மலர் சூடும் பெண்மை 2

தன்விக்குள் பல சிந்தனைகள். சுஜாதா கேட்டதுக்கு சரி சொல்லியிருக்க கூடாதோ?

அவளை சுற்றி ஆட்கள் இருந்த வண்ணமே இருக்க, எல்லோரிடமும் இவள் மேல் ஏதோ ஒரு பற்றுதல்.

அவர்கள் வீட்டு பெண்ணாக அடையாளம் காணப்படுவதால் இருக்கலாம்.

அதுவே இவளுக்கு ஓர் உறுத்தல். ஏனெனில் தன்வி தான் அவர்கள் வீட்டு பெண் இல்லையே!

மணிக்கொரு முறை சாப்பிட, குடிக்க என்று எதாவது ஒன்று அறைக்கு வந்து கொண்டே இருக்க, அதுவே தன்விக்கு எரிச்சலை கொடுத்தது.

எடுத்து வருபவர்கள் உணவுடன் சேர்த்து கேள்விகளையும் அவள் முன் அடுக்குகின்றனரே!

இதோ இப்போதும் ஜுஸுடன் பாட்டி ஒருவர் உள்ளே வந்தவர், வாஞ்சையாக அவளின் கன்னத்தை வருடினார்.

“உன்னோட பெரிய பாட்டி கண்ணு நான்” என்றார் அன்பை முழுதும் தேக்கி.

தன்வி மூச்சிழுத்து விட்டு கொண்டவள், அவரை பார்த்து மெலிதாக புன்னகைக்க, “உன் அப்பா நல்லா இருக்கானா?” என்று ஆரம்பித்தார்.

“நல்லா இருக்கார் பாட்டி” என்று பதிலளிக்க,

“எப்போ வரானாம் இங்க?” என்று ஆவலுடன் அடுத்த கேள்வி கேட்டார்.

“தெரியலை பாட்டி. டிக்கெட் பார்த்து சொல்றேன் சொல்லியிருக்காங்க”

“டிக்கெட் தான்னா என் பேரன்கிட்ட சொன்னா நொடியில ஏற்பாடு பண்ணிடுவான்” என்றார் அவர் பெருமையுடன்.

க்கும். என்று நொடித்து கொண்ட தன்வி, “டிக்கெட்க்காக யாரை கடத்துவாங்களோ” என்று முணுமுணுக்க,

“என்ன கண்ணு” என்றார் பாட்டி நொடியில் மாறிவிட்ட முகத்துடன்.

“பேரன் பாசம் பாட்டி உங்களுக்கு. ஆனா இது தப்பில்லையா?” என்று அவரிடம் கேட்டாள் தன்வி.

“தப்பு இல்லை கண்ணு” என்றார் பாட்டியோ உறுதியாக.

“நாங்க உன் அப்பன்கிட்ட எத்தனை மாசமா கேட்டுட்டு இருக்கோம் தெரியுமா? அவன் எங்களுக்கு ஆட்டம் காட்டினா என் பேரனுங்க விடுவாங்களா சொல்லு” என்றார் அவர் கொஞ்சம் கோபத்துடன்.

“மகனை விட பேரனுங்களுக்கு மேல பாசம் ஜாஸ்தி போல” என்று தன்வி அவரை வம்பிழுக்கவே கேட்டாள்.

“நிச்சயம் கண்ணு. மகன் மேல ரத்த பாசம். ஆனா அவன் எங்களுக்கு என்ன செஞ்சான் சொல்லு. படிச்சான், காதலிச்சான், கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிட்டான். ஆனா என் மகளோட குடும்பம், அவங்க பிள்ளைங்க தான் இப்போ வரைக்கும் எங்களுக்காக பார்க்கிறாங்க. மகனுக்காக பார்த்து நாங்க நன்றி கெட்டவங்க ஆகணுமா நீயே சொல்லு” என்றார் பாட்டி தெளிவாக.

தன்வி அதை தவறு என்று எப்படி சொல்வாள்?

மூன்றாம் மனிதனாக நின்று பார்ப்பவளுக்கு உணர்வு பூர்வமான சிந்தனைகள் இல்லையே!

நியாயம், அநியாயம் தானே பார்க்க தோன்றும்?

தன்வியும் அதை தான் பார்க்கிறாள்?

ஒருவேளை சுஜாதா இங்கிருந்தால் அவளின் பெற்றவர்களுக்கு பேசியிருக்க கூடும். ஆனால் தன்வி?

“உன்னை கூட்டிட்டு வந்துட்டாங்கன்னு எங்க மேல கோவமா?” என்று பாட்டி அவளின் கை பிடித்து கேட்க,

“கூட்டிட்டு வந்தாங்களா? பாட்டி கடத்திட்டு வந்திருக்காங்க” என்றாள் தன்வி கண்களை பெரிதாக விரித்து.

“ஆஹ்ன் எல்லாம் உடைந்தபட்ட வீட்டுக்கு தானே வந்திருக்க. விடு கண்ணு” என்று சாதாரணமாக சொன்னவர்,

“உங்க அப்பா எங்களை பத்தி ஏதும் சொல்லியிருக்கானா?” என்று ஆர்வமாக கேட்க,

“ஏதோ கொஞ்சம் பாட்டி” என்றாள் தன்வி.

“உங்க அம்மா எங்களை பத்தி சொல்ல விட்டிருக்க மாட்டா” என்று பாட்டி நொடித்து கொள்ள,

“அம்மா பத்தி பேசாதீங்க பாட்டி” என்றாள் தன்வி கோவத்துடனே.

“பாட்டி. மேடத்துக்கு அம்மா பத்தி பேசினாலே கோவம் வந்துடும் தெரியாதா உங்களுக்கு” என்று வந்தான் தேசிகன்.

“என்ன உன் அப்பாகிட்ட பேசிட்டியா? எப்போ வராராம்?” என்று இவளிடம் கேட்க, தன்வி நெற்றி சுருக்கினாள்.

சுஜாதாவிடம் இது பற்றி கேட்கவே இல்லையே!

“ஹலோ மேடம் உங்ககிட்ட தான் கேட்கிறேன்” என்று தேசிகன் எகிற,

“இரு ராசா. அரட்டாத. டிக்கெட் பார்த்துட்டு இருக்காங்களாம்” என்றார் பாட்டி.

“பாட்டி அவங்க இரண்டொரு நாள்ல இங்க வரதா தான் இருக்காங்க” என்றான் தேசிகன் இவளை முறைத்து.

அப்படியா? என்று பாட்டி இவளை பார்க்க, தன்விக்கு எப்படி தெரியும் இதெல்லாம்.

 “பாட்டி தான் கதை சொல்வாங்க. இங்க பேத்தி உருட்டிட்டு இருக்கா” என்று தேசிகன் நக்கலடித்தவன்,

“ஆமா அதென்ன கதவை அப்படி அடிச்சு மூடுற? இதென்ன உன் அப்பா கட்டின வீடுன்னு நினைச்சியா?” என்று அவளை முறைத்து நின்றான்.

“என் அப்பா ஏன் உங்களுக்கு வீடு கட்டி கொடுக்கணும்?” என்று இவளும் எகிறினாள்.

“உன் அப்பா கட்டி கொடுக்க இங்க யாரும் ஏங்கிட்டு இல்லை. போவியா”

“உங்களுக்கு கட்டிக்கொடுக்க நாங்களும் குதிச்சிட்டு இல்லை. நீங்க போங்க”

“இது என் வீடு”

“தெரியுது இல்லை. என்னை அனுப்பி விடுங்க”

“அனுப்ப தான் போறேன். உன்னை ஒன்னும் இங்க வைச்சுக்க எங்களுக்கு ஆசை இல்லை”

“கடத்திட்டு வந்ததும் இல்லாம என்ன ஓவரா பேசுறீங்க. என் அப்பாகிட்ட சொல்லி உங்களை எல்லாம் உள்ள தள்றேன் இருங்க” என்று தன்வி விரல் நீட்டி எச்சரிக்க,

தேசிகன் கீழ் உதட்டை பல்லால் கடித்தவன், அவளையும் அவளின் நீட்டிய விரலையும் முறைக்க,

“கண்ணு. என்ன கண்ணு. விரலை மடக்கும்மா. மாமாகிட்ட இப்படி எல்லாம் நடந்துக்க கூடாது” என்று பாட்டி அவளுக்கு அறிவுரை சொன்னார்.

“இவர் எனக்கு மாமாவா?” என்று தன்வி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கினாள்.

தேசிகன் அவளை ஒரு மாதிரி பார்த்து நின்றவன், பின் சட்டென வெளியே சென்றுவிட்டான்.

பாட்டி தான் பேத்தியை அமர வைத்து குடிக்க கொடுத்தவர், “அவன் கோவம் நியாயம் கண்ணு” என்றார்.

“உங்க அப்பாம்மா ஓடி போய் கல்யாணம் பண்ணதுல பாதிக்கப்பட்டது அவன் அம்மா தான்” என்றார் வேதனையுடன்.

“அப்போ தான் பள்ளிக்கூட படிப்பு முடிச்சா சாவித்திரி. அண்ணன்காரன் இழுத்துட்டு போன குடும்பம் சரியான வில்லங்கம் பிடிச்சவங்க. எங்க பொண்ணுக்கு பதில் உங்க பொண்ணுன்னு தான் இவளை வலுக்கட்டாயமா அவங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க”

“அவன் சரியான மைனர். சாவித்திரி மாதிரி பொண்ணு விட்டா கிடைக்குமான்னு பிளான் போட்டு பண்ணிட்டாங்க. மூணு ஆம்பிளை பசங்க பிறந்தும் அவளுக்கு அங்க நிம்மதி இல்லை. நிறைய போராட்டம். ஒரு கட்டத்துல போடான்னு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு இங்க வந்திட்டா”

“பசங்களும் அம்மாவை புரிஞ்சுகிட்டு இப்போ வரை அவளுக்கு துணை நிக்கிறாங்க. ஆனாலும் அவ மாமியார் வீடு பஞ்சாயத்து இன்னும் ஓயலை. புதுசா ஒரு வில்லங்கம் முளைச்சிருக்கு. அதுக்கு தான் உன் அப்பாம்மாவை வர சொல்றது” என்றார் பாட்டி.

தன்விக்கு அதென்ன என்று கேட்கும் ஆர்வம் சிறிதும் இல்லை.

அவர்கள் வந்தால் தான் நான் விடுபடுவேன் என்ற தெளிவு மட்டும் கிடைத்தது.

பாட்டி சென்றதும் அவள் உடனே சுஜாதவிற்கு அழைத்தாள்.

“தன்வி நீ ஓகே தானே?” என்று அவள் எடுத்த உடனே தோழியின் நலம் விசாரித்தாள்.

“நீ முதல்ல உன் அப்பா எப்போ இங்க வரார்ன்னு சொல்லு”

“அப்பாவா? ஏய், அதெல்லாம் நடக்காது” என்றாள் சுஜாதா.

“வாட்?”

“ஆமாடி. அங்க ஏதோ பிரச்சனை இருக்குன்னு தான் அவங்க ஊர் பக்கமே வர்ரதில்லை”

“பட் அவங்க இந்தியா வராங்க தானே”

“அதெப்படி உனக்கு தெரியும்? ஓஹ் காட் அவங்களுக்கு தெரிஞ்சிருச்சா”

“சுஜாதா. நீ உன் அப்பாகிட்ட பேசித்தான் ஆகணும்”

“தன்வி. புரிஞ்சுக்கோ. அவர் நிச்சயம் அங்க வரமாட்டார்”

“என்ன பேசுற நீ? அவர் பொண்ணை கடத்திட்டாங்கன்னு தெரிஞ்சாலும் வர மாட்டாரா? இதை நான் நம்பணுமா” தன்வி கோவத்தை அடக்கி கொண்டு கேட்க,

சுஜாதாவிடம் மௌனம். இவ அவங்க அப்பாகிட்ட பேச போறதே இல்லையா?

“சுஜாதா உனக்கு என் பேரண்ட்ஸ் பத்தி தெரியும். அவங்களுக்கு இது தெரிஞ்சா நீ இமேஜின் கூட பண்ண முடியாது என்ன நடக்கும்ன்னு”

“நோ. நோ. தன்வி ப்ளீஸ். எதுவும்  ஸ்டெப் எடுத்திடாத. நான் எதாவது பண்றேன்”

“உனக்கு என் சூழ்நிலை புரியலை நினைக்கிறேன். இதுவே நீ இங்க இருந்திருந்தா இப்படி அசால்ட்டா இருப்பியா?” தன்வி கூர்மையாக கேட்டாள்.

தோழி திணற, “சுஜாதா நான் இப்போவும் உனக்கு தான் சப்போர்ட் பண்றேன். ஆனா உன் அப்பா இங்க வரதுல உனக்கென்ன பிரச்சனை? அவரை பொறுத்தவரை நீ இங்க தானே இருக்க. அப்பறமென்ன?”

“உடனே உன் அப்பாகிட்ட பேசி அவரை இங்க வர சொல்ற வழியை பாரு. அப்போதான் எல்லாம் சுமுகமா முடியும். பார்த்துக்கோ” என்று அவளுக்கு சொல்லி வைத்துவிட்டாள் தன்வி.

‘இவ இன்னும் பிரச்சனையை இழுத்துவிட்டுக்க போறா’ தன்வி கடுப்பாகிவிட்டாள்.

தன்வி மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற நேரம் தான் சுஜாதாவின் அறிமுகம் கிடைத்தது. தமிழ் என்ற அடையாளமே அவர்கள் நட்பிற்கு சுலபமாக வழி வகுத்து கொடுத்திருக்க, அவளுக்கு உதவ முன் வந்ததின் பலன் தான் தன்வி இங்கு சிக்க காரணமே!

உதவிக்கு பிரதிபலன் கேட்கவில்லை. ஆனால் உபத்திரவம் கொடுத்தால் எப்படி?

அறைக்குள்ளே இருப்பது வேறு இன்னும் மூச்சை முட்ட வைக்க தானே கதவு திறந்து வெளியே வந்தாள் தன்வி.

வீட்டில் இருந்த ஆட்கள் இவளை ஆச்சரியமாக பார்க்க, “என்ன பொண்ணே” என்று வந்தார் முரட்டு பெரியம்மா.

“ரூமுக்குள்ளே எப்படி இருக்க?” என்று தன்வி கேட்க,

“இந்த காம்பவுண்ட்குள்ளே எங்க வேணா போலாம்” என்றார் வேறு ஒருவர்.

தன்வி ஆயாசத்துடன் தலையசைத்து கொண்டவள், வீட்டிற்கு முன் பக்கம் வந்தாள். பெரிய வீடு. சுற்றி தோப்பு, நிலங்கள் தான்.

ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்க, தோட்டத்திற்குள் இறங்கி நடக்க செய்தாள்.

அவள் இங்கு வந்து முழுதாக ஒரு நாள் முடிந்துவிட்டது. எப்படியோ போன் கையில் இருப்பதால் வீட்டிற்கு பேசி விடுகிறாள். அது மட்டுமே ஆசுவாசம்.

வெப்பத்தை உணர முடியாமல், சில்லென்ற காற்று சுகமாக இருந்தது.

“ஹில் ஸ்டேஷனா இது?” என்று அங்கிருந்தவரிடம் கேட்க,

“ஏன் கேட்டு தப்பிச்சு போக பிளானா?” என்று இரு இளைஞர்கள் வந்தார்கள்.

எப்படியும் இருபதுக்குள் தான் வயது இருக்கும். ஆனா செய்ற வேலை எல்லாம்?

“உங்க பிளானை கண்டுபிடிச்சுட்டோம்ன்னு பார்க்கிறீர்களா?” என்று பெருமையாக வேறு கேட்க, ஓங்கி மண்டையில் கொட்ட கைகள் பரபரத்தது.

“உங்களுக்கு ஸ்கூல் எல்லாம் இல்லையா?” என்று அவர்களிடம் சீண்டலாக கேட்டாள் தன்வி.

“ஹலோ நாங்க காலேஜ் போயிட்டிருக்கோம்” என்று நெஞ்சை நிமிர்த்த,

“என்னது காலேஜா? ஷாக்கிங்க்” என்றாள் தன்வி பெரிதாக ஆச்சரிய பாவனையில்.

“இதுல ஷாக் ஆக என்ன இருக்கு?”

“குட், பேட் தெரியாம காலேஜ் வரைக்கும் எப்படி வந்தீங்க. எந்த ஸ்கூல் நீங்க எல்லாம்? ஒழுங்கா பாடமே சொல்லி கொடுக்கலை போலயே”

“ஓய் என்ன நக்கலா?”

“ரெஸ்பெக்ட். உங்களை விட நான் பெரியவ. நிச்சயமா உங்க ஸ்கூல் மேல நான் கம்பளைண்ட் கொடுக்க தான் போறேன்”

“அப்படியே உங்க அப்பாம்மா படிச்ச ஸ்கூல் மேலயும் கம்பளைண்ட் கொடுக்க பாரு” என்று வந்தான் தேசிகன்.

“ஏன்? ஏன்? அவங்க இரண்டு பேருமே டாப்பர்ஸ்”

“எதுல ஓடுறதுலயா?” என்று தேசிகன் கேட்டுவிட, தன்விக்கு கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

முகம் மொத்தமும் சிவந்து நிற்க, அந்த பொடுசுகள் வேறு நக்கல் சிரிப்பு.

அவளுக்கு புரிகிறது. அவளின் பெற்றோர் இல்லை தான். ஆனால் தேசிகன் சொல்லும் போது கோவப்படாமல் இருக்க முடியவில்லையே?

“ண்ணா” என்று ஒருவன் வேகமாக வர, இவர்களின் பார்வை அங்கு திரும்பியது.

“இவன். நேற்று தன்னை கடத்தியவன்” தன்வி அவனை கோபத்துடன் பார்த்தவள், “ஹேய் நீ தானே என்னை கடத்திட்டு வந்தது?” என்று அவனிடம் கேள்வி கேட்டாள்.

“ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு. போ” என்று தேசிகன் கிண்டலடிக்க,

அந்த பல்க்கான ஆசாமியோ இவளை சிறிதும் கண்டு கொள்ளாமல், “வேலை முடிஞ்சதுண்ணா” என்று சொல்லவும், தேசிகன் போனும் ஒலித்தது.

“உன் அப்பா தான்” என்று தன்வியிடம் காட்டி அழைப்பை ஏற்றவன், அவர் என்ன பேசினாரோ தன்வியை பார்த்து அதிர்ந்தான் கடத்தல்காரன்.

‘நான் அவர் பொண்ணு இல்லைன்னு தெரிஞ்சிடுச்சா என்ன?’ புருவம் சுருக்கியவள்,

‘சந்தோஷம். என்னை விட்டுடுவாங்க’ என்று பின் மகிழ்ச்சி கொள்ள, தேசிகன் அவளின் மலர்ந்த முகத்தில், வெகுவான அதிருப்தி கொண்டதுடன்,

“ஹேய். என்ன எங்களை முட்டாளாக்க பார்க்கிறீங்களா?” என்று தன்வியிடம் சீற,

“ஆல்ரெடி நீங்க அப்படி தானே இருக்கீங்க?” என்று தன்வி முணுமுணுத்தது தேசிகனை சீண்டிவிட்டது போலானது.

அதுவரை இருந்த கோவம் மறைந்து, தீவிரமாக இவளை எதிர்கொண்டு நின்றான்.

தன்விக்கு அவன் தீவிர பாவனை ஏதோ சரியில்லை என்று அவளை எச்சரித்தது.

“என்ன?” என்று கேள்வியாக அவனை பார்க்க,

“உங்களை தப்பா கணிச்சது என்னோட தப்பு தான். உன்னோட பாஷையில முட்டாள், இனி அப்படி இருக்காது” என்றவன், மற்றவர்களை அழுத்தமாக பார்த்து சென்றான்.

“உன் ரூமுக்கு போ” என்று அந்த பல்க் ஆசாமி இவளிடம் கட்டளையாக சொன்னதுடன், கையோட இவளை அழைத்து சென்று, ரூமில் அடைத்து வைத்தான்.

“இனி இந்த ரூமுக்கு யாரும் போக கூடாது” என்று வீட்டில் உள்ள மற்றவர்களிடம் அவன் சொல்வது தன்வி காதில் விழுக, பெண்ணுக்குள் முதன் முதலாக சிறு அச்சம்.