அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவன் அவளோடு உள்ளே வர, வேதிகா அவனுக்குக் குளிர்ந்த எலுமிச்சைச் சாறு கொண்டு வந்து கொடுத்தாள். அந்த ஜில்லென்ற பானகம் அவனது வயிற்றோடு சேர்த்து, கொதித்துக் கொண்டிருந்த மனதையும் சற்றே குளிர்வித்தது.
‘உனக்கு ஏன்டி இவ்வளவு பெரிய கொடுமை நடந்தது?’ அவன் அடிமனம் ஓயாமல் அடித்துக் கொள்ள, அவளையே தன் பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது விழிகளில் கசிந்த அந்தப் பாரத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவன் வெளியே செல்லத்தான் அனுமதி கேட்க நினைக்கிறான் என்று எண்ணிய வேதிகா, கணவனின் அருகில் வந்து, “சரி… சீக்கிரம் போயிட்டு வாங்க” என்றாள் மெல்லியக் குரலில். அவன் அப்போதும் பதில் சொல்லாமல், அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘என்ன?’ என்பது போல அவனையே பார்த்திருக்க, என்ன நினைத்தானோ சட்டென்று மனம் மாறியவன் போல தாங்கள் வந்தால் வழக்கமாக தங்கும் அறையை பார்வையை சுட்டிக்காட்டி, “கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்… அப்போ கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்” என்றான். அவளது விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
‘இவன் தானே வெளியே போயே ஆக வேண்டும் என்று சற்று முன்பு பிடிவாதம் பிடித்தான்? இப்போது சட்டென்று படுக்கப் போகிறேன் என்கிறானே!’ நொடிக்கொரு அவதாரம் எடுக்கும் அவனது மாற்றங்களைக் கண்டு அவளுக்கு மலைப்பாக இருந்தது.
இப்பொழுது அவளின் திகைப்பானப் பார்வையைக் கண்டு, “என்ன?” என்று அருள் புரியாமல் கேட்க, வேதிகா அவசரமாக ஒன்றுமில்லை என்பது போலத் தலையசைத்து விட்டு, அவனை அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அவன் இலகுவாக இருக்கட்டுமே என்று தன் தந்தையின் வேஷ்டியை எடுத்துக் கட்டிக்கொள்ளக் கொடுத்தவள், அங்கிருந்து வெளியே வந்தாள். ஆனால், அவளது உள்ளம் மட்டும் அவனது புதிரான நடவடிக்கைகளிலும், இன்னும் தளராத அந்த இறுக்கமானத் தோற்றத்திலுமே சிக்குண்டு கிடந்தது.
‘உண்மையில் இவனுக்கும் ஜெகனுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லையா? வெறும் பணப் பிரச்சனைக்காகத்தான் இத்தனைப் பதற்றமா?’ அவளுக்குள் குழப்பம் அலைமோதியது.
தாங்கள் தனியாகக் குடிவந்ததிலிருந்து மாமியார் கல்யாணியின் கோபம் பலமடங்கு கூடிவிட்டதை அவளும் அறிவாள். அவரே இவர்களைத் திட்டமிட்டு வெளியே அனுப்பிவிட்டு, இப்போது உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் மகனைப் பற்றித் அவதூறாகப் பேசாத பேச்சே இல்லை.
முன்பு செய்தது போல மகனிடம் பணத்தை இஷ்டத்திற்குப் பிடுங்கலாம் என்ற அவரின் திட்டம், அருள்மித்ரனின் தீவிர கண்காணிப்பால் பலிக்காமல் போனது. அது அவரை இன்னும் அதிகமாக கொதிக்கச் செய்திருக்கிறது என்பது கவிதாவின் மூலம் வேதிகாவிற்குத் தெரிந்திருந்தது.
‘ஒருவேளை மாமியார் ஏதும் நச்சரிக்கிறாரா? அதனால் வந்த மன உளைச்சலா? அல்லது வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?’ எனப் பலவாறாக யோசித்தவளுக்கு, எதிலுமே ஒரு தெளிவு கிடைக்கவில்லை.
அமைதியற்ற மனநிலையோடு அங்குமிங்கும் சுற்றித் திரிந்த மகளைக் கவனித்த யமுனா, “மாப்பிள்ளையோடு எதுவும் சண்டையா வேதா?” என்று மெல்ல விசாரித்தார்.
“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா” என்றவளின் முகத்தில் இன்னும் தெளிவில்லை.
மகளை ஒரு கணம் ஆராய்ந்தவர், மேற்கொண்டு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சரி… மாப்பிள்ளையைச் சாப்பிடக் கூட்டிட்டு வா” என்றார்.
“அவர் அப்புறமா சாப்பிடுறேன்னு சொல்லிவிட்டாரும்மா…” என்று அவள் தயக்கமாக இழுக்கவே, அதன் காரணத்தைத் துருவித் துருவி விசாரிக்க அவருக்குத் தோன்றவில்லை. ‘சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் அவளே சொல்லட்டும்’ என்று எண்ணியபடி, “அப்ப நீ சாப்பிட்டுக்க?” என்று சொன்னார்.
“குழந்தைகளுக்கு ஊட்டி விட்டுட்டு நான் அவரோடேயே சேர்ந்து சாப்பிட்டுக்கிறேம்மா…” என்ற மகளின் தாடையைப் பரிவோடு வருடிய யமுனா, “குழந்தைகளுக்கு நான் ஊட்டிவிடுறேன். நீயும் போய் மாப்பிள்ளையோடு ரெஸ்ட் எடு… முகம் ரொம்பவும் சோர்ந்து போயிருக்கு” என்றார்.
மறுத்து ஏதோ சொல்ல வந்தவள், அன்னையின் அந்த அதிகாரப் பார்வையில் தன் சஞ்சலங்கள் எல்லாம் சட்டென்று பின்னுக்குப் போக, ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தபடி, “யமுனை ஆற்றிலே… எனக்கே ரெண்டு குழந்தைகள் இருக்கு! ஆனா நீங்க இன்னும் என்னை இப்படி மிரட்டிட்டு இருக்கீங்க!” என்று விளையாட்டுத் தனத்துடன் சொல்லியபடி, அம்மா சொன்னதைத் தட்டாமல் அறைக்குள் சென்றாள்.
கண்களில் நீர் கோர்க்க, உள்ளே செல்லும் மகளையே வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார் யமுனா. முன்பெல்லாம் இப்படித்தான் ‘யமுனை ஆற்றிலே’ என்று அடிக்கடி அழைத்து அவரிடம் செல்லமாக அடி வாங்கிக் கொள்வாள். நீண்ட நெடிய கொடுமையான காலத்திற்குப் பிறகு, அவள் மீண்டும் பழையபடி அழைக்கிறாள் என்றால்… தன் மகளின் வாழ்க்கை ஒரு வழியாகக் கரையேறிவிட்டது என்றுதானே அர்த்தம்? அவரது தாயுள்ளம் நிறைந்து போனது.
புடவைத் தலைப்பால் கண்களில் தேங்கிய நீரை ஒற்றிக் கொண்டவர், பேரப்பிள்ளைகளைக் கவனிக்கச் சென்றார்.
வேதிகா அறைக்குள் நுழைந்தபோது, அவள் கொடுத்துவிட்டுப் போன வேஷ்டியைக் கூட மாற்றாமல், எதையோ தீவிரமாக யோசித்தபடி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அருள்மித்ரன் நடந்து கொண்டிருந்தான்.
‘கொஞ்ச நேரம் படுக்கிறேன்’ என்று கூறிவிட்டு வந்தவனின் அந்த அமைதியற்ற தோரணை, அவளை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
அவள் வந்ததைக் கூட உணராமல் அவன் ஆழ்ந்த யோசனையில் இருக்கவும், “என்னங்க?” என்றழைத்து அவனின் கவனத்தைக் கலைத்தாள்.
சட்டென்று சிந்தனை சிதறியவன், “சொல்லு வேதிகா…” என்றான். ஏனோ, அவன் அவளது முழுப் பெயரைச் சொல்லி அழைக்கும் போதெல்லாம் அவளின் முகம் சுருங்கிப் போகிறது.
நொடியில் மாறிய தன் முகபாவத்தைச் சீர்செய்தபடி, “திடீர்ன்னு என்ன பணப் பிரச்சனை?” என்று விசாரித்தாள்.
அவன் முகத்தில் சட்டென்று ஜாக்கிரதை உணர்வு வந்து ஒட்டிக்கொண்டது. அவனுக்குப் பணப் பிரச்சனை இருப்பது உண்மைதான், அதை அவனால் சமாளித்துக் கொள்ளவும் முடியும். பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்குக் கூட அஞ்சாத உழைப்பாளி அவன்; அதனால் அவன் கலங்கப்போவதில்லை.
ஆனால், இப்போது அவனைச் சஞ்சலப்படுத்திக் கொண்டிருப்பவன் ஜெகன்! அது தன் மனைவிக்குத் துளியும் தெரிந்துவிடக் கூடாது என்கிற பதற்றம், அவனது நெற்றியில் வியர்வை முத்துக்களை அரும்பச் செய்தது.
அவன் பதில் சொல்லாமல் இருக்கவே, “என்னங்க?” என்றாள் கலக்கமான குரலில். மனைவியிடம் நம்பும்படி எதையாவது சொல்லாவிட்டால், அவள் உண்மையை எங்கே கண்டறிந்து விடுவாளோ என்கிற அச்சத்தில், ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சனையைச் சொல்லி இப்போது சமாளிக்க நினைத்தான்.
முயன்று வருவித்த இயல்பான குரலில், “பெருசா ஒன்னுமில்லை… அம்மா ரொம்ப பிரச்சனை பண்றாங்க” என்றான்.
அவள் புரியாமல் பார்க்க, “நம்ம அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும், ‘வீட்டு மேல கடன் வாங்கித்தானே மாலதி கல்யாணத்தை நடத்தின? இப்போ அந்த கடனோட எப்படி நான் பிள்ளைங்களுக்கு இந்த வீட்டைச் சீதனமா கொடுக்க முடியும்? சீக்கிரமா கடனை முடிச்சுப் பத்திரத்தை மீட்டுக்கொடு’ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க” என்றான். இதைச் சொல்லும்போது அவன் முகத்தில் அத்தனை வலி நிறைந்திருந்தது.
தன் அன்னை தனக்கு இத்தனை நெருக்கடியைக் கொடுப்பார் என்று அவன் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான்.
தன் கணவன், மாமியார் செலவிற்கென்று முன்பு போலப் பணத்தை வாரி வழங்குவதில்லை என்பதும், அதனால் அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பதும் வேதிகாவிற்குத் தெரிந்த விஷயமே. ஆனால், மகனை இத்தகைய இக்கட்டான சூழலில் தவிக்கவிட்டுவிட்டு, பணத்தைக் கறாராகக் கேட்டால்… அவனால் எப்படித் தர முடியும் என்று அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லையா என அவள் மனம் கலங்கினாள்.
அவளின் முக வாட்டத்தைப் பார்த்து, “ஹேய்… அதெல்லாம் சமாளிச்சிடலாம் வேதா. கொஞ்சம் பிரஷர் பண்றாங்க, அதுதான். நீ இதையெல்லாம் நினைச்சு வருத்தப்படாதே” என்று அவளைத் தேற்றும் விதமாகச் சமாதானம் கூறினான்.
மெதுவாகத் தலையசைத்துக் கொண்டவளுக்கு, பெற்றவளே இப்படி நடந்து கொண்டால் அவன் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்து அவனுக்காக மனம் கலங்கியது.
எதையோ சொல்லி மனைவியை இப்போதைக்குச் சமாளித்து விட்டோமே என்று அருள்மித்ரனுக்கு ஒருபுறம் ஆசுவாசமாக இருந்தாலும், அவன் மனதில் ஜெகன் மீதான வெறுப்பு மட்டும் காட்டுத்தீயாகப் படர்ந்து பரவிக் கொண்டிருந்தது.