தன்விக்கு நடந்த எதையும் முழுதாக புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அதற்குள் தேசிகன் அங்கிருந்தே சென்றுவிட, பெண்ணுக்கு திகைத்த நிலை.
அவள் அப்படியே நின்றுவிட, ராஜேந்திரனின் பெரிய மகன் வாசுதேவன் தங்கையை தன் தோளோடு அணைத்து கொண்டான்.
“ண்ணா” என்ற பெண்ணுக்கு அந்நேரம் அவன் தோளணைப்பு மிகவும் வேண்டியதாகவே இருந்தது.
“ஒண்ணுமில்லைடா. நாங்க இருக்கோம்” என்றவன், மறந்தும் சதாசிவம் பக்கம் திரும்பவில்லை.
தேசிகனின் மாமா, அத்தை சூழ்நிலையை புரிந்து கொண்டு, “யம்மா மகளே. வா நாம கிளம்பலாம்” என்றார்கள் அவளிடம்.
தன்விக்கோ கலவையான மனநிலை. அவர்களுடன் செல்ல வேண்டும், கணவனை பார்க்க வேண்டும் தான்.
ஆனாலும்? என்னமோ அப்படியே அண்ணனின் அணைப்பில் நின்றாள் பெண்.
“அண்ணி. வாங்க. அண்ணன் ஹோட்டல் தான் போயிருக்கான். வாங்கண்ணி” என்று தேசிகனின் தம்பி வந்து நின்றான்.
“இப்போ என்ன? அவனை நாம கண்டிக்கலாம். நீ கிளம்பு முதல்ல” என்று தேசிகனின் அத்தை அவளை அதட்டியதுடன், அவரின் கை மகளின் தலையை பரிவுடன் வருடி கொண்டிருந்தது.
தன்வியின் அமைதியில், “அவளை நாங்க கூட்டிட்டு போறோம். நாளைக்கு என்ன பண்றதுன்னு பார்க்கலாம்” என்றான் வாசுதேவன்.
“தம்பி. இது வேண்டாம். என்னவா இருந்தாலும் எங்க மக, அவ வீட்டுக்கு வந்து பார்த்துக்கட்டும்” என்றார் தேசிகனின் மாமா உடனடியாக.
“இல்லை சித்தப்பா. ப்ளீஸ். தன்வியை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. அவ எங்களோட வரட்டும்” என்றான் ராஜேந்திரனின் இளைய மகன் சுதர்ஷன்.
“ம்ஹூம் ஆகாது தம்பி. எங்க மருமக எங்களோட தான் இருக்கணும். விட்டுட்டு எல்லாம் போக முடியாது” என்றார் தேசிகனின் பங்காளி சதாசிவத்தை கோவமாக பார்த்தபடி.
வாசுதேவன் அவர்களின் எண்ணத்தை சட்டென புரிந்து கொண்டவன், “தன்வியை நாங்க எங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறோம். இதை பெரியவங்க மறுக்க வேண்டாம். அவளுக்கான நேரத்தை நீங்க கொடுக்கணும்” அண்ணனாக அவன் நிலையில் நின்று பேசினான்.
தேசிகனின் மாமாவிடம் மறுப்பே. ஆனால் அத்தை பெண்ணின் மனதை புரிந்து கொண்டவர், “நாளைக்கு நாம பேசலாம். அவ ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார்.
“இல்லை அத்தை அது சரிவராது. அண்ணி நம்மளோட கிளம்பட்டும்” என்று தேசிகனின் தம்பி நிற்க,
மனோகர், “உங்க அண்ணி வருவா. இன்னைக்கு ஒரு நாள் எங்களோட இருக்கட்டும்” என்று கேட்க, வீட்டினரும் அவனை சமாதானம் செய்து கிளம்பிவிட்டனர்.
இப்போது மண்டபத்தில் தன்வி வீட்டினர் மட்டுமே. “ப்பா. உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலைப்பா” என்றாள் ஸ்ருதி கண்ணீருடன்.
தங்கை வாழ்க்கை ஒருபக்கம், அப்பாவின் செயலை ஜீரணிக்க முடியா வேதனை மறுபக்கம் என்று அவளின் கண்கள் கலங்கி போனது.
சதாசிவம் ஏதோ பேச வர, “நோ சித்தப்பா. தயவு செஞ்சு எதுவும் பேசிடாதீங்க. இனி எதுவா இருந்தாலும் உங்க அண்ணன் வந்ததுக்கு அப்புறம் தான்” என்ற வாசுதேவன், “நாங்க கிளம்புறோம் சித்தி” என்று சுதாவிடம் சொல்லி கொண்டு தங்கையுடன் அவர்கள் வீடு சென்றார்கள்.
உடன் மனோகர், ஸ்ருதியும் கிளம்பிவிட, சுதா வெடிக்கும் வார்த்தைகளை அடக்கி கொண்டு கணவருடன் சென்றார்.
மறுநாள் தன்வி வீட்டு இளையவர்கள், தேசிகன் முன் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு குடிக்க காபி வர, மறுக்காமல் எடுத்து கொண்டார்கள்.
நேற்றிரவு நடந்த எதுவும் இன்னமும் பெரியவர்களுக்கு தெரியவில்லை. ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தவர்கள், பேரனை மட்டும் கண்டு, “ராசா எங்க தன்வி பொண்ணு? நீங்க எங்களோட வரலையா?” என்று கேட்டார் பாட்டி.
தேசிகன் மௌனம் காக்க, அவனின் தம்பி தான் இரவு நடந்ததை அம்மாவிடம் சொல்லிவிட்டான்.
பெரியவர்கள் அதிர்ந்து போனதுடன், கோவமும் கொண்டார்கள். “நாமளும் பொறுமையா போயிடலாம் பார்த்தா அந்த மனுஷன் விட மாட்டேங்கிறாரே? இப்போ என்னவாம் அவருக்கு?” என்று பேச,
சாவித்திரி மட்டும் மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.
“சாவித்திரி நம்ம தேசிகன் மேல எந்த தப்பும் இல்லை. அவன் முடிஞ்சவரை பொறுமையா தான் இருந்தான்” என்று தேசிகனின் மாமா சொல்ல,
“அவன் மாமனார்கிட்ட அவன் ஆயிரம் சண்டை போட்டுக்கட்டும். என் மருமக எங்கன்னு தான் நான் கேட்கிறேன்” என்றார் அவர் கணீரென்று.
“ம்மா”
“அவளோட வீட்டுக்கு வா, இல்லைன்னா வராத” என்று அவர் முடித்து கொண்டவர், உணவை தொடாமலே கிளம்பிவிட்டார்.
அவர்களுக்காக உணவை ஏற்பாடு செய்திருந்த வாசுதேவன், “அத்தை. நீங்க சாப்பிடலையா?” என்று சாவித்திரியிடம் கேட்டான்.
“இல்லை தம்பி. பசிக்கலை. தன்விகிட்ட பேசணும்” என்றார்.
வாசுதேவன் போனில் அழைத்து கொடுக்க, “நாங்க ஊருக்கு கிளம்புறோம்” என்றார் மருமகளிடம்.
தன்விக்கு சட்டென ஒரு குற்ற உணர்ச்சி. அவளின் அம்மா வீடு ஏற்பாடு செய்த வரவேற்பிற்கு தானே அவர்கள் வந்தார்கள். என்னதான் அண்ணன்கள், மனோகர் சென்றிருந்தாலும், மருமகளாக நானும் வழியனுப்பி விட சென்றிருக்க வேண்டுமோ?
“ஆஹ் சரி, சரி அத்தை” என்றாள் மருமகள் திணறி.
“என்னவா இருந்தாலும் நான் இருக்கேன் உனக்கு மறந்திடாத” என்றார் மாமியார்.
தன்விக்கு அந்த நொடி கண்கள் கலங்கிவிட, “நேர்ல பார்க்கலாம்” என்று வைத்தார்.
அதன் பின் தன்வியே வீட்டின் பெரியவர்களிடம் போனில் பேசி, அவர்களை வழியனுப்பி வைத்தாள்.
தேசிகன் மட்டும் அங்கிருக்க, தன்வியின் அண்ணன்களும், மனோகரும் அவன் முன் நின்றனர்.
அவன் ஒருவன், அவனுக்கு முன் மூவர் கோவத்தை சுமந்தபடி.
“ண்ணா. நியாயப்படி நீங்க என்னோட நிக்கணும்” என்று மனோகரிடம் சொன்னான் தேசிகன்.
“தம்பி. தம்பி. நான் இப்போ தன்விக்கு மாமாவா வந்திருக்கேன்” என்றான் மனோகர்.
“ம்ம்ம். ஆரம்பிங்க” என்றான் தேசிகன்.
தங்கையின் புகுந்த வீடு கிளம்பும் வரை பொறுமை காத்தவர்கள், “உங்களுக்கும், உங்க மாமனாருக்கும் தானே பிரச்சனை?” என்று கேட்டார்கள்.
“என் பொண்டாட்டி இல்லாம அவர் மாமனார் ஆகிட முடியாது இல்லை” தேசிகன் சொன்னான்.
“அப்போ இது தொடரும் சொல்றீங்களா?” வாசுதேவன் கூர்மையாக கேட்க,
“அது உங்க சித்தப்பா கையில தான் இருக்கு மச்சான்” தேசிகனும் தீர்க்கமாக பதிலளித்தான்.
“வாய்ப்பில்லை மச்சான். அவரோட இரத்த சூட்டை விட என்னோடது அதிகமாத்தானே இருக்கும்”
“அதுக்கு எங்க தங்கச்சி தான் பிணையா?” என்று ராஜேந்திரனின் இளைய மகன் சுதர்ஷன் கேட்டான்.
“அவ பிணையா வந்ததுல இருந்து தானே எல்லாம் ஆரம்பிச்சது?”
“அவ ஏமாத்துற வரை ஏமாந்த நல்லவர் தானே நீங்க?” என்று மனோகர் நக்கலடிக்க,
“ண்ணா. என்ன இருந்தாலும் நாம மருமகன்கள், நாளைபின்ன மச்சானுங்க இப்படி உங்க முன்னாடி நிக்கும் போது நான்தான் உங்க பக்கத்துல நின்னாகனும். பார்த்துக்கோங்க” என்றான் தேசிகன்.
“அப்படி எல்லாம் எனக்கு நடக்கும்ன்னு நீ கனவுல கூட நினைக்காத தம்பி. நான் போலீசுக்காரன், எங்க பாயணும், எங்க பம்மணும்ன்னு எனக்கு நல்லா தெரியும். நீ உன் பஞ்சாயத்தை பாரு” என்று மனோகர் சொல்ல,
“மாமா. நீங்க இதை லேசாக்க பார்க்கிறீங்க. இதுக்கு பேசாம நீங்க அவரோட நின்னுக்கலாம்” என்றான் சுதர்ஷன் அவர்களின் பெரிய மாப்பிள்ளையை கண்டு கொண்டு.
“நாங்க சித்தப்பாகிட்ட பேசறோம். ஆனா உங்ககிட்ட நாங்க சொல்ல வேண்டியது இது தான். கேஸ் விஷயத்துல நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க. அந்த கோவம் உங்களுக்கு எப்போ போகும்ன்னு எங்களுக்கு தெரியாது, ஆனா அதுவரை உங்க இரண்டு பேருக்கும் இடையில எங்க தங்கச்சி வர கூடாது” என்றான் வாசுதேவன்.
“இதை நீங்க என் பொண்டாட்டிகிட்டேயும் சொல்லி வைக்கிறது பெட்டர்” என்றான் தேசிகன்.
“மேடமோட அப்பாக்காக அவ வராம இருக்க மாட்டா. அப்புறம் நான் எப்படி உங்களுக்கு உறுதி கொடுக்க முடியும்?”
“அவர் மகளுக்காக தானே சித்தப்பா உங்களை பனிஷ் பண்ணார். ஒரு அப்பாவோட கோவம் அது. நீங்க அதை எந்நேரமும் சுமந்துட்டே இருந்தா தன்வி எப்படி நிம்மதியா இருக்க முடியும்? அப்புறம் எதுக்கு இந்த கல்யாணம் எல்லாம்?” சுதர்ஷன் தெளிவாக கேட்க,
வாசுதேவனும் தொடர்ந்து, “தன்வி கழுத்தில நீங்க கட்டாய தாலி கட்டின நேரம், சித்தப்பாவை விட நாங்க தான் உங்கமேல அதிகமான கோவத்துல இருந்தோம். சித்தப்பா அவரே பாத்துக்கிறேன்னு எங்களை தள்ளி வைச்சுட்டார். இல்லைன்னா பிரச்சனை இன்னும் அதிகமாக தான் இருந்திருக்கும். ஒரு மாசத்தோட எல்லாம் நீங்க வெளியே வந்திருக்க முடியாது”
“அப்புறம் மனோகர் மாமா தான், உங்க கேஸை கண்டுக்காம விட சொல்லி எங்ககிட்ட கேட்டுக்கிட்டார். உங்க தவறை சரி பண்ணிக்க தான் அப்படி செஞ்சிங்கன்னு புரிஞ்சது. இல்லைன்னா திரும்ப எல்லாம் தன்வி உங்க வாழ்க்கைக்குள்ள வர நாங்க விட்டிருக்க மாட்டோம்” என்றான் அண்ணன்.
“அடேங்கப்பா. ரொம்ப பெரிய உதவி தான் எனக்காக நீங்க பண்ணது. என் மச்சான்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்” என்றான் தேசிகன். அதில் எள்ளல் அதிகம் இருக்க,
“தம்பி” என்றான் மனோகர் அவனை அடக்கும் விதமாக.
“நீங்க இருங்கண்ணா. என்னமோ இவங்க எனக்கு பாவம் பார்த்த மாதிரி பேசிட்டிருக்காங்க. தெரியலைன்னா இவரை கேளுங்க. அன்னைக்கு நான் மனசு வைச்சப்புறம் தான் உங்க சித்தப்பா என்னை ஜெயிலுக்குள்ளே அனுப்ப முடிஞ்சது”
“அதுவும் எதுக்காக தெரியுமா நான் பண்ணது தப்புன்னு நான் உணர்ந்ததால! எனக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கன்னு உங்க சித்தப்பாகிட்ட கேட்கிறதுக்காக! என் பொண்டாட்டி கூட நான் வாழுறதுக்காக! ஆனா உங்க சித்தப்பா பண்ணது?”
“அவர் இடத்தில அவர் சரி. எங்க வீட்டு பொண்ணுக்கு ஒருத்தன் கட்டாயமா தாலி கட்டுவான், நாங்க அவனை விட்டுட்டு இருக்கணுமா? ஏன் இதே உங்க வீட்ல நடந்திருந்தா நீங்க அப்படி தான் விட்டிருப்பீங்களா என்ன?”
“விட்டிருக்க மாட்டேன். ஆனா அவன் தப்பை உணர்ந்து ஒரு வாய்ப்பை கேட்கும் போது அவனுக்காக யோசிச்சிருப்பேன். கண்ணை மூடிக்கிட்டு பழி வாங்கியிருக்க மாட்டேன்”
“சரி அதுக்காக காலத்துக்கும் தன்வி தான் படணுமா என்ன?”
“நிச்சயமா இல்லை. என் பொண்டாட்டி ஏன் கஷ்டப்படணும்?”
“அப்புறம் நேத்து நீங்க பண்ணிட்டு வந்தது?”
“அது எங்களோட பெர்சனல்”
“எது. எல்லார் முன்னாடியும் அவகிட்ட கோவபட்டு வரது தான் உங்க பெர்சனலா?”
“அப்போ அவகிட்ட நான் தனியா கோவப்பட்டா தப்பில்லையா என்ன?”
“ஆஹ்ன் அதெப்படி?”
“புரியுது தானே? எங்களுக்கு டைம் எடுக்கும். இடையில ரொம்ப பெரிய சைஸ் வில்லங்கம் வேற”
“ஹலோ மாமா”
“இல்லைன்னு சொல்லிடுவீங்களா என்ன? அவர் எனக்கு வில்லங்கம் தான்”
“சரி அதை நீங்களே பார்த்துக்கோங்க. எங்க தங்கச்சிக்கு என்ன பதில்?”
“முதல்ல அவகிட்ட எனக்கென்ன பதில்ன்னு கேட்டு சொல்லுங்க” என்றான் தேசிகன் விடாமல்.
“அட போயா. எப்படி போனாலும் வந்து நிக்கிற” வாசுதேவன் சோர்ந்து போய்விட்டான்.
சுதர்ஷன், “நீங்களே பரவாயில்லை மாமா” என்று மனோகரை பார்த்து ஆறுதல் பட்டுக்கொண்டான்.
“இப்போ தெரியுதா என் அருமை” என்று மனோகர் காலரை தூக்கி விட்டு கொள்ள, எல்லார் முகத்திலும் மெலிதான புன்னகை.
அதனுடனே, “வீட்டுக்கு வாங்க” என்று தேசிகனை அழைத்தான் வாசுதேவன்.
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்ற தேசிகன், அவர்களுடன் உணவுண்டு, நல்ல முறையிலே பேசி அனுப்பி வைத்தான்.