூட சண்டை போடறாரு!” என்றாள் சீற்றத்துடன்.

‘பணியாட்கள் இருக்கும் வீட்டில், அவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்ப்பதே இடுப்பு ஒடியும் வேலையா?’ பெற்றவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

பிறந்த வீட்டில் பிடிவாதம் பிடிப்பது போலவே, புகுந்த வீட்டிலும் இவள் இப்படி வீணாகப் பிடிவாதம் பிடிப்பாள் என்பதை அவர்களே சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“இப்படி ஒன்னுமில்லாத சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோச்சுக்கிட்டு அடிக்கடி அம்மா வீட்டுக்கு வரக்கூடாதும்மா. சம்பந்தி வீட்டில் நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க? எங்க வளர்ப்பு சரியில்லைன்னு தானே பேசுவாங்க! நாங்களே உன்னை அங்கே கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வரோம், கிளம்பும்மா…” என்று சாமியண்ணன் அழைத்தால்… “அக்கா கோச்சுக்கிட்டு வந்தப்பவெல்லாம் அவ புருஷன் அடிச்சுப் பிடிச்சு அவ பின்னாடியே ஓடி வந்து நின்னாரு தானே! அதே மாதிரி இவரும் என் பின்னாடி வரட்டும், அதுவரை நான் போக மாட்டேன்” என்பாள் காவ்யா வீம்புடன்!

மூத்த மருமகன் தன் மனைவி வேண்டும் என்று தேடி வந்து நின்றதும், பிரீத்தி அவனை அத்தனை அலட்சியப்படுத்தியபோதும் அவளது மனநிலையைப் புரிந்து கொண்டு அவன் எவ்வளவு அனுசரணையாக நடந்துகொண்டான் என்பதும் சாமியண்ணனின் நினைவில் வந்து போனது.

பணம் இல்லாவிட்டாலும் குணத்தில் சொக்கத்தங்கம் அவரின் தங்கை மகன் அருள்மித்ரன்! அத்தனை குற்றம், குறைகளோடு இருந்த தன் மகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டான். ‘என்ன… அவனோடு நல்லபடியாக வாழத்தான் தங்கள் மூத்த மகளுக்குக் கொடுத்து வைக்கவில்லை’ என்று எண்ணி ஒரு நெடிய மூச்சை விட்டுக்கொண்டார்.

இளைய மருமகன் ராகவனும் கோபித்துக்கொண்டு வந்துவிட்ட தன் மனைவியைத் தேடி வரத்தான் செய்கிறார்; ஆனால், இவள் இங்கு வந்து ஒரு வாரம், பத்து நாட்கள் கடந்த பிறகுதான் வேண்டா வெறுப்பாக வருவார். அதுவும் அவரது பெற்றோரின் கட்டாயத்திற்காக மட்டும்தான் என்பதை, அவரது முகத்தை வைத்தே எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்!

இவளின் பொறுப்பற்ற செய்கைகளால் மாப்பிள்ளை இவள் மீது அதிருப்தியாக இருக்கிறார் என்பதை, பெற்றவர்கள் எவ்வளவுதான் எடுத்துப் புத்தி சொன்னாலும் காவ்யா அதைச் சற்றும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. இதற்கும், இவள் சின்ன வயதிலிருந்தே புத்திசாலி என்று எல்லாரிடமும் பெயரெடுத்தவள் வேறு! ஆனால் நிஜத்தில், இவளுக்கு சொந்த புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை!

இப்படி ஏற்கனவே இழுபறியாகவும் சலிப்பாகவும் போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண உறவில்… இன்று மகள் துணிந்து செய்துவைத்த காரியம், பெற்றவர்களின் தலையில் பேரிடியாய் இறங்கியது!

தன் கணவனோடு போட்ட சண்டையில், தன் வயிற்றில் வளரத் தொடங்கியிருந்த பிஞ்சு சிசுவைக் கருவிலேயே கலைத்திருக்கிறாள்! அதைப் பற்றி யாருக்கும் ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. எப்பொழுதும் கோபித்துக்கொண்டு நேராக அம்மா வீட்டுக்கு வருபவள், இன்று மருத்துவமனைக்குச் சென்று சத்தமில்லாமல் இந்த விபரீதமான காரியத்தை அரங்கேற்றியிருக்கிறாள்.

கருக்கலைப்பிற்குப் பின் அவளது உடல்நிலை சற்றே மோசமடைந்து ஆபத்தான சூழ்நிலைக்குச் செல்லவே… அவளுடன் துணைக்குச் சென்றிருந்த அவளது தோழி ரதி, பயந்துபோய் செல்விக்கு அலைபேசியில் அழைத்துத் தகவல் கொடுத்தாள். விவரம் கேட்டதும் பெற்றவர்கள் இருவரும் பதறிப்போய், அடித்துப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்து சேர்ந்தார்கள்.

“என்னம்மா இது… படிச்ச பிள்ளைங்க நீங்க போயி இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்கீங்களே! அவ வயித்துல வளர்ந்த உசுரை அழிச்சு என்னம்மா சாதிக்கப் போறீங்க? அந்த குழந்தை என்ன பாவம் செஞ்சது?” என்று செல்வி தன் தலையில் அடித்துக்கொண்டு, ரதியைப் பார்த்துக் கதறி அழுதார்.

ரதிக்கும் மனதிற்குள் ரொம்பவும் குற்றவுணர்வாக இருந்தது. “எனக்கும் அவ இதுக்காகத்தான் என்னைக் கூப்பிட்டான்னு முதல்ல தெரியாது ஆன்ட்டி! இங்க ஹாஸ்பிடலுக்கு வந்த அப்பறம்தான் விஷயத்தையே சொன்னா… அதுவும் யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னு வேற சொல்லிட்டா. எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை. இப்ப பார்த்தா, கருவைக் கலைச்சதுல அவளுக்கு ரத்தப்போக்கு ரொம்ப அதிகமாயிடுச்சாம்… அவ சுயநினைவை இழந்துட்டதா சொல்லி, ‘உடனே அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லுங்க’ன்னு நர்ஸ் சொன்னாங்க. அதான் பயந்துபோய் உங்களுக்கும், அவ வீட்டுக்காரருக்கும் போன் பண்ணிக் கூப்பிட்டேன்” என்றாள். அவளும் ரொம்பவும் மிரண்டு போயிருந்தாள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை இனி எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று சாமியண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. மாப்பிள்ளை ராகவன் வந்தால் என்ன நடக்குமோ என்று யோசித்தாலே அவரது அடிவயிறு கலங்கியது; மறுபுறம் பெற்ற மகளின் நிலைமை என்னவாகுமோ என்ற தவிப்பு வேறு!

அப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவை விட்டு வெளியே வந்த மருத்துவர், “அவங்க குடும்பத்துல இருந்து யாராவது வந்திருக்காங்களா?” என ரதியிடம் கேட்டார்.

“அவங்க அம்மாவும் அப்பாவும் இவங்கதான் டாக்டர்…” என்று சாமியண்ணனையும் செல்வியையும் கைகாட்டிய ரதி, “இப்ப காவ்யா எப்படி இருக்கா டாக்டர்?” என்றாள் பதறியவளாய்.

டாக்டரோ அவர்கள் மீது சற்று அதீத கோபத்துடன், “லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா வீட்டுல சேர்த்துக்க மாட்டீங்களா? புருஷனும் துரத்தி விட்டுட்டான்… தன் அம்மா, அப்பாவும் சேர்த்துக்க மாட்டாங்கன்னு சொல்லி, அந்தப் பொண்ணு தனியா வந்து கருவைக் கலைச்சிருக்கு! பெத்தவங்களுக்கு இந்த அளவுக்கு வீம்பும் வறட்டுப் பிடிவாதம் ஆகாது. நாளைக்கு உங்க மகளுக்கு ஏதாவது ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?” என்று காய்ச்சி எடுத்தார். அவர் சொன்னதைக் கேட்டு… பெற்றவர்கள் இருவரும் அப்படியே திகைத்து, பேச்சற்றுப் போய் நின்றனர்

அவர் சொல்வதைக் கேட்டபடியே ராகவன், அவனுடைய பெற்றோருடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவனது முகம் இரும்பைப் போல இறுகிப் போயிருந்தது.

செல்வி தன் வாயிலேயே கையை வைத்துக் கொண்டார். அடுக்கடுக்காய் எத்தனை பொய்கள்! தன் சொந்தக் குழந்தையையே கருவிலே அழிப்பதற்காக ஒரு பெண்ணால் இப்படியொரு அபாண்டமான பொய்யைச் சொல்ல முடியுமா?

“என்ன டாக்டர் நீங்க? அவ என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவீங்களா? அவளுக்கு காதல் கல்யாணம் எல்லாம் ஒன்னும் நடக்கலை! அவளோட புருஷனும் அவளைத் துரத்தி விடவுமில்லை! அவ புருஷன் கூட கோச்சுக்கிட்டு அவளோட பிறந்த வீட்டுக்கு வர மாதிரி கிளம்பி வந்து, இப்படியொரு காரியத்தைப் பண்ணியிருக்கா! நீங்களும் அவ சொல்லறது உண்மையா, பொய்யான்னு ஒரு வார்த்தை கூட விசாரிக்காம… அநியாயமாக எங்க வீட்டு வாரிசை அழிச்சிருக்கீங்களே!” என்று சீறினார் ராகவனின் தந்தை.

அவர் சொன்னதைக் கேட்டு… அந்த மருத்துவரே ஒரு கணம் திகைத்துப் போனார்! அவளைச் சற்றும் சந்தேகிக்கவே முடியாதபடி, அப்படியொரு தேர்ந்த நடிப்பு! அவருக்கு மேற்கொண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ராகவனின் அன்னை தன் மகனுக்கு ஒரு நல்ல மணமகளைத் தேடாமல் போய்விட்டோமே என்று நினைத்து நெஞ்சம் வெதும்பிப் போனார். அதனால் தானே இன்று அவனது வாழ்க்கையும் நிம்மதியின்றிப் போய்… தங்களின் அடுத்த தலைமுறைச் சந்ததியையும் இப்படி அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்கள்!

“என் பொண்ணு இப்ப எப்படி இருக்கா டாக்டர்?” மருத்துவர் சொன்ன பாதகங்களைக் கேட்ட பிறகும், செல்விதான் மனம் கேட்காமல் அழுதுகொண்டே கேட்டார். ஏற்கனவே மூத்த மகள் பிரீத்தியைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்கள்; இப்போது இளையவளும் இப்படியொரு விபரீதத்தைச் செய்திருக்கிறாளே!

“இன்னும் சுயநினைவு வரலை… ரத்தம் கொடுத்துட்டு தான் இருக்கோம். இனி பயப்பட ஒன்னுமில்லை” என்று சுருக்கமாகச் சொன்ன மருத்துவர், அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.