மலர் சூடும் பெண்மை 5

அன்றைய நாளிற்கான மாலை பூஜை மணி ஒலி கோவில் முழுதும் எதிரொலித்தது.

எல்லாம் பயபக்தியுடன் கடவுளை வேண்டி கொண்டிருக்க, தன்வி அமைதியாக நின்றிருந்தாள்.

அப்பாம்மா இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். அவர்களிடம் என்னென்ன விளக்கம் கொடுக்க வேண்டியிருக்குமோ? மகளுக்குள் அச்சம்!

அவளின் தந்தை கண்டிப்பானவர் எல்லாம் இல்லை தான். ஆனாலும் அவள் செய்திருப்பதை கடந்து விடுபவரும் இல்லை.

அதிலும் தேசிகனின் மாங்கல்யம் அவனை போலவே அவளின் கழுத்தில் அழுத்தமாக அமர்ந்திருக்கிறதே!

நெஞ்சின் மேல் நிற்கும் தாலியை பார்க்க கூட பெண்ணுக்கு மனம் இல்லை. முடியை ஒதுக்க கூட கழுத்து பக்கம் கை கொண்டு செல்லவில்லை.

மஞ்சள் கொடியின் ஈரம் அதிகளவில் அவளை உறுத்தியது.

மனோகர் வேகமாக போன் எடுத்து செல்ல, தன்வி அக்காவின் கையை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

“கண்ணு. இந்தா பிரசாதம்” என்று பாட்டி கொடுக்க, மறுத்துவிட்டாள் தன்வி.

“காலையில இருந்து சரியாவே சாப்பிடலை கண்ணு. இதையாவது கொஞ்சம் சாப்பிடு” என்று அவளின் வாய்க்கருகிலே கொண்டு வந்துவிட, ஸ்ருதி தங்கையை வாங்கி கொள்ள சொன்னாள்.

தன்வி அவர் விட மாட்டார் என்று தெரிந்து வாய் திறக்க, சரியாக அவளின் அப்பாம்மா மகளை பார்த்து கொண்டே கோவிலுக்குள் வந்து கொண்டிருந்தனர்.

அவ்வளவு தான் பிரசாதம் தொண்டையிலே நின்றுவிட்டது. அம்மாவின் கோவபர்வையில், மகள் அக்காவை இன்னமும் இறுக்கமாக பற்றி கொண்டாள்.

அப்பாவின் பக்கம் பார்வையை திருப்ப தைரியம் இல்லாததால், மறுபக்கம் திரும்ப தேசிகன். அவளையே பார்த்தபடி.

‘எல்லாம் இவனால’ அந்த  நொடியும் அவன் மேல் கோவப்பார்வை வீச,

அவனோ நேராக அவளின் அப்பாம்மாவின் முன் சென்று நின்றான். “தேசிகன்” என்று சதாசிவத்திடம் கை நீட்டினான்.

மனிதர் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக கை குலுக்கினார்.

‘இவரிடம் நிச்சயம் உஷாராக இருக்க வேண்டும்’ தேசிகன் மனதில் வலுவாக தோன்றிவிட்டது.

“கோவப்பட்டு நெஞ்சு சட்டையை பிடிச்சா கூட சமாளிச்சுக்கலாம். இவர் என்ன சாதாரணமா கை குலுக்கிறார்” என்று பெரியவர் முணுமுணுத்து கொண்டார்.

தன்வியின் அம்மா ‘சுதா’ மகளிடம் வராமல் அங்கேயே நிற்க, “வணக்கம்” என்றார் சாவித்திரி அவருக்கு கை குவித்து.

மகன் தாலி கட்டிவிட்டான், இனி அவனின் அம்மாவாக அவர் முன் நின்றாக தான் வேண்டும்.

சுதா அவரை கேள்வியாக பார்த்து பதில் வணக்கம் வைக்க, “நான் சாவித்திரி. தேசிகனோட அம்மா” என்றார் இருவருக்கும் பொதுவாக.

தலையசைத்து கொண்டவர்களிடம், “இப்போ தான் பூஜை முடிஞ்சது. சாமியை பார்க்கலாமா?” என்று கேட்டார் பெரியவர்.

தன்வியின் அம்மாவிற்கு தெய்வ பக்தி அதிகம் என்பதால் மறுக்காமல் இருவரும் சென்று வணங்கிவிட்டு வந்தனர். அவர்களுக்கும் பிரசாதம் கொடுக்க, தன்வியின் அம்மா மறுக்கவில்லை.

சதாசிவம் எடுக்கவில்லை என்றாலும், நிதானமாக தான் இருந்தார் மனிதர்.

அவ்வளவு ஆட்கள் கோவில் முழுக்க நிறைந்திருந்தாலும், சிறிதும் சத்தம் இல்லை.

சதாசிவம் தம்பதியினரை பார்த்ததுமே புரிந்துவிட்டது மிகவும் வசதியானவர்கள் என்று. அங்கிருந்த காவலர்கள் இல்லாமல் அவர்களுக்கென தனியே, பாதுகாப்பு ஆட்களும் கோவிலுக்குள்ளே, வெளியே என்று அதிகம் காணப்பட்டனர்.

“நம்மளை எல்லாம் ஒரு கை பார்த்துடணும்ன்னு தான் மனுஷன் படையோட வந்திருக்கார்” என்றார் பெரியவர் பேரனிடம்.

தேசிகன் “பார்த்துக்கலாம் விடுங்க தாத்தா” என்றான்.

எல்லோருக்கும் அமர இருக்கை போடபட, “சொல்லுங்க” என்றார் சதாசிவம் முதல் வார்தையாக நின்றபடியே.

தன்விக்கு ஏனோ கண்கள் கலங்கி கொண்டு வந்தது. ‘என்னோட அஜாக்கிரதை தான் அப்பாம்மாவை இங்க நிக்க வைச்சிருக்கு’

“ஷ்ஷ் தன்வி டாட் பார்க்கிறார்” என்று ஸ்ருதி அவளை கண்டிக்க, தன்வி கண்ணீரை ஒற்றி கொண்டாள்.

“அதுங்க எங்க குடும்பத்துக்குள்ள பெரிய விஷயம் ஒன்னு நடந்துபோச்சு. முதல் தலைமுறை பண்ண தப்புல இப்போ இருக்கிற தலைமுறை புள்ளைங்க கஷ்டப்படுது”

“உங்க குடும்ப பஞ்சாயத்தை கேட்க தான் எங்களை இங்க வர வைச்சீங்களா?” என்று சதாசிவம் கேட்க, தேசிகன் குடும்பத்தாருக்கு அவரின் தோரணை, கேள்வி கேட்டதில் இருந்த நக்கல் பிடிக்கவில்லை.

பெரியவர் அவரின் அனுபவத்தில், “எங்க குடும்ப பஞ்சாயத்தை சொல்ல இல்லை. ஆனா அதுக்குள்ள உங்க பாப்பா, அதான் எங்க மருமக பொண்ணு உள்ள வந்திடுச்சே. அப்போ அதையும் சொல்லத்தானே வேணும்” என்றார்.

சதாசிவம் பெரியவரை சொல்லுபடி கையசைக்க, மரியாதை குறைவாக தான் எல்லாம் உணர்ந்தார்கள்.

“தாத்தா நீங்க இருங்க” என்ற தேசிகன்,

“என்னோட மாமா பொண்ணை தான் நாங்க கூட்டிட்டு வர போனோம், அங்க உங்க பொண்ணு மாறி வந்துட்டாங்க” என,

“கடத்திட்டு வரதை இப்படி கூட சொல்லலாமா?” என்று சதாசிவம் ஏளனம் செய்ய,

“என்னோட மாமா பொண்ணா இருந்தா அது நிச்சயம் கடத்தல்ல வராது. அவளுக்கும் இங்க நடக்கிறதுல பங்கு இருக்கு”

“என் பொண்ணு உங்க மாமா பொண்ணு இல்லை, சோ இது கடத்தல் தானே?” என்றார் சதாசிவம்.

“நிச்சயம். ஆனா உங்க பொண்ணு எங்ககிட்ட இதை சொல்லியிருந்தா” தேசிகன் அழுத்தமாக சொல்ல, சதாசிவம் இப்போது மகளை பார்த்தார்.

“தன்வி” என்ற அவர் அழைப்பில்,

“சுஜாதாக்காக தான் டாட்” என்றாள் மகள்.

“இடியட்” என்ற சதாசிவத்தின் வார்த்தையில் தன்விக்கு திரும்ப கண்கள் கலங்கும் போலானது.

“அவளோட காதல்ல பிரச்சனைன்னு தான் உதவி பண்ண”

“உன்னோட உதவி உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பார்த்தியா?” என்று சதாசிவம் கேட்க, மகள் மேலும் பேச முடியுமா?

மேலும் மகளை அங்கு வைத்து பேச சதாசிவத்திற்கு மனதில்லை போல. அவள் கலங்கிய கண்கள், தேசிகன் மீதான அவரின் கோவத்தை தான் இன்னும் தூண்டிவிட்டது.

மனோகரிடம் மாமனார் கண் காட்ட, அவன் சென்று சுஜாதாவை அழைத்து வந்தான். மிகவும் பயந்து போயிருந்தவள், நவீனை ஒட்டி கொண்டு நின்றாள்.

சுஜாதாவை முதன் முதலாக பார்த்து கொண்ட உறவுகள், அவளுக்கு திருமணம் முடிந்ததையும்  கண்டுகொண்டனர்.

“உனக்காக தானே என் பொண்ணு இங்க வந்தா. அவளை கடத்தியிருக்காங்க. நீயும் இவங்களுக்கு எதிரா கம்பளைண்ட் கொடுக்கணும்” என்றார் சதாசிவம்.

சுஜாதா அச்சத்துடன் இவர்களை பார்க்க, “உன் அப்பா எங்க கஸ்டடியில் தான் இருக்கார்” என்றான் தேசிகன்.

“ஏய் என்ன பிளாக்மெயில் பண்றியா?” என்று மனோகர் எகிற,

“அப்போ நீங்க பண்ணிட்டு இருக்கிறது?” என்று கேட்டான் தேசிகன்.

“கடத்திட்டு வந்ததும் இல்லாம வலுக்கட்டாயமா தாலி வேற கட்டியிருக்க?” என்று சதாசிவம் கோபத்துடன் கேட்க,

“அது என்னோட தப்பு தான். அதுக்காக நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்கு சம்மதம்” என்றான் தேசிகன்.

“கொடுக்கத்தான் போறேன். உன்னை சும்மா விடுவேன்னு எப்படி நினைச்ச நீ?” என்று சதாசிவம் ஆத்திரத்துடன் அவனுக்கருகில் சென்றுவிட,

தேசிகன் அவரை எதிர்கொண்டு நின்றவன், “உங்ககிட்ட முழுசையும் சொல்லிடுறேன். அதுக்கப்புறம் எல்லாம் சேர்ந்து எனக்கான தண்டனையை கொடுங்க” என்றான்.

தன்வி இவன் எதை சொல்ல போகிறான் என்று பார்க்க, தேசிகன் கண்களும் இவளை தீண்டியது.

“என்னோட மாமா பொண்ணுன்னு தான் கல்யாணம் வரைக்கும் போனேன்” என்று முதலில் இருந்து எல்லாம் சொல்லியவன், அவன் மூன்று முடிச்சிடாமல் மாங்கல்யத்தை கீழே விட்டதையும் சொன்னான்.

தன்வியின் அம்மா சுதாவிற்கு நெஞ்சம் குலுங்கி போனது. ஏனோ அவரால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

மகளின் கழுத்து வரைக்கும் வந்த மாங்கல்யம் தவறி போயிருந்தது, அம்மாவாக அவரை பாதித்தது.

“என்னடா சொல்ற?” என்று சதாசிவமும் அவன் நெஞ்சு சட்டையை பிடித்துவிட,

“எங்க சூழ்நிலையை பயன்படுத்திக்க நினைச்ச என்னோட மாமாக்கும், மாமா மகளுக்குமான பதில் தான் நான் கொடுத்தது. ஆனா அந்த இடத்துல இருந்தது உங்க பொண்ணு. உங்க பொண்ணுக்கு உண்மை தெரியும். ஆனா அவங்க எங்ககிட்ட சொல்லலை”

“அநியாயமா ஒரு பொண்ணுக்கு இதை செஞ்சுட்டோம்ங்கிற என்னோட உறுத்தல், என்னை வாழ விடாது. தவறவிட்டதை அவளுக்கு கொடுத்துடணும் அப்படிங்கிறதாலே அவள் கழுத்துல தவறவிட்ட மூணு முடிச்சு போட்டிருக்கேன். உங்களுக்கு நிச்சயம் இது கட்டாய கல்யாணம். எனக்கு நான் பண்ண தப்பை சரி செஞ்சிருக்கேன். அவ்வளவு தான்” என்றான் அவன் தரப்பு முழுதும் சொல்லி.

“ராஸ்கல்” என்று சதாசிவம் அவரின் முழு வலுவையும் ஒன்று திரட்டி அவனை அடிக்க போக,

“ஏங்க” என்று சுதா கணவரின் கையை பிடித்துவிட்டார்.

அவன் செய்த தவறை அவன் சரி செய்ய முயன்றிருக்கிறான் என்பதே, சுதாவை நிதானமாக இருக்க வைத்தது.

அதற்காக அவனை மருமகனாக ஏற்று கொண்டாரா என்பது அவருக்கே புரியாத புதிர் தான்.

“தம்பி. உங்க கோவம் நியாயம். எங்க பேரன் முழு மனசோட தான் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டியிருக்கான். அவனுக்கு ஒரு வாய்ப்பு நீங்க கொடுக்கணும்” என்று பெரியவர் கேட்க,

“வாய்ப்பு கொடுக்க மாட்டேன். கேஸ் தான் கொடுக்க போறேன்” என்றார் சதாசிவம் உறுதியாக.

“கடத்திட்டு வந்ததே தப்பு. இதுல கல்யாணம் வேற. இவனை கண்டிப்பா ஜெயில்ல வைக்காம விட மாட்டேன்” என்று அவர் நிற்க,

“கடத்திட்டு வந்ததுல உங்க மகளோட தப்பும் இருக்கு. அப்புறம் நாங்களும் ஆள் மாறாட்டம்ன்னு பதில் கேஸ் பைல் பண்ண வேண்டியிருக்கும்” என்றார் தேசிகனின் சித்தப்பா.

“சட்டத்தை பத்தி எங்களுக்கே சொல்லி கொடுக்கிறியா?” என்று மனோகர் கேட்க,

“நான் சொல்லி கொடுக்காம. லாயர் சார் நான். சென்னை ஹைகோர்ட்ல பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்றார் அவர் நெஞ்சம் நிமிர்த்தி.

“இங்க நடந்த எல்லாத்துக்கும் எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. உங்க பொண்ணு ஆள் மாறாட்டம் பண்ணினதை எங்களால நிரூபிக்க முடியும். நீங்க அதை வைச்சு எங்களை கார்னர் பண்ண முடியாது. எங்க மகன் பண்ண ஒரே தப்பு, கல்யாணம். அதுக்கான பேச்சு வார்த்தைக்கு தான் உங்களை கூப்பிட்டது”

“பேச்சு வார்த்தைக்கு நான் வந்தேன்னு உங்ககிட்ட யார் சொன்னா. உங்க மகனை தூக்கி உள்ள வைக்கத்தான் வந்திருக்கேன்” என்றவர் மனோகரை பார்க்க, அவன் உடனே தேசிகனை கைது செய்வதற்கான ஆயத்தத்தை மேற்கொள்ள,

“சார். உங்களை எனக்கு தெரியும். SP நீங்க. உங்க பவரை வைச்சு நீங்க இந்த மாதிரி எதுவும் செய்வீங்கன்னு தான் இது” என்று மனோகரிடம் தேசிகனின் முன் ஜாமீனை நீட்டினார்.

“என்ன செய்யணும், அவனை எப்படி உள்ள வைக்கணும்ன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று மனோகர் நிற்க,

“அதுக்கு முன்ன நீங்க உங்க மேலதிகாரிகிட்ட பேசிக்கிறது நல்லது” என்றார் லாயர்.

முன்னமே இவர்கள் எல்லாவற்றுக்கும் தயாராக தான் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே புரிந்தது.

சதாசிவமும் இதை அப்படியே விடும் ஆள் இல்லையே. என்ன செய்யலாம் என்று அவன் தீவிரமாக யோசிக்க,

“தம்பி” என்றார்  பெரியவர்.

“நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது. உங்களை பத்தி இப்போ வரைக்கும் நாங்க விசாரிக்க கூட இல்லை. உங்க பொண்ணை எங்களை நம்பி கொடுங்க. எங்க குடும்பம் ரொம்ப பாரம்பரியமான குடும்பம். சொத்து பத்துக்கு குறைவில்லை. பேரன் நல்லா படிச்சிருக்கான். நீங்க எப்படிபட்ட வரன் எதிர்பார்ப்பீங்களோ அதுவா தான் நாங்க இருக்கோம். கோவத்தை விட்டு கொஞ்சம் பொறுமையா யோசிங்க”

“எங்க பக்கம் நடந்த குழப்பத்துக்கு நாங்க முழு பொறுப்பு எடுத்துகிறோம். பேரன் பொறுமையா இருந்திருக்கணும். அவனுக்காக நாங்க மன்னிப்பு”

“தாத்தா ப்ளீஸ் போதும். எனக்காக நீங்க யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்க வேண்டாம்” என்றான் தேசிகன் குரல் உயர்த்தி.

“என்னோட முடிவு, எனக்காக, என்னை நான் காப்பாத்திக்கவே தான் இந்த கல்யாணம். அதுக்கும் உங்க பொண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவங்க முடிவு, விருப்பம் எல்லாம் அவங்களை சார்ந்தது”

“நான் பண்ணதுக்கு எனக்கு நீங்க தண்டனை கொடுத்துக்கலாம். கட்டாய கல்யாணத்தை நான் நியாயப்படுத்த மாட்டேன்” என்றான் தேசிகன்.

“தேசிகா என்ன இது?” என்று சித்தப்பா அவனை தடுக்க பார்க்க,

“இல்லை சித்தப்பா. அவங்களுக்கு இதை பண்ணாதான் மனசு ஆறும்ன்னா எனக்கு முழு சம்மதம்” என்றான் மகன்.

தன்வி நடந்து கொண்டிருப்பதில் அதிகமே காயப்பட்டாள்.

“அதான் சாரே சொல்லிட்டார் இல்லை. அவனை அரெஸ்ட் பண்ணு மனோகர்” என்ற சதாசிவம்,

“தன்வி. அந்த தாலியை கழட்டி வீசிட்டு கிளம்பு போலாம்” என்றார் மகளிடம்.

“தம்பி. அது மட்டும் நடக்காது” என்றார்கள் பெரியவர்கள் அத்தனை பேரும்.

“ஏன்? ஏன் நடக்காது. இந்த கல்யாணமே செல்லாது. மூணு முடிச்சு இவன் போட்டுட்டா  என் மக அவனுக்கு பொண்டாட்டி ஆகிடுவாளா?” என்று தந்தை எகிற,

“வேறெத்தனை முடிச்சு போடணும் சொல்லு தம்பி, என் பேரன் போட்டுடுவான்” என்றார் பெரியவர்.

“என்னங்கய்யா ஏத்தமா?”

“பின்ன வேறென்ன தம்பி. என் பேரன் பண்ணதுக்கு நீங்க தண்டனை தான் கொடுக்கிறீங்க இல்லை, அப்புறம் தாலியும் வேணாம்ன்னா”

“வேணாம் தான். என் பொண்ணுக்கு இவன் மாப்பிள்ளை இல்லை”

“அதை கோர்ட் சொல்லட்டும்” என்றார் சித்தப்பா.

“வாட்”

“ஆமா. ஒரு வருஷம் கழிச்சு நாம கோர்ட்ல சந்திக்கலாம். அதுவரைக்கும் உங்க பொண்ணு கழுத்தை விட்டு இந்த தாலி இறங்க கூடாது”

“காட்டு மிராண்டிங்களா நீங்க எல்லாம்? வலுக்கட்டாயமா கட்டியிருக்கான், அதுக்கு கோர்ட் வரைக்கும் போகணும்ன்னு சொல்றீங்க? என் பொண்ணு வாழ்க்கை என்னாகிறது?”

“அப்போ எங்க பேரன் வாழ்க்கை என்னாகிறது? அவனை நாங்க பார்க்க வேண்டாமா?”

“அவன் ஜெயிலை விட்டு வெளியே வந்தா தானே வாழ்க்கை எல்லாம்”

“அதை நாங்க பார்த்துகிறோம் சம்மந்தி”

“யோவ்”

“சரி சதாசிவம். உங்க கோவத்துக்கு அவன் அடிபணிஞ்சு நிக்கிறான் தானே. ஒரு வருஷம் டைம். அப்புறமும் உங்க பொண்ணுக்கு என் பேரன் வேண்டாம்ன்னா முடிச்சுக்கலாம். இது எங்களோட வாக்கு” என்றார்கள்.

‘முதல்ல இவனை உள்ள வைக்கணும். அதுக்கு அப்புறம் இதை கவனிச்சுக்கலாம்’ என்று சதாசிவம் முடிவெடுத்து மனோகரை பார்த்தார்.

அப்போதே தேசிகன் கைது செய்யப்பட்டான். தன் பெண்ணை இதில் இழுக்காமல் வேறேதோ கேஸ் கொடுத்தார் தந்தை.

தன்வி நிற்க முடியாமல், கால்கள் நடுங்க அமர்ந்து கொண்டாள்.

என் ஒருத்தியால் எவ்வளவு நடந்துவிட்டன! பெண்ணுக்கே தாங்கவில்லை.

தேசிகன் அவளுக்கருகில் வர, அமர்ந்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்கான தண்டனையை நான் ஏத்துக்கிட்டேன். உன் விருப்பம் இல்லாம நான் உன்னை கல்யாணம் செஞ்சிருக்க கூடாது. அதுக்கான மன்னிப்பு தான் என்னோட அரெஸ்ட்”

“ஆனா உனக்கு? நீ எங்களை ஏமாத்தினத்துக்கு, எங்க வேதனையோட விளையாடினதுக்கு, எங்க உணர்வுகளை மதிக்காததுக்கு, எங்க பாசத்தை மிதிச்சதுக்கு உனக்கென்ன தண்டனை?” என்று அவளிடம் வார்த்தைகளை வீசினான் தேசிகன்.

தன்வி கண்கள் அவனை வெறிக்க, “பதில் தேடி வை. வருவேன். ஒரு வருஷம் கழிச்சு கண்டிப்பா நான் உன்கிட்ட வருவேன்” என்றான் தேசிகன்.

தன்விக்கோ, இனி இவனை பார்க்கவே கூடாது என்று தோன்றிவிட்டது.

ஒருமுறை பார்த்ததுக்கே இவ்வளவு அமர்க்களம். இன்னமுமா?

‘போதும்டா சாமி’ என்று கண்காணா இடத்திற்கு பெட்டியை கட்டிவிட்டாள்.