மலர் சூடும் பெண்மை 4

திருமணக்கோலம் பூண்டிருந்த மண்டபம், இப்போது போர்க்களமாக காட்சியளித்தது.

சில நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்திருக்க, எல்லாம் பேச்சற்று தான் போயினர்.

முதல் அதிர்ச்சியாக தன்வி மாலையை கழட்டி வீசியது!

அவளின் சம்மதத்திலே இந்த திருமணம் நடப்பதாக தான் எல்லாம் நினைத்திருந்தனர். ஏன் தேசிகனும் கூட!

கேட்டானே அவளிடம் உன் அப்பா சொன்னதுல உனக்கு சம்மதமா என்று. ஆம் என்று தலையசைத்தாளே தன்வி!

அதற்காக அவ்வளவு வெறுப்பு கொண்டான் அவளிடம்.

ஆனால் தன்வியோ மணமேடைக்கு வந்து வேறு மாதிரி நடந்து கொண்டதில், “நடிக்கிறா” என்று தேசிகன் கோவம் கொண்டான்.

பெற்றவர்களை போல் மகளும் சுயநலம் பிடித்தவள்! எல்லார் முன்னும், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று காட்ட முயற்சிக்கிறாள்.

என்னை கீழிறக்க பார்க்கிறாள்!

எப்படி விடுவேன் நான்? என்னிடம் சம்மதம் என்று சொல்லிவிட்டு, என் குடும்பத்தார் முன் என்னை அவமதிக்க நினைக்கிறாள்!

அவளை கடத்தியதற்காக என்னை பழி வாங்குகிறாள்!

விடமாட்டேன் நான். அவள் என்ன என்னை பழி வாங்குவது? நான் அவளை, அவள் பெற்றவர்களை எல்லாம் நிமிர முடியாமல் செய்கிறேன்!

போன நிமிடம் வரை தான் எடுத்திருந்த முடிவிற்காக தத்தளித்து கொண்டிருந்தவன், தன்வியின் செயலில் அவன் முடிவை செயல்படுத்தியிருந்தான்.

ஆம் அவளை தன் மனைவியாக ஏற்காமல் நிராகரித்தான்.

எனக்கு நீ வேண்டாம் என்றான்.

ஆனால், ‘உன் குணத்தாலே நீ இதுக்கு தகுதியானவள் தான்’ என்ற அவனின் எண்ணம் சுஜாதா அப்பாவின் பேச்சில் தலை கீழாகி போய்விட்டது.

“என் பொண்ணு எங்க?” என்ற அவரின் கூக்குரல், தேசிகன் நெஞ்சில் இடியை இறக்கியது.

அவரின் சொற்களை மூளையில் ஏற்ற முயன்ற நொடி, அவனின் கன்னம் விறுவிறுவென எரிந்தது.

தன்வியை தான் பார்த்தவன், அவள் கண்களோ வேறு இடத்தில் இருக்க சாவித்திரி. அவனின் அம்மா!

“உன் அப்பா குடும்பத்தோட ரத்தம் நீ’ன்னு காமிச்சுட்ட இல்லை” என்றார் வெறுப்பை முழுதும் சுமந்து.

“ம்மா” என்ற தேசிகனின் குரல் அவனுக்குள்ளே நின்று போனது.

“கோவத்தை மறந்துட்டு, குடும்பத்துக்காக, நீ இவளை உண்மையாவே கல்யாணம் பண்ணிப்பண்ணு நினைச்சு தான் விட்டேன்”

“ஆனால் பழி வாங்கிற குணம் உனக்குள்ளே ஊறி போயிருக்குன்னு எனக்கு இப்போ தான் புரிஞ்சது. என் பால் எல்லாம் விஷமாகிடுச்சுடா” என்றார் கண்கள் கலங்க.

தேசிகன் “ம்மா” பதறி அவரின் கையை பற்ற போக, “தொடாத” என்றார் சாவித்திரி  சீற்றத்துடன்.

அம்மாவின் நெஞ்சை இப்போதே குளிர வைக்க வேண்டும் என்று மகனுக்கு அவ்வளவு தவிப்பாக இருந்தது.

அவரின் போராட்டங்களை பார்த்து வளர்ந்தவன், நான் இப்படி செய்திருக்க கூடாதோ? இதுவரை உறங்கி கொண்டிருந்த மனசாட்சி விழித்து அவனை குத்த ஆரம்பித்தது.

“உங்க அம்மா, மகன் பஞ்சாயத்தை எல்லாம் அப்புறம் வைச்சுக்கோங்க. முதல்ல எங்களுக்கு நீங்க பதில் சொல்லியாகணும்” என்று முன் வந்தனர் தேசிகனின் அப்பா குடும்பத்தினர்.

“ஏதோ என் தங்கச்சி மகளை மருமகளா கொண்டு வர போறீங்கன்னு பார்த்தா எங்களுக்கே விபூதி அடிக்க பார்க்கிறீங்க இல்லை” என்று சண்டைக்கு நின்றார்கள்.

“என் பொண்ணு எங்க? அவ இங்கிருக்கான்னு சொல்லி தானே என்னை வர வைச்சீங்க?” என்று சுஜாதா அப்பா மறுபக்கம் குதிக்க ஆரம்பித்தார்.

“நீ தன்வி. சுஜாதாவோட ப்ரெண்ட் தானே நீ?” என்று அவளிடமும் கேட்க,

“என்னப்பா சொல்ற? அப்போ பொண்ணு மாறிடுச்சா? ப்ரெண்ட் பொண்ணை தூக்கிட்டு வந்துட்டோமா” என்று உறவுகள் குற்ற உணர்ச்சிக்குள்ளாக,

அந்த பல்க் ஆசாமி திகிலடைந்து போனவன், “அண்ணா நான் நல்லா விசாரிச்சு தான் கடத்தினேன்” என்று தேசிகனிடம் அச்சம் கொண்டான்.

“சுஜா, சுஜா எங்க? சொல்லு தன்வி?” என்று இவளிடம் வந்தார் அவர்.

தன்விக்கோ அந்த இடமே கொதித்தது. யாரையும் பார்க்க, யாரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் சிறிது விருப்பமில்லை. அந்த நேரம் அவளின் கைகளை பற்றி கொண்டு நின்றார் பாட்டி.

“இந்தாம்மா. நீ அமைதியா இருந்து சாதிக்கலாம்ன்னு நினைக்காத. ஒழுங்கா சொல்லு உனக்கு அவ எங்கிருக்கான்னு நல்லா தெரியும். எல்லாம் சேர்ந்து திட்டம் போட்டு தானே அவ இந்தியா வந்தா. அந்த பையன், அவனோட இருக்காளா?” என்று சுஜாதாவின் அப்பா இவளிடம் கேள்விகளை அடுக்க,

“இதென்ன புது கதையா இருக்கு”

“எந்த பையனை கேட்கிறார் இவர்?”

“உங்களுக்கு இன்னுமா புரியலை. பொண்ணு வேற யாரையோ விரும்புது போல. அதான் அவளை தேசிகனுக்கு கட்டணும்ன்னு நிபந்தனை வைச்சிருக்கான். இவன் எல்லாம் எந்த ஜென்மத்துலயும் திருந்த மாட்டான்யா”

“தேசிகா. இதுக்கு மேலயும் நாம பொறுமை காக்க முடியாது. அதான் ஆள் வந்தாச்சு இல்லை. இனி என்ன செய்யணுமோ, செஞ்சு முடிச்சுக்கலாம்” என்று பேச,

“தன்வி. நீ அமைதியா இருக்கிறதை பார்த்தா, சுஜாதா அவனோட தான் இருக்காளா? விட மாட்டேன். உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்” என்று அவர் கத்த,

“நீ முதல்ல எங்களுக்கு பதில் சொல்லுயா? என்ன நெஞ்சழுத்தம் இருந்தா உன் பொண்ணு வேற யாரையோ விரும்புறான்னு தெரிஞ்சும் எங்க வீட்டு பையனை அவளுக்கு கட்டி வைக்க பார்ப்ப?” என்று சுஜாதா அப்பாவிடம் சண்டைக்கு நின்றனர்.

“ஏய் என்னங்கய்யா. பொண்ணை மாத்தி கடந்திட்டு வந்ததும் இல்லாம என்கிட்ட சத்தம் விடுறீங்க”

“நாங்க இந்த பொண்ணுக்கு பண்ணது மட்டும் தான் தப்பு. அதுக்காக எங்க ஒட்டு மொத்த குடும்பமும் அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்க தயாரா இருக்கோம்”

“தாயி. எங்களால தப்பு நடந்து போச்சு. எங்க எல்லோரையும் மன்னிச்சுக்கோம்மா” என்று பெரியவர் தன்வியிடம் நொடியும் இல்லாமல் மன்னிப்பு கேட்க, மற்றவர்களும் அவளிடம் மன்னிப்பு வேண்ட,

சாவித்திரி கண்களில் கண்ணீருடன் தன்வியின் கை பற்றி நெற்றியில் ஒற்றி கொண்டார். தேசிகனுக்கு அந்த நொடி இன்னமும் தலையிறக்கம்.

என் ஒருவனால் மொத்த குடும்பமும் மன்னிப்பு வேண்டி நிற்கிறது!

“யோவ் நீங்க எல்லாம் திருந்தவே இல்லையா? இந்த பொண்ணுகிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டு நிக்கிறீங்க. எல்லாம் சேர்ந்து திட்டம் போட்டு தான் நம்மளை ஏமாத்தியிருக்காங்க”

“அதுக்காக நாம பண்ணது சரின்னு ஆகிடாதுப்பா” என்றார் பாட்டி பெரிய மனுஷியாக.

“பெரியம்மா. நாம எல்லாம் ஒரு குடும்பம். ஆனா இவ. இந்த பொண்ணு நம்ம மொத்த பேரையும் முட்டாளாக்கி இருக்கா. அங்க என் பொண்ணை ஒளிச்சு வைச்சு”

“ஒளிச்சு வைக்க உன் பொண்ணு ஒன்னும் கைக்குழந்தை இல்லை” என்றார் பாட்டி இடையிட்டு.

“நீ இந்த பொண்ணு மேல குற்றம் சொல்றதை விட்டு உன் பொண்ணு எங்க இருக்கான்னு விசாரி போ” என்றார் பெரியவர் கோவமாக.

“நான் ஏன் விசாரிக்கணும்? நீங்க கூறு இல்லாம நடந்துக்கிட்டதால தான் என் பொண்ணு காணாம போயிருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்ணு இங்க வந்தாகணும். இல்லை உங்க ஒட்டு மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வைச்சிடுவேன்”

“ஏய் இந்தா பொண்ணே முக்கியமா உனக்கு தான். சுஜாதா மட்டும் இங்க வரலை?” என்று தன்வியையும் மிரட்ட,

“என்ன பண்ணிடுவீங்க?” என்று இரு குரல்கள் ஒன்றாக வந்தது.

ஒருவன் தேசிகன். மற்றவன் மனோகர்.