மலர் சூடும் பெண்மை 23

“என்னாச்சு என் தன்வி பொண்ணுக்கு?” என்று தேசிகன் அவளை நெஞ்சின் மீது தாங்கி கொண்டே கேட்க,

“டையர்டா பீல் பண்றேன்” என்றாள் தன்வி.

“பீல் பண்றியா?” தேசிகனுக்கு புரியவில்லை. முரளிகிட்ட கிட்ட பேசணுமே.

“சாப்பிட்டியா?”

“சாப்பிட்டேன். ஆனாலும் பசிக்குது” என்று தன்வி கணவன் முகம் பார்க்க,

“சரி வா” என்று அவளை உணவுண்ணும் இடத்திற்கு அழைத்து வந்தான்.

அவனுக்கான உணவு அங்கு தயாராக இருக்க, மனைவிக்கு பரிமாறினான்.

“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று தன்வி கேட்க,

“எனக்கு பசிக்கலை. நீ சாப்பிடு” என, தன்வி சாப்பிட ஆரம்பித்துவிட்டவள் என்ன நினைத்தாளோ, தேசிகனுக்கு ஊட்ட வந்தாள்.

“ஹேய்” என்ற தேசிகன் மனைவியின் முகம் பார்த்தே மறுக்கவில்லை.

தன்வி அவனுக்கு கொடுத்து கொண்டே இருக்க, “எனக்கு போதும்டி. நீ சாப்பிடு” என்று அவளை உண்ண சொன்னவன், “முரளி வெய்ட் பண்ணிட்டு இருக்கான். பேசிட்டு வரேன்” என்றான்.

முரளி வெளியே காத்திருக்க, “சாப்பிட்டியாடா?” என்று அவன் பக்கத்தில் அமர்ந்து விசாரித்தான்.

“பார்ட்டில ஆச்சுண்ணா” என்ற முரளி ஏதோ சொல்ல வந்து தயங்க,

“என்ன சொல்லுடா?” என்றான் தேசிகன்.

“உங்க மாமா பொண்ணு சுஜாதா, அண்ணிகிட்ட போன் பேசினாங்க” என.

“உன் அண்ணி டென்க்ஷன் ஆகிட்டாளா?” என்று கணித்தான் கணவன்.

“ம்ம். அதோட அவங்க அப்பாவை அன்னைக்கு கடத்தினது யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்க போல” என்று அவனின் அனுமானத்தை சொன்னான்.

“மிஸ்டர் வில்லங்கத்துக்கு தெரியுமா?” என்று கேட்க.

“ராஜேந்திரன் சார்க்கு மட்டும் தெரியும் போல. அண்ணி என்ன யோசிக்கிறாங்கன்னு கெஸ் பண்ண விட மாட்டேங்கிறாங்க”

“ஹாஹா. நீ இருக்கிறதுல உஷாரா இருப்பா. நான் பார்த்துகிறேன் விடு” என்று தம்பியின் தோள் தட்டினான்.

“எப்போ ஊருக்கு போறோம்ண்ணா” என்று முரளி கேட்க.

“நாங்க மட்டும் தான் போறோம். நீ வில்லங்கத்தோட இருந்தாகணும்” என்றான் தேசிகன்.

“அவரோட இருக்கணும் அவ்வளவுதானே. அதுக்கெதுக்கு இங்க? நாம அவரையும் அள்ளிட்டு ஊருக்கு போயிடலாம்”

“அள்ளிட்டு போறியா? என் அப்பாவை பார்த்தா உனக்கெப்படி இருக்கு” என்று தன்வி உணவுண்டு வந்தவள், முரளி தலையிலே கொட்டி விட்டாள்.

“அண்ணி. கூட்டிட்டு போயிடலாம் சொன்னேன்” என்று முரளி சமாளித்து எழ போக,

“இருடா” என்ற தேசிகன், “நீ ஒழுங்கா சாப்பிட்டியா?” என்று மனைவியை விசாரித்தவன் கை என்னமோ தன்வி கொட்டிய முரளி தலையை தேய்த்து கொண்டிருந்தது.

தன்வி உர்ரென கணவனையும், அவன் கையையும் பார்த்தவள், “நான் கொட்டி உங்க தம்பிக்கு வலிச்சிடுமா என்ன?” என்று கேட்டாள்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு முதல்ல” என்று அதட்ட,

“சாப்பிட்டேன். உங்களுக்கு ஆர்டரும் போட்டிருக்கேன்” என்று கணவனுக்கு சொன்னவள்,

“எப்படியும் உன் அண்ணா வராத பார்ட்டில நீ ஒழுங்கா சாப்பிட்டிருக்க மாட்ட. உனக்கும் சேர்த்து தான் சாப்பாடு வரும். சாப்பிடுங்க. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று அறைக்கு சென்றுவிட, தேசிகனுக்கு மனைவி பின்னே செல்லத்தான் பரபரத்தது.

அவன் மட்டும் என்றால் சாப்பாடாவது ஒன்றாவது என்று ஓடியும் இருப்பான். முரளி இருக்க பொறுத்தவன், உணவு வரவும் இருவரும் பேசியபடி உண்டனர்.

தன்வி இப்போது நன்றாகவே தெளிந்திருந்தாள். கணவனை கண்ட மாயமா? இல்லை வயிறார உண்ட மயக்கமா?

ம்ம். பதிலே தேவையில்லை என்பதாய் பெண்ணிடம் அழகான புன்னகை.

அன்று காலையில் இருந்து நடந்த சம்பவங்களை நினைத்த படி கட்டிலில் விழுந்தாள் தன்வி.

ஒப்பந்தத்தில் கையெழுத்தான மகிழ்ச்சியில் திளைத்தவளுக்கு முதல் சுணக்கம் தேசிகன் பார்ட்டிக்கு வருவது பற்றி ராஜேந்திரன் விசாரித்தது.

அடுத்து சுஜாதா அழைத்து அவளை கடுப்பேற்றி இருந்தது.

அவள் பேச்சு, தன்விக்கு கோவத்தை கொடுத்தாலும் அவள் கேட்ட கேள்வி? அது தன்வியை அதிகமே யோசிக்க வைத்தது.

தேசிகன் தொழில்? அது என்னாச்சு? சுஜாதா அப்பாவை வர வைச்சதும் இதுக்காக தானா?

அப்படியென்ன தொழில் செய்ய நினைச்சார்? தன்வி ஓய்வெடுக்கும் எண்ணமில்லாமல், சாவித்திரிக்கு அழைத்துவிட்டாள்.

மருமகளின் வெற்றிக்கான அவரின் அன்பளிப்பு வந்துவிட்டது. “பிடிச்சுதா? வீட்ல எல்லாம் என்ன பண்றாங்க? சாப்பிட்டீங்களா அத்தை” என்பது போன்ற கேள்விகள் முடியவும்.

 “ரெஸ்ட் எடுக்கலையா தன்வி?” என்று சாவித்திரி கேட்க,

“எடுக்கணும் அத்தை. சுஜாதா எனக்கு போன் பண்ணியிருந்தா. அவங்கப்பாவை குடும்பத்துக்குள்ள சேர்த்துக்கணும்ன்னு கேட்டா” என,

“ம்ம். நம்ம வீட்ல எல்லார்கிட்டேயும் பேச முயற்சி பண்ணிட்டே தான் இருக்கா” என்றார் சாவித்திரி பெருமூச்சுடன்.

“அவளோட ஆசை நிறைவேறாது தன்வி. தேசிகன், நான் மட்டுமே அந்த முடிவை எடுக்கலை. வீட்ல உள்ள மத்தவங்களுக்கு வெறுத்து போய் எடுத்த முடிவு தான் அது” என்றார்.

“கஷ்டத்துல பங்கு போடாத மகன், சந்தோஷத்துல மட்டும் பங்கெடுக்க நினைச்சா நடக்குமா? பெரியவரும், தேசிகன் மாமாவும் உறுதியா நிக்கிறாங்க. தேசிகனே சொன்னாலும் கேட்டுக்க மாட்டாங்க”

“புரியுது அத்தை. நான் அது பற்றி பேச நினைக்கலை. உங்க மகனோட தொழில் என்னென்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்” என்றாள் தன்வி.

“என். என்ன தன்வி?”

“அவர் ஆரம்பிச்ச தொழில் அப்படியே ஸ்டாப் ஆகிடுச்சுன்னு, அதான் கேட்டேன் அத்தை”

சாவித்திரிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. முதல் முதலாக மருமகள், மகனை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறாள்,  விசாரிக்கிறாள். ம்ம். வாழ்ந்திடுவாங்க. என் பிள்ளைங்க சந்தோஷமா இருப்பாங்க. மருமகளின் ஒற்றை கேள்வியில் அன்னையின் பாரமெல்லாம் இறங்கி போனது.

“தேசிகனோட திட்டம் பெருசு தன்வி. நம்ம ஊரே மலை, அருவின்னு சுற்றுலா தளமா இருக்கிறதால, விவசாயத்தையும் அதோட இணைச்சு ஓர் தொழில் மையமா மாத்த பிளான் பண்ணான்” என்றார்.

“நம்மளோட விவசாயத்துல விளையுறதை நாமே உணவா மாத்தறது. உதாரணமா பழங்களை சேகரிச்சு அதை ஜாம், ஜுஸ்ன்னு, மசாலா பொருளையும் பெரிய அளவுல மார்க்கெட் பண்றதுன்னு, ரிசார்ட் ஆரம்பிச்சு டூரிஸத்தை டெவெலப் பண்றதுன்னு அவன் கனவு அதிகமே தன்வி”

“ரிஸ்க் எடுத்து பண்ணா, நல்ல ஐடியா தான் அத்தை” தன்வி கணவனை நினைத்து புருவம் உயர்த்தினாள்.

“ரிஸ்க் எடுத்தான் தன்வி, அதுதான் தேசிகனுக்கே ரிஸ்க்கா முடிஞ்சி போச்சு” என்றார் சாவித்திரி.

“புரியலை அத்தை”

“அவனோட திட்டங்களுக்கு நிறைய ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. நம்மளோட நிலம் மட்டுமே போதாதுன்னு, ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டேயும் பேசினான். முதல்ல யோசிச்சவங்க, தேசிகனோட விளக்கத்துல ஒரு பகுதியை கொடுக்க ஒத்துக்கிட்டாங்க”

“உங்க மகனோட பிளான் சக்ஸஸ் ஆனா அவங்களுக்கும் லாபம் தானே அத்தை. வேலை வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும், நம்மளோட வெள்ளாமைக்கும் நல்ல மதிப்பு கிடைக்குமே” மருமகள் சட்டென புரிந்து கொண்டாள்.

சாவித்திரிக்கு அதில் பெருமை. “ம்ம். தேசிகனும் இதை சொல்லித்தான் அவங்களை சம்மதிக்க வைச்சான். நிலத்தையும் எழுதி கொடுத்துட்டாங்க. முதல்ல ரிசார்ட் ஆரம்பிக்கலாம்ன்னு பேங்க்ல பேசி, தொழில் கடனுக்கு ஏற்பாடு பண்ணான். அங்க தான் சுஜாதாவோட அப்பா தேவைப்பட்டார்”

“அவரும் பரம்பரை சொத்துக்களுக்கு வாரிசாச்சே. தேசிகன் அவன் கோவத்தை எல்லாம் விட்டு அவர்கிட்ட பேசினான். அதுக்குண்டான பணத்தை கொடுத்திடுறேன், வந்து கையெழுத்து மட்டும் போட்டுட்டு போங்கன்னு கூப்பிட்டான்”

“அவர் வரலை” என்று தன்வி சொல்ல.

“ஆமா. நம்ம பணத்தை கொடுத்து, ஊர்க்காரங்க நிலத்தையும் எழுதி வாங்கியாச்சு. பேங்க் மேற்படி பணத்தை கொடுக்க தயாரா இருக்கு. சுஜா அப்பா மட்டும் வர மாட்டேன்னு நிக்கிறார். தேசிகன் மேல ஊர்க்காரங்க வைச்ச நம்பிக்கைக்கு அவனால பதில் சொல்ல முடியலை”

“நிறைய மாசம் பொறுத்துகிட்ட தேசிகனுக்கு சுஜாதா இந்தியா வரது தெரியவும் அவனோட வேலையில இறங்கிட்டான். எங்களுக்கும் ஓர் அளவுக்கு மேல மறுக்க முடியவில்லை. அவனோட வழி தப்புன்னு தெரியும், ஆனா சுஜாதா இந்த வீட்டு பொண்ணு தானேங்கிற சின்ன உரிமை, பாட்டியோட பாசம், பெரியவரோட சப்போர்ட்ன்னு முரளி வைச்சு சுஜாக்கு பதிலா உன்னை கூட்டிட்டு வந்துட்டோம்” என்று முடிக்க,

“சுஜா அப்பாகிட்ட கையெழுத்து வாங்கிட்டீங்கன்னு சொன்னா, அப்புறம் ஏன் தொழில்?” என்று கேட்டவளுக்கே காரணம் நினைவு வந்து நிறுத்திவிட்டாள்.

“அந்த கேஸ்ன்னால, லோன் மட்டுமில்லை, உன்மேல இப்படி ஒரு கறை இருக்கு, உன்னை நம்பி எப்படி டூரிஸ்ட் வருவாங்கன்னு, ரிசார்ட் ஆரம்பிக்க கொடுத்த அப்ரூவலையும் கேன்சல் பண்ணிட்டாங்க. தேசிகனோட அப்பா அதுக்கு பின்னாடி இருந்தார்” என்றார் சாவித்திரி.