மலர் சூடும் பெண்மை 14 1 10936 மலர் சூடும் பெண்மை 14 மறுநாள் மணமக்கள் தேசிகன் குடும்பத்தின் குலதெய்வத்திற்கு முன் நின்றிருந்தனர். தன்வி பொங்கலிட்டு, பூஜையும் பெரிதாக நடந்தது. கோவில் நிறைய ஆட்கள். புதுமண தம்பதிகளுக்கு மாலை கொடுத்து, குங்குமம் கொடுக்க தேசிகன் மனைவிக்கு மாலை அணிவித்து, குங்குமம் வைத்துவிட்டான். அதன் பின் இருவரும் சுற்றி வர, உணவும் அங்கேயே ஏற்பாடாகி இருந்தது. எந்த வேலைக்கும் தனியே ஆட்களை வைக்கும் தேவை தேசிகன் குடும்பத்திற்கும் என்றும் இருந்ததில்லை. சமைப்பதில் இருந்து, பரிமாறுவது வரை எல்லாம் இவர்களே தான். “அதென்ன ஆளுக்கொரு வேலை செஞ்சா சட்டுன்னு முடியுது, அதுக்கு போய் ஆளை வைச்சுக்கிட்டு” என்று எல்லாம் ஒன்று போல் தான் சொல்வர். தம்பதிகள் மட்டும் தாமதமாக வந்து இணைந்து கொள்ள, மற்றவர்கள் முன்னமே வந்து எல்லாம் தயார் செய்து வைத்திருக்க, உடனே பந்தி பரிமாறி விட்டனர். தன்வியும், தேசிகனும் உணவை முடித்து கொள்ள, “அப்படியே போய் வாங்க” என்றார் பெரியவர். தன்வி கணவனை கேள்வியாக பார்த்து அவனுடன் ஊருக்குள் நடக்க, சதாசிவம் அங்கு குதித்தார். “வெயில் ஏற ஆரம்பிச்சிடுச்சு. இப்போ போய் சுத்தி பார்க்க சொல்லி அனுப்புறீங்க? இங்கென்ன கொட்டி கிடக்குன்னு“ “சம்மந்தி. சம்மந்தி. நிதானம்” என்ற பெரியவர், “எங்க சொந்த ஊர் தான் இது. இங்கிருக்கிற ஒவ்வொரு வீடும் நம்ம பங்காளி, அங்காளி தான். கோவிலுக்கு வர முடியாதவங்க பொண்ணு, மாப்பிள்ளையை பார்க்கணும்ன்னு தான் போக சொன்னேன்” என்றார் விளக்கமாக சதாசிவம் அப்போதும் முகம் சுளித்து நிற்க, “ஏம்மா மகளே. சம்மந்திக்கு மருந்து மாத்திரை எல்லாம் சரியா கொடுக்கிறியா?” என்று சுதாவிடம் விசாரித்தார். “கொடுக்கிறேன்ப்பா” என்று அவர் சொல்ல, “பார்த்தா அப்படி தெரியலைமா. எந்நேரமும் ரத்தம் கொதிச்சுட்டு தான் இருக்கு” என்று அவர் செல்ல. “பார்த்தியா இவங்க நக்கலை” என்று மனைவியிடம் கடுப்படித்தார் கணவர். தேசிகன் நடந்தபடி தன்விக்கு இதே விளக்கத்தை கொடுக்க, அவளின் புருவம் உயர்ந்ததுடன், “இப்போ தான் புரியுது உங்களுக்கு எப்படி இவ்வளவு சொந்தம்ன்னு” என்றாள். “காசை சேர்த்துடலாம். மனுஷனை சேர்கிறதுக்கு தான் கஷ்டம். எல்லார்கிட்டேயும் ஏதோ ஒரு குறை, வில்லங்கம் இருந்துகிட்டே தான் இருக்கும். இழுத்து பிடிச்சுக்கிட்டு போக வேண்டியது தான்” என்றவன், வழியில் தென்பட்டோரிடம், முக்கியமானவர்களிடம் எல்லாம் பேசி, மனைவியை அறிமுகம் செய்து வைத்தான். அவர்களுக்கான உணவும் வந்து சேர்ந்தது. எல்லாம் முடிந்து தேசிகன் குடும்பம் வீடு திரும்பியது. “இன்னும் இரண்டு நாள்ல ரிசப்ஷன். அதுக்கு முன்ன எங்க கோவில்லையும் பூஜை பண்ணனும்” என்றார் ராஜேந்திரன். “சரி அப்போ நாங்க நாளைக்கே அனுப்பி வைக்கிறோம்” என்று பெரியவர் சொல்ல. “நீங்களும் கட்டாயம் எல்லாம் வரணும்” என்றார் அவர். “ரிசப்ஷனுக்கு நாங்க இல்லமலா? ஆனா கோவில் பூஜை நீங்க பார்த்துக்கோங்க” என்றுவிட, ராஜேந்திரன் தம்பிக்கு கண் காட்டினார். அவரின் கண்டிப்பிலே அமைதியாக நின்றிருந்த சதாசிவம், அவரின் முறைக்கு எல்லோரையும் அழைத்தார். “வந்துடுறோம் சம்மந்தி” என்று எல்லாம் சொல்ல, ‘வேணும்ன்னே சம்மந்தி சொல்றாங்க. அண்ணனை கூப்பிட்டப்போ சொல்ல வேண்டியது தானே?’ சதாசிவம் தனக்குள் காண்டாகிவிட்டார். வெளியே காட்ட முடியாதே. மகளின் மலர்ந்த முகம் அவரை, அவரின் கோபத்தை கட்டுப்படுத்தவே செய்தது. ராஜேந்திரன் மகன்கள் திருமணம் முடிந்ததும் ரிசப்ஷன் வேலையை பார்க்க சென்றிருந்தனர். அதனால் அதுபற்றி கவலை அண்ணன், தம்பிக்கு இல்லை. நிதானமாக இன்று இவர்கள் கிளம்ப, தேசிகனின் அத்தை அவர்களுக்கான அன்பளிப்பை காரில் அடுக்கினார். சுதா கொஞ்சம் தயங்கி சாவித்திரியிடம் சென்றார். அவர் மிகவும் தனியாக தெரிந்தார். வார்த்தைகள் அவசியம் என்றால் ஒழிய அவரிடம் இருந்து வருவதில்லை. மகளுக்காக வேண்டி, சுதா அவரின் முன்னெடுப்பை எடுக்க, சாவித்திரி இயல்பாக புன்னகைத்து அவரை பேசும்படி ஊக்கினார். “உங்ககிட்ட ஏதும் சொல்லணுமான்னு கூட எனக்கு தெரியலை. தன்வியை பார்த்துக்கோங்க” என, “நான் மட்டும் இல்லை. நம்மளோட மொத்த குடும்பமும் அவளை பார்த்துப்பாங்க. நீங்க கவலைப்படாதீங்க” என்றார் சாவித்திரி. சதாசிவம் அவரிடம் சொல்லி கொள்ள, “பத்திரமா போய்ட்டு வாங்கண்ணா” என்று கை கூப்பினார் சாவித்திரி. அவரின் மென் புன்னகை, அண்ணா என்ற அழைப்பு சதாசிவத்தை நிச்சயம் நொடி கரைய செய்தது. ‘இவங்க மகன், இவங்களை போலவே இருந்தா நல்லா இருக்கும்‘ என்று அடுத்த நொடியே பெருமூச்சும் விட்டு கொண்டார் மனிதர். அடுத்து எல்லோருக்கும் சொல்லி கொண்டு மகளை தன் தோள் வளைவுக்குள் வைத்து கொண்டார் தந்தை. தன்விக்கு கண்ணீரை அடக்குவது பெரும்பாடாக இருந்தது. முதலிலே மகள் மேல் பாசம் தான். ஆனால் தேசிகன் உள்ளே வந்ததில் இருந்து இன்னமும் அவள் மேல் அன்பு, அக்கறை கூடி போனது. எப்போ வந்து என் பொண்ணை தூக்கிட்டு போய்டுவானோ என்ற அவரின் விடாத அலைப்புறுதல் இந்த நொடி உண்மையாகி தான் போயிருந்தது. என்ன இவரே அவனுக்கு தன் மகளை தூக்கி கொடுத்திருக்கிறார், அவ்வளவு தான். அதனாலே என்னமோ பெரிதாக அவரின் கோபத்தை அவரால் காட்ட முடியவில்லை. ‘நல்லா இருந்தா சரி‘ என்ற வேண்டுதலோடு, மகள் கை பற்றி காருக்கு வந்தார். ராஜேந்திரன், சுதா, ஸ்ருதி, மனோகர் எல்லாம் அவளை கடைசிவரை அணைத்து ஆறுதல் சொல்ல கூட சதாசிவம் இடம் கொடுக்கவில்லை. கண்ணீரை ஒற்றி கொண்டு, அவளுக்கு சொல்லி கொண்டார்கள். சதாசிவம் மகளுக்கு உச்சி முத்தம் வைத்தவர், “நாளைக்கு வாடா. பேசலாம்” என்றார். “ம்ம்” என்ற கலங்கிய கண்களோடு மகள் தலையசைக்க, அவர்கள் கார் கிளம்பியது. தன்வி அங்கேயே நிற்க, அவளுக்கு பக்கத்தில் ஒரு கூட்டம். “எண்டெர்டெயின்மென்ட் கிளம்பிட்டார். கொஞ்சம் போரடிக்குது” என்றனர் இளஞைர்கள். “அதுக்குள்ளேவா. டேய். என்னை நினைச்சு பார்த்துட்டு மிஸ் பண்ணுங்கடா” தேசிகன் சொல்ல, “சொல்றதுக்கு இல்லை. என் மகளை உங்ககிட்ட எல்லாம் விட்டுட்டு போக முடியாதுன்னு திரும்பி வந்தாலும் வந்துட்டு இருப்பார்” என்றான் தேசிகனின் தம்பி. “இருந்தாலும் இருக்கும். நாம ஏன் பேசாம தோட்டத்துக்கு போக கூடாது” என்று தன்வியிடம் கேட்டான் தேசிகன். “ஓய் என்ன எல்லோருக்கும் கிண்டலா” என்று தன்வி உர்ரென மிரட்ட, “நாங்க உண்மையை தான் சொல்றோம் அண்ணி. எங்களுக்கு அவர் எம்டன் தான்” என்று எல்லாம் ஓடிவிட, தன்வி பக்கத்தில் நின்ற தேசிகனை தான் முறைத்து வைத்தாள். “எனக்கு என் மாமனார் எம்டன் எல்லாம் இல்லை” என்ற தேசிகன் வார்த்தையில், தன்வி அவனை சந்தேகமாக பார்க்க, “எம்டனுக்கும் மேல” என்று தோள்களை குலுக்க, தன்வி கடுப்பாகி அவன் தோளின் மேலே அடி வைத்தாள். “உண்மையை சொன்னா உலகம் என்னைக்கும் ஏத்துக்காது” என்றவன், மனைவியை அழைத்து கொண்டு அவனின் அலுவலகம் சென்றான். தன்விக்கு எல்லாவற்றையும் காட்ட, “நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” என்று கேட்டாள் மனைவி. அவர்களின் திருமண பத்திரிகையில் அதெல்லாம் போடவில்லை. தன்வியும் இதுவரை தெரிந்து கொள்ள நினைக்கவில்லை. இப்போது தான் கேட்க, “உனக்கு தெரியாது?” என்று ஆச்சரியமாக கேட்டான். “இல்லை. சொல்லுங்க?” என, “உன்னளவுக்கு எல்லாம் படிக்கலை. நான் ப்ளஸ் டூ” என்று தேசிகன் சொல்ல, “விளையாடாதீங்க” என்றாள் தன்வி. “ஏய் நான் உண்மையை சொல்றேன்” என்று தேசிகன் மிகவும் சீரியசாக சொன்னான். தன்வி நின்றுவிட்டவள், “நீங்க உண்மையை சொல்லலை நான் வீட்ல கேட்பேன்” “கேட்டுக்கோ. ஏன் நான் ப்ளஸ் டூ மட்டுமே படிச்சிருக்கிறது உனக்கு கௌரவ குறைச்சலா இருக்கா?” “காட். உங்ககிட்ட பேசுறது வேஸ்ட். அங்கிள்” என்று அங்கு வந்த தேசிகன் மாமாவை அழைத்தாள். “அதென்ன அங்கிள். பெரியப்பா சொல்லு” என்று தேசிகன் அதட்ட. “சரி பெரியப்பா. இவங்க என்ன படிச்சிருக்காங்க?” என்று கேட்க, அவர் தேசிகனை பார்த்தபடி, “ப்ளஸ் டூ” என்றார்.