தன்வியிடம் அவர்கள் இப்படி என்று சொல்ல, தன்விக்கு கணவன் வருவான் என்ற எண்ணம் ஏனோ வரவில்லை.

‘அவர் வர மாட்டார்’ அவளுள்ளம் அடித்து சொன்னது.

ராஜேந்திரன் அவர் வேலையை முடித்து கொண்டு வீடு வர, மகன்கள் அவரிடம் நடந்ததை சொல்லிவிட்டார்கள். மனிதருக்கு பிரஷர் எகிறிவிட்டது.

“வர சொல்லு அவனை” என்று கத்தவே செய்தார்.

சதாசிவத்திற்கு போன் போக, அவரும் எதிர்பார்த்து இருந்ததால் உடனே மனைவியுடன் வந்துவிட்டார்.

“ண்ணா. நான்” என்று அவர் ஆரம்பிக்கும் போதே,

“இல்லை சதாசிவம். எனக்கு எதையும் கேட்க வேணாம். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு போதும்” என்றார் அண்ணன் கண்டிப்புடன்.

“கேளுங்கண்ணா”

“உன் பொண்ணு அவ புருஷனோடு சேர்ந்து வாழணுமா, வேணாமா?”

“என் பொண்ணு நல்லா வாழணும்ண்ணா. ஆனா அவன்”

“காட்டுமிராண்டி கூட்டம் அவங்க இல்லை. நாம தான் சதாசிவம்” என்றார் ராஜேந்திரன் கடுமையாக.

“ண்ணா என்ன இது?” தம்பி தடுமாற்றம் கொண்டார்.

“பின்ன? சக மனுஷனுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவன், அதுவும் மருமகனுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவனை வேறென்ன சொல்றது?”

“ண்ணா நான் அப்படி இல்லைன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அவனு. சரி அவருக்கு பணம் வேணும்ன்னா நம்மகிட்ட நேரா கேட்க வேண்டியது தானே? அதைவிட்டு”

“சரி மருமகன் நேரா பணம் கேட்டிருந்தா நீ கொடுத்திருப்பியா என்ன?” அண்ணன் கேட்க, சதாசிவத்தின் பதில் இல்லை தான்.

“அப்புறம் வேற யாருக்கு நீ சொத்து சேர்த்து வைச்சிட்டு இருக்க?”

“ண்ணா”

“முதல் விஷயம் அவர் பணம் கேட்கலை. கேட்கவும் மாட்டார். அவரோட வசதி என்னன்னு எனக்கு நல்லா தெரியும். லோன் கேட்ட பணம் அவங்களுக்கு ஒண்ணுமே இல்லை. தொழிலுக்காக நாம எல்லாம் கூட லோன் போறது தான்”

“இரண்டாவது விஷயம் உன் கோவம். மகள் மேல வைச்ச பாசத்தை விட உன்னோட கோவம் அதிகம். அதனால தான் மகளோட வாழ்க்கையை பத்தி சுத்தமா நீ யோசிக்கலை”

“அவளோட வாழ்க்கையை யோசிச்சதனால தான், அவர் மேல கோவமேண்ணா”

“எப்படி, நாமளே அவளுக்கு மருமகனை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு அவரை அவமான படுத்துறது தான் தன்வி மேல நீ வைச்ச பாசமா?”

“நான் கோவத்துல பேசிட்டேன் தான். ஆனா பேசின விஷயம் பொய்யில்லையே? அவரோட அம்மாக்காக என்ன வேணா பண்ணுவேன் சொன்னார். நான் அதை என்னன்னு கேட்க கூடாதா?”

“கேட்ட இல்லை, கேட்டு மருமகன்கிட்ட மரியாதை கெடுத்துகிட்ட இல்லை. இன்னும் என்னதாண்டா வேணும் உனக்கு?”

‘உன்னை பார்க்கிறது தான் எனக்கான தண்டனை’ சதாசிவத்திற்கு இன்னமும் தேசிகனின் வார்த்தைகள் காதுக்குள் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது.

“இல்லை சதாசிவம். என் தம்பி நீ இல்லை. உன்னை எதுவோ பிடிச்சு ஆட்டுது”

“அவரோட ஈகோ தான் மாமா அது” என்றார் சுதா.

சதாசிவம் மனைவியை அதிர்ந்து பார்க்க, “ஆமா. என் மருமகன் உங்களை ஜெயிச்சுட்டே இருக்கார். அதை உங்களால ஏத்துக்க முடியலை. அந்த ஈகோல தான் அவரை கூப்பிட்டு வைச்சு அவமான படுத்தி அனுப்பியிருக்கீங்க. கூட உங்களையும் நீங்க கீழ இறக்கிட்டிங்க, உங்களோட நாங்களும் தான் இறங்கிட்டோம். என்னைக்கு நாங்க உங்களை தனியா விட்டிருக்கோம்?”

“சுதா என்ன நீயே இப்படி பேசுற?”

“என் பொண்ணுங்க அவ. நான் பேசாம”

“இங்க பாரு சதாசிவம், இனியொரு முறை நீ இப்படி பண்ணா அதை ஏத்துகிற சக்தி எங்க மனசுக்கு இல்லை. இப்போ போய் நான் மாப்பிள்ளைகிட்ட பேசறேன். அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னாலும் கேட்டு”

“ண்ணா. அவன்கிட்ட போய் நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும்?” தம்பிக்கு மொத்தமும் துடித்துவிட்டது.

“பின்ன நீ கேட்டாலும், நான் கேட்டாலும் இறக்கம் நம்ம எல்லோருக்கும் தான்”

“பெரியப்பா. ப்ளீஸ். யாரும் எங்கேயும் போக வேண்டாம்” என்றாள் அதுவரை அறைக்குள் இருந்த தன்வி.

“ஏன்? ஏன் போக வேண்டாம்? உன் அப்பா பேசினது சரின்னு சொல்றியா நீ?” என்று மகளிடம் பாய்ந்தார் ராஜேந்திரன்.

“நான் போறேன் அவர்கிட்டன்னு சொல்றேன்” என்று தன்வி சொல்ல,

“இல்லை வேணாம்” என்றார் உடனே சதாசிவம்.

மகளுக்கு அவரிடம் என்ன பேச என்று கூட தெரியவில்லை. அமைதி காக்க, “நீ கிளம்பு தன்வி” என்றார் ராஜேந்திரன்.

“ண்ணா இது அநியாயம்”

“நீ பண்ணது நியாயம் இல்லை. என்னை பேச வைக்காத” என்று ராஜேந்திரன் தம்பியை பேச,  தன்வி கணவனை காண கிளம்பிவிட்டாள்.

அதே ஹோட்டலில் தான் இன்னமும் இருந்தான் தேசிகன். அவனின் அறைக்கு சென்று காலிங் பெல்லை அடிக்க, ஆள் திறந்தபாடில்லை.

தன்வி கடுப்பாகி தொடர்ந்து அடிக்க, “யாரது?” என்ற அதட்டலோடு கதவை திறந்த தேசிகன், நன்றாக தூங்கி கொண்டிருந்தான் போல.

மனைவியை காணவும், “ஹேய் ஹாய்” என்றான்.

தன்வி “உள்ள வரலாமா?” என்று கேட்க,

“எஸ் ப்ளீஸ் மேடம்” என்றபடி கதவை நன்றாக திறந்துவிட்டான் நல்லவன்.

தேசிகன் ஓய்வறை சென்று வந்தவன், “சாப்பிடலாமா?” என்று கேட்டான்.

“எனக்கு வேணாம். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” தன்வி அவனை மூன்றாம் மனிதனாக பாவித்தாள்.

“ஓஹ் அப்படி. ஆனா எனக்கு பசிக்குது, நான் சாப்பிடணும். ஆர்டர் பண்ணு” என்றான் கணவன்.

‘ஏன் உனக்கு கை இல்லையா?’ அவனை முறைத்தபடி உணவை ஆர்டர் செய்தாள்.

தேசிகன் வீட்டினருக்கு அழைத்து பேசியவன், உணவு வரவும் நன்றாகவே உண்டு எழுந்தான்.

“இப்போவாவது பேசலாமா?” தன்வி பல்லை கடித்து கொண்டு கேட்க,

“ம்ம். பேசு” என்றான்.

“முதல்ல உங்ககிட்ட ஸாரி கேட்கணும். பங்க்ஷன்ல வைச்சு உங்களை அப்படி பேசியிருக்க கூடாது”

“யார் பேசினா?” உடனே இடையிட்டான்.

“என் அப்பா”

“இப்போ மேடம் அப்பாக்கு மகளா வந்திருக்கீங்க. ரைட்”

“ஆமா. அவருக்காக தான் வந்திருக்கேன். அவருக்காக தான் உங்ககிட்ட மன்னிப்பும் கேட்டுக்கி”

“உன் மன்னிப்பு எனக்கு தேவையில்லை” அப்படியே வெட்டினான்.

“நான்தான் கேட்பேன். நீங்க அக்சப்ட் பண்ணிக்கணும்”

“என்னடி மிரட்டுறியா?”

“என் அப்பா கேட்பார்ன்னு நீங்க எதிர்பார்க்க கூடாது இல்லை”

“அவரோட மன்னிப்பை நான் எதிர்பார்த்திருந்தா கதையே மாறியிருக்கும். இப்போ பேச்சு நீ யாரா என்னை தேடி வந்திருக்கன்னு தான்”

“சதாசிவத்தோட மகளா தான் வந்திருக்கேன்” தன்வி அவன் கண்களை பார்த்தே சொன்னாள்.

“அப்போ என் பொண்டாட்டி எங்கடி?” அவன் வெடித்தான்.

“அவளை எங்க விட்டுட்டு வந்தீங்களோ அங்கேயே போய் தேடுங்க” தன்வி சீறினாள்.

தேசிகன் ஒரு நொடி அவளை அசையாமல் பார்த்தவன், “அப்போ சரி கிளம்பு. வா என்னோட” என்றான்.

“எங்க வரணும்?” தன்வி சந்தேகமாக கேட்க, தேசிகனோ உடை மாற்ற ஆரம்பித்தான்.

“ஹேய் என்ன பண்றீங்க?” அவன் மேலாடை இல்லாமல், பேண்ட்டில் கை வைக்க பெண் பதறி திரும்பிக்கொண்டாள்.

“என்ன பண்ணிட்டேன் நான்? ஏன் திரும்புற? என்னை பாருடி முதல்ல” என்று அப்படியே அவள் முன் வந்து நின்றான்.

இடையில் பேண்ட் மட்டுமே இருக்க, தன்வி முடியாது என்று கண்களை மூடி கொண்டாள்.

“அவ்வளவு கிளாமராவா இருக்கேன், இப்படி வெட்கப்படுற” என்று சீண்ட,

“உங்களுக்கு அந்த சீன் எல்லாம் கிடையாது” தன்வி இப்போது அவன் கண்களோடு கண்கள் கலந்து கொண்டாள்.

“அப்புறம் ஏன் கீழே பார்க்க மாட்டேங்கிற?”

“பார்க்கிற அளவுக்கு அங்க அழகா ஒன்னும் கொட்டி கிடக்கலை”

“உனக்கு இருக்குன்னு என்னை கிண்டலடிக்கிறியா என்ன?” தேசிகன் வார்த்தையில் தன்வி கண்கள் விரிந்து கொண்டதுடன்,

“ச்சீ. என்ன பேசுறீங்க நீங்க?” என்றாள்.

“இருக்கிறதை தானே சொன்னேன். சரி அதை அப்புறம் பார்த்துக்கிறேன். நீ முதல்ல என்னை பாரு”

“முடியாது” தன்வி உறுதியாக சொல்ல,

“பார்க்கலைன்னா என்ன? என்னை பீல் பண்ணு” என்றவன் அவளை அப்படியே அணைக்க போக,

“நோ, நோ” என்று தன்வி கணவனிடம் இருந்து சட்டென விலகினாள். அவன் அணைப்பின் மீதான பயம்.

“அடிங்க” என்றவன் அவளை அணைத்தே தீருவேன் என்று நெருங்க, தன்வி அவன் கையில் சிக்காமல் அங்கும், இங்கும் ஓடினாள்.

“விட்டேனா பாருடி” என்றவன் மனைவியை துரத்தி பிடித்து, அணைத்தே விட்டான்.

எப்போதும் போல அவனின் முழுமையான அணைப்பு. அதுவும் கணவனை அப்படியே உணர, தன்வி அவனுக்குள் தன்னை குறுக்கி கொண்டாள்.

“ஏன் குறுக்கிற? நல்லா கட்டி பிடிடி. நான் உன்னை முழுசா உணர கூடாதா?”

“ஒன்னும் தேவையில்லை. என்னை விடுங்க”

“நீ என்னை பீல் பண்ற தானே, பாரு நான் எவ்வளவு தாராளமா நிக்கிறேன்”

“இதுவே போதும், போங்க” என்ற தன்வியின் கன்னம் அவனின் வெற்று மார்பில் உரசியது.

தேசிகன் மனைவியின் அருகாமையில் கண்களை மூடி கொண்டான்.

ஏதேதோ அலைப்புறுதல், அதிகப்படியான கோவம் எல்லாம் தன்வியின் அணைப்பில் அடங்கி போனது.

பேசி தீர்க்க வேண்டியது, தீர்க்கவே முடியாதது என்று இருவரிடையே பல இருந்த போதும், மனைவியுடனான இந்த நொடிகள் தேசிகனுக்கானது!.