இத்தனை வருட அனுபவத்தின் பலன் ராஜேந்திரனுக்கு பல புள்ளிகளை உடனுக்குடன் இணைக்க வைத்தது.
இரவில் தேசிகன் காணாமல் போனது, விடியலில் அவன் திரும்பி வந்தது, இப்போது தம்பி காணவில்லை என்பதும் ராஜேந்திரனுக்கு பதட்டத்தை தான் கொடுத்தது.
சதாசிவத்தின் குணம் அவருக்கு அத்துப்படியாயிற்றே!
ஏதோ செய்திருக்கிறான்!
எங்கு கண்டு அவரை தேடுவது?
அதற்கு முதலில் என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். உடனே அவரின் ஆளை அழைத்து அவரிடம் ஏதோ சொன்னார்.
சதாசிவத்தின் மேல் அவர் கொண்ட சந்தேகம் உண்மை ஆகியிருந்தது.
ஆம் தேசிகன் இரவு வீட்டிற்கு சென்ற நேரம் வழியில் சிலரால் மடக்கப்பட்டான். என்ன? என்று காரில் இருந்து இறங்கி வர வர, அவனின் பின் தலையில் கட்டையால் அடித்திருந்தனர்.
“எவண்டா அது?” என்று ஆக்ரோஷத்துடன் திரும்ப, ஆட்கள் அவனை சுற்றி வளைத்துவிட்டனர்.
அடுத்த சில நிமிடங்கள் கடுமையான போராட்டம். அவனுக்கும் அடி எக்கச்சக்கம், வந்தவர்களுக்கும் அடி அதிகம்.
“டேய் இங்க பாரு ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்றதை கேட்டுட்டா உன்னை விட்டுடுறோம். இல்லை தூக்கிட்டு போனா நீ காலி” என்று மிரட்டி நின்றனர் ஆட்கள்.
தேசிகன் கைக்கு கிடைத்ததை எடுத்து அடிக்க, அவனின் ஊர் ஆட்கள் இருவர் வேலை முடித்து வீட்டுக்கு சென்றவர்கள், “டேய் யாருடா அது?” என்று கத்தி தேசிகனின் உதவிக்கு வந்துவிட்டனர்.
தொடர்ந்த நொடிகளில் தேசிகனின் கட்டுப்பாட்டுக்குள் ஆட்கள் அடங்கினர். அவர்களை கட்டி வைத்து விசாரிக்க, விடியும் நேரமே சதாசிவத்தின் பேரை சொன்னார்கள்.
தேசிகன் மருத்துவமனை சென்று காயங்களுக்கு மருந்திட்டு மண்டபத்திற்கு வந்திருந்தான்.
ராஜேந்திரன் ஆள் விரைவாகவே விஷயத்தை தெரிந்து கொண்டு ராஜேந்திரனிடம் இப்படி என்று சொல்லிவிட்டார்.
அவருக்கு குடிக்க தண்ணீர் வர, வாங்கி வேகமாக குடித்தார் மனிதர். சில நொடிகளிலே அவருக்கு தொண்டை வறண்டுவிட்டதே!
போன் எடுத்து உடனே மனோகருக்கு அழைத்தார். “மாமா. என்ன பண்ணலாம்? யார்ன்னு உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா?” என்று கேட்டான் மனோகர்.
“ஆள் தெரியும். ஆனா உறுதியா தெரியாது” என்றார் ராஜேந்திரன்.
மணமேடைக்கு மணமக்கள் வந்துவிட, குடும்பத்தினர் மொத்தமாக மணமேடைக்கு வந்துவிட்டனர்.
தேசிகன் மையமாக கைகட்டி இறுக்கத்துடன் நின்றிருக்க, அவனை பார்த்தவாறே, “நீங்க கிளம்பி தேனி வர மாதிரி இருக்கும்” என்றார் ராஜேந்திரன்.
“மாமா” என்று மனோகர் மறுபக்கம் அதிர்ந்து, சுதாரித்து கொண்டவன்,
“நம்மளோட பவர் பயன்படுத்தணுமா?” என்று கேட்டான்.
“தேவைன்னா பயன்படுத்தி தான் ஆகணும் மாப்பிள்ளை. அதுக்கு முன்னாடி தம்பியை இங்க, தேனிக்கு கூட்டிட்டு வராங்களான்னு எல்லா வழித்தடத்திலும் செக் பண்ண சொல்லுங்க” என்றார்.
“பிரயோஜனம் இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?” மனோகர் நம்பிக்கை இல்லாமல் கேட்டான். தேசிகன் இதையெல்லாம் யோசித்திருக்க மாட்டானா என்ன?.
“தெரியலை. ஆனா விட்டுடவும் முடியாது. நான் யாரை பிடிச்சு தம்பியை வெளியே கொண்டு வரதுன்னு பார்க்கிறேன்” என்று வைத்தார்.
முகூர்த்த நேரத்தில் தேசிகன் மாமா மகளின் திருமணம் நல்லபடியே முடிந்துவிட, ராஜேந்திரன் மணமக்களை வாழ்த்த மணமேடைக்கு சென்றார்.
அவருக்கான மரியாதையில் இம்மியளவும் குறைவில்லை, ஆனால் ஆண்கள் அவர்களின் கோவத்தை அடக்கி கொண்டு நிற்பதும் ராஜேந்திரனுக்கு புரியத்தான் செய்தது.
ஆசீர்வாதம் வாங்கிய மணமக்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தியவர், உணவுண்ண செல்லாமல் மண்டபத்தில் அமர்ந்துவிட்டார்.
முன்பு உடனே கிளம்பும் திட்டம். ஆனால் இப்போது தம்பி கிடைக்காமல் எப்படி கிளம்ப?
அவரின் கட்சி ஆட்கள், பாதுகாப்பு ஆட்களை உணவுண்ண அனுப்பி வைத்தவர், தேசிகனுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
வீட்டு பெண்கள் அவரை உணவுக்கு அழைக்க, மறுத்துவிட்டார் மனிதர்.
என் தம்பி வராம உங்க வீட்டு சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேன். போங்கடா. என்று அமர்ந்துவிட்டார்.
தேசிகன் வீட்டு ஆண்கள் அவரிடம் சாதாரணமாக கூட நெருங்கவில்லை. யார் கோவம் பெரிது பார்த்துவிடலாம் என்ற கண்ணுக்கு தெரியாத போர் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.
அடுத்த மணி நேரங்களில் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் கிளம்பிவிட, மண்டபத்தில் இவர்கள் மட்டுமே.
நல்ல நேரம் பார்த்து மணமக்கள், மணமகன் வீடு கிளம்ப வேண்டும். ஆனால் அது பற்றிய பேச்சே அங்கு இல்லை.
ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட மணமகன் வீட்டார், தேசிகனிடம் பேச வந்தனர். அவனிடம் தான் அவர்களுக்கு நெருக்கம். முகத்தை இயல்பாக்கி கொண்ட தேசிகன், “சொல்லுங்க” என்றான்.
“தம்பி வீட்டுக்கு கிளம்பணும்” என, நேரம் பார்த்து கொண்ட தேசிகன் உடனே அதற்கான ஏற்பாட்டை பார்க்க சொல்லி மாமாவிற்கு சொன்னான்.
பெண்களும் இதற்காக காத்திருந்தவர்கள் உடனே மகளை வழியனுப்பி வைக்க தயாரானார்கள். தங்கள் வீட்டு மகளை பிரியும் நேரம் கண்ணீர் இல்லாமல் எப்படி?
உணர்ச்சிகரமான நிமிடங்களை கடந்து, எல்லோருக்கும் சொல்லி கொண்டு மணப்பெண் கிளம்பினாள். அவளுடன் அண்ணி முறையானவளும் தன் கணவனுடன் சென்றாள்.
இப்போது மண்டபமே, அமைதியாகி போனது. ராஜேந்திரன் அதுவரை அசையாது ஒரே இடத்தில் அமர்ந்திருக்க, அவரின் ஆட்கள் அத்தனை பேரும் அவரின் முகம் பார்த்து நின்றனர்.
கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஏதோ பஞ்சாயத்து என்பது புரிந்து போனது. ராஜேந்திரன் தான் அவர்களுக்கு தலைவர். அவர் கண்காட்டினால் எது செய்யவும் தயார் தான்.
உடன் அவரின் பதவி, அது கொடுக்கும் அதிகாரமும் உண்டே. காக்கி ஆட்கள் அவரின் பாதுகாப்புக்கு அவரின் பக்கத்திலே நிற்க, ராஜேந்திரன் மண்டபத்திற்குள் வரும் தேசிகனையே பார்த்திருந்தார்.
“நைட் என்னாச்சு?” என்று சாவித்திரி மகன் கை பிடித்து நிறுத்தி கேட்டார்.
“தேசிகா. உன்னை தான் கேட்கிறாங்க. பதில் சொல்லு” என்று மாமா கோவமாக அதட்டினார்.
காரணம் தேசிகன் முகத்தில் இருந்த காயம். எவ்வளவு மறைத்தும், வெளியே தெரியத்தான் செய்தது. கைகளிலும் கன்றி சிவந்து நன்றாகவே காட்சியளித்தது.
“அண்ணனை கடத்திட்டு போக முயற்சி பண்ணாங்க” என்று அவனின் தம்பி தான் சொல்ல,
“யாரு தேசிகா, சொல்லு” என்று அத்தனை குரல்கள் மண்டபத்தில் எகிறி கொண்டு வந்தது.
உடன் எல்லார் பார்வையும் ராஜேந்திரன் பக்கம் கோபத்துடன் திரும்ப, அவரின் ஆட்களும் அவரை சுற்றி பாதுகாப்பு கவசம் போல் நின்றனர்.
“ம்ஹூம். எல்லாம் தள்ளி நில்லுங்க” என்றார் ராஜேந்திரன்.
“தலைவரே” என்று ஆட்சேபனை குரல்கள் வர,
“நம்ம சொந்தம் தான். நீங்க எல்லாம் வெளியே போங்க” என்றார் ராஜேந்திரன்.
“இல்லை தலைவரே. இவங்ககிட்ட உங்களை தனியா விட்டு போக முடியாது” என்று அவர்கள் விசுவாசத்தை காட்ட,
“எல்லாம் வெளியே போங்கன்னா போகணும். ம்ம். போங்க” என்று காவலர்களுக்கு உத்தரவிட்டு அத்தனை ஆட்களையும் மண்டபத்திற்கு வெளியே அனுப்பினார்.
இப்போது மண்டபத்தில் அவர் ஒருவர் மட்டுமே! அவருக்கு முன் தேசிகனின் மொத்த குடும்பமும்!
ராஜேந்திரன் முடிந்தவரை சூட்டினை குறைக்க முயல்கிறார். ஏற்கனவே அவரின் தம்பி செய்து வைத்தது போதும். பெரியவருக்கு தெளிவு வந்துவிட்டது.
தேசிகனின் குடும்பத்து ஆட்கள் அதிர்ந்து, பின் தேசிகனை நோக்கினர். பெண்களுக்கு கூடும் சிக்கலில் கவலை அதிகமானது.
“எங்ககிட்ட ஏன் சொல்றீங்க MP. போய் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் கொடுங்க. தேடி கொடுப்பாங்க” என்றார் தேசிகனின் மாமா.
“கம்பளைண்ட் கொடுக்க தான் வேணும். ஆனா அதுக்கு முன்னாடி உங்ககிட்ட பேசணும்” என்றார் பெரியவர்.
தேசிகன் ஒரு வார்த்தை கூட பேசாமல் நிற்க, “நாம தனியா பேசலாமா?” என்று கேட்டார் அவனிடம்.
“என்னவா இருந்தாலும் இங்கேயே பேசலாம்” தேசிகன் நொடியும் இல்லாமல் சொன்னான்.
“உன்னை கடத்த முயற்சி பண்ணது என் தம்பியா?” என்று நேரடியாக அவனிடமே கேட்டார்.
“அதை அவர்கிட்ட தான் நீங்க கேட்கணும்” என்றான் தேசிகன்.
“சரி கேட்கிறேன், அவனை என்கிட்ட விட்டுடு. எல்லாத்தையும் சரி பண்றேன்”
“சரி பண்றது இனி என் பொறுப்பு” தேசிகன் அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல், கிளம்பிவிட்டான்.
அவனின் வீட்டு ஆட்களும் அவன் பின்னாலே சென்றுவிட, ராஜேந்திரன் மட்டுமே மண்டபத்தில்.
தன்வி அவளுக்கான மீட்டிங் முடிந்து ஓய்வாக அமர்ந்தாள். சதாசிவத்தின் உதவியாளர் அவளுடனே இருக்க, தன்விக்கு சுலபமாக தான் எல்லாம் சென்றது.
“அடுத்த மீட்டிங்ல எல்லாம் முடிவாகிடும் மேடம்” என்று அவர் சொல்ல, பெண்ணுக்கு ஆசுவாசம்.
“எனக்கான நோட் அனுப்பி வைச்சிடுங்க. நான் ரூம் போறேன்” என்று போன் எடுக்க, விடுபட்ட அழைப்புகள்.
என்னாச்சுன்னு தெரியலையே என்று முதலில் சுதாவிற்கு தான் அழைத்தாள். அவர் போன் எடுத்து அவ்வளவு அழுகை.
“ம்மா. நீங்க பேசுறதே எனக்கு புரியலை. ப்ளீஸ்ம்மா. முதல்ல எனக்கு கிளியரா சொல்லுங்க, என்னை பயமுறுத்தாதீங்க” என்றாள் தன்வி படபடப்புடன்.
“தன்வி” என்று போன் கை மாற, அவளின் அக்கா. “அப்பாவை காணோம் தன்வி” என்றாள் அவளும் அழுகையுடன்.
“வாட்” என்று தன்வி அதிர,
“காலையில இருந்து காணல தன்வி. எனக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உன் மாமா சொன்னார்” என்றாள் ஸ்ருதி.
“அதெப்படி காணாமல் போவார்? முதல்ல அக்கம் பக்கத்தில பாருங்கக்கா” என்ற தன்விக்கும் அச்சம்.
“எல்லாம் பார்த்துட்டோம் தன்வி. இதுவரைக்கும் ஒரு சின்ன டிப் கூட கிடைக்கல. எனக்கு பயமா இருக்குடி” என்று அக்கா இன்னும் அழுகையை கூட்ட, தன்விக்கும் கண்கள் கலங்கி கொண்டு வந்தது.
“பணத்துக்காக யாரும் அவரை கடத்திட்டு போயிட்டாங்களோடி?” என்று ஸ்ருதி சொல்ல,
“அப்படி எல்லாம் இருக்காதுக்கா” என்ற தன்வி நடுங்கிய கைகளில் போனை இறுக்கமாக பிடித்தாள்.
“மாமா, மாமா என்ன சொல்றார்க்கா? பெரியப்பாகிட்ட பேசுனீங்களா?” என்று வேகமாக கேட்க,
“உன் மாமா முகமே சரியில்லைடி. எதையும் வெளிப்படையா சொல்ல மாட்டேங்கிறார். பெரியப்பா நாங்க போன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கிறார்” என, தன்விக்கு வறண்ட தொண்டையில் இருந்து வார்த்தைகள் வருவேனா என்றது.
“அப்பாக்கு உடம்பு வேற சரியில்லை. அவர் என்னன்னு சமாளிப்பார்? காலையில இருந்து ஏதும் சாப்பிட கூட இல்லை” என்று சுதா கண்ணீருடன் புலம்ப, தன்விக்கு குடித்த தண்ணீர் தொண்டையிலே நின்றுவிட்டது.