தன்விக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்றீங்க நீங்க?” என்று தேசிகனிடம் கேட்க,
“முதல்ல அவர்கிட்ட இருந்து என்னை காப்பாத்தி விடு தன்வி” என்றார் சதாசிவம்.
மருமகன் பிடியில் அவர் நசுங்கி போயிருக்க, “காட். அவரை விடுங்க” என்று கணவனை பற்றி இழுத்தாள் பெண்.
“தேசிகா என்ன இது. விடுடா” என்று அவனின் மாமா மருமகனை சத்தமிட,
தேசிகன் பட்டென அவரை விட்டான். விழுந்திருப்பார் மனிதர். தேசிகனே அவர் கைப்பற்றி இழுத்து நிற்க வைக்க, மணிக்கட்டு வலி கண்டது.
“விடுங்க என்னை” என்று அவனின் பிடியை உதறிய மாமனார், “வேணும்ன்னே தான் என்னை வலிக்க வைக்கிறீங்க நீங்க?” என்று தேசிகனிடம் எகிறினார்.
தேசிகன் ஆம், இல்லை என்று எதுவும் சொல்லாமல், “முதல்ல நீங்க இதுக்கு பதில் சொல்லுங்க” என்று அந்த அக்ரீமெண்டை அவரின் முன் ஆட்டினான்.
“என்னன்னா? உங்களுக்காக வாங்கினது தான்” என்று சதாசிவம் பெருமையுடன் சொல்ல,
“வில்லங்கக்காரர் இன்னொரு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கார்” என்றுவிட்டான் மருமகன்.
சதாசிவம் மருமகனை கோவமாக பார்க்க, “ஏங்க என்ன பேச்சு இது?” என்று தன்வி கணவனை கண்டித்தாள்.
“பின்ன? உன் அப்பாகிட்ட நான் கேட்டேனா அந்த சொத்தை வாங்கி கொடுக்க சொல்லி. ஆகாத வேலையை பார்த்துட்டு வந்ததும் இல்லாம நெஞ்சை வேற நிமிர்த்துறார்” என்று கடுப்பாக பொரிந்தான் தேசிகன்.
“என்ன ஆகாத வேலையை பார்த்துட்டேன். அந்த சொத்து வேணும்ன்னு தானே பேங்கர்விட்டு என்கிட்ட பேச சொன்னீங்க?” சதாசிவமும் குதிக்க,
“உன் அப்பா எல்லாம் எந்த ஜென்மத்திலும் திருந்த வாய்ப்பில்லை” என்றான் தேசிகன்.
“ஏங்க”
“எதுவும் பேசிடாத தன்வி. இவர்கிட்ட சொத்து வாங்கி பொழைக்கிற அளவு நான் இல்லைன்னு உன் அப்பாக்கு அழுத்தி சொல்லு” என்று இரைந்தான்.
“ப்பா. என்ன இது? திரும்ப அந்த பேச்சு வேண்டாம்” என்று தன்வி தந்தையை அடக்க முயல,
“சரி அவர் என்கிட்ட சொத்து கேட்கலைன்னே வைச்சுக்கலாம். என் பொண்ணுக்கு நான் வாங்கி கொடுத்ததா இருக்கட்டும்” என்றார் சதாசிவம்.
“என்னமோ நல்ல சொத்தை வாங்கி கொடுத்த மாதிரி பில்ட்அப் பண்ணிட்டு இருக்கீங்க. என் பொண்டாட்டி மதிப்பு எனக்கு தெரிஞ்சளவு கூட உங்களுக்கு தெரியலையே” என்று அவரை நக்கலடிக்க,
“தேவையில்லாத பேச்சு வேண்டாம். அந்த சொத்து சரியில்லைன்னா நீங்க ஏன் வாங்க போனீங்க?” என்று மருமகனிடம் பதில் கேள்வி கேட்டார்.
“நான் ஒத்தை ரூபாய் கூட அட்வான்ஸ் கொடுக்கலை. விசாரிச்சுதுல வில்லங்கம் இருக்குன்னு தெரியவும், நான் அதை விட்டுட்டேன். உங்களை யாரு வாங்க சொன்னா? அதுவும் தன்வி பேர்ல?”
“தன்வி பேர்ல வாங்கினா என்ன இப்போ? ஏன் உங்க பேர்ல”
“அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசிடாதீங்க. உங்க பணம் எல்லாம் எனக்கு ஒன்னுமில்லை. தன்வி பேர்ல அந்த வில்லங்க சொத்து வந்தது எனக்கு பிடிக்கலை. என் பொண்டாட்டிக்கு ஏன் அந்த தலைவலிங்கிறேன்?”
“என்ன வில்லங்கமோ, நானே அதை சரி பண்ணிடுறேன்” என்று சதாசிவம் கெத்தாக சொன்னார்.
“முயற்சி பண்ணி பாருங்க” என்ற மருமகனிடம் கேலியே வெளிப்பட, சதாசிவம் உடனே அதை சரி செய்ய அவசரப்பட்டார்.
தேசிகனுக்கு அவர் யார் என்று காட்டிவிட வேண்டும் என்ற வேகம் அவரின் விவேகத்தை முடக்கிவிட்டது போல்.
இன்னும் கூடுதல் பணத்தை அங்கேயே கொட்டி, மாட்டி கொண்டார் மனிதர்.
தேசிகன் அவர் இருக்கும் வீட்டில் இருக்க பிடிக்காமல் உடனே அலுவலகம் கிளம்பிவிட்டான். சதாசிவம் ஓய்வெடுக்க அறைக்குள் சென்றவர், இந்த வேலையை பார்த்து வைத்திருக்க, “என்னடா பண்ணி வைச்சிருக்க?” என்று ராஜேந்திரன் தம்பிக்கு அழைத்துவிட்டார்.
“என்ன பண்ணிட்டேன் இப்போ?” என்று சதாசிவம் அண்ணனிடமும் குதிக்க,
“நேர்ல வந்தேன் உன்னை என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது சதாசிவம்” என்று அண்ணன் கொந்தளித்துவிட்டார்.
“யாரை கேட்டு அவ்வளவு பணத்தை எடுத்த நீ?” என்று அவர் கேள்வி கேட்க,
“ஏன் எனக்கு அந்த பணத்துல உரிமை இல்லையா என்ன?” என்று சதாசிவமும் உரிமை குரல் எழுப்பினார்.
“எல்லாம் உனக்கு தான். நீயே வைச்சுக்கோ. எங்களுக்கு ஒத்தை பைசா வேண்டாம். ஆனா அதுக்காக நீ வேஸ்ட்டா கொட்டினா நான் பார்த்திட்டிருக்கணுமா?”
“ண்ணா நீங்களும் என்னை டென்சன் பண்ணாதீங்க. என்ன வேஸ்ட் பண்ணிட்டேன். தன்வி பேர்ல வாங்கின இடத்துல கொஞ்சம் பிரச்சனை. இடத்துக்கு சொந்தக்காரர் பொண்ணு, எனக்கும் பங்கு வேணும்ன்னு வந்து நிக்குது. அந்தாள் ஓடிப்போய் கல்யாணம் பண்ண பொண்ணுக்கு எல்லாம் பங்கு கொடுக்க மாட்டேன்னு சொல்றான். பொண்ணுக்கு சட்டப்படி உரிமை இருக்கு. அதான் நானே கொடுத்திடலாம்ன்னு”
“டேய். எல்லாம் அவங்க பிளான்டா. உனக்கு புரியுதா இல்லையா?”
“என்ன பிளான், நீங்க சும்மா டென்சன் ஆகாதீங்க?”
“சரி. இரண்டுக்கு மூணு மடங்கு அங்க கொட்டிட்ட. நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வைச்சுக்கலாம்ன்னு அவன்கிட்ட கேளு” என்றார்.
சதாசிவம் அண்ணன் சொன்னதில் அழைத்து கேட்க, “சார் நீங்க என் பொண்ணுக்கு பணம் கொடுத்துட்டீங்க. ஆனா அது இப்போ வேற மாதிரி திரும்பிடுச்சு. என்னோட பையனும் கையெழுத்து போட பணம் கேட்டு நிக்கிறான். நான் கொடுக்க மாட்டேன். நீங்களே அதை என்னன்னு கவனிச்சுட்டு எனக்கு போன் பண்ணுங்க” என்று வைத்துவிட்டார் அந்த மனிதர்.
சதாசிவத்திற்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சொத்தை விக்கிறேன்னு கொள்ளை அடிச்சுட்டு இருக்கானுங்க!
ராஜேந்திரன் அழைக்கவும், “ண்ணா” என்றார் தம்பி.
“என்ன புரிஞ்சுடுச்சா? இப்போ என்ன செய்யலாம்ன்னு இருக்க?”
“அக்ரீமெண்டை கேன்சல் பண்ணிடலாம்ண்ணா”
“கேட்டு பாரு” என்றார் அண்ணன்.
சதாசிவம் உடனே கேட்க, அவனோ “அதெல்லாம் முடியாது. நான் காசு ரிட்டர்ன் கொடுக்க மாட்டேன்” என்று நின்றான்.
“அவன் யாரு தெரியுமில்லை என்னோட கட்சிக்காரன். அவன் பொழைப்பே இதுதான். போலீஸ்க்கு போனாலும் அவனுக்கு தான் முதல்ல சப்போர்ட் பண்ணுவாங்க. மாசாமாசம் கமிஷன் அள்ளி கொடுக்கிறான். இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு” என்று கேட்டார் ராஜேந்திரன்.
“வேற வழியில”
“என்னோட ஆளுங்க இறங்க மாட்டாங்க. உனக்கு தெரியாதது இல்லை. சிட்டிக்குள்ள எல்லாம் தொடர்புல இருப்பாங்க. நான் இங்க சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவனுக்கு அங்க தகவல் போயிடும். அப்புறம் அவன் வேற மாதிரி போவான். என் தலைமை உங்களுக்குள்ளே சமாதானமா போயிடுங்கன்னு தான் சொல்லுவாங்க.” என்று ராஜேந்திரன் நிதர்சனத்தை சொன்னார்.
“ண்ணா. புரியுது, நான் பார்த்துகிறேன்” என்று சதாசிவம், அன்று முழுவதுமே எல்லா வழிகளிலுமே முயன்றார்.
எப்படியும் சதாசிவம் எதாவது செய்வார் என்று தெரிந்து எதிர் பார்ட்டி உஷாராக இருந்தது போல. உடனே எல்லா வழிகளையும் அடைத்துவிட்டனர்.
பணம் போனால் போகிறது என்று விடுமளவு சிறிய தொகை இல்லை. உடன் தேசிகன் வேறு. சதாசிவம் தலையை பிடித்து கொண்டார்.
மதியமும் தந்தை சரியாக உண்ணவில்லை என்று தன்வி அவருக்கு பலகாரம் கொண்டு வந்தவள், “ப்பா.என்ன ஆச்சு?” என்று பதறி போனாள்.
அவரின் உடல்நிலை மேல் என்றும் குடும்பத்தாருக்கு அச்சமே!
சுதா வேறு மகளிடம், “பெரியப்பா தான் அங்க வரதா இருந்தது தன்வி. ரிசப்ஷனோட எல்லாம் கிளம்பிட்டாங்க. மறுவீடு சீர், மரியாதை எதையும் நாம செய்யலை. உன் அப்பா நடந்துகிட்ட முறைக்கு நேர்ல போய்த்தான் கூப்பிடணும்ன்னு கிளம்பினார்”
“ஆனா இவர் உள்ள நுழைஞ்சு, நானே நேர்ல போய் மாப்பிள்ளையை, சம்மந்தக்காரங்களை அழைச்சிட்டு வரேன். எனக்கு என் பொண்ணு சந்தோசம் முக்கியம். அவ என்கிட்ட கஷ்டப்பட்டு போனா. நான் அதை சரி பண்ணனும்ன்னு ரொம்ப கேட்டுக்கவும் தான் பெரியப்பா விட்டுட்டார்
“அவரோட வரலாம்ன்னா, எனக்கும் உடம்பு முடியல. நீ கொஞ்சம் பார்த்துக்கோ தன்வி. முன்ன நடந்ததே போதும். திரும்ப நமக்குள்ள எந்த மனசு கஷ்டமும் வரக்கூடாது. அப்புறம் உன் அப்பா மெடிசனையும் கவனி. உன் பொறுப்புல தான் அம்மா விடுறேன். பார்த்துக்கோ” என்று சொல்லியிருந்தார்.
‘எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்பறம் சொல்லுங்க’ என்று மகள் மனதுக்குள் சலித்து கொண்டாள்.
தேசிகன் வேறு காலை கிளம்பியவன், மதிய உணவிற்கு கூட வீடு வரவில்லை. சதாசிவம் இதோ இப்போது கிளம்ப வேண்டும்.
அவருக்கு சாப்பிட கொண்டு வந்த மகளுக்கு தந்தை இருந்த நிலை பதட்டத்தை கொடுத்து. “என்னாச்சுப்பா?” என்று அவர் அருகில் அமர, சதாசிவம் மகளிடம் எல்லாம் சொல்லிவிட்டார்.
“பணம் நம்மளோட பொதுப்பணம். அண்ணா கேட்கலைன்னா கூட பசங்க ஒரு வார்த்தை கேட்டுட்டா என்ன பண்றது தன்வி? சொத்து உன்பேருக்கு வந்திட்டா கூட ஒன்னுமில்லை. ஆனா இப்படி?”
“உன் புருஷன் இன்னும் என்னை கூடத்தான் பேசுவான். பார்த்தீங்களான்னு சொல்லி காட்டினா நான் மனுஷனா இருக்க மாட்டேன். பார்த்துக்கோ” என்று அவர் கோவமும் கொள்ள, தன்விக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போலானது.
“அவரை விடுங்கப்பா நீங்க. கொடுத்த பணத்துக்கு என்ன செய்றதுன்னு முதல்ல பார்ப்போம்” என,
“என்ன பார்க்கிறது? அந்த இடத்துக்காரன் நல்லா திட்டம் போட்டு தான் எல்லாம் செய்றான், எனக்கு முதல்ல கொஞ்சம் கறுக்குன்னு இருந்தது. என்னடா பணத்தை கொடுங்க, அக்ரீமெண்ட் ரெடின்னு ஒரு நாள்லே எல்லாத்தையும் முடிச்சுட்டானேன்னு. இப்போத்தான் தெரியுது” என்று பொறுமினார் மனிதர்.
“நீங்க நிதானமா இருங்கப்பா. எதாவது செய்யலாம்” என்று தன்வி அவரை சமாதானம் செய்ய,
“எதாவது பண்ணித்தான் ஆகணும்டா. சரி நான் கிளம்புறேன். நேரம் ஆச்சு” என்ற சதாசிவத்திற்கு உண்ண கொடுத்து, அவர் தயாராக உதவினாள் மகள்.
வீட்டினர் எல்லாம் அவரை நல்ல முறையிலே வழியனுப்பி வைக்க, சதாசிவத்திற்கு கொஞ்சம் குறுகுறுவென தான் வந்தது. இதுவரை மாமனார், மருமகன் பிரச்சனையில் இவர்கள் யாரும் தலையிடுவதில்லை.
மண்டபத்தில் வைத்து அவர் நடந்து கொண்ட முறை சரியா என்ற யோசனை இப்போது முளைத்தது.