தேசிகனின் மாமா மகள் திருமணம் நெருங்கிவிட்டது.

திருமணத்திற்கு செல்ல வேண்டுமா? வேண்டாம் என்பதுதான் தன்வியின் எண்ணம்.

ஆனால் பாட்டி ஆரம்பித்து பலர் அவளை போனில் அழைத்துவிட்டனர். “எப்போ வரீங்க? பிளைட் டிக்கெட் நாங்க போடவா? வீட்ல தங்க பிடிக்கலைன்னா ஹோட்டல் கூட ரூம் போடுறோம். ஆனா நீங்க வந்து தான் ஆகணும்.” என்று அன்பு கட்டளையாகவே எல்லாம் இருந்தது.

“நாங்க சென்னையில தான் இருக்கோம். நீங்க சொன்னா நாம உடனே கிளம்பிடலாம்” என்று அந்த இளைஞர்கள் வேறு.

“எனக்கு வேலையிருக்கு. நீங்க போய் அங்க கல்யாண வேலையை பாருங்க” என்று தன்வி அவர்களை கிளப்பிவிட்டாள்.

தேசிகனிடம் பேசுவது போல், இவர்களிடம் பேச முடிவதில்லை. அவர்களின் பாசம், உறவை இழுத்து பிடிக்க அவர்கள் பாடுபடுவது பெண்ணுக்கு புரியத்தான் செய்தது.

எதிரியாக இருந்தால் கூட சமாளித்து கொள்ளலாம். ஆனால் நெருங்க நினைக்கும் உறவுகளை தள்ளி நிறுத்துவது தான் பெண்ணுக்கு கடுமையாக இருந்தது.

“எங்க வீட்ல பத்திரிக்கை எல்லாம் அடிச்சு நடக்கிற முதல் கல்யாணம். பெருசா பண்ணனும்ன்னு தேசிகன் பிரம்மாண்டமா எடுத்து கட்டி செய்றான். அவனோட நீ இல்லைன்னா எப்படி கண்ணு? நாளைக்கு சடங்கு எல்லாம் ஆரம்பிச்சிடும். எப்போ கிளம்புற?” என்று பாட்டி போனில் கேட்டார்.

அவனோட நான் நிக்கணுமா? காட். சும்மா கூப்பிட்டா ஓகே. இதென்ன?

“தேசிகனை கேட்டா, உன் விஷயத்தை நான் பார்த்துகிறேன். நீங்க விடுங்க, அவகிட்ட யாரும் பேச வேணாம்ன்னே சொல்றான். நாங்க எல்லாம் தான் மனசு கேட்காம உன்னை கூப்பிட்டுட்டு இருக்கோம்”

“உங்களுக்குள்ள இன்னமும் சரியாகலையா கண்ணு? நீ கல்யாணத்துக்கு வர மாட்டியா?”

“அவனோட மாமா, உன்னோட முடிவை கேட்டுட்டு தான் பொண்ணை வெளியே கொடுப்பேன்னு நின்னான். தேசிகன் தான் என்னோட பிரச்சனையை நான் பார்த்துகிறேன். நிச்சயம் சரிபண்ணிப்பேன்னு உறுதி கொடுத்து கல்யாணத்தை செஞ்சு வைக்கிறான்” என,

தன்வி அழுத்தமாக நெற்றி நீவிவிட்டாள். ‘உனக்கு இருக்க அதே தன்மானம் தான் என் மாமா பொண்ணுக்கும் இருக்கும். அவளுக்கு நான் வேணாம்’ என்ற தேசிகனின் வார்த்தைக்குள் காதுக்குள் சுழன்றது.

என்னோட முடிவு தெரிஞ்சா, அவர் பொண்ணை அவர் வெளியே கொடுக்க மாட்டார்ன்னு தான் தேசிகன் விடாம கல்யாணத்தை வைச்சுட்டாரா? தேசிகனை புரிந்து கொண்டாள் தன்வி.

ஆனால் இவளை கேள்வி கேட்டு நிற்கும் அவனின் உறவுகளுக்கு இவள் என்ன பதில் சொல்வாள்?

இந்த ஒரு முறை தேசிகனுக்கு துணை நிற்க முடிவெடுத்தாள் பெண். கல்யாணத்துக்கு நான் வரலை. தேசிகன் எனக்கு வேண்டாம் என்ற அவளின் முடிவை தனக்குள்ளே முழுங்கி கொண்டாள்.

எதையும் இன்னும் பெரிதுபடுத்த பெண்ணுக்கு விருப்பமில்லை. முடிந்தளவு எல்லாவற்றையும் விரைவாகவே நேர் செய்துவிட வேண்டும்.

“எனக்கு வேலையிருக்கு. நான் கிளம்பும் போது உங்களுக்கு போன் பண்றேன் பாட்டி” என்று நல்ல முறையிலே சொல்லி வைத்தாள் தன்வி.

பாட்டிக்கு அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி. உடனே வீட்டில் எல்லோருக்கும் சொல்ல, தேசிகன் மாமா, அத்தை தான் அதிகம் மகிழ்ந்தனர். தன்வி தங்கள் மருமகனை ஏற்று கொள்வாள் என்ற ஆசுவாசம்.

விஷயம் கேள்விப்பட்ட தேசிகன் புருவங்கள் முடிச்சிட்டது.

“இன்னைக்கு தன்வியை பொண்ணு பார்க்க வராங்க. எல்லாம் உறுதியான மாதிரி தான். பொண்ணும், மாப்பிள்ளையும் நேர்ல பார்த்துட்டு, நேரா முகூர்த்த நாள் குறிக்க போறதா சதாசிவம் சொல்லிட்டிருக்கார்” என்று போன் வந்தது.

“தன்வி சம்மதம் சொல்லிட்டாளா?”

“சொல்லிட்டாங்கன்னு தான் அவர் மாப்பிள்ளை வீட்டுக்கு சொன்னார்”

தேசிகனிடம் மௌனம். “க்கும். இதை நம்ம வீட்ல யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றான்.

“உங்க மாமா என்கிட்ட கேட்பார்”

“சொல்லாதீங்க. அவர் பொண்ணு கல்யாணம் முடியட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்”

“சரி நான் வைக்கிறேன்”

“இனி எனக்கு போன் பண்ண வேண்டாம். எதையும் நான் தெரிஞ்சுக்க விரும்பல” என்றவன், அந்த எண்ணை உடனே அழித்தும் விட்டான்.

“என்ன’ண்ணா அமைதியா இருக்கீங்க? அண்ணி கல்யாணத்துக்கு வரதை பத்தி உங்ககிட்ட சொல்லலையா?” என்று அவனின் தம்பி கேட்டான்.

“நீ முதல்ல வாழை இலை என்ன ஆச்சுன்னு பாரு போ” என்று தம்பியை அனுப்பிவிட்டவன், அவன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான்.

சதாசிவம் மகளை அழைத்தவர், “நீ மீட்டிங் ஒன்னு அட்டண்ட் பண்ணனும்” என்றார்.

“நானா?” இவரின் தொழிலுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லையே?

“எனக்கு பதிலா தன்வி. டாக்டர் என்னை கட்டாய ஓய்வுல இருக்க சொல்றார்.”

“எங்கப்பா மீட்டிங்?”

“சிங்கப்பூர். நீ உடனே கிளம்பணும்”

“ப்பா”

“என்ன தன்வி. எனக்காக போக மாட்டியா என்ன? டிக்கெட் உனக்கு வந்திரும். ஒரு வாரம் மீட்டிங்.”

“ப்பா. ஒரு வாரமா?”

“என்னோட இரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாம் எகிறி போய் கிடக்கு. அதை கண்ட்ரோலுக்கு கொண்டு வரலைன்னா நடக்கிறது நான் பொறுப்பில்லைன்னு டாக்டர் சொல்றார். இப்போ தான் டாக்டரை பார்த்துட்டு வெளியே வரோம். உன் அம்மாகிட்ட பேசு” என்று சுதாவிடம் போனை கொடுத்தார் சதாசிவம்.

“ஆமா தன்வி, எனக்கு பயமா இருக்கு. இவரோட ஸ்ட்ரெஸ் தான் இதுக்கு காரணம்ன்னு டாக்டர் சொல்றார். ஒரு வாரம் ஆபிசுக்கு கூட அனுப்ப போறதில்லை. நம்மளோட கெஸ்ட் அவுஸ்க்கு தான் போக போறோம்” என்றார் சுதா.

தன்வி உடனே கிளம்ப தயாரானாள். சதாசிவத்தை அவளும் கவனித்து கொண்டு தானே இருக்கிறாள்.

டென்சன் எடுத்துக்க வேணாம் சொன்னா எங்க கேட்கிறார். இப்போ எல்லாம் ஷூட் அப் ஆகியிருக்கு. மகளுக்கு கவலை.

உடன் தன்னால் தானே இதெல்லாம் என்ற குற்ற உணர்ச்சியும் தன்வியின் மனதை அரித்தது. சிங்கப்பூர் சென்று வந்த பிறகு நிச்சயம் தந்தையிடம் பேச வேண்டும்.

பெரியப்பாவிடம் சொல்ல, அவரும் தம்பிக்காக கவலை கொண்டார். “நீ கிளம்பு. நான் பார்த்துகிறேன்” என்று சொல்ல, தன்வி பாட்டிக்கு அழைத்தாள்.

“அப்பாக்கு இப்படி இருக்கு. நான் சிங்கப்பூர் போறேன்” என்று சொல்ல, அவருக்கு அளவில்லா வருத்தம்.

“என்ன கண்ணு இப்படி சொல்ற?” என்று ஆதங்கம் கொள்ள, தன்வி அவரை சமாளித்து அன்று மாலையே பிளைட் ஏறினாள்.

சுதாவும் கணவருடன் அவர்களின் கெஸ்ட் அவுஸ் சென்றுவிட்டார். சதாசிவத்திற்கான உணவு கட்டுப்பாடு, யோகா, நடைப்பயிற்சி எல்லாம் நடந்தது.

ராஜேந்திரனுக்கு தம்பியை கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்ற உறுத்தலில் அவருடனே இருக்க, “நான் இப்போ ஓகே தான்ண்ணா. நீங்க உங்க வேலையை பாருங்க. போங்க” என்றார் சதாசிவம்.

ராஜேந்திரனுக்கும் வேலை அதிகம் தான். ஆனாலும் தம்பியுடன் ஒரு நாள் இருந்துவிட்டே கிளம்பினார். ஸ்ருதியும், அவளின் அண்ணன்களும் சதாசிவத்துடன் நேரம் செலவழித்தனர்.

தேசிகனின் மாமா மகள் திருமணம் நாளை எனும் நிலை. ராஜேந்திரன் அதற்காக கிளம்ப, கேள்விப்பட்ட சதாசிவம் உடனே அண்ணனுக்கு அழைத்து, “நீங்க ஏன் போறீங்க?” என்று கேட்டார்.

“என்னோட தொழில்ல இருக்காங்க. அந்த மரியாதைக்காக தான்” என்றார் அண்ணன்.

“இருந்தாலும்ண்ணா”

“தம்பி உனக்கு தேவை ஓய்வு தான். அதை பாரு முதல்ல” என்றவர், “அப்புறம் என்னை பாலோ பண்றதை நிறுத்திக்கோ. அப்புறம் நானும் அண்ணனா மாற ஆரம்பிச்சா நீ தாங்க மாட்ட” என்றார்.

“இல்லைண்ணா. நீங்க எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியணும்ன்னு”

“தெரிஞ்சுக்கோ. ஆனால் எனக்காக நீ முடிவெடுக்க கூடாது” என்று வைத்துவிட்டார் ராஜேந்திரன்.

மறுநாள் ராஜேந்திரன் மண்டபத்திற்கு செல்ல, அங்கு கலவரமாக இருந்தது.

“என்னாச்சு?” என்று அவர் கேட்க,

“தேசிகனை காணோம்” என்றார்கள்.

ராஜேந்திரன், “என்ன சொல்றீங்க? எங்கேயும் வேலையா?”

“நைட்ல இருந்து காணல. நாங்களும் எல்லாம் இடத்திலும் தேடிட்டோம்” என,

ஏனோ ராஜேந்திரனுக்கு தம்பியின் நினைவுதான் வந்தது. தள்ளி வந்து சதாசிவத்துக்கு அழைக்க எடுத்தது சுதா.

“மாமா. நானே உங்களுக்கு கூப்பிடணும்ன்னு தான் போன் எடுத்தேன். உங்க தம்பி காணலை” என்றார் சுதா பதட்டமாக.

“அவனுமா? இருக்காது. நல்லா தேடிப்பாரு சுதா”

“மாமா. வீட்டுக்கு வெளியே தான் போன் பேசிட்டு இருந்தார். நான் உள்ள போய்ட்டு வரதுக்குள்ள ஆளை காணோம். செக்கியூரிட்டியை கேட்கலாம் போனா அவரை யாரோ அடிச்சு போட்டிருக்காங்க” என்றார் சுதா அழுகையுடன்.

ராஜேந்திரன் அதிர்ந்து போனவர், “நான் மனோ மாப்பிள்ளைக்கு பேசுறேன்” என்று போன் வைக்க,

“தேசிகன் வந்துட்டான்” என்ற குரல் மண்டபத்தில் பெரிதாக எதிரொலித்தது.

நின்ற இடத்தில் இருந்து தேசிகனை பார்க்க அவரையே அழுத்தமாக பார்த்தபடி மண்டபத்திற்குள் வந்து கொண்டிருந்தான் அவன். ராஜேந்திரனுக்கு ஏனோ கைகள் நடுக்கம் கண்டது.

அவனின் உறவுகள் எல்லாம் அவனை நலம் விசாரித்து, ஆராய்ந்து, கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர்.

“நான் நல்லா இருக்கேன். மத்தது எல்லாம் அப்புறமா பேசிக்கலாம். முதல்ல கல்யாணம் முடியட்டும்” என்று தேசிகன் எல்லோரையும் அமைதிப்படுத்தி, அனுப்பி வைத்தான்

அவனின் உறவுகளும் நேரம் ஆவதை உணர்ந்து, ஆளுக்கொரு வேலையாக ஓட, நின்றிருந்த மேளதாளம் பலமாக ஒலிக்க ஆரம்பித்தது.

மனோகருக்கு சுதாவே பேசியிருக்க, அவன் ராஜேந்திரனுக்கு அழைத்து கொண்டிருந்தான்.

தன்னை நோக்கி வரும் தேசிகனையே ராஜேந்திரன் பார்த்து கொண்டிருக்க, “உங்களுக்கு போன்” என்று சொன்னான் அவன்.

“ஆஹ்ன்” என்று ராஜேந்திரன் போனை பார்க்க,

“உங்களால முடிஞ்சதை செய்ங்க” என்ற வார்த்தைகளின் கனத்தில், ராஜேந்திரன் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.