மலர் சூடும் பெண்மை 18

தன்வி கணவனிடம் செல்ல தயாராக,  “சொன்னா கேளு தன்வி. உன்னை நான் போக வேணா சொல்லலை. ஆனா அவர் வந்து உன்னை கூட்டிட்டு போகட்டும்” என்று மகளை தடுத்து கொண்டிருந்தார் சதாசிவம்.

“ப்பா. அவர் வந்தே ஆகணும்ன்னு என்ன இருக்கு. நான் அவர்கிட்ட போறேனே” மகள் பொறுமையாக சொல்ல.

“விஷயம் இருக்கு தன்வி. பிரச்சனை எங்களுக்குள்ள. ஆனா இடையில உன்னை அவர் அப்படி விட்டு போயிருக்க கூடாது இல்லை”

“அவருக்கு என்மேலேயும் கோவம் தான்ப்பா”

“உன்மேல என்ன கோவம்? அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னை வைச்சு தான் உன்னை பேசினார்”

“சரி அப்படியே இருந்தாலும் என்னோட அப்பாக்காக நான் சமாளிக்க வேணும் தானேப்பா”

“நோ தன்வி என்னோடதை நான் பார்த்துகிறேன். உன்னை அவர் இதுக்குள்ள கொண்டு வர கூடாது” தந்தை அவரின் கூற்றில் நின்றார்.

“அதெப்படி முடியும்? நான் வர கூடாதுன்னா. காட்” பெண்ணுக்கு தலை வலித்தது.

“தன்வி அவர்மேல இருக்கிற கோவத்துல நான் உன்னை தடுக்கலை. என் பொண்ணோட மதிப்பு எங்கேயும், யார்கிட்டேயும் சரிய கூடாது. அது உன் வீட்டுக்காரரா இருந்தாலும் கூட” என்றார் மிகவும் தெளிவாக.

“சித்தப்பா சொல்றது சரிதான் தன்வி” என்றான் வாசுதேவன்.

“ண்ணா நீங்களுமா?”

“தன்வி லிசன். மாமனார், மருமகனுக்குள்ள எல்லாம் சரியாக இன்னும் எத்தனை நாள் ஆகும்ன்னு நமக்கு ஐடியா இல்லை. அதுவரைக்கும் உன்னை மாப்பிள்ளை கஷ்டப்படுத்த கூடாது. லைக் நேத்து பண்ணது போல. இந்த விஷயத்துல சித்தப்பாக்கு இருக்கிற தெளிவு உன் வீட்டுக்காரருக்கும் இருக்கணும். இல்லைன்னா நாம தான் அவருக்கு அதை புரிய வைக்கணும்”

“தேசிகன் அது போலெல்லாம் இல்லை. தன்வி மேல அவருக்கு வேற எதாவது கோவம் இருந்திருக்கலாம்” என்றான் மனோகர் இடையிட்டு.

“அப்படியே இருந்தாலும் அதை அவர் தனியா தான் காட்டணும். இப்படி சித்தப்பாவை வைச்சு காட்ட கூடாது இல்லை”

“ம்ஹூம். நீங்க குழப்புறீங்க. அவளோட முடிவுல அவளை விடுங்க. தன்விக்கு தெரியும்” என்றான் மனோகர்.

“ஏங்க. அண்ணா, அப்பா சொல்றது சரி. தன்வி நீ இவங்க பேச்சை கேளு. உன் வீட்டுக்காரர் வந்து உன்னை கூட்டிட்டு போகட்டும். அதுதான் நல்லது” என்றாள் ஸ்ருதி.

ராஜேந்திரன் ஓய்வெடுக்க சென்றிருக்க, சுதா மகள் புகுந்த வீட்டிற்கான  அன்பளிப்புகளை எடுத்துவைக்க, அறைக்குள் எல்லாம் சேர்ந்து தன்வியை படுத்தி கொண்டிருந்தனர்.

தன்வி தயாராவதை நிறுத்தி அமர்ந்துவிட, “என் பொண்ணுக்கு நான் பார்ப்பேன் தன்வி. நீ என்மேல கோவப்பட்டாலும் சரி” என்றார் சதாசிவம்.

“ப்பா. ப்ளீஸ். எனக்கு நீங்க சொல்றது புரியுது. ஆனா அவர்?” தேசிகனின் மனைவிக்கு தானே அவனை தேடி செல்லத்தான் விருப்பம்.

வரவேற்பிற்கு கூப்பிட்டு, தேசிகனை அவமான படுத்திய தந்தையின் வீட்டிற்கு கணவன் வருவது என்பது அவனின் சுயமரியாதை சம்மந்தப்பட்டது ஆயிற்றே!

“சரிப்பா. அவர் வந்து என்னை கூட்டிட்டு போகட்டும். நீங்க அவரை நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்ணுங்க” என்றாள் மகள்.

“நானா?”

“தன்வி நான் அவரை இன்வைட் பண்ணிட்டேன்” என்றான் வாசுதேவன்.

“ஆமா நீ இருக்கிறது பெரியப்பா வீட்ல தானே? அப்புறம் நான் ஏன் கூப்பிடணும்” சதாசிவம் சொல்ல, தன்விக்கு முதல் முறையாக தந்தை மேல் கோவம்.

“இது உங்க வீடு இல்லை. அப்புறம் அவர் வந்து என்னை கூப்பிட்டா என்ன, கூப்பிடலன்னா தான் என்னப்பா” மகள் பட்டென கேட்க,

“ஆஹ்ன் அதெப்படி? அண்ணனும், நானும் வேறயா என்ன?” என்றார் சதாசிவம்.

தன்வி அவரையே பார்த்திருக்க, “என்ன தன்வி” தந்தைக்கு மகளின் பார்வை எங்கோ ஆழமாக குத்தும் உணர்வை கொடுத்தது.

“எனக்காக தான் பேசுறீங்கன்னு சொல்றீங்கப்பா. ஆனா நீங்க பார்க்கிற கௌரவத்தை என் வீட்டுக்காரர் பார்க்க மாட்டார். எனக்காக வருவார். நீங்க கூப்பிட்டாலும், கூப்பிடலைன்னாலும்”  என்றாள் தன்வி அழுத்தமாக.

“தன்வி நான் அப்படி”

“நோப்பா. ப்ளீஸ். இனியும் நாம இதை பேச வேண்டாம். நான் கிளம்பணும்” என்று ஓய்வறைக்குள் சென்றுவிட, மற்றவர்கள் வேறுவழி இல்லாமல் அறையை விட்டு வெளியேறினர்.

மனோகர் ஆசுவாசத்துடன் சுதாவை தேடி சென்றவன், அவரின் காதில் நடந்ததை போட்டும் வைத்தான்.

தன்வி தயாராகி வர, அவளின் போன் ஒலித்தது. “நான் உங்க வீட்டுக்கு தான் வந்திட்டிருக்கேன். ரெடியா இரு” என்றான் தேசிகன்.

 “நான் இப்போ பெரியப்பா வீட்ல இருக்கேன்” தன்வி அவளின் தந்தையை பார்த்தபடி பதில் சொன்னாள். சதாசிவத்திற்கு முகம் இருண்டு போனது.

“சரி நான் அங்கேயே வரேன்” என,

“நான் கிளம்பிட்டேன். ஹோட்டலுக்கு வந்திடவா?” என்று கேட்டாள் தன்வி.

தேசிகனுக்குள் மனைவியின் செயல் ஜில்லென்று இறங்க, “ம்ம். நான் அனுப்புற லொகேஷனுக்கு வந்திடு” என்று வைத்தான்.

தன்வி பெரியப்பாவை தேடி சென்று சொல்லிக்கொண்டவள், வீட்டில் உள்ளவர்களிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினாள். சதாசிவத்தால் தலையசைக்க மட்டுமே முடிந்தது.

தன்வி கணவன் சொன்ன இடத்தில் இறங்கியவள், கடுப்பாகிவிட்டாள். “என்ன அங்கிள் இது?” என்று ஓட்டுனரிடம் கேட்க,

“நீங்க கொடுத்த லொகேஷன் தான் இது” என்றார் ஓட்டுனர் புரியாமல்.

“வெல்கம் மேடம்” என்றபடி தேசிகன் வர,

“காட்” என்றாள் தன்வி.

தேசிகனின் பார்வையில், தன்வியின் உடைமைகள் எல்லாம் அவனின் காருக்கு மாறியது.

“இங்க எதுக்கு?” தன்வி கைகட்டி கேட்க,

“என் பொண்டாட்டியை விட்ட இடத்துலே பிக்கப் பண்ணத்தான்” என்றான் தேசிகன்.

“நான் உள்ள வரமாட்டேன்” தன்வி அசையாமல் போக,

“தூக்கிட்டு போனா பரவாயில்லையா?” என்று தேசிகன் அவளை நெருங்க,

“சார் கதவை திறந்துட்டேன்” என்று ஆள் வந்தது.

“இதுக்காகவா மண்டபத்தை திறக்க வைச்சீங்க” தன்வி கண்களை விரித்தாள்.

“பின்ன என்னோட இருந்த கொஞ்ச நேரத்திலே ‘நான் சதாசிவத்தோட பொண்ணு தான். உங்க பொண்டாட்டியை விட்டுட்டு வந்துட்டிங்கன்னு’ அத்தனை முறை சொல்லி காட்டிட்ட! விட்டா வாழ்க்கை முழுசும் சொல்லி காட்டுவ, அதான் உஷாராகிட்டேன்” என்றான் தேசிகன் இமை சிமிட்டி.

“ம்ஹூம். நான் வரமாட்டேன்”

“அப்போ அதான் உன் பிளான் இல்லையா?”

“ஏன் சொல்லி காட்டினா குறைஞ்சா போயிடுவீங்க?” தன்வி புருவம் தூக்க,

“கவலைப்படாத. மிஸ்டர் சதாசிவம் இருக்க பயமேன். எப்படியும் உனக்கு சொல்லி காட்ட காரணத்தை கொடுத்திடுவார்” என்றான் மருமகன்.

“இப்போ நீங்க மட்டும் அவரை இழுக்கலாமா?”

“உன்னை இழுக்க விட்டா நான் ஏண்டி அவர்கிட்ட  போக போறேன்?” என்று அவளின் கையை பற்றினான்.

தன்வி மாட்டேன் என்று நிற்க, “வாடி” என்று அவளை அப்படியே தூக்கி கொண்டான்.

“ஸ்ஸ். என்ன பண்றீங்க? விடுங்க நானே வரேன்” அங்கிருக்கும் கேமராவையும், ஆட்களையும் பார்த்து தன்வி திமிறினாள்.

“தூக்கிட்டேன். இனி சுமந்தே ஆவேன்” என்றவன், அவளை விட்டு சென்ற  இடத்திலே சென்று மனைவியை நிற்க வைத்தான்.

“இது ஓவர்?” என்றாள் தன்வி.

“இருந்துட்டு போகட்டும். ஆரம்பிக்கலாமா?” என்று உள்ளங்கைகளை தேய்த்தான்.

“என்ன ஆரம்பிக்க போறீங்க?” தன்வி சந்தேகமாக கேட்க,

“இங்க வைச்சு நீ ஆசைப்படுற எதையும் ஆரம்பிக்க முடியாது, நான் வேற பிளான் வைச்சிருக்கேன்”

“உங்க ஆசையை எல்லாம் என் கணக்குல எழுத வேணாம்” தன்வி நொடிக்க,

“உன் கணக்கு, என் கணக்கு எல்லாம் வேற இல்லை. எல்லாம் ஒரே கணக்கு தான். அதை அப்புறம் பார்ப்போம். சாப்பிடலாம் வா” என்றழைத்தான்.

“சாப்பிடுறதா? என்ன பண்றீங்க நீங்க?” தன்விக்கு அதிர்ச்சி.

“எப்படியும் வாடகைக்கு எடுத்தாச்சு. இருபத்தி நாலு மணி நேரம் இந்த மண்டபம் புல்லா நமக்கு தான். இங்க நீ ஆடலாம், பாடலாம், என்னோட ஓடி பிடிச்சு கூட விளையாடலாம்” என்ற தேசிகன் மனைவியின் கையை பற்றி அவளை சுழலவிட்டான்.

“ஏங்க” என்று பெண் சுற்றி நேராக நிற்க, தேசிகன் அவளை திரும்ப தன் கைக்குள் கொண்டு வந்தவன், “பாட்டு போட சொல்லவா?” என்று கேட்டான்.

“பார்ட்டியா நடக்க போகுது. பேசாம இருங்க” தன்வி மறுக்க,

தேசிகன் விசிலடித்தான். அடுத்த நொடி பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, அமைதியான மண்டபத்தில் இசை நிறைய ஆரம்பித்தது.

தேசிகன் அவளோடு ஆடவே செய்ய, நோ. நோ என்ற தன்வியின் மறுப்பெல்லாம் தேசிகனிடம் எடுபடவில்லை. அவனுக்கேற்றார் போல அவளை ஆட வைக்க, ஒரு கட்டத்தில் மனைவியும் கணவனோடு இணைந்துவிட்டாள்.

சில, பல நிமிடங்கள் எப்படி போனது என்றே தெரியாமல், தம்பதிகள் அவர்கள் உலகத்தில் திளைத்திருந்தனர்.

“போதும். போதும்” என்று தன்வி மூச்சு வாங்க மேடையிலே அமர, தேசிகன் விசிலடித்து பாடலை மாற்றினான்.

இதமான பாடல்கள் ஒலிக்க, இருவருக்கும் குடிக்க வந்தது. “ஊருக்கு போக வேண்டாமா?” என்று தன்வி ஓய்வாக கால்களை நீட்டி கொண்டாள்.

“போலாம். என்ன அவசரம்?” என்ற தேசிகன் மனைவி கால்களை தன் மடிக்கு மாற்ற,

“தேசிகன் ப்ளீஸ்” என்று தன்வி மறுத்து கால்களை இழுத்துகொண்டாள்.

“பேர் சொல்லாதடி” என்றவன், அவளின் மறுப்பை கண்டு கொள்ளாமல் போக,

“சரி சொல்லலை. ஆனா வெளியே வைச்சு இதென்ன?” என்று தன்வி கொடுக்க மறுத்தாள்.

“ஹலோ மேடம் நீங்க என் பொண்டாட்டி தான்னு அடிக்கடி மறந்துடுறீங்க. அதோட கேமரா எல்லாம் ஆப்ல தான் இருக்கு. நீ கொடு” என்றவன், அவளின் விரல்களுக்கு சொடக்கெடுத்துவிட்டான்.

தன்விக்கு வலியுடனான சுகம். “உங்களை போல இருக்கு” என்றாள் தன்னை அறியாமலே.

“என்ன?” தேசிகனுக்கு புரியவில்லை.

“ஒன்னுமில்லை. எனக்கு பசிக்குது” என்றாள் தன்வி.

தேசிகன் அவளை உணவுண்ணும் இடத்திற்கு அழைத்து சென்றான். “வாவ்” என்றாள் தன்வி.

பூக்களால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோட்டம், அதன் பின், “வெல்கம் மிஸஸ் தேசிகன்” என்ற தோரணம் அவளின் கண்களை மட்டுமில்லை மனதையும் கொள்ளை கொண்டது.