மலர் சூடும் பெண்மை 13

தேசிகனும் தன்வியிடம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. உள்ளங்கையில் சிறைப்பட்டிருந்த மாங்கல்யத்தை அவளின் நெஞ்சத்திலே விட்டவன், தன் முன் நின்றிருந்தவளின் கை பற்றி தன்னருகே அமர வைத்து கொண்டான்.

அவர்களுக்கான உணவும் வந்துவிட்டது. வழக்கம் போல் மணமக்கள் மாற்றி ஊட்ட சொல்லவே இளைஞர்கள் அங்கு கூடிவிட்டனர்.

“டேய் இதென்னடா” என்று தேசிகன் சலிக்க,

“ண்ணா. இதுவும் சடங்கு தான். ஊட்டுங்க, ம்ம்” என்று அவர்கள் கலாட்டாவை தொடர்ந்தனர்.

தேசிகன் இனிப்பை எடுத்து மனைவிக்கு கொடுக்க, தன்வியும் அவனுக்கு இனிப்பெடுத்து ஊட்டினாள்.

சதாசிவம் தள்ளி நின்று இதை பார்த்தவர், ஒருமாதிரி சுருங்கிய முகத்துடனே அங்கிருந்து நகர்ந்தார்.

“டேய்  தம்பி. என்ன இது முகத்தை இப்படி வைச்சிருக்க?”  என்று ராஜேந்திரன் அவரை கண்டிக்க,

“ண்ணா. போங்கண்ணா. என் பொண்ணுக்கு அவன் ஜோடியா?” என்றார் தந்தை அங்கலாய்த்து.

“ஏன்? பையன் அழகா இல்லையா? இல்லை படிச்சிருக்கலையா? இல்லை உன் வசதிக்கு குறைச்சலா இருக்கானா?”

“எல்லாம் இருந்தும் அவன் நல்ல வழியில என் பொண்ணு வாழ்க்கைக்குள்ள வரலையே” என்றார் சதாசிவம்.

“இப்போ என்ன கெட்டது செஞ்சுட்டான்?”

“என்னை கடத்தி தானே என் பொண்ணை இழுத்துகிட்டான்”

“நீ ரொம்ப நல்லவன், அவன் மட்டும் தான் கெட்டவன் பாரு. என்னை பேச வைக்காத. வா” தம்பியை தன்னுடனே வைத்துக்கொண்டார் மனிதர்.

மணமக்கள் வீடு கிளம்பும் நேரம் வந்துவிட்டது. “நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்புங்க” என்று பெரியவர் குரல் கொடுக்க,

“என் மகன் என் வீட்டுக்கு தான் வரணும்” என்றார் தேசிகனின் தந்தை.

தன்விக்கு அப்போது தான் அவர் தேசிகனின் தந்தை என்பதே தெரியும். இதுவரை எல்லா இடத்திலும் மூன்றாம் மனிதராக நின்றிருந்தவர் இப்போது முன் வந்து உரிமை குரல் கொடுத்தார்.

சாவித்திரி எங்கிருந்தோ வந்து மகன் பக்கம் நின்றார். உடன் அவர் இளைய மகனும்.

“இங்க பாருப்பா. இந்த பேச்சுக்கு எல்லாம் இங்க நேரமில்லை. வழியை விட்டு நில்லு” என்று அதட்டினார் பெரியவர்.

“அதெப்படி? என் தங்கச்சி மகன், கல்யாணம் முடிச்சு முதல்ல அவன் வீட்டுக்கு தானே வரணும். மருமக அவங்க வீட்ல தான் விளக்கேத்தணும்” என்றார் சுஜாதாவின் அப்பா.

“அடேங்கப்பா. அதை நீ சொல்றியா? நீ ஓடி போய் கல்யாணம் பண்ணப்போ, உன் பொண்டாட்டி எந்த வீட்ல விளக்கேத்தணாளாம்?” என்று பாட்டி நக்கலாக கேட்டார்.

“பெரியம்மா”

“நிறுத்துடா. எரியுற வீட்டுல இன்னும் பத்த வைக்க பார்க்காத. சொந்தம் விட்டு போக கூடாதுன்னு தான் உங்களை எல்லாம் கல்யாணத்துக்கே கூப்பிட்டது. நடுவீட்ல உட்கார்ந்து நாட்டாமை பண்ண இல்லை”

“பெரியம்மா. என்ன இருந்தாலும் நான்தான் நம்ம வீட்டுக்கு முதல் வாரிசு. எனக்கும் முடிவெடுக்கிற உரிமை இருக்கு”

“இல்லை. நீ எப்போவும் எங்க வீட்டுக்கு வாரிசா இருக்க முடியாது. கிளம்பு” என்றார் தேசிகனின் மாமா. சுஜாதா தந்தையின் தம்பி.

“டேய் நீ என்னடா சொல்றது? உனக்கு முன்ன அங்க பிறந்தவன் நான், தங்கச்சி மகன் அங்க ஆட்சி ஆளலாம். நான் பேச கூடாதா?”

“பேச கூடாது” என்றான் தேசிகன்.

“நீ என்ன சொல்றது?”

“அவன் தான் சொல்வான். என் பேரனுக்கு ஆட்சி ஆள முழு உரிமையும் நாங்க கொடுத்திருக்கோம்” என்றார் பெரியவர்.

“என்னைக்கு இருந்தாலும் நீ தேசிகன் இடத்தை பிடிக்க முடியாது, கனவு காணாம ஊர் போய் சேருற வழியை பாரு” என்றார் தேசிகனின் மாமா.

“உங்க குடும்ப விஷயத்தை அப்புறம் பார்த்துகோங்க, நான் என் குடும்பத்தை கூட்டிட்டு என் வீட்டுக்கு போறேன்” என்றார் தேசிகனின் தந்தை.

தேசிகன் உடல் இறுக, தன்வி கணவனின் கோவத்தை உணர்ந்து கொண்டாள். இத்தனை வருடம் கழித்து இதென்ன புதுசா? தன்விக்கும் அவனின் கோவத்தை ஏற்று கொள்ள முடிந்தது.

“பாருங்க கல்யாணம் ஆன கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு தான் என் பொண்ணை இங்க கொடுக்க வேண்டாம்ன்னு சொன்னேன்” என்று சதாசிவம் அண்ணனிடம் முணுமுணுத்தார்.

“ஷ்ஷ். சும்மா இருடா. நீ வேற” என்று ராஜேந்திரன் கண்டித்தார்.

“டேய் கார் எடுத்துட்டு வா. மருமகளே வாம்மா” என்று தன்வியின் முன் வர முயன்ற மனிதரை அப்படியே, தள்ளியே நிறுத்தினான் தேசிகனின் தம்பி.

“எங்க அண்ணிகிட்ட நெருங்க கூடாது” என்றான் எச்சரிக்கையாக.

“டேய் நான் உன் அப்பன்டா” என்று அவர் மார்பை நிமிர்த்த,

“எங்களுக்கு அப்பா கிடையாது” என்றான் மகன் பாரபட்சமே இல்லாமல்.

“ஐயோ நல்ல நாள் அதுவுமா என்ன பேச்சு பேசுறான் இந்த பையன். ஏங்க நீங்க வாங்க” என்று அவரின் இரண்டாவது மனைவி கணவரின் கை பிடிக்க.

“ச்சு தள்ளி போடி” என்று அவரை விரட்டிவிட்ட மனிதர்.

“அப்பா இல்லாம எப்படிடா நீங்க பிறந்தீங்க” என்று மகனிடம் கேட்டுவைத்தார்.

சாவித்திரி முகம் சிவந்துவிட, தேசிகன் அவரிடம் செல்ல ஓர் அடி எடுத்து வைத்துவிட்டான்.

சாவித்திரி மகனின் கை பிடித்து தடுத்துவிட்டவர், “இப்போவே, இந்த நிமிஷமே இவங்க எல்லாம் கோவிலை விட்டு வெளியே போகணும்” என்றார் இளைய மகனிடம்.

அவன் யோசிக்கவே இல்லை. ஆட்களை வைத்து எல்லாரையும் வலுக்கட்டாயமாக கோவிலை விட்டு வெளியேற்றினான்.

சுஜாதாவிற்கு இதிலெல்லாம் பங்களிப்பில்லை என்பதால், தன்வியிடம் மன்னிப்பை கேட்டு கொண்டு பெண் கிளம்பிவிட்டாள். அவளின் கணவன் ஊர் பக்கமே வருவதில்லை.

“நீங்க வாங்கப்பா. மருமகளே இது தான் நம்ம குடும்பம். பொழுதண்ணிக்கும் நம்மளை பிஸியாவே வைச்சுப்பாங்க” என்று சிரித்தார் பெரியவர்.

தன்வி புன்னகைக்க, மற்ற எல்லோருமே மீண்டு கொண்டனர். சதாசிவத்தை தவிர.

“என் பொண்ணுக்கு ஆல்ரெடி நிறைய வேலை இருக்கு. இதுல இதெல்லாம் வேற பார்க்கணுமா?” என்று கேட்டுவிட்டார் மனிதர்.

“பார்க்கணுமே. இப்போ நம்ம குடும்பத்துக்குள்ள வந்ததுமே உங்களுக்கும் எங்க காத்து அடிச்சிருச்சு. பாருங்க பஞ்சாயத்தை ஆரம்பிக்கிறீங்க?” என்று பெரியவர் சிரிக்க,

“இது பஞ்சாயத்து ஒன்னும் இல்லை. நான் சும்மா கேட்டேன்” என்று அவர் தோள் குலுக்க,

“ப்பா” என்று மகள் அவரின் தோள் சாய்ந்து கொண்டாள்.

சதாசிவத்திற்கு கண்கள் கலங்கி போனது. “இதெல்லாம் வீட்டுக்கு போய் தான். கிளம்புங்க” என்று அவர்களை காருக்குள் ஏற்ற,

“பீல் பண்ண கூட விட மாட்டேங்கிறாங்கண்ணா” என்று அண்ணனிடம் கடுப்படித்தார் தம்பி.

“உன்னை வைச்சுக்கிட்டு. வா” என்று தம்பியை சமாதானம் செய்து தேசிகன் வீட்டுக்கு வந்திறங்கினர்.

மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து, விளக்கேற்றி, பால் பழம் சாப்பிட்டு என்று எல்லா சம்பிராதயமும் நல்ல முறையிலே நடந்து முடிந்தது.

தன்வி ஓய்வெடுக்க ஓர் அறைக்கு செல்ல, சதாசிவம் குடும்பத்திற்கும் தனி அறைகள் கொடுத்தனர்.

ஸ்ருதி தங்கை அறைக்கு வந்தவள், “நீ இங்க சமாளிச்சிடுவியா தன்வி” என்று கேட்டாள் கவலையுடன்.

“க்கா. கோவில்ல நடந்தது எல்லாம் ஒன்னும் இல்லை. நீ கவலைபடாத” என்றாள் தங்கை இயல்பாக.

“இதைவிட அதிகம் இருக்கும்ன்னு சொல்றியா நீ?” அக்கா கண்ணை விரித்தாள்.

“ஹாஹா” என்று தன்வி நன்றாகவே சிரித்துவிட்டாள்.

“என்னடி சிரிக்கிற? உனக்கு பயமா இல்லையா?”

“க்கா. நாம தொழில்ல எத்தனை பார்க்கிறோம். அது மாதிரி தான் இவங்க குடும்பத்துலயும்”

“அது உண்மை தான்” என்று அவள் அரைகுறையாக ஏற்று கொண்டாள்.

மதிய உணவு அவரவர் அறைக்கு சென்றுவிட, மாலை போல் எல்லாம் ஒன்று கூடினர். தன்வி பக்கத்தில் இயல்பாக வந்து அமர்ந்தான் தேசிகன்.

பலகாரம், காபி, டீ என்று நடக்க, பொதுவான பேச்சுக்கள் சென்றது. சதாசிவத்தின் சொந்தங்கள் எல்லாம் திருமணம் முடியவும் கிளம்பியிருக்க, மறுநாள் குலதெய்வ கோவில் பூஜை பார்த்துவிட்டு தன்வி குடும்பமும் கிளம்பும் திட்டம்.

சதாசிவம் மகள் எப்போது சென்னை வருவாள் என்று கேட்டார்.

“உங்க பொண்ணு மட்டுமேன்னா வாய்ப்பில்லை. கூட உங்க மருமகனும் தான் வருவான்” என்றார் தேசிகனின் மாமா.

“தப்பா எடுத்துக்காதீங்க. அவன் மகள் பிரியற கவலையில கவனம் இல்லாமல் கேட்டுட்டான். மகளும், மருமகனும் எப்போ அங்க நம்ம வீட்டுக்கு வருவாங்கன்னு சொன்னா நாங்க ஏற்பாடு செய்ய வசதியா இருக்கும்” என்று கேட்டார் ராஜேந்திரன்.

“ரிசப்ஷன் வைச்சிருக்கீங்க இல்லை. அதுக்கு ஓர் நாள் முன்னாடி வந்தா போதும் தானே” என்று கேட்டார் பெரியவர்.

“அவளோட தொழிலை பத்தியும் நாங்க முடிவெடுக்கணும்” என்றார் சதாசிவம்.

“டேய்” என்று ராஜேந்திரன் அதட்டி, கொஞ்சம் சங்கடத்துடன், “உங்களுக்கு தெரியும் தன்வி தான் இப்போ மசாலா தொழில் பார்க்கிறான்னு”

“சம்மந்தி நீங்க கவலையே பட வேண்டாம். மருமகளுக்குன்னு நாங்க இங்கேயே தனியா ஆபிஸ் கட்டி கொடுத்திடுறோம். இப்போதைக்கு என் பேரன் கட்டிடத்தில இருக்கட்டும். இடம் கூட தேசிகன் பார்த்துட்டான்” என்றார் பெரியவர்.

“அதெப்படி. சென்னையில இருந்து எல்லாம் இங்க மாத்த முடியுமா?” சதாசிவம் கேட்க,

“உங்க பிளான் என்ன?” என்று கேட்டான் தேசிகன்.

“என் பொண்ணு சென்னையில இருக்கணும்” என்றார் மாமனார். அவளை இவர்களிடம் எல்லாம் விட்டு செல்ல முடியாது.

“என்னோட தொழிலை நான் பார்க்க வேணாமா?” மருமகன் கேட்க,

“உங்களுக்கு நான் அங்க ஆபிஸ் கட்டி கொடுத்திடுறேன்” என்றார் மாமனார்.

“என் மருமகன் மட்டும் எல்லாத்தையும் அங்க மாத்த முடியுமா என்ன?” என்று தேசிகனின் மாமா கேட்க.

“எல்லாம் தெரிஞ்சு தானே என் பொண்ணை கட்டினீங்க. இப்போ என்ன?” என்று அவர் கோபம்கொள்ள ஆரம்பித்தார்.

“ப்பா. நாம இதை அப்புறம் பேசலாம்” என்றாள் தன்வி.

“தன்வி. நீங்க புது ப்ரொஜெக்ட் எடுத்திருக்கீங்க. நீ அங்க இருக்கிறது கட்டாயம்”

“சதாசிவம் நான் தான் இருக்கேன் இல்லை. நான் பார்த்துகிறேன்” ராஜேந்திரன் தம்பியை அடக்க முயன்றார்.

“நீங்க டெல்லி போகணும். மறந்துட்டீங்களா? ஒரு மாசம் அங்க தான் நீங்க இருக்கணும்ண்ணா” சதாசிவம் விடாமல் பேச,

“ஏங்க. அப்பறம் இதை பேசுவோம்” என்று சுதா சொல்ல,

“நாம நாளைக்கு கிளம்பணும் சுதா. அப்புறம் எப்போ பேச?” என்றார் மனிதர்.