மலர் சூடும் பெண்மை 7

தன்வி வீட்டுக்குள் வர, சதாசிவம் கோவமாக நின்றிருந்தார். ஸ்ருதி, “சாரிடி” என்றாள் தங்கையிடம்.

“முதல்ல பொண்ணு சாப்பிடட்டும். அப்புறம் எதுவானாலும் பேசலாம் தம்பி” என்றார் அண்ணன் ராஜேந்திரன்.

சுதா மகளுக்கு உணவு எடுத்து வைக்க, “சாப்பிட்டேன்மா” என்றாள் மகள்.

“எங்க? யார்கூட?” என்று சதாசிவத்தின் கேள்விகள் பாய்ந்து வர,

“ப்பா. அவரோட, தேசிகனோட தான் சாப்பிட்டேன்” என்றாள் தன்வி.

“சாப்பாடு மட்டும் தானா? இல்லை வெளியேயும் சுத்திட்டு வந்தியா?” என்று தந்தை கேட்க,

மகளுக்கு அவர் கேள்விகள் பிடிக்கவே இல்லை. “ப்பா. என்னோட பேசணும் சொன்னார். சாப்பிட்டு, இங்க இருக்க அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போனார். பேசிட்டு வந்தோம்” என,

“வீட்டுக்கா” என்று தன் இருமகள்களையும் கடுமையாக பார்த்தார் தந்தை.

ஸ்ருதிக்கு தங்கையை கொட்ட வேண்டும் போலானது. தன்வியை விமான நிலையத்தில் இருந்து ஸ்ருதி தம்பதி தான் கூப்பிட்டு கொள்வதாக இருந்தது.

அவர்கள் தாமதமான சில நிமிடங்களில் தேசிகன் அவளை அழைத்து சென்றிருந்தான். அதிலே சதாசிவத்திற்கு கடுப்பு. இதில் மகள் அவன் வீடு எல்லாம் சென்று வந்திருக்கிறாள் என்பதில் இன்னும் வெடித்தார் மனிதர்.

“ப்பா. எல்லாத்தையும் பேசி முடிக்கத்தான் அவரோட போனேன்” தன்வி முகம் சுருக்கி சொல்ல,

“ஏன் அதை வெளியவே வைச்சு பேசினா ஆகாதா? இல்லை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேச முடியாதா உன்னால?”

“ப்பா”

“முதல்ல அவனோட நீ எதுக்கு பேசணும்? உங்களுக்குள்ள ஒன்னும் கிடையாது தன்வி. ஞாபகம் வைச்சுக்கோ”

“சதாசிவம். முதல்ல பொறுமையா இரு. எதுக்கு இவ்வளவு கோவப்படுற” என்று ராஜேந்திரன் தம்பியை அடக்க,

“ஏங்க. அவளுக்கு டையர்டா இருக்கும். ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும். அப்புறம் நிதானமா பேசலாம்” என்றார் சுதா.

“என்கூட பேச மட்டும் தான் உன் பொண்ணுக்கு டையர்டா இருக்குமா?” என்று சதாசிவம் அதற்கும் பேசினார்.

மகள் மேல் அவர் வைத்த நம்பிக்கை பொய்த்து போய் விடுமோ என்ற பயம், அவரை பொறுமையாகவே இருக்க விடவில்லை.

“ப்பா. நாம பேசலாம்” என்றாள் மகள்.

“இல்லை நீ போய் ரெஸ்ட் எடு” என்று சதாசிவம் சொல்ல,

“ப்பா”

“தன்வி என் பேச்சை மீற தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தா? அவன் சொன்னானா?”

“ப்பா. ப்ளீஸ். நான் அவர்கிட்ட இதை எல்லாம் முடிச்சுக்கலாம்ன்னு தான் சொல்லிட்டு வந்திருக்கேன். எங்களுக்குள்ள எல்லாம் ஓவர்” என்றாள் தன்வி கொஞ்சம் சத்தமாகவே.

“என்ன, நீ சொல்றது உண்மையா?” என்று சதாசிவம் மகிழ்ந்து போக, மற்றவர்களுக்கு முகம் சுருங்கி தான் போனது.

“தன்வி என்ன பேசுற நீ? இதெல்லாம் பெரியவங்க பேசி முடிவு பண்ற விஷயம்?” என்று ராஜேந்திரன் சொல்ல,

“பெரியப்பா. நீங்க பேசினாலும் முடிவு என்கிட்ட தானே கேட்பீங்க? நம்ம வீட்ல எங்க விருப்பத்துக்கு மாறா என்னைக்கு நடந்திருக்கு? அதுவும் இது என்னோட வாழ்க்கை சம்மந்தப்பட்டது”

“தன்வி சொல்றது கரெக்ட் தான்’ண்ணா. அவளோட முடிவு தானே பைனல். அப்புறமென்ன?” என்று சதாசிவம் இப்போது மகள் கட்சி தாவினார்.

தன்விக்கு அப்பாவின் செயல் ஆயாசமாகவே இருந்தது.

“உன்னோட முடிவு தான் தன்வி. ஆனா சில விஷயங்கள் பெரியவங்க மூலமா தான் போகணும். நம்ம வீட்ல நாங்க இருக்கோம். அவங்க வீட்ல அத்தனை பெரியவங்க இருக்காங்க. ஒரு வருஷமா நீ வரதுக்காகவே எல்லாம் காத்திருக்காங்க. இப்போ வந்து நீ ரொம்ப சாதாரணமா எல்லாம் முடிஞ்சிடுச்சு சொல்ற” என்று ராஜேந்திரன் அதிருப்தி கொள்ள,

“பெரியப்பா. அவர் தான் என்கிட்ட கேட்டார். என்னோட பதிலை நான் சொன்னேன்”

“அவன் கேட்டாலும். அப்புறம் பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்?”

“ண்ணா. தன்வி மேல கோவப்படுறது நியாயமே இல்லை. அவன் தானே இவளை கூட்டிட்டு போய் கேட்டான். அவளோட முடிவை அவ சொல்லிட்டா. முடிஞ்சது. நீங்க அவங்ககிட்ட பேசிடுங்க. அவ்வளவு தானே?” என்றார் சதாசிவம்.

“தம்பி. உன்னோட சந்தோஷத்தை கொஞ்சம் அடக்கு. பொண்ணுக்கு அப்பாவா யோசி”

“ண்ணா அவளுக்கு அப்பாவா யோசிச்சிதனால தான், அவளோட முடிவை நான் முழுமனசா ஏத்துக்கிறேன், என் மகளுக்கு அவன் பொருத்தம் கிடையாது. அதிலும் விருப்பமே இல்லாத பொண்ணுக்கு தாலி கட்டிட்டு ஏதோ கதை அடிச்சுட்டு இருக்கான்” என்றார் முகம் சுளித்து.

“பெரியப்பா. உங்க கோவம் எனக்கு புரியுது. ஆனா இதுக்கு மேலயும் இதை வளர விடுறது எனக்கு நல்லதா படலை. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக்கட்டுமே” என்றாள் தன்வி.

“உன் வாழ்க்கை”

“இப்போ அதுக்கு அவசரம் இல்லை. அப்படியே இருந்தாலும் எனக்காக நீங்க எல்லாம் இருக்கீங்க இல்லை. அப்புறமென்ன” என்றாள் மகள்.

“இல்லை தன்வி. நாங்க பார்த்த வரனா தேசிகனை”

“ண்ணா. அவ ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கா. ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் சதாசிவம் இடையிட்டு.

“இவ்வளவு நேரம் நீ குதிச்சப்போ உனக்கு அது ஞாபகம் இல்லையா?” என்று ராஜேந்திரன் கடுப்பாக கேட்டார்.

“பெரியப்பா. நீங்க கேட்க வரது எனக்கு புரிஞ்சிடிச்சு. அவரோட அறிமுகமே எனக்கு சரியில்லை. என்ன விளக்கம் கொடுத்தாலும், அந்த கல்யாணத்துக்கு என்கிட்ட மதிப்பு இல்லை. என்னை கட்டாயப்படுத்தி காரியம் சாதிச்ச அவரை எனக்கு நீங்க மாப்பிள்ளையா எந்த காலத்திலும் தேர்ந்தெடுக்க மாட்டீங்க. எனக்கு உங்களை தெரியும்”

“தன்வி”

“ப்ளீஸ். பெரியப்பா. நான் எல்லாத்துக்கும் புல்ஸ்டாப் வைச்சுட்டேன். நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்போ எனக்கு ரெஸ்ட் தேவை” என்று தன்வி அவள் அறைக்கு சென்றுவிட,

“சுதா. ஸ்வீட் என்ன இருக்கோ எடுத்துட்டு வா” என்றார் சதாசிவம்.

“உங்களுக்கு சுகர். போய் மாத்திரை போடுங்க போங்க” என்று சென்றார் சுதா.

ராஜேந்திரன் யோசனையுடன் செல்ல, ஸ்ருதி தங்கையின் முடிவை முழுவதும் ஏற்றுக்கொண்டாள்.

மனோகருக்கு இப்படி என்று சொல்ல, “தன்வி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்” என்றான் அவன்.

“என்ன திடீர் கட்சி மாற்றம்?” என்று ஸ்ருதி கிண்டலாக கேட்க,

“எனக்கும் முதல்ல தேசிகனை பிடிக்கலை. அவங்க பேமிலியை பிடிக்கலை தான். ஆனா மாமா அவங்க செஞ்சதுக்கு தண்டனை கொடுத்திட்டார். அதுவும் அதிகமாவே! தேசிகன் மேல கொடுத்த கேஸ் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட போதை பொருளை பதுக்கி வைச்சிருந்தது போல தான்”

“என்னங்க சொல்றீங்க?” ஸ்ருதிக்கு அதிர்ச்சியே.

“பின்ன வேறெப்படி முன்ஜாமீனை கேன்சல் பண்ண முடிஞ்சதுன்னு நினைக்கிற நீ?”

“அப்பா சொன்னா நீங்க ஏன் பண்ணீங்க?”

“அவரோட ப்ரெஷர் தான். தேசிகன் ஒரு மாசத்துக்கு பக்கமே ஜெயில்ல தான் இருந்தான். அவனை வெளியே எடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. கேஸை ஒடைச்சு தான் அவனை வெளியே கொண்டு வந்தாங்க”

“அப்பா இப்படி செஞ்சார்ன்னு எனக்கு நம்பவே முடியலை”

“அவரோட கோவம் தேசிகனை மொத்தமா முடிச்சு விடணுங்கிற அளவுக்கு தான் இருந்துச்சு. ஒரு கட்டத்துக்கு மேல நான் அதுல இருந்து ஒதுங்கிட்டேன்” என்றான் மனோகர்.

தேசிகனுக்கு உதவவே மனோகர் ஒதுங்கியதை மனைவியிடம் கூட அவன் சொல்லவில்லை. அவளுக்கு அப்பா மேல் பாசம் அதிகமே. எதையும் மறைக்க மாட்டாள்.

“அவங்க குடும்பம் அப்போ கூட தன்வி மருமகளா வரணும்ன்னு தான் முயற்சி எடுத்தாங்க. உன் அப்பாவை அவங்க விட்டதுக்கும் தன்வி தான் முக்கிய காரணம். இருக்கிறது தான் தேனி. ஆனா கான்டெக்ட்ஸ் எல்லாம் பயங்கரம்” என்றான் மனோகர்.

“ஆமாங்க பெரியப்பாவே அவங்களுக்கு தான் சப்போர்ட்”

“என்ன இருந்து என்ன? உன் தங்கச்சி தான் முடிச்சு விட்டாளே”

“தேசிகன் பேமிலி விடமாட்டாங்க இல்லை”

“ம்ஹூம். தேசிகன் சொன்னதுக்காக தான் தன்விய மருமகளா ஏத்துக்கிட்டாங்க. இப்போ அவன் வேணாம்ன்னு சொன்னா அவங்களுக்கும் வேணாம் தான்”

“தன்விக்கு இஷ்டம் இல்லைன்னா என்ன செய்ய முடியும்” என்று ஸ்ருதி தோள் குலுக்க,

“எதுக்கும் உன் அப்பாவை உஷாரா இருக்க சொல்லு” என்றான் மனோகர் பயமுறுத்தும் விதமாக.

“என்னங்க சொல்றீங்க?” அவர் எதுக்கு கவனமா இருக்கணும்?”

“பின்ன ட்ரக் கேஸ் பைல் பண்ணா, பார்த்துக்கோங்க” என்று மனோகர் செல்ல,

‘இவரே ஐடியா கொடுப்பார் போலயே?’ ஸ்ருதி உடனே அப்பாவிற்கு அழைத்தாள்.

“அவங்க என்கிட்ட எல்லாம் வர முடியாது” என்று சதாசிவம் மார்தட்டி கொள்ள, தன்வியோ எதையும் கண்டுகொள்ளாமல் தாய் நாட்டிற்கு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்தாள்.