“என்னாச்சு? ஏன் இன்னும் அங்கேயே நிக்கிற?” என்றவனுக்கு, அறையில் விடிவிளக்கின் தயவால் கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் புடவை உடுத்தி நின்றிருப்பது வரிவடிவமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

அதனால், “குழந்தைங்க தூங்க லேட் பண்ணிட்டாங்களா என்ன? இன்னும் சேலையைக் கூட மாத்தாம இருக்கியே?” என்று நிலைமை புரியாமல் அவன் எதார்த்தமாக கேட்டு வைக்க, வேதிகாவின் மனதிற்குள் கோபம் பேரலையாய் பொங்கியது.

‘நான் இத்தனை மெனக்கெட்டு அலங்கரித்து நின்றிருப்பது அவனுக்குக் குழந்தை தூங்காததால் ஏற்பட்ட தாமதமாகத் தெரிகிறதா?’ எங்கே அங்கேயே நின்றிருந்தால் அவனிடம் கோபமாக எதுவும் பேசி விடுவோமே என அஞ்சி, “ம்ம்…” என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, விறுவிறுவென்று மாற்றுடையை எடுக்கச் சென்றாள்.

அவள் சொன்ன அந்த ஒற்றை ‘ம்ம்’மில் ஒரு கரகரப்பு இருப்பதை உணர்ந்தவன், யோசனையோடே எழுந்து அமர்ந்தான். “வேதிம்மா… இங்கே கொஞ்சம் வா. ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான் மென்மையாக.

அவள் அவனைச் சட்டை செய்யவே இல்லை. “வேதி… நான் பேசுறது கேட்கலை?” என்றான் அருள்மித்ரன், என்றுமில்லாத ஒரு அழுத்தமான தொனியில். அவளோ அவன் பக்கம் திரும்பக்கூட மறுத்தாள். அவளுக்குள் கோபமும் அழுகையும் ஒருசேர முட்டி நின்றன; சரியாக மூச்சு விடக்கூட முடியவில்லை. அழுகை கேவலாக முட்டியது. சத்தமின்றி ஆழ்ந்த மூச்சுக்களை வெளியேற்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘கவிதாவை வீட்டில் விடக் கிளம்பும் வரையிலும் சாதாரணமாகத்தானே இருந்தாள்? அதற்குள் என்ன ஆனது? இப்படி ஒரு நாளும் அவள் என்னைப் புறக்கணித்தது இல்லையே?’ மனைவியின் இந்தத் திடீர் மாற்றம் அருள்மித்ரனுக்கு புதிராக இருந்தது.

மெல்ல எழுந்து அவளருகில் வந்துவிட்டான். மாற்றுடையை எடுத்துக்கொண்டு நகரப் பார்த்தவளின் தோள்களை இருபுறமும் பற்றி, தன்னை நோக்கித் திருப்பினான். அவளோ பிடிவாதமாகத் தலையைக் குனிந்தபடி நிலத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு? நான் கேட்கிற எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்குற? என்னப் பிரச்சனை உனக்கு? எதை நினைச்சு இப்படிக் கவலைப்பட்டுட்டு இருக்க?” என்று கேள்விகளை ரயில் பெட்டிகளைப் போல வரிசையாக அடுக்கினான்.

அவளுக்குத் துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. அவனை நிமிர்ந்துப் பார்க்கக்கூட முடியாதத் திராணியற்ற நிலை! அழுந்த மூடிய இதழ்களுடன், மௌனத்தையே பதிலாக்கி அப்படியே நின்றிருந்தாள்.

அவளின் தாடையைப் பற்றி மெல்ல உயர்த்தி, “வேதிம்மா…?” என்றான் இதமானக் குரலில்.

அவள் விழிகள் கலங்கிச் சிவந்திருப்பது அந்த இருளில் அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அவளின் தவிப்பான முகம் அவனுக்குப் புரிந்தது. “அத்தைங்க பேசினதைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா வேதி?” என்றான் மனையாளின் கன்னங்களை மென்மையாகத் தாங்கி. ‘பணத்திற்குச் சிரமப்படும் வாழ்க்கை’ என்று நினைக்கிறாளோ, எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவளை வாட்டுகிறதோ என்று அவனது உள்ளம் தவித்தது.

அவள் பதில் சொல்லாமல், உதடுகள் துடிக்க அவனையே பார்த்திருந்தாள். கன்னங்களைப் பற்றியிருந்த அவனது கைவிரல்கள் வழியே அவளின் இதழ் துடிப்பை உணர்ந்தவன், “சின்னக் குழந்தை மாதிரி என்னடி இது? என்னன்னு சொன்னாதானே தெரியும்?” என்றான் சலிப்பும் கண்டிப்பும் கலந்தக் குரலில்.

அவள் மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்.

“வேதிம்மா… என்னன்னு சொல்லுடி!” என்று மீண்டும் அவளின் முகம் பற்றி உயர்த்தியவன், அவளது சொல்லொணாத் துயருக்கான காரணம் புரியாமல் தவித்தான். “அழகி… என்னடி ஆச்சு?” என்று பரிதவிப்பாகக் கேட்டபடி, அவளின் முகத்தையே அந்த மெல்லிய ஒளியில் ஊன்றி கவனித்தான்.

ஆனால், அந்த வெளிச்சத்தில் அவளின் முகபாவங்களை அவனால் சரியாகக் கணிக்க முடியவில்லை. பிள்ளைகள் உறங்குவதால் சத்தமாகப் பேசி விசாரிக்கவும் முடியவில்லை. அதற்குமேல் பொறுமையிழந்தவனாய், அவள் எதிர்பாராத நேரத்தில், “வா என்கூட!” என்று அவளைச் சட்டென்று அறைக்கு வெளியே அழைத்துச் சென்றான்.

அவன் கையோடு இழுபட்டு அறைக்கு வெளியே நடந்த வேதிகாவின் இதயம், இப்போது பதற்றத்தில் தாறுமாறாகத் துடித்தது.

அருள்மித்ரனோ பிள்ளைகள் உறங்கும் அறையை மெல்லச் சாத்திவிட்டு, வரவேற்பறையின் விளக்கை உயிர்ப்பித்ததும், “இப்ப சொல்லு வேதி… என்னப் பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி…” என்று கேட்டபடி தன் மனையாளின் பக்கம் திரும்பியவன், அவளது அலங்காரம் நிறைந்தத் தோற்றத்தைக் கண்டதும் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான்.

அவனுக்கு அடுத்துப் பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை. அவளது தோற்றம் மௌனமாக உணர்த்திய காதல் செய்தி, அவனைச் சரியாகச் சென்றடைந்தது. அவளிலிருந்து அவனால் பார்வையை பிரித்தெடுக்க முடியவில்லை.

வேதிகாவால் படபடப்பில் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. அவள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம்தான் இது; ஆனால், அது நிஜமாகும்போது அவளால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. கணவனின் பார்வை வீச்சை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், சட்டென்று அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்பி நின்றுகொண்டாள். மத்தளம் கொட்டுவது போல அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

அவனை எதிர்கொள்ள முடியாமல் அவள் திணறுவது, அருள்மித்ரனின் இதழ்களில் இளநகையைத் தோற்றுவித்தது. நத்தையைப் போலத் தனக்குள் சுருக்கிக் கிடப்பவள், இன்று இத்தனை தூரம் மெனக்கெட்டிருப்பது அவன் மீதிருக்கும் காதலால் அல்லவா? மனையாளின் அன்பை எண்ணி அவன் மனம் பாகாய் உருகியது.

காலையிலிருந்து அவனை ஆட்டிப்படைத்த அலைப்புறுதல்கள் யாவும், மனையாளின் இந்தச் சிறு செய்கையில் நொடியில் தகர்ந்து சுக்குநூறாகிப் போயின.

மெல்ல அவளை நெருங்கி, அவளின் தோள்களைப் பின்னால் இருந்தே பற்றியவன், “வேதிம்மா…” என்று அவளது காதோரம் கிசுகிசுத்தான்.

அவனது மீசை முடிகளின் உராய்வில் தேகம் சிலிர்த்த வேதிகா, பதறித் துள்ளினாள். அவனோ அவளை அனுமானித்தவன் போல, வேகமாக அவளது இடையைப் பின்னிருந்தே இருகரங்களால் இறுக வளைத்து அவளை நகரவிடாமல் தன்னுள் சிறைப்பிடித்துக் கொண்டான். அவனது இந்தத் திடீர் அதிரடியில் அவள் மூச்சுவிடவும் மறந்து போனாள்.

தேகம் நடுங்க நின்றிருந்தவளிடம், “அழகி… உன்னைக் கவனிக்காம எப்படிடி போனேன்?” என்று ஆச்சரியமாகக் கேட்டான். அவனுக்குப் பதில் சொல்லும் நிலையிலா அவள் இருக்கிறாள்? அவன் அணைப்பின் சூட்டில் அவளது மௌனம் இன்னும் ஆழமானது. இதழ்களைத் திறந்து பேசும் சக்தி அவளிடம் இல்லை. அவனுக்கும் இப்போது வார்த்தைகள் தேவைப்படவில்லை; அவளது மௌனமே அவனுக்குப் பெரும் கவிதையாகத் தெரிந்தது.

அவன் தன் முகத்தை அவளது தோள் பட்டையில் சாய்த்து, இதழ்களால் கழுத்தோரம் மெல்ல வருடினான். அவனது இதழ்கள் அவளைத் தீண்டிச் செல்லச் செல்ல, வேதிகா தன் தேகமெங்கும் மின்சார அதிர்வை உணர்ந்தாள். அவனுக்கு வளைந்து கொடுக்கச் சொல்லிக் கட்டளையிடும் தன் காதலுக்கும், அதைத் தடுத்து நிறுத்தும் நாணத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அவளால் கையாள முடியவில்லை. அவன் கரங்களுக்குள் ஓர் இனிய அவஸ்தையுடன் அவள் நெளியத் தொடங்கினாள்.

அவளின் அந்த மென்மையும் நாணமும் அவனுக்குப் போதையேற்றியது. தன் அணைப்பில் பூங்கொடி போல அவள் அசைந்தாடியதில், அருள்மித்ரனின் தேகம் மொத்தமும் தீப்பற்றிக் கொண்டது. அவள் எதிர்பாராத நேரத்தில் அவளைத் தன்புறம் திருப்பியவன், அந்த வேகத்திலேயே அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவனது திடீர் நெருக்கத்தில் வேதிகாவின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது. அந்தத் துடிப்பைத் தன் நெஞ்சில் உணர்ந்து சிலிர்த்துப் போனவன், “அழகி…” என்றான் கொஞ்சும் குரலில்.

அவனது கரமொன்று அவளின் மென் இடையை அழுத்திப் பற்றியிருக்க, அவன் குரல் உணர்த்தும் செய்தி புரிந்தவள், அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்து தன் நாணத்தை மறைத்துக் கொண்டாள்.

அவனது காதலின் தீவிரம் அவளது இதழ்களிலும், முகத்திலும், கழுத்தடியிலும் மென் முத்தங்களாகப் பதிந்தபோது, வேதிகாவால் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடினாள். அவன் அவளைத் தாங்கிப் பிடித்தபடி, அவளது இதழ்களில் மென்முத்தம் பதித்து புன்னகைக்க, அவளுக்கு அவனைத் தடுக்கவும் தெரியவில்லை, அவனது காதலுக்கு இணங்கவும் புரியவில்லை.

அவஸ்தையோடு அவனை ஏறிட்டுப் பார்த்தவளை, அவன் சட்டென்று தன் கைகளில் அள்ளிக் கொண்டான். திகைப்பில் அவளின் விழிகள் விரிந்து போக, அவன் முகத்திலோ வாடாத சிரிப்பு. ‘என்னவோ செய்து கொள்’ என்று தன்னை முழுதாக அவனிடம் ஒப்புக்கொடுத்து அவள் கண்களை மூடிக்கொண்டாள். இதழ்களிலோ நாணப் புன்னகை.

எதிர்பாரா நேரத்தில் சுழன்றடிக்கும் கோடை மழையென, அவளை அவன் மொத்தமாகக் கொள்ளையிடத் தொடங்கினான். போதும் என்று நிறுத்தும் நிலையில் அவளும் இல்லை; போதும் என்று திருப்தி கொள்ளும் நிலையில் அவனும் இல்லை. அந்த இரவின் நிசப்தத்தில், அவர்களின் இதயத் துடிப்புகள் மட்டும் ஒரு புதுக் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தன.

காதல் மழையை நேசமனம் எங்கனம் மறுக்கக்கூடும்?

இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரின் காதல் மழையில் சுகமாக நனைந்து, தங்களின் பழைய வாழ்க்கைப் பக்கங்களின் கசப்புகளையெல்லாம் குப்பையென ஒதுக்கித் தள்ளினார்கள்.