விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து, தன்வி மிகுந்த குழப்பத்துடனே சுற்றி கொண்டிருந்தாள்.
தேசிகன் அலுவலகத்தில் இருந்து இன்று அக்ரீமெண்ட் பற்றி முடிவெடுக்க ஆட்கள் வருகிறார்கள் என்று தகவல் வந்தது.
ராஜேந்திரன் தலையீட்டால், நிச்சயம் கையெழுத்தாகி விடும் என்று தன்வி எல்லாம் தயார் செய்ய சொல்லியிருந்தாள்.
ஆனால் பெரியப்பா போன் செய்து, “அவங்க வரலை தன்வி” என்றார்.
“ஏன் பெரியப்பா? பிஸ்னஸ்ல அவங்க இப்படி பண்றதை எல்லாம் நாம ஏத்துக்க கூடாது” என்று கடுப்பாகிவிட்டாள்.
“தன்வி. நீ இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு, முதல்ல எதிர்ல இருக்கிறவங்ககிட்ட இருந்து முழு விஷயத்தையும் வாங்க கத்துக்கோ. அப்புறம் குதிக்கலாம்” என்றார் கண்டிப்புடன்.
“சாரி பெரியப்பா. ஸ்டாக் இல்லை. அந்த டென்சன்ல”
“காரணம் சொல்றது அதை விட ஓர்ஸ்ட்” என்றுவிட்ட மனிதர்,
“அவங்க பாட்டிக்கு திடீர்ன்னு உடம்பு முடியலை போல. சோ இதை தள்ளி வைக்க என்கிட்ட கேட்டாங்க. நான் தான் ஓகே சொன்னேன்”
“பாட்டிக்கு என்ன ஆச்சு பெரியப்பா? இப்போ அவங்க ஓகேவா?” தன்வி கொஞ்சம் படபடப்புடனே கேட்டாள்.
“வயசாகிடுச்சு தன்வி. இதெல்லாம் வரத்தான் செய்யும். பார்த்துட்டு இருக்காங்க”
“ஓஹ்”
“எனக்கு நாளைக்கு அந்த பக்கம் போற வேலை இருக்கு. நான் அப்படியே இன்ஸ்பெக்ட் பண்ணிட்டு, அக்ரீமெண்ட் சைன் பண்ணிட்டு வந்துடுறேன். நீ பேப்பர்ஸ் எல்லாம் என் PAக்கு அனுப்பிடு” என்று வைத்தார் பெரியப்பா.
பாட்டிக்கு என்ன ஆனதோ என்ற கவலை கொண்டாள் தன்வி.
தேசிகன் தவறு செய்த போதும், அத்தனை பேரின் முன்பே, ஆம் அவன் செய்தது தவறு என்ற சொன்னவர்.
எத்தனை முறை அவளிடம் பேசியிருந்தாலும், ஒரு முறை கூட தேசிகன் பற்றி, அவனோட இணைவது பற்றி அவர் பேசியது இல்லை.
தன்வியின் நலன், அவள் என்ன செய்கிறாள், வெளிநாட்டில் இருக்கும் பெண் என்ற கரிசனை, அன்பு அதிகம் இருக்கும்.
இப்போது அவருக்கு உடல் நலன் சரியில்லை என்று கேள்விப்பட்டதில் வருத்தம். ‘அவங்க பேசலைன்னா என்ன, நான் பேசியிருக்கணும். நம்பிக்கை கொடுக்கிற மாதிரி இருக்கும், அது இதுன்னு யோசிச்சு விட்டுட்டேன்’ என்று தன்னை தானே கடிந்து கொண்டவளை திரும்ப அழைத்தார் ராஜேந்திரன்.
“நீயும் வரியா தன்வி. எனக்கு உதவியா இருக்கும்” என்றழைத்தார்.
“நானா?” தன்விக்கு யோசனை.
திரும்ப அந்த ஊர்பக்கம் செல்ல வேண்டுமா? அந்த கடைசி நாள் அனுபவம் இன்னமும் நெஞ்சில் கசப்பை உணர வைக்கிறது.
“நான் யோசிச்சிட்டு சொல்றேன்” என்றாள் தன்வி.
“சரி நான் பிளைட் டிக்கெட் சேர்த்து போட சொல்றேன். வேண்டாம்ன்னா கேன்சல் பண்ணிக்கலாம்” என்று முடித்துகொள்ள, சதாசிவம் தான் எகிற ஆரம்பித்தார்.
“தன்வி ஏன் அங்க வரணும்? அதெல்லாம் வேண்டாம். போறதுன்னா நீங்க போய்ட்டு வாங்க. அக்ரீமெண்ட் சைன் பண்ண மொத்த குடும்பமுமா போகணும்” என்று பேச,
ராஜேந்திரன், “எப்போ இருந்து என் தொழில்ல நீ தலையிட ஆரம்பிச்ச சதாசிவம்?” என்று கேட்டார்.
“ண்ணா. உங்க தொழில்ல நானா? நீங்க அந்த காட்டு மிராண்டி கூட்டத்தோட பிஸ்னஸ் பண்ண போறேன்னு சொன்னப்போ கூட நான் எதுவும் சொல்லலை?”
“சொன்னா நான் கேட்க மாட்டேன்னு உனக்கு தெரியும்” என்றார் அண்ணனாக.
“ஆஹ்ன். அது இருக்கட்டும். இப்போ தன்வி எதுக்கு அங்கன்னு தான்”
“அவ தான் இப்போ தொழிலை பார்க்கிறா, அவ ஏன் வரக்கூடாது? சொல்லு”
“நீங்களும் தானே பார்க்கிறீங்க? நீங்க போனா போதும்?”
“எனக்கு கட்சி வேலை இருக்கு. இன்ஸ்பெக்ட் பண்றதுக்கு தன்வி போனா எனக்கு பெட்டர்”
“அதுக்கு தான்னா நம்ம GM கூட்டிட்டு போங்க”
“நான் வேறென்ன பண்ணனும்ன்னு நீயே சொல்லிடு சதாசிவம், அதையே நான் பண்ணிக்கிறேன்” என்று கோவமாக சொன்னார் ராஜேந்திரன்.
“ண்ணா”
“நீ இன்னும் அந்தளவுக்கு எல்லாம் வளர்ந்துடலை தம்பி. என்னைக்கு இருந்தாலும் நான் தான் உனக்கு அண்ணன். மறந்திடாத”
“தன்வி அங்க வேண்டாம்ன்னு தான்”
“ஏன் அவ உன் பொண்ணு, முடிவெடுக்கிற உரிமை உனக்கு மட்டுமே இருக்குன்னா”
“ஐயோ ண்ணா. அப்படி எல்லாம் இல்லை”
“பின்ன வேறெப்படி? நீ இந்தளவு என் தொழிலுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் நானும் இனி சும்மா இருக்க மாட்டேன். முதல்ல நாங்க தேனி போய்ட்டு வரோம். அப்புறம் இருக்கு உனக்கு” என்றவர் அதோடு விடாமல்,
தன்வியை அழைத்து, “நாளைக்கு நீ என்னோட கிளம்பிதான் ஆகணும்” என்று ஆணையிட்டு சென்றார்.
மனைவி கிண்டல் செய்கிறாளோ என்று யோசிக்க கூட முடியாதபடி அவருக்கு மகளின் டென்சன்.
‘பேசாம நானும் அவங்களோட போகவா?’ அவ்வளவு தான் ராஜேந்திரன் சாமியாடிவிடுவார். சதாசிவம் மெல்லவும் முடியாமல், முழங்கவும் முடியாமல் சுற்ற, தன்வி மறுநாள் பெரியப்பாவுடன் கிளம்பி சென்றாள்.
“உனக்கு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி இருக்குமா?” என்று ராஜேந்திரன் சொல்ல,
“நீங்க பெரியப்பா?” என்றாள் தன்வி புரியாமல். அவருக்கான அரசாங்க விடுதியில் தங்குவாரா?
“நான் தேசிகன் வீட்டுக்கு போறேன்மா” என்றார் அவர்.
இவளுக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. என்னை ஹோட்டல்ல தனியே விட்டு இவர் போவாரா? பெரியப்பா மேல் சிறு கோவமும்.
“அது தன்விமா. அவங்க என்னை கண்டிப்பா வரணும்ன்னு கூப்பிட்டாங்க. அதான்” என்று மகளின் கோவம் புரிந்து சொல்ல,
தன்வி என்ன சொல்வாள்? இருவர் வந்தால் ஒருவரை மட்டும் தேசிகன் குடும்பத்தினர் அழைப்பதா? அப்படியென்ன கோவம் என்மேல்? ஏன் உனக்கு தெரியாதா? மனது இடித்துரைக்க, அதில் அவளுக்கு வருத்தம் இல்லை. ஆனால் தேசிகன் குடும்பத்தாரின் இந்த செயல் அவளை மரியாதை குறைவாக உணர வைத்தது உண்மை.
அன்றைக்கு கம்பெனி சார்பில் பேசிய ஆள் கூட அப்படித்தானே என்னிடம் பேசினார்?
முதல்ல அது யார்ன்னு பார்த்து இருக்கு! ஓய்வு கூட எடுக்காமல் அவர்கள் அலுவலகம் சென்றாள்.
நிச்சயம் வியப்பு தான். நன்றாக பெரிதாக செய்து கொண்டிருந்தனர். ஏதோ சில தொழில்கள் பார்க்கிறார்கள் என்று தெரியும். ஆனால் இந்தளவு எதிர்பார்க்கவில்லை.
அலுவலகத்தில் இருந்தோர் அவளை நன்றாக வரவேற்று, எல்லாம் சுற்றி காண்பித்தனர். சாப்பிட, குடிக்க என்று ஏதோ ஒன்று வந்து கொண்டே இருந்தது.
பொருட்களின் தரமும் அருமையாக இருந்ததில் பெண்ணுக்கு திருப்தி. இல்லைன்னா பெரியப்பா இவங்களோட பிஸ்னஸ் பண்ணுவாரா என்ன? மனதில் எல்லாவற்றையும் மெச்சி கொண்டாள்.
“வாங்க. வாங்க. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. மன்னிச்சுக்கோங்க” என்று தேசிகனின் மாமா வந்தார்.
உடன் அந்த இளைஞர்களும் இருக்க, தன்வியை முதலில் வரவேற்றதோடு சரி. அதன் பின் அவள் பக்கமே திரும்பவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் உடனுக்குடன் பதில் வந்தது. ஆனால் நீ யாரோ என்ற பாவம்.
மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள், இவர்களுடன் தொழில் தொடர்பே வேண்டாம் என்று முடிவெடுத்து பெரியப்பாவிற்கு அழைக்கவே போன் எடுத்துவிட்டாள்.
ஆனால் அவளுக்கு பிடித்த இனிப்பு வந்ததுடன், இவள் சாப்பிடுகிறாளா என்று அவர்கள் பாராதது போல் கவனித்து கொண்டதில், தன்வி நிதானித்தாள்.
மரியாதை குறைவு இல்லை. அவள் மேல் இருக்கும் கோவத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்கள். காட். ஆசுவாசம் அடைந்தாள் தன்வி.
யாராலும் மரியாதை இல்லாமல் நடத்துவதை ஏற்று கொள்ள முடியாதல்லவா?
இவங்களை இன்னும் கூட நான் புரிஞ்சுக்கணும் போல.
தன்வி அங்கிருந்த நாட்களில் கூட, சுஜாதா அப்பா மேல் இருந்த கோவத்தை அவரின் மகளாக அடையாளம் காணப்பட்ட, தன்வியின் மேல் இவர்கள் சிறிதும் காட்டவில்லையே!
தேசிகன் குடும்பத்தார் மீதான பிம்பம் சரிவதில் பெண்ணுக்குமே உடன்பாடில்லை என்பது தன்விக்கே அப்போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.
‘அந்தளவு இவங்களை எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கா என்ன?’ தன்வி மெலிதாக புன்னகைத்து கொண்டவள் இனிப்பை மனதார உண்டாள்.
அவர்கள் அதில் மலர்ந்து போவது, தன்வியின் குறும்பை வெளிக்கொணர வைக்க, “அன்னைக்கு என்கிட்ட போன்ல பேசினது யாருங்க?” என்று நேரடியாக தேசிகனின் மாமாவிடம் கேட்டாள்.
அவர் கொஞ்சம் அதிர்ந்து, சங்கடத்துடன் அங்கும், இங்கும் பார்த்தபடி, “நான் தான்” என்றார்.
அனுமானித்திருந்தவள், “SR குரூப்ஸ் மேல கோவமா? இல்லை தன்வி மேல மட்டுமா?” என்று கேட்க,
“தொழில்ல நாங்க கோவத்தை எல்லாம் காட்டுறதில்லைங்க” என்றார் அவர் அந்தர் பல்டி அடித்து.
“ஆஹான், அப்படியா?” என்று பெண் நக்கலாக இழுக்க,
“மாமா. நேரா சொல்லுங்க. இவங்க மேல தான் கோவம்ன்னு” என்று இளைஞர்கள் கடுகடுக்க,
“டேய்” என்று அவளுடன் இருக்கும் அலுவலக ஆட்களை கண் காட்டினார் அவர்.
தன்வி பார்வையில் அவர்கள் எல்லாம் நகர்ந்துவிட, “பாட்டி எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.
“எந்த பாட்டியை கேட்குறீங்க நீங்க?” என்று அந்த இளைஞன் தோள் குலுக்க,
“நீங்க சொல்லுங்க” என்று தேசிகன் மாமாவிடம் கேட்டாள்.
“இருக்காங்க. இப்போதான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு அனுப்பினாங்க” என்றார் அவர் எங்கோ பார்த்து.
இவர் என் முகத்தை பார்க்க மாட்டாரா என்ன? தன்வி முகம் சுருக்க,
“அவர் பொண்ணை கையில் வைச்சுக்கிட்டு, எங்க அண்ணனுக்கு யாரோ ஒரு எலிசபெத் மகா ராணியை தேடி பிடிச்ச கடுப்பு அவருக்கு” என்றான் மற்ற இளைஞன் கிண்டலாக.
தன்வி அவன் தலையில் கொட்டி விடலாமா என்று யோசித்தவள், தன்னை விட அவன் உயரமாக இருந்ததில் அதை கைவிட்டவள், “இப்போ கூட என்ன குறைஞ்சு போச்சு. பண்ண வேண்டியது தானே?” என்று கேட்டாள்.
அதில் மூவரும் அவளை அப்பட்டமாக முறைத்ததுடன், “என் அண்ணனை அத்தனை நாள் ஜெயில்ல உட்கார வைச்சுட்டு, நீங்க இதையும் பேசுவீங்க, இன்னமும் பேசுவீங்க” என்று ஒருவன் எகிற,
“இவங்க அப்படியே அவங்க அப்பா மாதிரிடா. சரியான வில்லங்கம் பிடிச்சவங்க” என்றான் மற்றவன்.
‘இது என்ன பேசினாலும் தீராது’ ஆயாசத்துடன் நினைத்து கொண்டவள், ராஜேந்திரன் போன் வர, அந்த பேச்சை அப்படியே விட்டு, “நாம அக்ரீமெண்ட் போட்டுடலாமா?” என்று கேட்டாள்.
“சரியென்று” அதற்கு பின்னான நேரம் அதில் சென்றது. இருபக்கமும் நன்றாக படித்து பார்த்து, ஆராய்ந்து கையெழுத்திட்டனர்.
அவ்வளவு தான். எல்லாம் நல்ல படியே முடிந்ததில் தன்வி அங்கிருந்து கிளம்ப தயாராக, “பாட்டியை விசாரிச்சது எல்லாம் பேருக்கு தான் இல்லை” என்றனர் அவர்கள்.
“வேறென்ன செய்யணும் நான்?” என்று தன்வி கேட்க,
“நேர்ல வந்து அவங்களை பார்க்க மாட்டிங்களா என்ன? அந்தளவு நாங்க வேண்டாதவங்களா போயிட்டோமா?
இல்லை உங்களுக்கு நாங்க எதிரிங்களா என்ன? மிஸ்டர் சதாசிவத்துக்கு மட்டும் தான் நாங்க எதிரி. உங்களுக்கு இல்லை.
அதான் எங்க அண்ணனை வேண்டாம் சொல்லிட்டீங்க இல்லை. சும்மா கூட எங்க வீட்டுக்கு வர கூடாதா?
நீங்க பெரிய பணக்கராங்கன்னா நாங்களும் ஏதோ கொஞ்சம் வசதி தான். எங்க வீட்டுக்கு வரதுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டாம் நீங்க?”
“ஹேய். ஹேய் ஹோல்டவுன். எதுக்கு இப்படி பொரியுறீங்க?” அந்த இளைஞர்களை நிறுத்தியவள்,
“நீங்க பெரியப்பாவை மட்டும் தானே உங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணீங்க?” என்று கேட்டாள்.
“அவர் மட்டும் தான் வரதா எங்ககிட்ட சொன்னார். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் நீங்க வந்தது தெரியும்” என்றனர் அவர்கள்.
‘பெரியப்பா!’
“என்ன அமைதியா இருக்கீங்க? அப்போ வரலைங்களா நீங்க?”
“வரேன்” என்றாள்.
பாட்டியை பார்க்காமல் கிளம்புவது அவளுக்கும் கவலை. தூரத்தில் இருந்தால் கூட ஓகே. அவர்கள் ஊருக்கே வந்து, நலம் விசாரிக்காமல் செல்வது எப்படி?.
ஆனால் அதற்காக அழைக்காதவர் வீட்டுக்கு செல்ல முடியுமா என்ன?
இப்போது தேசிகன் குடும்பத்தினர் காரில் அவர்களே அழைத்து செல்ல, பெண் மறுக்கவில்லை.
ஒருவேளை என்னை கூட்டிட்டு போகவே வந்தாங்களா என்ன? அக்ரீமெண்ட் சைன் பண்ண வந்து தானே ஆகணும். ச்சு. தன்வி ரொம்ப யோசிக்காத!