மலர் சூடும் பெண்மை 9

எதற்காக நான் இங்கு வந்தேன்? பாட்டியை பார்க்க தானே? என் வேலையை முடித்து நான் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.

தன்வி முடிவெடுத்து கொண்டவள், “பாட்டி எப்போ எழுந்திருப்பாங்க?” என்று தேசிகனிடம் கேட்டாள்.

“தூங்க மெடிசின் கொடுத்திருக்காங்க. முழிக்கிற நேரம் தான்” என்று கடிகாரத்தில் நேரம் பார்த்து சொன்னவன், “உட்காரு வா” என்று அவனுக்கருகில் இருந்த இருக்கையை காட்டினான்.

தன்வி பாட்டிக்கு மறுபுறம் சென்று அமர்ந்தவள், மொபைலில் கவனம் வைத்தாள். தேசிகன் அவளையே பார்ப்பது தெரிந்தும், அவனை பார்க்கவோ, பேசவோ அவள் தயாரில்லை.

ஏற்கனவே செய்து வைத்தது எல்லாம் போதும். சுஜாதவிற்கு பார்த்து தேசிகன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டேன். அதற்கான என் பொறுமை இவர்களுக்கான நம்பிக்கையை கொடுத்துவிட்டதா? என்னோட தவறு தானே இது!

“தன்வி”

“ஹேய்” தேசிகன் அவளை இரண்டொரு முறை அழைத்தான். பெண்ணிடம் பதில் இல்லாமல் போக, தேசிகன் புருவம் சுருக்கினான்.

“என்ன கோவம் உனக்கிப்போ?” என்று அதட்டலாக கேள்வி கேட்க,

‘நீ யார் நான் கோவப்பட?’ என்ற பார்வையை பார்த்தாள் தன்வி.

தேசிகனுக்கு அவள் கேள்வி சரியான விதத்தில் சென்று சேர்ந்ததுடன், ‘என்கிட்ட நெருங்காத’ என்ற அவளின் பார்வையும் தேசிகனை நொடி திகைக்கவே வைத்துவிட்டது.

அடுத்த நொடி சுர்ரென ஓர் கோவம் உச்சம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை பரவ, “என்ன, என்ன ட்ரை பண்ற நீ?” என்று அவளிடம் வெடித்தான்.

“ஷ்ஷ்” என்று பாட்டியின் புறம் கண் காட்டியவள், “நான் உங்க கெஸ்ட். மறந்துடாதீங்க தேசிகன்” என்றாள் மெல்லிய புன்னகையுடன் நிதானமாகவே.

பெண்ணையே வெறித்து பார்த்தான் தேசிகன். இந்த புன்னகை, தன்னை எட்டி நிறுத்தும் அவளின் புன்னகையை இந்த ஜென்மத்தில் என்னால் மறக்க முடியுமா?

‘நீ வேண்டாம்’ என்று தன்வி வார்த்தையால் சொன்ன நேரம் கூட இவ்வளவு வெறுமை அவனுக்குள் எழவில்லை.

என்ன செய்துவிட்டேன் அவளை? உரிமையாக நடந்து கொண்டேன். பிடிக்கலையா? என்னையே பிடிக்கலையா? தேசிகன் உடல் அப்படியே விறைத்து கொண்டது.

இதுவரையில் இருந்த தன்வி இவள் இல்லை.

யாரோ ஒரு பெண் என் முன் இருக்கிறாளா என்ன? சில நிமிடங்களில் இவ்வளவு விலகல் காட்ட முடியுமா?

அறைக்குள்ளே நடக்க செய்தவன், கதவை திறந்து வெளியேற கூட நினைத்தான். ஆனால் செய்ய முடியாமல் தன்னை தானே வெறுத்து கொண்டான்.

இருவருக்குமிடையே அதிகரிக்கும் கனத்தை தடுப்பது போல், பாட்டி கண் விழித்தார்.

தேசிகன் அவர் கைப்பற்றி கொள்ள, தன்வியும் மறுபக்கம் அதையே செய்ய நினைத்து, பின் வாங்கிவிட்டாள்.

தேசிகன் கவனித்து, உடல் இறுகி போனான். அவனின் மார்பு, தோள்கள் எல்லாம் விடைத்து கொண்டது.

“பாட்டி தண்ணீர் குடிக்கிறீங்களா?” என்று கேட்டு அவரின் பார்வை தன்வி பக்கம் திரும்புவதில் தண்ணீரை அவளிடம் நீட்டினான்.

தன்வி மறுக்காமல் வாங்கி அவருக்கு குடிக்க கொடுத்தவள், சிந்திய நீரை துடைத்தபடி, “எப்படி இருக்கீங்க பாட்டி?” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கேன்மா? நீ எப்போ வந்த?” என்று மலர்ந்த புன்னகையுடன் பேத்தியின் கையை ஆசையாக பிடித்து கொண்டார் பாட்டி.

“கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் பாட்டி” என்று பெண் பதிலளித்தவள் மேலும் அவரிடம் பேசி கொண்டிருக்க, தேசிகன் அந்த நொடி உணர்ந்தான்.

தன்வி இணக்கமாக, உரிமையாக, பாசத்துடன் பேசினால் எப்படி பேசுவாள் என்பதை அந்த நொடிகளில் தான் தேசிகன் முழுமையாக உணர்ந்தான்.

இதுவரை ஏதோ ஓர் மாய உலகத்தில், இல்லாத வேரை பிடித்து தொங்கி கொண்டிருந்திருக்கிறேன்.

ஏனோ பெண்ணின் மேல் கோவம் அதிகரிக்கவில்லை. இருந்த கோவமும் மறைந்து, அங்கு ஓர் வெற்றிடத்தை உணர்ந்தான் அந்த ஆண்மகன்.

“ராசா. தம்பி”

“தேசிகன்”

“தேசிகன்” என்று அவன் கையில் தட்டிய தன்வியின் குரலில் அவளையே இமைக்காமல் பார்த்தான்.

“பாட்டி உங்களை தான் கூப்பிடுறாங்க. பாருங்க. தேசிகன்” என்று சத்தத்தை உயர்த்தி அழைத்த பின்னே, பாட்டியின் பக்கம் திரும்பினான் பேரன்.

“என்னய்யா ஆச்சு?” என்று பாட்டி கேட்க,

“க்கும். வேற ஏதோ யோசனை பாட்டி. அத்தையை கூப்பிடவா? சாப்பிடுறீங்களா?” என்று கேட்டான்.

“ஆமா” என்று பாட்டி சொல்ல, அவரை அழைத்துவிட்டு தன்வியின் புறம் திரும்பாமலே அறையை விட்டு வெளியேறினான் தேசிகன். அதன் பின் பாட்டியுடன் சிறிது நேரம் இருந்து தன்வி கிளம்ப தயாரானாள்.

பெரியப்பாவிற்கு போன் செய்து பேசியவள், “அவருக்கு வேலை இருக்காம் பாட்டி. நான் கிளம்புறேன்” என்றாள்.

“இருந்துட்டு போலாம் இல்லை கண்ணு” என்று பாட்டி கேட்க,

“வேலை இருக்கு பாட்டி. நான் இன்னொரு நாள் வரேன்” என்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டாள்.

தேசிகனின் அத்தை அவளுக்கு தாம்பூலம் கொடுக்க, பட்டு புடவை, நகை தவிர்த்து மற்றதை எடுத்து கொண்டாள் பெண்.

“என்ன பண்ற நீ? அதையும் எடு” என்று அவர் அதட்ட,

“இதுவே போதும் ஆன்ட்டி. நான் கிளம்புறேன்” என்று எல்லோரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினாள்.

தேசிகன் அவனின் அறைக்குள்ளே இருக்க, “என்ன மருமகனே இப்படி பண்ற? அவ்வளவு சொல்றோம். உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போய் ஏர்போர்ட்ல விடு, கிளம்புன்னு. ரூமை விட்டு வெளியே வராம போயிட்ட. பாரு இப்போ அவ கிளம்பிட்டா” என்று மாமாவும், அத்தையும் பேச, தேசிகன் பதிலே அளிக்கவில்லை.

“என்னாச்சு உனக்கு?” என்று மேலும் கேட்க, அவனிடம் வார்த்தைக்கு பஞ்சம் போல் அமர்ந்திருந்தான்.

சாவித்திரி மகனின் முகத்தை ஆராய்ந்து, அம்மாவாக வேதனை கொண்டார்.

பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவில்லை என்றால், எல்லாவற்றையும் தான் பார்த்தாக வேண்டும்!

தேசிகன் வீட்டிற்கு சென்று வந்தது தெரிந்து சதாசிவம் தான் மகள் மேல் கோவமாக சுற்றி கொண்டிருந்தார்.

“அந்த பாட்டிக்கு உடம்பு முடியலைன்னா நீ போய் பார்க்கணும்ன்னு என்ன இருக்கு தன்வி? அவங்களுக்கு நீ யாருமே கிடையாதுங்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று தந்தை கொதிக்க,

“என்னங்க இது, வயசானவங்க. பாசத்துல போய் பார்த்திருக்கா, அதுக்கு போய்” என்று சுதா மகளுக்கு பேச வர,

“உனக்கு தெரியாது சுதா. எல்லாம் இப்படி தான் ஆரம்பிக்கும். நாம தான் உஷாரா தள்ளியே இருக்கணும்” என்றார் சதாசிவம்.

“என்ன ஆரம்பிக்கும்? உஷாரா இருக்க அவங்க என்ன பகையாளியா? என்ன பேசுற நீ?” என்றார் ராஜேந்திரன்.

“அண்ணா அவங்க நம்ம பகையாளின்னு நான் சொல்லலை. ஆனா அவங்க நம்ம சொந்தமும் இல்லைன்னு தான் சொல்றேன்”

“சொந்தமா இல்லையான்னு அப்பறம் பார்த்துக்கலாம். இப்போ எதுக்கு அந்த ஆராய்ச்சி எல்லாம் உனக்கு?”

“ண்ணா. தன்வி அவங்களோட எந்த விதத்திலும் கான்டெக்ட்ல இருக்கிறது எனக்கு பிடிக்கலை. அது நல்லதும் இல்லை. வீட்டுக்கு போறது எல்லாம் அதிகம். ஏன் போகணும்?”

“டேய் தம்பி. நீ”

“இல்லை பெரியப்பா. அப்பா சொல்றது சரிதான்” என்றாள் தன்வி.

வீட்டினர் எல்லாம் அதிர்ச்சியாக அவளை பார்க்க, சதாசிவம் மகளை சந்தேகமாக பார்த்தார்.

முன்பென்றால் மகிழ்ந்திருப்பார். ஆனால் என்னமோ இப்போது அப்படி இல்லை. தேசிகனுக்கும் எனக்கும் எதுவும் இல்லை சொல்லிட்டு, திரும்ப அவன் வீட்டுக்கு ஏன் போகணும்? தந்தைக்கு மகளின் செயலில் நம்பிக்கை தொலைந்து போனது.

அது அவரின் பார்வையிலும் வெளிப்பட்டுவிட, தன்விக்கு அவளின் தவறு புரியத்தான் செய்தது.

சதாசிவத்திற்கே இப்படியான எண்ணம் என்றால், தேசிகன் மேல் எப்படி குற்றம் சுமத்த முடியும்?

‘முதலில் இருந்தே எல்லாம் என்கிட்ட இருந்து தான் ஆரம்பம் ஆகுது’

சுஜாதாவிற்கு பார்த்து, எங்கள் இருவர் வாழ்க்கையில் விளையாடியிருக்கேன்.

எதிர்ல இருக்கிறவங்களை விட்டு, நான் எப்படி இருக்கணும்ன்னு நான் தானே கவனமா இருந்திருக்கணும்!

அதன் பின்னான நாட்கள் எல்லோருக்கும் எப்பொழுதும் போல் தான் சென்றது. தன்வி தொழிலில் கூடுதல் கவனம் எடுத்தாள் என்றால், தேசிகன் தொழிலில் மீதான தன் கவனத்தை தொலைத்தான்.

வீட்டில் இருப்பதை குறைத்து கொண்டு, அதிகம் வெளியில் தங்க ஆரம்பித்தான். பாட்டியின் உடல் நிலை ஓரளவு சீராக இருக்க, தொழிலும் நல்லபடியே சென்று கொண்டிருந்தது.

தேசிகன் தான் பார்த்தாக வேண்டும் என்பதை தவிர மற்றது எல்லாம் அவரவர் பொறுப்பில் விட்டுவிட்டான்.

“தொழில் நம்ம எல்லோரோடதும் தான். நீ இப்படி இருக்க கூடாது” என்று சாவித்திரி மகனை அழைத்து கண்டிக்க செய்தார்.

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. பார்த்துகிறேன்” என்பதோடு மகன் முடித்து கொள்ள, சாவித்திரிக்கு கவலை அதிகமானது.

வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களும் அவனின் மாற்றத்தை உணராமல் இல்லை. ஆனால் விஷயம் என்னவென்று முழுதாக தெரியாமல், என்ன செய்ய முடியும்?