தன்வி தான் பிரச்சனை என்றால் அவளிடம் பேசவும் எல்லாம் தயார் தான். ஆனால் கூடாது, அவளிடம் யாரும் பேசவே கூடாது என்று நிற்கும் தேசிகனை தான் அவர்களுக்கு சமாளிக்க முடியாமல் போனது.

தன்வி அங்கு எப்போதும் போல் இருந்தாள். பாட்டி அழைத்து பேசினால் நன்றாக பேசினாள்.

ஆனால் தேசிகன் விஷயத்தில் அவளின் நிலைப்பாடு என்ன என்பது இவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

அதன் வெளிப்பாடு தேசிகனின் மாமா அவரின் மகளின் திருமணத்தை பற்றி யோசிக்க மறுத்தார்.

சாவித்திரியிடம் வந்த உறவினர் ஒருவர், “அதான் உங்க மகனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்லை. உங்க அண்ணன் பொண்ணை எங்களுக்கு கொடுக்கலாம் தானே?” என்று கேட்டார்.

சாவித்திரிக்கும் இந்த உறுத்தல் இருக்க, அதை அப்படியே பிடித்து கொண்டவர் தன் அண்ணனிடம் பேசினார்.

“சாவித்திரி நீ சொல்றது சரி. ஆனா தேசிகன் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு தான் என் பொண்ணை வெளியே கொடுக்கிறது பத்தி யோசிப்பேன்” என்றார் அண்ணன் உறுதியாக.

“அண்ணா என்ன பேசுற நீ. அவனுக்கு பார்த்து வர நல்ல வரனை எல்லாம் விட்டுட்டு இருப்பியா?” என்று பேச,

“இங்க பாரும்மா. நம்ம குடும்பத்துக்காக தான் தேசிகன் சில விஷயங்களை செஞ்சான். ஆனா இடையில் என்னென்னமோ நடந்திடுச்சு. அதை சரி பண்ண பார்க்கணும். இல்லைன்னா நாம நம்ம குடும்பத்துக்குள்ளே சரி பண்ணிக்கணும். அதை விட்டு எல்லாத்தையும் அவன் தலையிலே போட்டுட்டு நான் போயிட முடியாது இல்லை”

“அண்ணா. அவன் நிச்சயம் சரி பண்ணுவான். அதுவரைக்கும்”

“மருமகன் சரிபண்ணிட்டு வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” என்று முடித்துவிட, தேசிகனை அழைத்துவிட்டார் சாவித்திரி.

தேசிகன் உடனே மாமாவிடம் பேச, அவரோ அதையே தான் திரும்ப சொன்னார். தேசிகனுக்கு புரிந்து போனது ஒன்று தான் உடனே மாமா மகளின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பது தான்.

“மாமா. எனக்கு நாள் ஆகும். சொல்ல முடியாது வருஷம் கூட போகும். அதுவரைக்கும் நம்ம பொண்ணை வைச்சிட்டிருக்கணுமா?  அவளுக்கும், இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு”

“உனக்கும், அவளுக்கும் சம்மந்தமா மாமா நான் இருக்கேன் இல்லை மருமகனே”

“மாமா. என்ன பேச்சு இது? நீங்க அவ கல்யாணத்துக்கு பார்க்கிறீங்க அவ்வளவு தான்”

“சரி நாங்க ஒரு வார்த்தை உன் பொண்டாட்டிகிட்ட பேசிக்கிறோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு”

“மாமா. தன்விக்கிட்ட நான் பேசிக்கிறேன். நான் மட்டும் தான் பேசுவேன்”

“அதெப்படி மருமகனே”

“அத்தை நான் உங்களுக்கு வேணும்ன்னு  நினைச்சா தன்வி விஷயத்துல நீங்க யாரும் தலையிடாதீங்க”

இதென்ன? குடும்பத்தினருக்கு ஏனோ அந்த நொடி சந்தேகம் வந்தது. தன்வி அவளின் முடிவில் உறுதியாக நின்றுவிட்டாளா என்ன? அதனால தான் தேசிகன் இப்படி இருக்கானா?

கனத்த மௌனத்திற்கு பிறகு, மாமா ஓர் முடிவோடு, “சரி. அப்போ நான் உங்ககிட்ட கேட்க வேண்டியதை கேட்டுடுறேன்”

“முடியாது மாமா” தேசிகன் கேட்காமலே மறுத்துவிட்டான்.

“நான் இன்னும் கேட்கலை மருமகனே”

“கேட்டு என்னை நீங்க சங்கடப்படுத்திடாதீங்க மாமா”

“மாப்பிள்ளை”

“மாமா” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டான் தேசிகன்.

“எனக்கு அந்த தகுதி இல்லைன்னு நினைச்சு விட்டுடுங்க. கேட்டு காலத்துக்கும் என்னை உங்க முகத்துல முழிக்க முடியாதளவு பண்ணிபுடாதீங்க”

“என்னய்யா இது” மாமா அவனை அணைத்து கொள்ள, வீட்டு பெண்கள் கலங்கிவிட்டனர்.

“இப்போ என்ன தேசிகா. விடு. பார்த்துக்கலாம்” என்று எல்லாம் அவனை தாங்கி கொண்டனர்.

தேசிகனுக்கு தன் குடும்பத்தின் மேல் இன்னும் மரியாதையும், பாசமும் கூடிப்போனது.

அந்த வாரமே மாமா மகளுக்கு வரன் பார்த்துவிட்டான். அவனை விட பலபடி மேல் தான் கொண்டுவந்தான்.

மாமா, அத்தைக்கு தேசிகனை விட யாரும் மேல் கிடையாது தான். ஆனால் அவன் கொண்டு வந்ததாலே அந்த வரனை முழு மனதாக ஏற்று கொண்டனர்.

தேசிகன் முன் நின்று எல்லாம் எடுத்து செய்தான். மாமா மகளிடமும் அவளின் விருப்பத்தை பலமுறை கேட்டு தெரிந்து கொண்டான்.

அடுத்த மாதத்திலே முகூர்த்தமும் வைத்துவிட, சதாசிவம் குடும்பத்திற்கு அழைப்பிதழ் வந்தது.

தேசிகனின் மாமா தானே வந்து, எல்லோரையும் முறையாக அழைத்தார். தன்வி அன்று வீட்டில் இருக்க, நல்லபடியே அவரிடம் பேசினாள்.

சதாசிவம் மட்டும் ஏதோ யோசனையுடனே இருந்தார். எப்படியும் அவர் நன்றாக பேசுவதில்லை என்பதால் அவரை கண்டுகொள்ளவில்லை.

“கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே எல்லாம் வந்திடணும்”

“உன்னை எதிர்பார்ப்பேன்” என்று தேசிகனின் அத்தை, தன்வியிடம் சொல்ல, தலையசைத்தாள் பெண்.

அவர்கள் கிளம்பவும் சதாசிவம், “இவங்க பொண்ணை தானே அந்த தேசிகனுக்கு  கொடுக்கிறதா சொல்லிட்டிருந்தாங்க” என்று கேட்டார்.

“ஆமா. ஆனா அதுக்கு இனி அவசியம் இல்லைன்னு வெளியே கொடுக்கிறாங்க போல” என்று ராஜேந்திரன் சொல்ல, சதாசிவம் மகளை தான் கோவமாக பார்த்தார்.

தன்விக்குமே பெரியப்பா சொன்னதில் அதிர்ச்சி தான். இதில் சுஜாதா வேறு போனில், “என்ன உங்க ரூட் கிளியர் ஆகிடுச்சு போல” என்று கேட்டாள்.

“என்ன சொல்ற நீ?” என்று தன்வி கேட்க,

“தெரியாத மாதிரி கேட்காத. சொந்தம் எங்களுக்கு கூட இன்னும் பத்திரிக்கை வரலை. ஆனா உங்களுக்கு வந்திடுச்சு”

“சுஜாதா விஷயத்துக்கு வா”

“அதான் அவங்க மாமா பொண்ணை வெளியே கொடுத்துட்டா எல்லாம் முடிஞ்சது இல்லை. இனி நீ மருமகளா அங்க வலது கால் எடுத்து வைச்சு”

“ஸ்டாபிட் சுஜாதா. என்ன பேசிட்டிருக்க நீ?”

“எதுக்கு இப்போ இவ்வளவு கோவம் உனக்கு? அந்த பெண்ணுக்காக தானே நீ இன்னும் உங்க வீட்லே இருக்க?”

“அப்படின்னு நான் சொன்னேனா உன்கிட்ட?”

“நீ தான் என்கிட்ட சரியா பேசுறதே இல்லையே. ஊர்ல, தெரிஞ்சவங்க எல்லாம் அதை தான் சொல்றாங்க”

‘காட். இது வேறயா?’

“நான் கூப்பிடுறேன் இரு” என்று தன்வி வைத்துவிட, சதாசிவம் அந்த வாரமே மகளுக்கான மாப்பிள்ளையுடன் வந்தார்.

“தம்பி என்ன பண்ற நீ?” என்று ராஜேந்திரன் கோவப்பட,

“ண்ணா. தன்வி தான் அவனை வேண்டாம் சொல்லிட்டா இல்லை. அப்புறம் என்ன உங்களுக்கு பிரச்சனை?”

“அதுக்காக. நாம தான் நம்ம பொண்ணுக்கு பேசி புரிய வைக்கணும்”

“அப்படி எந்த அவசியமும் இல்லைண்ணா. அவ தான் முன்னாடியே தெளிவா சொல்லிட்டா இல்லை. நீங்க மாப்பிள்ளை பத்தி விசாரிங்க. எதாவது குறை இருந்தா சொல்லுங்க. அதைத்தவிர வேறெந்த பேச்சும் நமக்குள்ள வேண்டாம்” என்றார் சதாசிவம் முடிவாக.

தன்வி நண்பர்களுடன் இரண்டு நாள் மலையேற்றம் முடிந்து வீட்டுக்கு வர, ஹாலில் மாப்பிள்ளை அவளுக்காக காத்திருந்தான்.

சதாசிவம் மகளுக்கு சம்மதம் என்று சொல்லியிருக்க, “ஹலோ” என்று மிகவும் இயல்பாக கை குலுக்கி பேசினான் அவன்.

தன்விக்கு இப்படி என்று விஷயம் சொல்லப்பட, “ஏன்ப்பா இவ்வளவு அவசரம்?”

“அவசரம் தான் தன்வி. அப்பா உன் நல்லதுக்கு தான் சொல்வேன்” என்றார் சதாசிவம்.

தன்வி நன்றாக தூங்க என்று வந்தவள், சோர்வை மறைக்க முடியாமல் அவர்கள் முன் அமர்ந்திருந்தாள்.

“எங்களுக்கு முழு சம்மதம், நாம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசலாம்” என்று மாப்பிள்ளையின் தந்தை சொல்ல, ராஜேந்திரன் பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருந்தார்.

“அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம்?” என்று மாப்பிள்ளையின் அம்மா ஆரம்பித்தார்.

“என்ன சொல்லுங்க” என்று சதாசிவம் கேட்க.

“அதுங்க. நீங்க எங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டீங்க தான். ஆனா நாளைபின்ன அந்த பையன் வீட்ல வந்து ஏதும் பிரச்சனை பண்ண கூடாது பாருங்க”

“அதெல்லாம் வர மாட்டாங்க. என் பொறுப்பு. நான் பார்த்துகிறேன்” என்று சதாசிவம் படபடக்க,

“நீங்க பார்த்துப்பிங்க தெரியும். இருந்தாலும் டிவோர்ஸ் வாங்கிட்டு”

“என்ன பேசுறீங்க நீங்க?” என்று சதாசிவம் கோவம் கொண்டார். “அங்க நடந்தது கல்யாணமே கிடையாதுன்னு சொல்றேன். நீங்க டிவோர்ஸ் அது இதுன்னு பேசுறீங்க”

“நீங்க கோவப்படுறதுக்காக நாங்க சொல்லலை. எங்க பையன் வாழ்க்கையும் நாங்க பார்க்கணும் இல்லை”

“அதுக்கு நான் கியாரண்டி சொல்லிட்டேன் இல்லை”

“இங்க பாருங்க சதாசிவம். நாம சம்மந்தி ஆகணும்ன்னு தான் பொறுமையா பேசிட்டு இருக்கோம். நீங்க கோபப்படுறதுல பிரயோஜனம் இல்லை. ஒன்னு டிவோர்ஸ் வாங்குங்க இல்லை, உங்க பொண்ணுக்கும், அந்த பையனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு அவன்கிட்ட எழுதி வாங்குங்க” என்றார்கள்.

“இதென்ன புதுசா கேட்கிறீங்க?” சதாசிவம் கோபத்துடன் அதிர்ந்து போனார்.

இவர் கேட்டால் தேசிகன் கையெழுத்து போட்டு கொடுத்திடுவானா என்ன? அவன் மேல் இவர் போட்ட கேஸ் கண் முன் வந்து சென்றது.

“இதாண்டா ட்விஸ்ட்” என்று மனோகர் மென் குரலில் நக்கலடிக்க, தன்விக்கு இதெல்லாம் தேவையா என்றிருந்தது.