தன்விக்கு அவனின் அந்த கோவம், மெலிதான அச்சத்தை கொடுத்தது உண்மை.

“தேசிகா. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? நாம போற வழி தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும். என் மகன் வாழ்க்கை, அப்படி இருக்க வேணாம்டா” என்றார் சாவித்திரி கெஞ்சுதலாக.

“நீங்க நல்ல வழியில தான் போனீங்க? அப்புறம் ஏன் உங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சது?” மகன் பளிச்சென கேட்டு வைத்தான்.

“ஏங்க” என்று தன்வி கணவனை அதட்ட,

சாவித்திரிக்கு மகன் கேள்வி பழகி போன ஒன்று போல. அதனால் அவர், “என்னோட அந்த வாழ்க்கையை நான் வேணாம்ன்னு தூக்கி எறிஞ்சதையும் நீ மறந்திடாத தேசிகா” என்றார்.

“எப்போ தூக்கியெறிஞ்சிங்க? எல்லாம் கொடுமையும் அனுபவிச்சத்துக்கு அப்புறம், அந்தாள் இன்னொரு குடும்பத்தையும் நடத்திட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்” மகன் குத்தினான்.

“ஆமா. அப்போ தான் தூக்கி போட்டேன். எனக்கு அந்த தைரியத்தை என் பெரிய மகன் கொடுத்தான். ஆனா இப்போ அதே மகன், அந்தாள் வழியிலே போறானே, அதுக்கு என்ன சொல்ற?”  சாவித்திரி அந்த பக்கம் சீறினார்.

“அந்தாள் நம்மை ஓட ஓட விரட்டினதையும், உங்க மகன் அந்த வழியில போனதால தான் நம்மாள அந்த ஊர்ல வாழவே முடிஞ்சதுன்றதையும் நீங்களும்  மறந்துடாதீங்க” தேசிகன் கோவத்தில் சிவந்து போனான்.

“ஏங்க? இப்போ ஏன் இவ்வளவு கோவம். ப்ளீஸ்” என்று தன்வி அவன் கையை பற்றி கொள்ள,

“தேசிகா. அவ பயப்படுறது தெரிஞ்சும் நீ உன் கோவத்தை குறைக்க மாட்டியா?” என்று சாவித்திரி மகனை கண்டிக்க,

“தெரியட்டும் என் பொண்டாட்டிக்கு எல்லாம் தெரியட்டும். இப்போ அவ பார்க்கிறது எல்லாம் ஒன்னுமில்லை, அவ புருஷன் ஊர், ஊரா ஓடி ஒழிஞ்சதையும் அவ தெரிஞ்சுக்கணும் இல்லை”

“எனக்கு எதுவும் தெரிய வேணாம். நீங்க முதல்ல நிதானத்துக்கு வாங்க ப்ளீஸ்”  என்றாள் தன்வி.

“ஏன்? ஏன் தெரிய வேணாம்? தெரிஞ்சா என்னை விட்டு போய்டுவியா என்ன?” என்று அவளிடமும் பாய,

“தேசிகா” என்று அந்த பக்கம் சாவித்திரி சத்தமிட, தன்விக்கு அந்த நேரம் என்ன பேச என்று கூட தெரியவில்லை.

“ஆமாண்டி. என் அப்பனுக்கு பயந்து என் அம்மாவையும், என் தம்பியையும் கூட்டிட்டு ஊர், ஊரா போனேன். ஆனா அந்தாள் என் மாமாவை பிடிச்சு வைச்சு, எங்களை திரும்ப வர சொல்லி எங்கம்மாவை மிரட்டினான். என்ன செய்ய சொல்ற சொல்லு? என்ன செஞ்சிருக்கணும் நான்?”

தன்விக்கு இதெல்லாம் புதிது, பெண் விழித்து நிற்க, “செஞ்சேன். ஆமா அந்தாளோட அப்பாம்மாவை என் கட்டுப்பாட்டுல கொண்டு வந்தேன். மொத்த சொத்தையும் என் பேருக்கு எழுதி வாங்கினேன். அவங்க பங்கு பிரிக்காதது எனக்கு லாபமாகிடுச்சு. என்ன அதிர்ச்சியாகிற? அது இருக்க போய்த்தானே அந்த ஆட்டம். அதான் மொத்தத்தையும் புடிங்கிட்டேன்”

“அப்புறம்  மொத்த குடும்பமும் கதறிட்டு வந்தாங்க பாரு. என் அம்மா அழுதது எல்லாம் ஒன்னுமே இல்லைங்கிற அளவு அவங்களை வைச்சு செஞ்சு தான், திருப்பி கொடுத்தேன். அதுவும் முழுசா இல்லை. கால் பங்கு தான்”

“அவங்க சொத்து உங்களுக்கு எதுக்கு?” தன்வி கேட்டேவிட்டாள்.

“அந்தாள் ரத்ததுக்காக இல்லை. என் அம்மாக்காக! கட்டாயப்படுத்தி வாழ தெரிஞ்சவனுக்கு, அதுக்கான தண்டனையும் கிடைக்கணும் இல்லை”

“தேசிகா. அதுக்காக எல்லா நேரமும் அதே வழியை தான் தேர்ந்தெடுப்பியா?. கொஞ்சம் பொறுமையா வேற மாதிரி”

“பணம், பவர் கொடுக்காததை பயம் தான் கொடுக்கும்மா. ஏன் நம்ம குடும்பம் பரம்பரியத்துல, பணத்துல, பவர்ல எதுல குறைஞ்சுட்டோம். ஆனாலும் அந்தாள் மாமாவை வைச்சு நம்மளை பயமுறுத்திட்டார் தானே. அப்போ மட்டுமில்லை, எப்போவும் பயம் மட்டும் தான் நிரந்தரம்”

“தேசிகா”

“உண்மைம்மா. தன்வி பெரியப்பா MP, மாமா SP. உங்க சம்மந்திகிட்ட பணம் கொட்டி கிடக்குது. ஆனாலும் அவன் கொடுத்தானா? நான் கொஞ்சூண்டு பயத்தை மட்டும் தான் காட்டினேன். உடனே என் பொண்டாட்டி பேருக்கு எழுதி கொடுத்துட்டு போயிட்டான். இப்போ சொல்லுங்க என் வழி தப்புன்னு”

“தப்பு தான் தேசிகா. எல்லா முறையும் நாம இதுபோல ஜெயிக்க முடியாது”

“தோற்கிற வரை ஜெயிச்சுட்டு போறேனே”

“தேசிகா”

“ம்மா. நானா யாரையும் போய் வம்புக்கு இழுக்கலை. அவங்க ஆரம்பிக்கிறதை நான் முடிக்கிறேன். அவ்வளவு தான்”

“ஏண்டா இப்படி?” சாவித்திரி அளவில்லா வேதனை கொண்டார்.

“எனக்கு என்ன கிடைச்சதோ, அதைத்தான் நான் மத்தவங்களுக்கும் திருப்பி கொடுக்க முடியும்” என்று மகன் போனை வைத்துவிட, தன்வி வாட்டர் பாட்டிலுடன் நின்றாள்.

“ஏன் என்னை அடிக்க கட்டை எதுவும் கிடைக்கலையா?” என்று தேசிகன் கேட்க,

தன்விக்கு ஆயாசம், “முதல்ல குடிச்சு ரிலாக்ஸ் ஆகுங்க” என்று நீட்டினாள்.

தேசிகன் வாங்கி முழுதும் குடித்துவிட்டு, “ம்ம். ஆரம்பி” என்றான் மனைவியிடம்.

“எனக்கு இதை எல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சே தான் செய்றீங்க. அப்புறம் என்னன்னு ஆரம்பிக்கட்டும் நான்?”

“அயோ நீங்க இப்படின்னு எனக்கு தெரியாம போச்சேன்னு கூப்பாடு போடுவன்னு எதிர்பார்த்தேன்”

“நம்மளோட முதல் சந்திப்பை நான் மறந்திருந்தா உங்க எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கும்” என்றாள் தன்வி.

“ம்ம். பரவாயில்லை. உன் அப்பா அளவுக்கு நீ இல்லை. கொஞ்சம் ஸ்மார்ட் தான்” என்றான் தேசிகன்.

“அவரை இழுக்காம பேசுறீங்களா?” மகள் கோபம்கொள்ள,

“எல்லாத்துக்கும் அவர்தான் மூலகாரணம். ஆனா நான் அவரை இழுக்க கூடாதில்லை. என்னடி உங்க நியாயம்?” என்று தேசிகன் நக்கலடித்தான்.

தன்வி அவனை முறைக்கவே செய்ய, “நீ என்னை கண்ணாலே எரிச்சாலும் உண்மை மாறாதுடி. என்னை தோற்க வைக்க அவ்வளவு அவசரம் தேவையா? முதல் நாள் முழு பணத்தையும் கொடுத்ததும் இல்லாம, மறுநாள் அவன் கேட்டான்னு திரும்பவும் பணத்தை கொட்டியிருக்கார்”

“அவர் என்னமோ பண்ணிட்டு போறார்ன்னு விட வேண்டியது தானேங்க”

“என் பொண்டாட்டி தன்வி பேர் அங்க இல்லைன்னா விட்டிருப்பேன்” என்று தோள் குலுக்கினான் தேசிகன்.

தன்விக்கு அவளின் கோவத்தை கூட காட்ட முடியா ஆதங்கம். இவள் பேசினால் இவளுக்கு மேல் எகிறுவான் இந்த நல்லவன்!

“இதோட எதிர்வினை எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கு தெரியும் தானே?” என்று கேட்க,

“ஏன் பயமா இருக்கா உனக்கு?” என்று பதிலுக்கு கேட்டுவைத்தான் தேசிகன்.

“ஆமா பயம்ன்னு சொன்னா?”

“உனக்கு தைரியம் வர என்ன பண்ணணுமோ, அதை பண்ணுவேன்”

“அப்போவும் இதெல்லாம் நிறுத்த மாட்டீங்க இல்லை”

“இங்க பாருடி. நான் பதவிக்காக, பணத்துக்காக எதையும் செய்றதில்லை. இப்போ வாங்கின சொத்தை நான் வேணாம்ன்னு விட்டதும், இதெல்லாம் நடக்க கூடாதுன்னு தான். ஆனா நடந்திடுச்சு, உன் அப்பா நடத்தி காட்டிட்டார்”

“காட்” என்று பெண் நெற்றி நீவிகொள்ள,

தேசிகன் மனைவியை இழுத்து தன் கைக்குள் கொண்டு வந்தவன், “நாம மட்டுமே சரியா இருந்தா பொழைக்க முடியாது. எதிர்ல இருக்கிறவனும் இருக்கணும். இல்லை நாம இருக்க வைக்கணும்டி” என்றான்.

“எனக்கு இந்த டென்க்ஷன் எல்லாம் வேணாம். நாம அமைதியா வாழணும்” என்றாள் மனைவி.

“நீ கண்டுக்காத வரைக்கும் உனக்கு இந்த டென்க்ஷன் இருக்காது”

“விடுங்க என்னை” என்று அவன் கையில் இருந்து திமிறினாள் தன்வி.

தேசிகனும் விட்டுவிட, “உங்களை” என்று அவனை அடிக்கவும் செய்தாள் பெண்.

“கோவம் வரும் போதெல்லாம் நீ என்னை அடிக்கிற? யாருக்கும் இந்த தைரியம் கிடையாது. நான் உனக்கு அதை கொடுத்திருக்கேன்”

“தைரியமா? நீங்க என்னோட உரிமை” என்று அவன் நெஞ்சிலே விரலை வைத்து குத்தினாள் மனைவி.

“எஸ். நான் உன்னோட உரிமை, நீ என்னோட உரிமை. அதைத்தான் நான் எடுத்துக்கிறேன்”

“உங்களோட என்னால பேசி ஜெயிக்க முடியாது. எனக்கு அந்த சொத்து வேண்டாம்” என்று நின்றாள் தன்வி.

“வேணாம்ன்னா தூக்கி போட்டுக்கோ. உங்கப்பா பணம் தான். எனக்கு ஒன்னுமில்லை” என்றான் தேசிகன் அசராமல்.

“ஏன் செய்ய மாட்டேன்னு நினைக்கிறீங்களா?” என்று தன்வி சீற,

“மிஸ்டர் மாமனார் மகள் நிச்சயம் செய்வான்னு தான் நானும் சொல்றேன்” தேசிகன் அவ்வளவு நக்கலாக சொன்னான்.

தன்விக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. “நான் எங்க வீட்டுக்கு போறேன்” என்று கிளம்ப,

“உன் வீட்ல தான் நீ இருக்க” என்று அவளின் கை பற்றி தன்னிடம் கொண்டு வந்தான் தேசிகன்.

“நீங்க இப்படி இருந்தா நாம எப்படிங்க நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது?” தன்வி ஆதங்கத்துடன் கேட்டேவிட,

“இப்படித்தான்” என்றவன், தன்வி என்ன ஏது என்று யோசிக்கும் முன்னரே, அவளின் இதழோடு இதழ் சேர்ந்திருந்தான்.

மனைவியின் கன்னங்களை தன் உள்ளங்கைக்குள் அடக்கி, அவளின் இதழ்களை ருசித்தபடி, ஓர் மென்மையான முத்தம்.

தன்வி கண்களை விரித்து கணவனை பார்க்க, “முதல் கேட்டை வெற்றிகரமாக திறந்தாச்சு. செமடி நீயும், உன் லிப்ஸும்” என்று உல்லாசமாக சொன்னான்.

“என்ன, என்ன பண்றீங்க நீங்க?” என்று தன்வி உதடுகளை மடக்க,

“வாழ்க்கையை ஆரம்பிக்கிறதை பத்தி பர்ஸ்ட் டைம் பேசின, என் பொண்டாட்டி மனசை நான் கேட்ச் பண்ணிட்டேன். கூட அவ உதட்டையும்” என்றவன் அவனின் விரலால் இதழை விரித்து வருடினான்.

“ப்ளீஸ்ங்க” என்று தன்வி சொல்ல.

“நானும் ப்ளீஸ் தன்வி” என்றவன், திரும்ப ஓர் முத்தத்தை ஆரம்பித்தான்.

இந்த முறை நிமிடம் நீண்டது. தன்விக்கு மெலிதாக மூச்சு வாங்க, “ரிலாக்ஸ் ஆகுடி” என்றவன், மனைவியின் உதட்டில் இருந்து கழுத்து வரை விரலால் கோடிழுக்க,

“ம்ஹூம்” என்று அவனை பிடித்துகொண்டாள்.

தேசிகன் முத்தத்தை விட, அவனின் ஆழ்ந்த ரசனை பெண்ணை திகைக்க வைத்தது.

ஏன் என்று ஏக்கத்தை காட்டும் தேசிகன், பெண்ணுக்கு மிகவும் புதிது.

மனம் மயங்க ஆரம்பிக்க, “நாம இப்போ சண்டை போட்டுட்டு இருக்கோம்” என்று அவனோடு சேர்த்து தனக்கும் நினைவு படுத்த முயன்றாள்.

“இதுவும் சண்டை தாண்டி. நீயே ஜெயிச்சுக்கோ. நான் விட்டு கொடுத்திடுறேன்” என்று கணவன் குறும்பாக கண்ணடிக்க,

“இல்லை. வேணாம்” என்று தன்வி உடனே மறுத்தாள்.

“அப்போ நான் ஜெயிக்க வழி விடு. என்னை வாழ விடுடி என் பொண்டாட்டி” என்று அவளை கொஞ்ச,

“யோவ் நீயா இது? நான் நம்பமாட்டேன்” என்று பெண் ஓட்டம் பிடிக்க பார்த்தாள்.

“நம்பித்தான் ஆகணும். எங்க ஓடுற?” என்று அவளை தன் கைக்குள் அள்ளி கொண்டான்.

“இங்க பாருங்க. நாம இதை அப்புறம் பார்ப்போம். எனக்கு வீட்டுக்கு போகணும். அந்த ப்ரொஜெக்ட். அதை முடிச்சு கொடுக்கணும். ப்ளீஸ்”

“ம்ம். போலாம். அதுக்கு முன்னாடி” என்று அவளின் இதழை நெருங்க, தன்வி அவன் முகத்தை தள்ளிவிட்டாள்.

“ரொம்ப பண்ற? டீப்பா போய், முழுசா முடியலைன்னாலும் எனக்குதான் கஷ்டம். அதனால உன்னை விடுறேன்” என்று மனைவியை விட, தன்வி ஆசுவாசம் கொண்டாள்.

“எத்தனை நாள் ஆகும்?” என்று விசாரிக்க,

“இரண்டு வாரத்துக்குள்ள முடிக்க பார்க்கிறேன்” என்றாள் மனைவி.

“சரி முரளி உன்னோட இருப்பான்”

“நோ. நோ. அவன் எதுக்கு?”

“முரளி இருப்பான். இல்லை முடியாதுன்னா நீ என்னோட தேனி கிளம்பு” என்று முடித்துவிட்டான் தேசிகன்.

தன்விக்கு வேறு வழி இல்லை. ஆனால் சதாசிவத்திற்கு இது புரிய வேண்டுமே?

முரளி அவருடன் அலுவலகம் செல்ல கிளம்பி நிற்க, மனிதர் கடுப்பாகிவிட்டார்.

“உங்களுக்கு அந்தாளே பரவாயில்லை. நீ என்னோட வராத” என்று நின்றார்.