மலர் சூடும் பெண்மை 3

அன்றிரவு தன்விக்கு உறக்கம் வருவேனா என்றது. தேசிகனின் பார்வை அவளை உறங்க விடவில்லை.

அறைக்குள் அடைத்து வைப்பது என்பது தாண்டி அவன் ஏதோ செய்ய போகிறானோ என்ற எண்ணம் அவளை உறுத்த ஆரம்பித்திருந்தது.

எனக்கு என்ன தெரியும் இவர்களை பற்றி? சுஜாதாவின் அப்பா வீட்டு ஆட்கள் என்பதை தவிர?

ஏன் சுஜாதவிற்குமே இவர்களை பற்றி எந்தளவு தெரியும்?

நான் இதை ரொம்ப சீரியஸா எடுக்கலையா? இல்லையே சுஜாகிட்ட பேசிட்டு தானே இருக்கேன். ஆனா?

யோசித்து, யோசித்து குழம்பி போனாள் பெண். அம்மா என்னை திட்டுறது சரி? நான் இன்னும் கவனமா இருக்கனும்.

என்ன செய்யலாம்? யார்கிட்ட சொல்லலாம்?

கண்டிப்பா நிதானமா இதை கையாள கூடியவங்களா இருக்கணும். நம்ம குடும்பத்துல அந்த மாதிரி மெட்டீரியல் இருக்கா என்ன? தன்விக்குமே மெலிதான புன்னகை.

‘அச்சோ சுஜாகிட்ட வார்ன் பண்ணனும். நான் அவ இல்லைன்னா தெரிஞ்சா அவகிட்ட தானே போவாங்க’ மெல்லிய குரலில் தோழிக்கு அழைத்து பேசினாள்.

அங்குள்ள நிலவரம் கேட்டு தெரிந்து கொண்டவளுக்கு, நாளைக்கு ஒரு நாள் மட்டும் இருந்தா போதும்! என்பது புரிந்தது.

அந்த பல்க் ஆசாமி அவளின் அறை வாயிலிலே காவல் இருந்தான். வீட்டு ஆட்கள் இவளின் அறைக்கு வர முயற்சிக்கவும் இல்லை.

“அப்போ இவங்க பாசம் எல்லாம் அவ்வளவு தானா?”

பெண்ணுக்கான கவனிப்பில் சிறிதும் குறைவில்லை. அவளின் போன் மட்டும் கையில் இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் வேறு மாதிரி எதாவது செய்திருப்பாள்.

‘பார்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு’ என்று காலை விடிந்ததும் கதவை திறந்து வைத்து கட்டிலில் அமர்ந்தாள்.

குடிக்க, சாப்பிட என்று வந்த எதையும் பெண் மறுக்கவில்லை.

சில நிமிடங்களில் அந்த வித்தியாசம் அவளால் உணர முடிந்தது. பேச்சு சத்தம் இல்லை. வீடே மிகவும் அமைதியாக இருக்க, வேலைகள் மட்டும் எப்பொழுதும் போல் நடந்து கொண்டே இருந்தது.

“என்னாச்சுன்னு தெரியலையே”

சுஜாவோட அப்பா என்ன பேசினார்?

‘நான் சுஜா இல்லைன்னு கண்டிபிடிச்சிட்டா என்னை அனுப்ப வேண்டியது தானே!

ஒருவேளை இன்னமும் தெரியலையா?

நான் முட்டாள் சொன்னதுல கோவம் மட்டும் பொங்குது. அவங்க பண்றது அப்படி தானே இருக்கு?

இப்போ வரைக்கும் நான் தான் அவங்க மாமா பொண்ணான்னு கிராஸ் செக் பண்ணவே இல்லை. இதுல மூக்குக்கு மேல ரோஷம் வேற! போயா எனக்கென்ன!

தன்வி அவளின் பெற்றவர்களுக்கு, வீட்டில் உள்ள எல்லோருக்கும் அழைத்து பேசினாள்.

எதற்கோ “டாட்” என்ற செல்ல முறைப்புடன் சிரிக்க, தேசிகன் அறையை கடந்தவன் இன்னுமே இறுகி போனான்.

தன்வி ஏதோ உறுத்த அறை வாயிலை பார்க்க, பாட்டி தான் இவளை எதிர்பார்ப்புடன் பார்த்து கொண்டிருந்தார்.

அவங்க மகனுக்கு பேசணும்ன்னு நினைக்கிறாங்களா? யோசித்து அவளின் போனை நீட்டி பேசணுமா? என்று சைகையில் கேட்டாள்.

அவர் பதிலளிக்கும் முன், “அத்தை” என்று வந்த முரட்டு பெரியம்மா இவளிடம் பேச விடாமல் அவரை அழைத்து சென்றார்.

‘யப்பா. ரொம்ப தான்’ பெண் சாதாரணமாக கடக்க முயன்றாள்.

ஆனாலும் பாட்டியின் மேல் இருந்த சிறு பாசம் அவளை அலைக்கழிக்க தான் செய்தது.

சுஜாதாவிற்கு பார்த்து இவங்களை ஏமாத்துறேனா?

சரியாக சுஜாதா அவளுக்கு வீடியோ காலில் அழைத்தவள், “தன்வி” என்றாள் மகிழ்ச்சியுடன்.

தோழியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில்,  “கங்கிராட்ஸ்டி” என்றாள் தன்வி உற்சாகத்துடன்.

மணக்கோலத்தில் இருந்தவளின் முகம் இன்னமும் மலர, “தேங்க்ஸ் தன்வி” என்றவள், சிறிது திணறி,

“எனக்கு இன்னும் ஒரே நாள் மட்டும் டைம் கொடு” என்றாள் வேண்டுதலுடன்.

“இன்னும் என்ன சுஜா. அதான் உங்க கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்லை” என்று தன்வி கேட்க,

“ரெஜிஸ்டர் மேரேஜ் நாளைக்கு தான் தன்வி. அப்போ தான் ஸ்ட்ராங்கா இருக்கும்” என்றாள் அவள்.

தன்விக்கு புரிய தான் செய்தது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் நிச்சயம் அவள் சொல்வது ஏற்று கொள்ள கூடியதே!

அவர்கள் பல்கலை கழகத்தில் உடன் படித்த நவீனுடன் சுஜாதாவிற்கு காதல். நவீன் கேரளாவை சேர்ந்தவன். உடன் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவன்.

சுஜாதா காதல் விவகாரம் இருபக்கமும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. சுஜாதாவின் அப்பா முடியவே முடியாது என்று நிற்க, அவள் வீட்டிற்கு தெரியாமல் இந்தியா வந்து சேர்ந்தாள்.

தன்வி மற்றும் சில நண்பர்கள் அவர்களுக்கு உதவ, இதோ இன்று காலை அவர்களுக்கு திருமணம் முடிந்திருந்தது.

மிகவும் ரிஸ்க் எடுத்து தான் இந்த திருமணம் நடக்க, தன்வி அதற்காகவே பொறுத்திருக்கிறாள்.

“நவீன் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு தன்வி” என்றாள் சுஜாதா.

“நவீனும், நீயும் ஸ்ட்ராங்கா இருங்க போதும்” என்று தன்வி சொல்ல,

“உனக்கு தான் ரொம்ப பெரிய நன்றி சொல்லணும் தன்வி. நான் அங்க இருக்கேன்னு நினைச்சு தான் அப்பா விசாரிக்காம இருக்கார். இல்லைண்ணா இன்னமும் எங்களுக்கு சிக்கல்” என்றாள் உள்ளார்ந்து.

நவீனும் அவளுக்கு நன்றி சொல்ல, தன்வி அவர்களுக்கு தைரியம் சொல்லி வைத்தாள்.

நாளைக்கு வரைக்கும் இங்க இருக்கணுமா? ஏனோ உள்ளம் திரும்ப அவளை எச்சரிக்க, பேசாம வீட்ல யார்கிட்டேயாவது சொல்லி வைப்போம்

அறையின் கதவு மூடி கொண்டவள், அவளின் மாமாவிற்கு அழைத்தாள். அக்காவின் கணவர். கொஞ்சம் பொறுமையானவர் என்பதாலே அவருக்கு அழைத்து சொல்ல, அவரே வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

தன்விக்கு நாமளே இழுத்து விட்டுக்கிட்டோமா என்று பயமாகி போனது.

“மாமா. மாமா” என்ற அவரை பொறுமையாக இருக்க வைக்க அவள் நிறையவே போராட வேண்டியிருந்தது.

போன் பேசி கொண்டிருந்த சில நிமிடத்திலே அவள் எங்கிருக்கிறாள் என்று மொபைலை வைத்து கண்டுபிடித்துவிட்டவர், அவளிடம் தேனி என்றார்.

அப்போது தான் பெண்ணுக்கும் தெரிந்தது. “ஒரு நாள் மட்டும் மாமா ப்ளீஸ். ப்ளீஸ். அவங்க ரெஜிஸ்டர் மேரேஜ் முடியற வரைக்கும் தான். ப்ளீஸ் மாமா” என்று தன்வி மணி நேரமே அவரிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.

“உனக்கென்ன அவங்க மேரேஜ் தானே முடியணும். நான் பார்த்துகிறேன்” என்றார் மனோகர்.

“மாமா ப்ளீஸ். நவீன் பேமிலி அரசியல்ல இருக்கிறவங்க. ரொம்ப காம்ப்ளிகேட் ஆகிடும். அப்பா இதை கண்டிப்பா விரும்ப மாட்டார்” என்று தன்வி சொல்வது, மனோகருக்கும் புரிந்தது. அவர்கள் தலையீடு இருப்பது தெரிந்தால் விவகாரம் வேறு மாதிரி திரும்பும்.

“அதுக்காக உன்னை அங்க விட்டு வைக்க சொல்றியா? எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம வீட்டு பொண்ணை தூக்குவாங்க” என்று அவர் இன்னமும் குதித்தார்.

“நான் அவங்க யார்ன்னு விசாரிச்சுட்டு வரேன் இரு” என்று போன் வைத்தவர், தேசிகன் குடும்பத்தை முழுதும் தெரிந்து கொண்டு தேங்கி நின்றார்.

தன்விக்கு அழைத்தவர், “அவங்க ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்ச அடுத்த செகண்ட் நான் அங்க இருப்பேன்” என்றும் சொல்ல,

“தேங்க்ஸ் மாமா. இங்க அந்த ஆண்ட்டி. ம்ம். சாவித்திரி ஆண்ட்டி அவங்களுக்கும் சுஜா அப்பா வரது அவசியம் போல. அதை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் மாமா” என்றாள் தன்வி.

“ம்ம். நான் கூப்பிட்டுட்டே இருப்பேன். பிக் மை கால்” என்று மனோகர் வைத்த பின்னே, தன்விக்கு மூச்சு சீரானது.

தண்ணீர் முழுதும் குடித்து முடிக்க,  கதவு தட்டப்பட்டது.

தேசிகன் தான். வெளியே வந்த தன்வியை ஆராயும் பார்வை பார்த்தவன் “உன் அப்பா சொல்றதுல உனக்கு சம்மதமா?” என்று கேட்க,

தன்விக்கு அவர் என்ன சொன்னார் என்பதே தெரியாதே!

அவனுக்கு சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக பொதுவாக தலையசைக்க, சட்டென தேசிகன் முகத்தில் அப்படி ஒரு வெறுப்பு.

தன்வி அந்த அதிகப்படியான வெறுப்பு ஏனென்று புரியாமல் நிற்க, “நாளைக்கு காலையில ரெடியா இரு” என்று வார்த்தைகளை கடித்து துப்பி சென்றான்.

“ஏன்? எங்க?” என்ற தன்வியின் கேள்விகள் அவனின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

மறுநாள் அதிகாலையிலே அவளின் அறை கதவை தட்டி அவளை கிளம்ப சொன்னார்கள்.

பாட்டி அவளுக்கான உடை கொடுக்க, தன்வி வாங்கி கொண்டாள். இங்கு வந்த நாளில் இருந்து அவர்கள் தானே உடை எல்லாம் கொடுக்கின்றனர்.

பட்டு புடவை இருக்க, “எனக்கு சேரி வேண்டாம் பாட்டி” என்றாள்.

“ஏன் கட்ட தெரியாதா?” என்று பெரியம்மா வர,

“தெரியும். ஆனா”

“ஆனா போனா எல்லாம் இல்லை. சீக்கிரம் கிளம்பு. நேரம் ஆகுது” என்று அவர் விடாப்பிடியாக இருக்க, தன்விக்கு காலையிலே அவரோட போராட வேண்டாம் என்று கிளம்ப சென்றாள்.

பாட்டி அவளுக்கு பூ வைக்க, “எதாவது விசேஷமா பாட்டி” என்று கேட்டாள் தன்வி.

அவர் இவளை வித்தியாசமாக பார்த்தவர், “கல்யாணம் கண்ணு” என்றார்.

தன்வி சரி என்று கேட்டுகொள்ள, பாட்டி முதல் வேலையாக பேரனை தேடி சென்றார். அவன் கிளம்பியிருக்க, தன் மருமகளிடம் பேசினார் பாட்டி.

“அத்தை அவ பேச்சை எல்லாம் நம்பாதீங்க. எல்லாம் திட்டம் போட்டு தான் வேலை நடக்குது” என்றார் அவர் சிறிதும் ஏற்று கொள்ளாமல்.

“இல்லை கனகா. எனக்கு என்னமோ சரியா படலை” என்று பாட்டி சொல்ல, மருமகள் அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றார்.

பல்க் ஆசாமி துணையுடன் தன்வி கோவிலுக்கு வந்து சேர, தேசிகனின் ஒட்டு மொத்த குடும்பமும் அங்கு ஆஜராகியிருந்தது.

“நெருங்கிய சொந்தத்துல கல்யாணமோ” தன்வி எல்லோரையும் சாதாரணமாக கடந்து பாட்டியின் அருகில் சென்று நின்றாள்.

தேசிகன் அவளை அழுத்தமாக பார்த்து, பூஜையின் கவனம் வைத்தான். சில நிமிடத்தில் பூஜை வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

“வா கண்ணு” என்று பாட்டி அவளின் கை பற்றி அழைத்து செல்ல, எதிர்படுவோர் சிந்திய புன்னகைக்கு பெண்ணும் மெலிதாக புன்னகைத்தபடி நடந்தாள்.

மண்டபத்தில் எல்லாம் சேர, சாவித்திரி மிகவும் கடினமான முகத்துடன் நின்றிருந்தார். முதல் நாளுக்கு அப்புறம் இவங்களை பார்க்கவே இல்லையே! தன்வி அவரை பார்க்க, அவரோ இவள் பக்கமே திரும்பவில்லை.

“கண்ணு. இங்க உட்காரு” என்று பாட்டி சொன்ன பின்னே சாவித்திரியிடம் இருந்த தன் பார்வையை திருப்பிய நொடி, தேசிகன் அவளின் கழுத்தில் மாலையை அணிவித்திருந்தான்.

தன்விக்கு உச்சகட்ட அதிர்ச்சி. “வாட்” என்ற இவள் குரல் கூட அங்கெழுந்த மேள சத்தத்தில் அமுங்கி போனது.

மணமகனாக தேசிகன் நிற்க, மணமகளாக இவள்!

தன்வி வேகமாக மாலையை கழட்ட போக, தேசிகன் அவள் கையை இறுக பற்றியிருந்தான்.

“என்ன பண்றீங்க நீங்க” என்று பெண் கோவத்தில் வெடிக்க,

“ஷ்ஷ். சத்தம் இருக்க கூடாது” என்றான் தேசிகன் எச்சரிக்கையாக.

அதிர்வு, கோவத்தில் தன்விக்கு உடல் மொத்தமும் நடுங்க ஆரம்பித்தது.

“நீயும், உன் அப்பாவும் போட்ட பிளான் தானே இது” என்றான் தேசிகன்.

தன்வி புரியாமல் பார்க்க, “நடிக்காத. அவர் வரணும்ன்னா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு உன் அப்பன் நிபந்தனை வைச்சது உனக்கு தெரியாது” என்று வார்த்தைகளை சீற்றமாக கொட்டினான்.

“கடவுளே. நான்”

“வாயை திறக்காத. கொன்னுடுவேன்”

“எங்க சூழ்நிலையை உங்களுக்கு சாதகமா பயன்படுத்துற உன் அப்பனோட எச்சை புத்திக்கு எல்லாம் சேர்ந்து அனுபவிக்க போறீங்க”

“இங்க பாருங்க தேசிகன். நான் சொல்றதை”

“என் பேரை சொன்ன பல்லை பேத்துடுவேன்”

“ராசா. கோவம் வேணாம் சாமி. எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க. நேரம் போய்ட்டு இருக்கு” என்று பாட்டி இருவருக்கும் இடையில் வர,

“பாட்டி, பாட்டி நான்” என்று தன்வி அவரிடம் பேச போக,

தேசிகன் அவளின் கைக்கு கொடுத்த அழுத்தத்தில் “ஆஹ் அம்மா” என்று தன்வி வலியில் கண்கள் கலங்கிவிட்டாள்.

“இதுக்கு மேல உன்னோட டிராமா பார்க்க நாங்க ரெடி இல்லை” என்று அவளிடம் கொதித்தவன், மாங்கல்யத்தை எடுத்து வர சொன்னான்.

தன்வி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் தேசிகன் கையை உதறி மாலையை கழட்டி வீசி எறிந்தாள்.

“ஹேய்” என்ற ஒட்டு மொத்த குடும்பமும் குரல் எழுப்ப, தன்வி கொதிப்புடன்  தேசிகனை பார்வையால் எரித்தாள்.

தேசிகனுக்கு அவளின் செயல் இன்னும் சீண்டிவிட, வலுக்கட்டாயமாக மாங்கல்யத்தை அவளின் கழுத்துக்கு கொண்டு சென்றான்.

தன்வி திமிறியவள், அவன் கைகள் அப்படியே நிற்பதில், தேசிகனை பார்த்தாள். அவனோ அவள் பார்வையை சந்தித்த நொடி,  “ஹாஹா” என்று வென்று சிரிக்க ஆரம்பித்தான். அந்த சிரிப்பில் அவ்வளவு ஆக்ரோஷம்.

அவனின் இரு கைகளும் அவளின் கழுத்தில் அழுத்தமாக பதிந்திருக்க, மாங்கல்யம் அவளின் நெஞ்சில் உரசி கொண்டு நிற்க, தேசிகன் மாங்கல்ய முடிச்சிடாமல், “எப்படி? எப்படி உன் அப்பன் நிபந்தனைக்கு நாங்க அடி பணிஞ்சிடுவோமா?” என்று வெடித்தான்.

“மணமேடை வரை வந்து உன் கழுத்துல தாலி ஏறணும். இதோ என் மாங்கல்யம் உன் நெஞ்சுல இப்படி நிக்கணும். முடிச்சு போட என் கை உன் கழுத்தை சுத்தி இருக்கணும்”

“ஆனா” என்றவன் பார்வை விபரீதமாக மாற, “மூணு முடிச்சு நான் போட மாட்டேன். இதோ இப்படி மாங்கல்யத்தை விட்டுடுவேன்” என்று அவன் கையை எடுக்க, அந்த மஞ்சள் பொன் தாலி அப்படியே இருவருக்குமிடையே சரிந்து விழுந்தது.

“தேசிகா” என்று ஒட்டு மொத்த குடும்பமும் பதற,

தன்வி நடந்ததில் அசைவற்று நின்றுவிட்டாள்.  மஞ்சளின் ஈரம் அவளின் கழுத்தில் இன்னமும் உணர, அவளின் விரல்கள் தன் போல, அந்த ஈரத்தை தொட்டு பார்த்தது.

“என்ன நடக்குது இங்க? என் பொண்ணு எங்க?” என்ற சுஜாதா அப்பாவின் கூக்குரல் கோவிலில் பெரிதாக எதிரொலித்து, மொத்த பேரையும் உறைய வைத்துவிட்டது.

தேசிகன் கன்னத்தில் விழுந்த அறை, உறைந்து நின்றிருந்தவர்களை தெளிய வைத்துவிட்டது.