“மாமியார் வீட்டுக்கு இன்னொரு நாள் போய்க்கலாம் வேதிம்மா. இப்போ வீட்டுக்குப் போலாமா? அங்கே கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு…” என்று அருள் சன்னமானக் குரலில் ஆசையாகக் கேட்க, “திடீர்னு என்ன வேலை?” என்று அவனை குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்தவள், அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து குங்குமமாய் சிவந்து போனாள்.
அவர்களின் அன்னியோன்யத்தை அளவிட்டபடியே, “வேதிகா…” என்றொரு குரல் கேட்டது. கணவனின் அருகாமையில் திளைத்திருந்தவள், பதற்றத்தில் சட்டென்று சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு, யாரென்று நிமிர்ந்து பார்த்தாள். எதிரே நின்றிருந்தவனை அவளுக்கு அடையாளம் தெரிந்தது; ஆனால், சட்டென்று அவனது பெயர் மட்டும் நினைவுக்கு வர மறுத்தது.
“ஹாய்…” என்று இழுத்தவள், பெயர் தெரியாத சங்கடத்தில், “எப்படி இருக்கீங்க?” என்று பொதுவாக வினவினாள்.
“வேதிகா தானே நீ? எப்படி இருக்க? ஆளே அடையாளம் தெரியலை. ஆமா உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேட்டான் ஜெகன். அவனது குரலில் இருந்தது ஆச்சரியமா அல்லது அவளை அங்கே அந்தச் சூழலில் கண்ட அதிர்ச்சியா என்று பிரித்தறிய முடியவில்லை.
வேதிகா கல்லூரியை விட்டுப் பாதியில் நின்றதற்கான நிஜமானக் காரணம் யாருக்கும் தெரியாது. ‘குடும்பச் சூழல் காரணமாக வேறு ஊருக்கு மாறிப் போகிறோம்’ என்றுதான் அசோகன் கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லியிருந்தார். நன்றாகப் படிக்கும் பெண் என்பதால், ‘விடுதியில் தங்கிப் படிக்க வையுங்கள்’ எனப் பேராசிரியர்கள் வற்புறுத்தியும் அவர் பிடிகொடுக்கவில்லை. வேதிகாவின் ஊரிலிருந்து அந்தக் கல்லூரியில் வேறு யாரும் படிக்காததால், அவளது நிஜமான நிலை அங்கே யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
ஜெகனும் அதே கல்லூரியில்தான் படித்தான். வேதிகா பி.காம் பயின்றபோது, அவன் பி.பி.ஏ பிரிவில் இருந்தான். வேதிகா என்றால் அவனுக்கு அத்தனை பித்து; எப்போதும் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான். ஆனால், வேதிகா அவனுக்குச் சாதகமான எவ்விதப் பதிலும் தந்ததில்லை.
சட்டென்று ஒருநாள் அவள் கல்லூரிக்கு வருவது நின்றுவிட, அவளைத் தொடர்புகொள்ளும் வழியறியாது தவித்திருந்தான் ஜெகன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து, இன்று அவளை ஒரு குடும்பத் தலைவியாகப் பார்க்கிறான். கணவன், கையில் இரண்டு பிள்ளைகள் என அவள் நிற்பதைக் கண்டதும் அவனுள் ஒருவித இளக்காரம் எட்டிப்பார்த்தது.
அருள்மித்ரனின் தோற்றம் அவனுக்கு அத்தனை வசதியானவனாகவோ அல்லது படித்தவனாகவோ தோன்றவில்லை. ‘படிப்பை நிறுத்திய கையோடு இவனை திருமணம் செய்துகொண்டு, அதற்குள் ஒன்றுக்கு இரண்டாகப் பிள்ளைகளையும் பெற்றுவிட்டாளோ?’ என்று தன் மனதுக்குள் அவளை, அவளது வாழ்க்கை முறையைத் தரக்குறைவாக அளவீடு செய்து கொண்டிருந்தான் ஜெகன்.
“ம்ம்… இவர்தான் என் கணவர். இவங்க என் குழந்தைங்க. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் வேதிகா, ஜெகனின் அந்த இளக்காரமான அளவிடும் பார்வை புரியாமல்.
ஆனால், அருள்மித்ரனுக்குள் ஏதோ ஒன்று பலமாகத் தட்டியது. ஜெகனைப் பார்த்ததிலிருந்து அவனுக்குள் ஒருவித உறுத்தல். அவனது முகத்தையே இமைக்காமல் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்தான். அப்படி அவன் கவனித்ததில், ஏதோ ஒரு கசப்பான உண்மை அவனுக்குப் புரிந்தது போல இருந்தது!
அருளின் மனதில் அத்தனை நேரமிருந்த இதம் மறைந்து, ஒரு காட்டுத்தீயைப் போல ஆக்ரோஷம் கொழுந்துவிட்டு எரிந்தது. தன் ஆத்திரத்தை மிகப்பயங்கரக் கட்டுப்பாட்டுடன் அடக்கியபடி அப்படியே அமர்ந்திருந்தான்.
“நான் நல்லா இருக்கேன். என்னை அடையாளம் தெரியுதுதானே? நான்தான் ஜெகன். இப்போ எம்.பி.ஏ படிச்சிட்டு இருக்கேன். படிப்பு முடிஞ்சதும் அப்பாவோட தொழிலைக் கவனிக்கணும்” என்றான் ஜெகன் தன் வசதி வாய்ப்புகளைப் பெருமிதத்தோடு பறைசாற்றியபடி.
வேதிகாவிற்கு அவனது தற்பெருமைப் பேச்சோ, அதன் மூலம் தங்களை அவன் மட்டம் தட்டுவதோ புரியவில்லை. “நல்லதுங்க… ஆல் தி பெஸ்ட்!” என்று மனதாரச் சொன்னவள், தன் கணவன் பக்கம் திரும்பி, “என்னங்க, இவர் எங்க காலேஜ் தான் படிச்சாரு. பேரு ஜெகன். ஒரே பேட்ச் தான், ஆனா வேற டிபார்ட்மெண்ட்” என அறிமுகம் செய்து வைத்தாள்.
அவனது முகத்தை அளவிட்டபடியே, “வணக்கம் ஜெகன்!” என்று மட்டும் சொன்னான் அருள். அவனது குரலின் அந்த அதீத இறுக்கத்தில், ‘இத்தனை நேரம் தன்னிடம் குழைந்து பேசிய கணவனின் குரலா இது?’ என்று திகைப்புடன் அவனைப் பார்த்தாள் வேதிகா. அவனது முகமும் இப்போது கருங்கல் போல இறுகிப் போயிருந்தது. அதற்குள் அவனுக்கு என்ன ஆனது என்று புரியாமல் அவள் குழம்பிப் போனாள்.
“ஹாய்…” என்று சொல்லி கைகுலுக்கினான் ஜெகன். சம்பிரதாயமாகப் பேசியபடியே, “குழந்தைங்க பேர் என்ன?” என்று கேட்டுவிட்டு, தங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த சிறுவர்களிடம் தன் கவனத்தைப் பதித்தான்.
“மகன் கவின், பொண்ணு தீபாலி” என்று சொன்ன அருளின் குரலில் இருந்த அந்த விசித்திரமான மாறுபாடு புரியாமல் வேதிகா அவனை புரியாமல் பார்த்தாள். புதிதாக அறிமுகமான ஒருவனைப் பார்ப்பது போலன்றி, ஜெகனை அவன் ஏன் ஓர் ஆராய்ச்சியாகப் பார்க்கிறான் என்று அவளால் அனுமானிக்கவே முடியவில்லை.
சின்னவர்களிடம் திரும்பிய ஜெகன், “ஹாய் குட்டீஸ்” என்க, அத்தனை நேரமும் அண்ணன் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கி விளையாடிக் கொண்டிருந்த தீபாலி, புதிய மனிதன் ஒருவன் தன்னை நெருங்குவதை உணர்ந்ததும் குடுகுடுவென ஓடிப்போய் அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவளது மடியில் தஞ்சமடைந்தாள்.
சின்னவனும் தப்பிப்பதற்குள் ஜெகன் அவனைத் தூக்கி அள்ளிக்கொண்டான். கவின் தன் கொட்டைப்பாக்கு விழிகளை விரித்துப் புதியவனைப் பார்த்துவிட்டு, அவன் அறிமுகமற்றவன் எனத் தெரிந்ததும், “அப்பா…” என்று சிணுங்கியபடி தன் தந்தையை நோக்கிக் கைகளை நீட்டினான்.
கவினின் முகத்தைப் பார்த்த கணமே, ஜெகனுக்கு மின்சாரம் தாக்கியது போன்றதொரு பேரதிர்ச்சி! ஊன்றி கவனித்தால் ஒழிய மற்றவர்களுக்குத் தெரியாத அந்த ஒற்றுமை, தன் சிறுவயதுப் புகைப்படத்தைத் தினமும் பார்ப்பவனுக்குத் தெரியாமல் போகுமா? அச்சு அசலாகத் தன்னையே பிரதிபலிக்கும் அந்தக் குழந்தையின் பிஞ்சு முகத்தைக் கண்டு அவன் அப்படியே உறைந்து நின்றான்.
ஜெகன் நிலைதடுமாறிய அந்த நொடியே, அருள்மித்ரனுக்குத் தன் சந்தேகம் ஊர்ஜிதமானது. இவன்தான் அவன்! உச்சத்துக்கேறியக் கோபத்தில் அருளின் தாடை இறுக, நரம்புகள் புடைக்க, கண்கள் அக்னிப் பிழம்புகளாகச் சிவந்து எரிந்தன.
தன் மகனின் கண்களும், சிரிப்பும் பிரதிபலிக்கும் ஒரு பெரிய உருவம் தன் கண்முன்னே வந்து நின்றால், அவனால் எப்படி தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும்?
வேதிகாவின் வாழ்க்கையைச் சிதைத்த அந்த மிருகத்தை, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இமைக்காமல் பார்த்தான் அருள். இவனது பெயர் கூடத் தன் மனைவிக்கு நினைவில் இல்லை; ஆனால், இவன் அவளுக்கு இழைத்த அநீதியும், அதனால் இத்தனை காலமாய் அவள் அனுபவித்த அவமானங்களும் அருளின் நெஞ்சை கூர் ஈட்டியாய் குத்திக் குடைந்தது.
ஓடிச் சென்று அவனது சட்டையைப் பிடித்துக் குலுக்கத் துடித்தது அவனது கைகள். ஆத்திரம் தீரும் மட்டும் அவனை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டும் என்று வெறியே வந்தது. அவனது முக அமைப்பையே சிதைத்துத் தரைமட்டமாக்கினால் தான், தன் கொதிக்கும் நெஞ்சம் அடங்கும் போலிருந்தது.
ஆனால், தங்களுக்குள் இப்போதுதான் அனைத்தும் சுமூகமாகத் தொடங்கியிருக்கிறது. தன் காயங்களை மெல்ல மறந்து வேதிகா புது வாழ்விற்கு அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், இவன் யாரென்று அவளுக்குத் துகிலுரித்துக் காட்டினால், அது அவளது மனதை எந்தளவிற்குப் பாதிக்குமோ என்கிற அச்சம் அவனது ஆத்திரத்தைக் கடிவாளமிட்டுத் தடுத்தது.
தன்னையே பிரதிபலிக்கும் கவினின் முகத்தைப் பார்த்ததும், ஜெகனின் கைகளில் நடுக்கம் எடுத்தது. அந்தப் பிஞ்சு கைகளின் ஸ்பரிசம் இப்போது அவனுக்கு நெருப்பாய்ச் சுட்டது. அருள்மித்ரனின் ஜுவாலையாக எரியும் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல், அவசர அவசரமாகக் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டான். “சாரி… எனக்கு ஒரு முக்கியமான வேலை… நான் கிளம்பறேன்!” என்று தடுமாறிய குரலில் சொல்லிவிட்டு, அந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் எனத் தலைதெறிக்க ஓடினான்.
“என்னாச்சு ஜெகன்?” எனப் புரியாமல் கேட்ட வேதிகாவிற்குப் பதில் சொல்லக்கூட அவன் அங்கே நிற்கவில்லை.
வேதிகாவிற்குத் தன் கணவனின் தோரணையும் புரியவில்லை; இத்தனை நேரம் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த ஜெகன் திடீரென்று ஏன் இப்படி விழுந்தடித்து ஓடுகிறான் என்பதும் விளங்கவில்லை. குழப்பத்தோடு கணவனை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு, கோபத்தில் ஜொலிக்கும் அவனது முகத்தைக் கண்டதும் நெஞ்சு திக்கென்றது. பயத்தில் தொண்டை உலர, முகம் வெளிறிப் போய், எச்சில் கூட்டி விழுங்கியபடி என்னவோ ஏதோவென அடித்துக் கொள்ளும் நெஞ்சத்தோடு அவனைப் பார்த்திருந்தாள்.
பொங்கிப் பெருகும் ஆத்திரத்தை இந்த நொடி அருள்மித்ரனால் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், கோபத்தைக் காட்டாமலேயேப் போகும் அளவிற்கு அவன் மகானும் இல்லை என்பதை அவனது ஆக்ரோஷமான விழிகள் மௌனமாகச் சேதி சொன்னன!