அவனுடன் ஸ்ருதி. தன்வியின் அக்கா. அவரை பார்த்ததும் தான் தன்வியின் விறைத்த உடல் தளர்ந்ததோடு, “க்கா” என்று அவளின் கைக்குள் சரணடைந்துவிட்டாள்.
“என்னாடாம்மா. என்ன ஆச்சு தன்வி” என்று அக்காவும் தங்கையின் மணக்கோலம் கண்டு கலங்கி போனாள்.
“உங்க பொண்ணு எங்கன்னு எங்க வீட்டு பொண்ணை கேள்வி கேட்கிறது இல்லாம, அவளை மிரட்ட வேற செய்வீங்களா?” என்று மனோகர் அதிகாரமாக கேட்க,
“ஏய் நீ யாருடா? எங்க ஆளுங்க என் பொண்ணை தான் கூட்டிட்டு வர போனாங்க. அங்க உன் வீட்டு பொண்ணு ஏன் வரணும்?” என்று அவனிடமும் எகிறி கொண்டு சென்றவரின், நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தியவன்,
“மரியாதை. மரியாதையா பேசணும்” என்று எச்சரித்தவன், அப்போது தான் மணமேடை, கீழே இருந்த மாங்கல்யம், தன்வி தேசிகனின் மணக்கோலம் எல்லாம் பார்த்து ஏதோ புரிந்து கொண்டதுடன், நொடியும் இல்லாமல் தேசிகனின் சட்டையை பிடித்துவிட்டார்.
“ஹேய், யாருப்பா நீ” என்று குடும்பத்தினர் அவரிடம் வர பார்க்க,
“போர்ஸ் ” என்ற மனோகரின் குரலில், திபு திபுவென அவ்வளவு காவலர்கள் மொத்த குடும்பத்தையும் சுற்றி வளைத்துவிட்டனர்.
“இருக்கிற இடத்தை விட்டு ஒருத்தர் அசைஞ்சாலும் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை” என்று அப்பட்டமாக மிரட்டிய மனோகர், அவ்வளவு கோபத்துடன் தன் கையில் அசையாமல் நின்ற தேசிகனின் மூக்கை உடைத்ததில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
“தேசிகா” என்று எல்லாம் பதற,
“யார் வீட்டு பொண்ணுக்கு தாலி கட்ட பார்த்த” என்று மனோகர் ஆத்திரத்துடன் இன்னும் இரண்டு கொடுக்க,.
“எங்களை சுட்டா சுட்டுக்கோங்க. அதுக்காக எங்க அண்ணன் மேல கை வைக்கிறதை எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது” என்று இளைஞர்கள் சிலர் மனோகரிடம் வந்துவிட,
“வேண்டாம்” என்றான் தேசிகன்.
“பார்றா. நீ ஏன் வேண்டாம் சொல்ற, வரட்டும். என்கிட்ட வந்து தான் பார்க்கட்டும்” என்று மனோகர் குரல் உயர்ந்து ஒலிக்க,
“தம்பி. தம்பி. பேச்சு பேச்சா இருக்கணும். உங்க ஆயுதத்துக்கு எல்லாம் பயப்படுற கூட்டம் நாங்க இல்லை. இனியும் தேசிகன் மேல ஒரு அடி விழ கூடாது” என்று பெரியவர்கள் முன் வந்து கோபத்துடன் பேசியதுடன்,
“ஏதோ தப்பு எங்க மேல இருக்கிறதால தான் எங்க வீட்டு பையனும் அடி வாங்கிட்டு இருக்கான். அதுக்காக நாங்க உங்க பாப்பாகிட்ட மன்னிப்பு கூட கேட்டுட்டோம்”
“நீங்க மன்னிப்பு கேட்டா நான் விட்டுறணுமா?”
“வேறென்ன பண்ணனும் சொல்றீங்க, சொல்லுங்க. நாங்க தயாரா தான் இருக்கோம். ஆனா அதுக்கு முன்ன ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க. ஆள் மாத்தி கூட்டிட்டு வந்தது உங்க பாப்பாக்கு தெரியாதா? ஏன் எங்ககிட்ட சொல்லலை?” என்று கேட்க,
தன்விக்குள் நிச்சயம் குத்தியது, அந்த ஒரு காரணத்திற்காக தான் இவ்வளவு நடந்தும் இங்கு நிற்கிறாள்.
“எங்க குடும்ப பகைக்குள்ள வந்தது உங்க பாப்பா தப்பு. இது வாழ்வா, சாவா போராட்டம்யா. இதுல வந்து காதல், கல்யாணம், ஆள் மாறாட்டம்ன்னு, இனி இந்த பாவத்தை வேற நாங்க சுமக்கணும்” என்றார் பெரியவர் தளர்ந்து போய்.
“தாத்தா. நான் பார்த்துகிறேன்” என்று தேசிகன் சொல்ல,
“என்ன, என்ன பார்த்துக்க போற நீ?” என்று மனோகர் அவனை விடுவேனா என்று நிற்க,
“மாமா ப்ளீஸ்” என்றாள் தன்வி அக்காவிடம் இருந்து விலகி.
“நோ தன்வி. நீ பேசாத”
“அக்கா. அவர்கிட்ட சொல்லு. வேண்டாம்ன்னு. எனக்கு இங்க இருந்து போகணும். இப்போவே” என்று அவ்வளவு உறுதியாக சொல்ல, ஸ்ருதி மனோகர் கை பிடித்து அவரை நிதானத்திற்கு கொண்டு வர முயன்றாள்.
“தன்வி இந்த விஷயம் மட்டும் உன் அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு எதாவது ஐடியா இருக்கா உனக்கு? இவன் உன் கழுத்துல தாலி கட்ட பார்த்திருக்கான். நீ போராடியிருக்க, இல்லைன்னா இவன் கட்டியிருப்பான் தானே” என்று மனோகர் விடமாட்டேன் என்று இருக்க,
தன்விக்குள் மாபெரும் அலை. இன்னமும் அவளின் கழுத்தில் அந்த மஞ்சள் ஈரம் உணர முடிய, தேசிகன் கண்கள் அவளிடமே நிலைத்து நின்றது.
உறவுகள் மனோகர் புரிந்து கொண்ட விதத்தில் திகைத்து போக, நடந்ததை சொல்ல கூட யாருக்கும் முடியவில்லை.
சொல்ல கூடியதா? இல்லை சொல்லத்தான் முடியுமா?
“இவனை இப்படியே விட மாட்டேன் நான். அதென்ன விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல தாலி கட்ட பார்க்கிறது? அவ்வளவு தானே இவன் வீரம். இப்போ நான் நிக்கிறேன், கிட்ட போய் பாருடா அவகிட்ட. உன் கை உன் உடம்புல தொங்குதான்னு பார்த்துடலாம்” என்று தேசிகனின் சட்டையை விட்டு அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினான் மனோகர்.
“மனோ. ப்ளீஸ். கொஞ்சம் நிதானமா இருங்க” என்று ஸ்ருதி கணவனை அடக்க,
தன்விக்கு இனியும் மண்டபத்தில் நிற்கத்தான் வேண்டுமா என்று தோன்ற, அங்கிருந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
“தன்வி. நில்லு இவங்களுக்கு ஒரு முடிவு கட்டாம இங்கிருந்து நாம கிளம்ப முடியாது” என்று மனோகர் கத்த, ஸ்ருதியும், “தன்வி. நில்லு” என்று தங்கையின் பின் செல்ல போக, தன்வி நிற்க வைக்கப்பட்டாள்.
அவளின் கை தேசிகனின் கைக்குள் இருந்தது.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் கை பிடிப்ப?” தன்வியின் வார்த்தைகள் சீறி கொண்டு வர,
தேசிகனோ மின்னல் வேகத்தில் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டிருந்தான். அவ்வளவு அழுத்தம் அவனின் கைகளுக்கு. தன்வி உணர்ந்து தடுப்பதற்குள் மாங்கல்யம் அவளின் நெஞ்சில் இடம் பிடித்திருந்தது.
“ஹேய்” என்று மனோகர் வேகத்துடன் அவனிடம் வருவதற்குள் நடந்து முடிந்திருக்க, தன்விக்கு இவன் என்ன பைத்தியமா என்ற ஆவேசத்தில், தேசிகனின் கன்னத்தை பழுக்க வைத்திருந்தாள்.
மனோகர் ஆக்ரோஷத்துடன் அவன் சட்டையை பிடிக்க போக, தேசிகன் ஒற்றை கையால் மனோகரின் நெஞ்சில் கை வைத்து அவனை நிறுத்தியவன், “முன்னாடி நடந்தது தெரியாம நடந்தது. இப்போ நடந்தது முழுக்க, முழுக்க தெரிஞ்சு நடந்தது” என்றான் அவனிடம்.
சாவித்திரி மகனின் செயலில், “என்னடா பண்ற நீ?” என்ற தளர்வுடன் அமர்ந்து கொண்டார்.
தன்வி மாங்கல்யத்தை ஆவேசத்துடன் கழட்ட போக, பாட்டி அவளின் கை பிடித்து தடுத்திருந்தார்.
“ஊர் முன்னாடி என் பேரன் உனக்கு தாலி கட்டியிருக்கான். அதை கழட்டுறது அவ்வளவு சுலபம் இல்லை கண்ணு” என்றார் உறுதியுடன்.
“கழட்டினா என்ன பண்ணுவீங்க” என்று மனோகர் எகிற,
“நீ முதல்ல, கண்ணு உன் பேர் என்னம்மா?” என்று தன்வியிடம் கேட்டு அவள் கோவத்தில்,
“யோவ் உங்களுக்கு எல்லாம் கிறுக்கா பிடிச்சிருக்கு. அவன் என்ன வேலையை பார்த்து வைச்சிருக்கான். பேசாம கல்லு மாதிரி நிக்கிறீங்க. பெரியம்மா வயசாச்சே தவிர உங்களுக்கு கொஞ்சமாச்சு அறிவு” என்று கத்தி கொண்டே சென்ற சுஜாதாவின் அப்பா, “ஆஹ், அம்மா” என்று வலியில் அலறினார்.
பெரியவர் அவரின் வாயை பேச முடியாமல் செய்ததோடு, “இத்தனை வயசுக்கு மேல தான் இவனுக்கு மரியாதையை கத்து கொடுக்க வேண்டியிருக்கு. இவனை தூக்கிட்டு போய் ஊறவைங்க” என்று சுஜாதாவின் அப்பாவை அவரின் ஆட்களிடம் ஒப்படைத்தார்.
“என்னை விடுங்க, விடுடா. டேய். இதுக்குதான் நான் ஊர்பக்கமே வராம இருந்தேன்” என்று கத்தியவரை கதற, கதற இழுத்து கொண்டு சென்றனர்.
அப்படியே மெல்ல அங்கிருந்து நழுவ முயன்ற, தேசிகனின் அப்பா குடும்பத்தினரையும் கட்டம் கட்டியவர்கள், “இனி தான் ஆட்டமே இருக்கு. எங்க ஓடுறீங்க?” என்று அவர்களை வேறு பக்கம் இழுத்து சென்றனர்.
கோவிலுக்குள் இருந்தே அவ்வளவு ஆயுதத்தை எடுத்து வந்த கூட்டத்தை பார்த்த அங்கிருந்த காவலர்கள், ‘என்னடா நடக்குது இங்க?’ என்று திகைத்து நின்றனர்.
“சார் ஊர்க்காரங்க எல்லாம் உள்ள வந்துட்டாங்க. நாம பொறுமையா தான் இதை ஹாண்டில் பண்ணனும்” என்று மனோகரிடம் எச்சரித்தார் இன்ஸ்பெக்டர்.
சில நிமிடங்களில் மொத்த கோவிலையும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்களை மனோகர் எதுவும் செய்ய முடியாமல் பார்த்து நிற்க,
“காட்டு மிராண்டிங்க நீங்க எல்லாம்” என்று தன்வி கோவம் கொண்டாள்.
“இருந்துட்டு போகட்டும் தாயி. நீ இப்படி உட்காரு. யம்மா. எங்க மருமகளோட அக்கா. உங்க அப்பாம்மாவை உடனே புறப்பட்டு வர சொல்லு கண்ணு” என்ற பெரியவர்,
“எதுக்கு இப்போ எல்லாம் மசமசன்னு நிக்கிறீங்க. ஓடுங்க. சீக்கிரம் கல்யாண சாப்பாடு ரெடி பண்ணுங்க. சம்மந்தி வீட்டுக்காரங்க வரும் போது எல்லாம் தயாரா இருக்கணும். போலீஸ் தம்பிங்களா எவ்வளவு நேரத்துக்கு இப்படி நிப்பீங்க. உட்காருங்க, குடிக்க வரும், கொஞ்ச நேரத்துல பந்தி போட்டுடலாம்” என்று அவரவர் வேலையை பார்க்க கலைந்தனர்.
ஸ்ருதி வேகமாக அப்பாம்மாவிற்கு அழைத்தாள். அவர்கள் வந்தால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து கிளம்ப முடியும், முக்கியமாக தன்வி. என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
தன்வியின் கை தேசிகனால் பற்றப்பட, பெண் உதறி நின்றாள்.
“தொட்டா கொன்னுடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் தன்வி.
“கோவில் கதவை இழுத்து மூடுங்க. ஒருத்தரும் வெளியே போக கூடாது” என்றான் தேசிகன் இவளை பார்த்தவாறே.
“நான் பண்ண தப்புக்கு நான் பிராயசித்தம் செய்ய தயாரா இருக்கேன். நீ எங்களை ஏமாத்தினத்துக்கு என்ன பண்ண போறன்னு யோசிச்சு வை” என்று அழுத்தமாக சொல்லி சென்றான் தேசிகன்.
தன்விக்கு அவளின் விளையாட்டுத்தனம் வினையாக முடிந்ததை முழுமையாக உணர முடிந்தது.