மலர் சூடும் பெண்மை 12

மறுபடியும் முதல்ல இருந்தா?

தேசிகன் முறையா இது?

இது இப்போதைக்கு முடியாது போல! அட போங்கடா!

இளைஞர்கள் ஓரமாக அமர்ந்துவிட, பெரியவர்களுக்கு அமர இருக்கை போடப்பட்டது.

தன்வியும், தேசிகனும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருக்க, “இப்போ நீ என்னதான் சொல்ல வர தேசிகா?” என்று கேட்டார் அவனின் மாமா.

“எனக்கு இவங்க வேணாம்” என்றான் வார்த்தையில் அழுத்தம் கூட்டி.

தன்வி சொன்ன வார்த்தைகள் தான் இவை. அதையே தேசிகன் சொல்லும் நேரம் தன்விக்கு கோவம்.

‘அதென்ன நான் இறங்கி வந்தா இவர் ஏறிக்கிறது?’

“தேசிகா. முதல்ல கொஞ்சம் நிதானமா இரு ராசா பேசலாம்” என்றார் பாட்டி.

“பாட்டி. நான் ரொம்ப நிதானமா தான் இருக்கேன். என்னோட பிரச்சனை இவங்களோட இல்லை. நாம ஏன் இவங்களை இதுக்குள்ள இழுக்கணும்?”

“என்னோட அப்பா அவர்!” தன்வி சொல்ல,

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்றான் தேசிகன்.

“காட்” பெண் நெற்றி நீவிக்கொள்ள,

“தேசிகா. அந்த மனுஷனை விட்டுட்டு, உன் பொண்டாட்டிகிட்ட”

“மாமா. முதல்ல இந்த பொண்டாட்டி சொல்றதை நிறுத்துங்க? யார் எனக்கு பொண்டாட்டி?” தேசிகன் குரலில் அவ்வளவு நக்கல்.

“தேசிகா இதென்ன பேச்சு?”

“நான் கேட்டதுல என்ன தப்பு அத்தை? எங்க என் தாலியை அவங்க கழுத்துல காட்ட சொல்லுங்க பார்ப்போம்” என, தன்விக்கு சுறுசுறுவென வந்தது.

பெரியவர்களும் அந்த நேரம் மௌனமாகிவிட, “தம்பி. தாலி விஷயம் இல்லை. இப்போ எல்லாம் போட்டுட்டேவா இருக்காங்க. நாம அதை விட்டு அடுத்து என்னன்னு பார்க்கிறது நல்லது” என்றார் ராஜேந்திரன்.

தேசிகன் கிண்டலாக சிரித்தவன், “கழட்டி வைக்கிறது தப்பில்லை. கட்டினவன் தேவையில்லைன்னு கோவில் உண்டியல்ல கழட்டி போடுறது தப்பு தானே?” என்று அவரிடமே கேட்டான் தேசிகன்.

“அது. அது” என்று அவர் திணற,

“இப்போ என்ன சொல்ல வரீங்க நீங்க? ஆமா நான் தான் கழட்டி போட்டேன். அப்போ எனக்கு நீங்க வேணாம் தோணுச்சு செஞ்சேன். இப்போ அதே நானே தானே நீங்க வேணும்ன்னு வந்து நிக்கிறேன். அப்புறமென்ன?” என்று தன்வி கேட்டாள்.

“எனக்காக ஒன்னும் நீ வரலையே? உன் அப்பாக்காக தானே வந்து நிக்கிற”

“நீங்களும் ஒன்னும் நான் வேணும்ன்னு எனக்கு தாலி கட்டலையே? குற்ற உணர்ச்சியில தானே கட்டினீங்க?”

“சரி. அதுக்கும், இதுக்கும் சரியா போச்சு. கேம் ஓவர். நீங்க கிளம்பலாம்” என்றான் தேசிகன்.

“தேசிகா” என்று பெரியவர்கள் அதட்டி, “மருமக பொண்ணே. எங்க மகன் கேட்கிறதுல அர்த்தம் இருக்கு. முதல்ல நாம தாலி பத்தி பார்க்கலாம்” என.

“நான் திரும்ப எல்லாம் கட்ட மாட்டேன்” என்றான் தேசிகன் இடையிட்டு.

“வேறென்ன தான் வேணும் உங்களுக்கு?” தன்வி கடுப்பாகிவிட்டாள்.

“உன் அப்பா பத்தி எனக்கு தெரியாது. அவரை என்கிட்ட கேட்க கூடாது”

“அதெப்படி கேட்க கூடாது, அவர்  உங்ககிட்ட தான் இருக்கார்ன்னு எங்களுக்கு நல்லா தெரியும்”

“தெரிஞ்சா போய் கண்டுபிடிங்க போங்க” என்று தேசிகன் தோள் குலுக்கினான்.

தன்வி பல்லை கடிக்க, “தம்பி. உங்களோட கோவம் நியாயம். என் தம்பி இப்படி செஞ்சிருக்க கூடாது. சுதா, ஸ்ருதி எல்லாம் அவனுக்கு என்ன ஆச்சோன்னு பயந்து போய் இருக்காங்க” என்று ராஜேந்திரன் பேச,

“நான் நைட் முழுக்க காணாம போன நேரம் என் வீட்லயும் இப்படி தான் பயந்தாங்க” என்றான் தேசிகன் பட்டென.

“அவனுக்கு உடம்பு வேற சரியில்லை தம்பி”

“மூளை வேலை செய்யுது தானே?”

“வார்த்தையை பார்த்து பேசுங்க” தன்வி சீறினாள்.

“சரியா தான் கேட்டேன். மூளை நல்லா வேலை செய்ய போய் தானே, என்னை கடத்தி அடிச்சு உதைச்சு கையெழுத்து வாங்க பார்த்திருக்கார். விடிஞ்சா கல்யாணம். முரண்டு பண்ணாம போட்டுட்டு போயிடுவான்னு யோசிக்க முடிஞ்சது இல்லை”

“அது, அதுக்காக”

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அவர் என்கிட்ட நேரா கேட்டிருந்தாலே நான் சந்தோஷமா கையெழுத்து போட்டிருப்பேன்” என்றான் தன்வியை பார்த்தபடி.

‘சும்மா என்னை சீண்டிவிடுறான்’ பெண்ணுக்குள் கொதிப்பு.

“சரி இப்போ கூட என்ன போட்டுடுங்க. எல்லாம் முடிஞ்சிடும்” தன்வி சொல்ல.

“ஆஹ்ன் அதெப்படி? அப்புறம் என்னை பண்ணதுக்கு என்ன பதில்?”

“உங்க முடிவு தான் என்ன?”

“எனக்கான பதிலை நான் வாங்கிக்கிறேன். நீ பதில் கொடுக்க தேவையில்லை”

தன்வி மூச்சிழுத்து விட்டு கொண்டவள், “இங்க பாருங்க தேசி. ஸ்ஸ். சாரி. சில விஷயங்கள் எனக்கு இப்போ தான் தெரியும். அந்த கேஸ் பத்தி. இப்போ நடந்ததுன்னு. என்மேல இருக்கிற பாசத்துல அப்பா இப்படி செஞ்சுட்டார். எந்த அப்பாக்கும் மகளை கட்டாயப்படுத்தி தாலி கட்டுறது எப்படி ஏத்துக்க முடியும்? அந்த கோவத்தில”

“ஹலோ மேடம். ஹோல்டவுன். முதல்ல நீங்க சுஜாதா இடத்துல இருந்திருக்கவே கூடாது. கமுக்கமா நடிச்சு எங்களை ஏமாத்தி, என்னை கில்ட்டா பீல் பண்ணி வைச்சு, நான் தாலி கட்டின்னு”

“சரி நானும் தப்பு தான்” பல்லை கடித்து தன்னை சமாளித்தவள், “மகளுக்கு அப்பாவா சில விஷயங்களை அவர் செஞ்சுட்டார். மத்தபடி அவருக்கும், உங்களுக்கும் வேறெந்த கோவமும் இல்லை”

“உன் அப்பா தப்புன்னு ஒரு வார்த்தை சொல்றியா நீ?”

“ஏன் சொல்லணும்? அவருக்கான நியாயம் அவருக்கு”

“எனக்கான நியாயம் எனக்குன்னு நீ ஒதுங்கிடு”

“இடையில நான் இருக்கேன். நாம பேசித்தான் ஆகணும்” என்றாள் தன்வி உறுதியாக.

தேசிகன் முகம் திருப்ப, தன்விக்கு அடுத்து என்ன என்று யோசிக்கவே முடியவில்லை.

பெரியவர்களுக்கு இனி தாங்கள் தான் எதாவது செய்தாக வேண்டும் என்று புரிந்து போனது.

“தேசிகா. பெரியவங்க பேச்சை நீ கேட்பன்ற நம்பிக்கையில நாங்க சில முடிவுகள் எடுக்க போறோம். நீ அதுக்கு கட்டுப்படணும்ன்னு நாங்க ஆசைப்படுறோம்”

“தாத்தா”

“தேசிகா. நீ எதுக்கு மருமக பொண்ணு கழுத்துல தாலி கட்டினன்னு நாங்க இதுவரை உன்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை. காரணம் என்னவா இருந்தாலும் அவங்க தான் நம்ம வீட்டுக்கு மருமகன்னு நாங்க ஏத்துக்கிட்டோம்”

“தாத்தா நான்”

“நீயும் அவங்களை உன் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு தானே உன்னோட நாமினியா அவங்களை எல்லா இடத்திலும் பதிய வைச்சிருக்க?”

தேசிகன் அதிர்ந்து தன் தம்பியை பார்க்க, அவன் தலை குனிந்தான். தன்விக்கு இதில் ஆச்சரியம்.

“நாமினி எல்லாம் எப்போ வேணா மாத்திடலாம் தாத்தா” என்றான் தன்வியின் ஆச்சரியத்தை கவனித்து.

“அப்படியே உன் மனசையும் மாத்திடுவியா நீ?” என்று சாவித்திரி தான் கேட்டார்.

இதுவரை பேசாதவர் முதன் முதலாக பேச, அதில் மறைந்திருந்த பொருளை எல்லாம் உள்வாங்கினர்.

தேசிகன் அம்மாவிடம் பேச்சுகூட எதுவும் மறுக்கவில்லை. அவரின் அழுத்தம் அவனுக்கு தெரியும்.

ஆம் நான் மாத்திப்பேன். என்று சொன்னால், இந்த நிமிடமே வேறு ஒரு பொண்ணை கூட்டி வந்து நிறுத்தி, ம்ம். தாலி கட்டு என்பார்.

மகன் அமைதியாகிவிட, “உன் அப்பாவை நான் விட்டுடுட சொல்றேன். அப்புறமும் என் மகன் கூட வாழ உனக்கு சம்மதமா?” என்று தன்வியிடம் கேட்டார் சாவித்திரி.

தன்வி உதடு கடித்து சில நொடி அமைதியானவள், பின் ஓர் முடிவோடு “எனக்கு சம்மதம்” என்றாள் சாவித்திரி பார்த்து.

“பேச்சு மாற மாட்டியே?” அத்தை கேட்க.

“எனக்காக நான் நிக்க தான் செய்வேன். ஆனா பேச்சு மாறினது இல்லை” என்றாள் பெண் நிமிர்ந்து நின்று.

“நல்ல பொருத்தம் தான்” என்று அத்தை முகம் மலர்ந்து போனது.

“மேற்கொண்டு பேச வேண்டியதை பேசுங்க மாமா” என்று பெரியவரிடம் சொன்னார் சாவித்திரி.

அதன்படி அவர் ராஜேந்திரனிடம், “பழசை எல்லாம் கழிச்சு கட்டி, முகூர்த்த நாள் குறிச்சு புதுசா கல்யாணம் வைச்சுக்கலாம். ” என்றார்.

“என்ன இருந்தாலும் நான் பெரியப்பா. என் தம்பி அப்பாவா கண்டிப்பா இங்க இருந்தாகணும். அவன் சம்மதம் வேணும்” என்றார் ராஜேந்திரன் தம்பிக்கு அண்ணனாக.

“அவர் சம்மதம் சொல்வார்ன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று கேட்டான் தேசிகன்.

“அவன் பொண்ணுக்கு சம்மதம்ன்னா அவன் கட்டாயம் ஏத்துப்பான்” என்றார்.

“தேசிகா” என்று பேரனை பார்த்தார் அவர்.

அவன் புருவங்கள் சுருங்க தீவிரமாக யோசித்தவன், “நாளைக்கு அவர் இங்க இருப்பார்” என்றான். தன்விக்கு அவன் தீவிர யோசனையில் சந்தேகம்.

“கோவத்துல உன் அப்பாவை நாடு கடத்திட்டானோ?” ராஜேந்திரன் மகளிடம் மெல்ல கேட்டார்.

பெண்ணின் பார்வை அவனை தொடர்ந்தது. தேசிகன் அவன் தம்பிகளிடம்  ஏதோ சொல்லி அவர்கள் அதிர்ந்து நின்று, பின் தெளிந்து கார் எடுத்து கொண்டு ஆளுக்கொரு பக்கம் செல்வதை பார்த்தாள்.

ராஜேந்திரனுக்கும், அவளுக்கும் உணவு பரிமாறப்பட, தன்விக்குள் ஏதோ ஓர் உறுத்தல்.

“நல்லா சாப்பிடு” என்று அத்தை அதட்டி அவளுக்கு உணவை வைக்க, “ம்ம்” என்றபடி சாப்பிட்டவள், அம்மா, அக்காவிற்கு அழைத்து பேசினாள்.

“மாமா தேனில தான் இருக்கார். நாங்க மட்டும் கிளம்பி வரோம்” என்றாள் ஸ்ருதி.

தேசிகன் வீட்டிலோ முகூர்த்த நாள் பார்க்க ஓடினர். “இரண்டொரு நாள்ல இருந்தா கூட சந்தோஷம். முடிஞ்சவரை கிட்டக்கவே குறிஞ்சுட்டு வாங்க. இப்போ தான் ஏதோ இரண்டு பேருமே இறங்கி வந்திருக்காங்க. சட்டு புட்டுன்னு முடிச்சிடலாம்” என்று சொல்லி அனுப்பினார் பாட்டி.

என்னமோ நாளையே கல்யாணம் என்பது போல் மறுபக்கம் வேலைகளை திட்டமிட ஆரம்பித்துவிட்டனர்.

“இந்த வாரமே நல்ல முகூர்த்த நாள் இருக்கு” என்று அத்தை, மாமா மகிழ்ச்சியுடன் வந்தார்கள்.

தன்விக்கு இத்தனை அவசரம் மலைப்பானது. “பாட்டி” என்று வாய் திறக்கும் போதே, “எதுவும் பேசிடாத கண்ணு. இந்த முறையாவது எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என்று கேட் போட்டுவிட்டார் பாட்டி.

ராஜேந்திரனுக்கு பெரிதான மறுப்புகள் இல்லை. தம்பியை கண்ணில் கண்டுவிட்டால் போதும். அதன் பின் கல்யாண வேலையை ஜமாய்த்துவிடலாம்.

தேசிகன் இரவு வர வீடு திரும்பவில்லை. பெரியப்பாவும் மகளும் நாளை வருவதாக சொல்லி ஹோட்டல் வந்துவிட்டனர்.