தன்வி கணவன் சொன்ன நேரம் அவனை நம்பத்தான் செய்யவில்லை. ஆனால் அவர்கள் வீட்டிற்கு முன் கார் நின்ற போது, “அதுக்குள்ள வந்துட்டோமா?” என்ற எண்ணம் தோன்றுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
நீண்ட தூரம்! பல மணி நேரங்கள் பயணம்! ஓயாத பேச்சு! என்ன அந்த அலுப்பு மட்டும் சிறிதும் இல்லை.
இடையிடையே சாப்பிட, குடிக்க என்று நிறுத்தியதோடு தன்வியிடம் வம்பிழுக்கவும் தேசிகன் மறக்கவில்லை.
“எனக்கு கால் வலிக்குது. பூஸ்ட் பண்ணுடி” என்று அவளை அணைப்பதும், முத்தமிடுவதுமாக தான் இருந்தான்.
“அவ்வளவு கால் வலிக்குதுன்னா கொடுங்க நானே கார் ஓட்டுறேன்” என்று தன்வி சொல்ல,
“நோ. நோ. அதெப்படி? என் பொண்டாட்டியை நான்தான் ஓட்டுவேன்”
“ஹேய்” என்று மனைவி கோபம்கொள்ள,
“ச்சு எப்போ பாரு டபுள் மீனிங் உனக்கு? என் பொண்டாட்டியை உட்கார வைச்சு நான் தான் கார் ஓட்டுவேன்னு சொல்றேன்”
“நீங்க எப்படி சொன்னீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். பிராடு நீங்க” என்று தன்வி கடுப்பாக,
“நீட்டி முழக்கி சொல்லணுமான்னு ஷார்ட்டா சொன்னேன். அதுக்கு போய்” என்றவன், மனைவியின் முறைப்பில்,
“சரி அப்படியே சொன்னாலும் என்ன இப்போ? என் பொண்டாட்டிகிட்ட எனக்கு உரிமை இல்லையா? பேசறதுக்கே இப்படின்னா, செயல்ல வரும் போது என்ன செய்வியாம்?” என்று அவளை இன்னும் சூடேற்றி அதில் குளிர் காய்ந்து கொண்டே வந்தான் நல்லவன்.
தொடர்ச்சியாக கணவன் கார் ஓட்டுவதில், தன்வி நிறுத்தி வாங்கி கொண்டாள். தேசிகன் பாதுகாப்பான வழியில் அவளுக்கு கார் கொடுக்க, “ரொம்ப பண்ணாதீங்க. நான் பதினெட்டு வயசுல இருந்து கார் ஓட்டுறேன்” என்று முறுக்கி கொண்டாள் தன்வி.
“என்ன இருந்தாலும் என் பொண்டாட்டி உயிர் எனக்கு வெல்லக்கட்டி தான். நீ என் கையில மட்டும் தான் கரையணும்” என்று அவளின் கன்னம் கிள்ளி கொஞ்ச, தன்விக்கு எப்படி அந்த பயணம் சலிக்கும்?
இருவரும் வீட்டின் முன் நிற்க, அத்தை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் விட்டார்.
தேசிகன் மனைவி கைப்பற்றி கொண்டு நேரே சாவித்திரி முன்தான் நின்றான். “சும்மா நிற்கிறதுக்கு அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கு தேசிகா” என்று மாமா சொல்ல,
“அதானே உங்க தங்கச்சியை நீங்க விட்டு கொடுப்பீங்களா” என்ற தேசிகன் மனைவியுடன் ஆசீர்வாதம் வாங்கினான்.
மகன் மேல் மனக்குறைகள் பல இருந்த போதும், சாவித்திரிக்கு அந்த நேரம் மலர்ந்த புன்னகை.
தன்வியின் கை பற்றி கொண்டவர், “உனக்கு எப்போவும் நான் இருக்கேன்றதை நீ மறக்கவே கூடாது” என்றார்.
“அதென்ன எப்போ பார்த்தாலும் மருமக மட்டுமே ஸ்பெஷல். ஏன் எங்களுக்காக எல்லாம் நீங்க இருக்க மாட்டிங்களாம்மா?” என்று தேசிகனின் தம்பி அரவிந்தன் கேட்க,
“உங்களுக்காக மொத்த குடும்பமும் இருக்கு. என் மருமகளுக்கு நான் இருந்துட்டு போறேன் போடா” என்றார்.
“எங்க மகளுக்கு நாங்களும் தான் இருக்கோம்” என்று அத்தை சொல்ல,
“இல்லை. நீங்க உங்க மருமகனுக்கு தான் சப்போர்ட் பண்ணீங்க” என்றுவிட்டார் சாவித்திரி.
தன்விக்கு தன் மாமியாரை புரிந்து கொள்ள முடிந்ததுடன், அவரின் மேல் மரியாதையும் கூடியது.
சாவித்திரி மருமகளை தன்னோடு அணைத்து கொள்ள, தேசிகன் அவர்கள் இருவரையும் சேர்த்து தனக்குள் கொண்டு வந்தான்.
“நான். நான்” என்று அரவிந்தனுடன் இன்னும் சிலர் சேர,
“டேய் மொத்தமா கீழே விழ போறோம்டா” என்று தேசிகன் அலறி தன் கூட்டத்தை விடாமல் பத்திரமாக பிடித்து கொண்டான்.
“போதும். போதும். அவங்களை விடுங்க. போய் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று பெரியவர் சத்தமிட்ட பின்னே, தம்பதிகளுக்கு உணவளித்து ஓய்வெடுக்க அனுப்பினர்.
தேசிகனின் அறை இன்னும் பெண்ணுக்கு பழகவில்லை. அவனின் கட்டிலில், கணவனுக்கு அருகில் தூக்கமென்பதும் தன்வியை சில நிமிடம் தொல்லை செய்தது.
அவளுக்கு மாறாக தேசிகன் நல்ல தூக்கம். கண்டுகிறாரா பாரு! அவர் ரூம், அவர் கட்டில். கூட அவர் பொண்டாட்டி அதையும் சொல்லு என்று நொடித்த மனதுக்கு எடுத்து கொடுத்தது மனசாட்சி.
ஆமா நான் பொண்டாட்டி தான். என்னை கவனிக்காம அப்படியென்ன படுத்ததும் தூக்கம் வேண்டிக்கிடக்கு?
‘ஹேய் எவ்வளவு நேரம் கார் ஓட்டியிருக்கார். டையர்டா இருக்காதா?’ அவளின் நியாய மனது எடுத்து சொல்ல,
‘அதுக்கு தான் என்னை சீண்டிட்டே வந்தாரா அப்பறமென்ன?’ என்று அடக்கிவிட்டவள், எப்போது தூங்க ஆரம்பித்தாள் என்று தெரியவில்லை.
மறுநாள் தன்வி விழிக்கும் நேரம் அறையே நிசப்தமாக இருந்ததுடன், நேரமும் நண்பகலை தொட்டு கொண்டிருந்தது.
‘காட்’ பெண் வேகமாக குளித்து வெளியே வர, “இனிமேல் இப்படி கார்ல எல்லாம் பயணம் பண்ண கூடாது ராசா” என்று பாட்டி பேரனுக்கு சொல்லி கொண்டிருந்தார்.
“சரி பாட்டி. இனி பண்ணலை” என்று தேசிகன் உடனே கேட்டுக்கொள்ள,
“டேய் அப்போ நாங்க சொன்னதெல்லாம்” என்று மாமா மருமகனிடம் கேட்டார்.
“மாமா. விடுங்களேன். இப்போ என்ன உங்களுக்கு அந்த ட்ரிப்பை போட்டுடவா?” என்று கேட்டான்.
“எனக்கு தெரியாம உன் மாமா எந்த ட்ரிப்க்கு போறார்?” என்று அத்தை எங்கிருந்தோ ஆஜரானார்.
“இதை மட்டும் கரெக்ட்டா கேட்டுடு. எப்போ இருந்து என் பர்ஸ் எங்கன்னு கத்திட்டு இருக்கேன். அது கேட்கலை இல்லை உனக்கு?” என்று மாமா சண்டைக்கு போக,
தன்வி கையில் குடிக்க வைத்த அத்தை, “உங்க பர்ஸ் உங்க கார்ல இருக்கு. போய் எடுத்துக்கோங்க போங்க” என்றார் கணவரிடம்.
“அதை முதல்லே சொல்ல மாட்டியா? எனக்கு நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன். வரேன்மா” என்று தன்விக்கு சொன்னார் மனிதர்.
தன்வி எதிர்பாராமல், “சரி சித்தப்பா” என.
“நீ வா, வந்து சாப்பிடு முதல்ல. தேசிகா அதான் உன் பொண்டாட்டி வந்திட்டா இல்லை. இப்போவாவது வா” என்று அத்தை அவனை அழைத்து இருவருக்கும் பரிமாறினார்.
“என்னை எழுப்பியிருக்கலாம் இல்லை” என்று கணவனிடம் தன்வி கேட்க,
“நானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எழுந்தேன். சரி தூங்கட்டும்ன்னு” என்றவன், “ம்மா. சாப்பிட வரீங்களா?” என்று வீட்டுக்குள் வந்த சாவித்திரியிடம் கேட்டான் தேசிகன்.
“எனக்கு லேட் ஆகும். உங்களுக்கு என்ன பிளான்?” என்று தம்பதிகளிடம் பொதுவாக கேட்டார்.
“என்னோட வேலை கொஞ்சம் இருக்கு. தன்விக்கு ஓகேன்னா போகணும். இல்லை வீட்ல தான்” என்றான் தேசிகன்.
தன்விக்கு வேறொரு சிந்தனை. சென்னையில் இருந்து கிளம்பும் போதே தெரியும். ஆனால் இப்போது அதை எப்படி சொல்ல?
“இன்னும் கொஞ்சம் வைச்சுக்கோ” என்று அத்தை சொல்ல,
“இல்லை சித்தி. போதும்” என்று பெண் எழுந்துவிட்டாள்.
தேசிகன் இன்னும் உண்டு கொண்டிருந்தவன், மனைவியின் செயலில் இளகியிருந்த முகம், இறுக்கம் காண ஆரம்பித்தது.
“நீ சாப்பிடு தேசிகா” என்று அத்தை அழுத்தி சொல்லவே, இருந்ததை வேகமாக காலி செய்துவிட்டு எழுந்தான்.
“அண்ணா” என்று அந்த பல்க் ஆசாமி குரல் கேட்க,
தன்வி பாட்டியிடம் இருந்தவள் சட்டென திரும்பி பார்த்தாள். அவன்தான்!
தேசிகன் அவனிடம் சென்று பேச, தன்விக்குள் நெருடல்.
இவன் இன்னும் இவரோட தான் இருக்கானா? ஏனோ பெண்ணுக்கு ஒப்பவில்லை.
தன்வியை கடத்தி கொண்டு வந்தவன் தன் கணவனை அண்ணா என்றழைத்து உரிமையாக வீட்டுக்குள் அமர்ந்து பேச, தன்விக்கு என்ன நினைக்க என்று கூட தெரியவில்லை. ஒருமாதிரி குழம்பி போனாள்.
“என்ன தன்வி?” என்று பாட்டி அவளின் கைபற்ற,
“ஒன்னுமில்லை பாட்டி” என்றவள், அவர் ஏதோ கேட்க இவள் பதில் சொன்னாள். பார்வை மட்டும் அடிக்கடி கணவன் பக்கம் சென்று வந்தது.
சாவித்திரி போன் பேசி வந்தவர் மருமகளை கவனித்துவிட்டவர், அவளை கண்டும் கொண்டார்.
‘மகன்கிட்ட சீக்கிரம் பேசணும்’
“டேய் சாப்பிட்டு போ” என்று தேசிகன் அவனிடம் சொல்ல,
“இருக்கட்டும்ண்ணா” என்றவன் தன்வியை சங்கடமாக பார்த்தான். உடன் மெலிதான புன்னகைக்க முயல, தன்வியிடம் அதற்கான பிரதிபலிப்பு இல்லை.
அந்த பல்க் ஆசாமி முகம் சுருங்கி போக, “டேய் என்ன?” என்ற தேசிகன், திரும்பி மனைவியை பார்த்துவிட்டு,
“தன்வி. இவன் என்னோட தம்பி முரளி” என்று அறிமுகம் செய்து வைத்தான்.
“ஹலோ அண்ணி” என்று முரளி சொல்ல,
“உங்க தம்பியா?” என்று கணவனிடம் பதில் கேள்வி கேட்டாள் மனைவி.