தன்வி விட்டால் போதுமென ஓய்வு எடுக்க அறைக்கு சென்றுவிட்டாள். பெண்ணுக்கு அவ்வளவு சோர்வு.
மாப்பிள்ளை வீட்டார் விதித்த நிபந்தனை எல்லாம் தன்விக்கு ஒன்றுமில்லை.
அப்பாவிடம் நேரம் கேட்டும் அவர் ஏன் அவ்வளவு அவசரமா மாப்பிள்ளை பார்க்க வேண்டும்?
சதாசிவத்திற்கு தான் பயங்கர தலைவலி. இதென்ன புது பூதம்?
வேறென்ன கேட்டிருந்தாலும் செய்திருப்பார். ஆனால் தேசிகன். அவனிடம் கேட்டு ஒன்று நடப்பது என்பது இயலாத விஷயம் ஆச்சே!
சுதா கணவருக்கு காபி எடுத்து வந்து கொடுக்க, “தேங்க்ஸ் சுதா” என்றபடி வாங்கி வேகமாக குடித்தார்.
அதன் சூடாவது அவரின் தலைவலியை குறைக்குமா என்ற நப்பாசை.
காபிக்கு அடங்கும் வலி அல்லவே அது!
தேசிகன். அவனை நினைத்தாலே இன்னும் அதிகம் ஆனது. தலையை பிடித்து கொள்ள, “ஏங்க. முதல்ல நிதானமா இருங்க. ஏன் இவ்வளவு டென்சன்” என்று சுதா சொல்ல,
“உனக்கு தெரியாதா? அவன்கிட்ட கேட்டா உடனே கையெழுத்து போட்டு கொடுத்திடுவானா என்ன?” என்றார்.
“அதெப்படி கொடுப்பான்? அவனோட உரிமைக்காக அவன் நிக்க மாட்டானா என்ன?” என்று கேட்டார் ராஜேந்திரன்.
தம்பியின் மீதான கோவம் அவரை பேச வைத்தது. என் அனுபவத்துக்கு சொல்றேன், தேசிகன் வீட்ல நம்ம பொண்ணு அமோகமா வாழ்வா, அவனுக்கே கொடுத்துடலாம்ன்னு. கேட்க மாட்டேங்கிறானே?
“ண்ணா. நீங்க எப்படியும் அவனுக்கு சப்போர்ட்டா தான் பேசுவீங்கன்னு எனக்கு தெரியும்” என்றார் சதாசிவம்.
“உனக்கு சப்போர்ட், அவனுக்கு சப்போர்ட் இல்லை. நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக தான் பேசுறேன்”
“அதென்ன’ண்ணா அவனை விட இந்த உலகத்துல வேற நல்ல மாப்பிள்ளையே இல்லாத மாதிரி பேசுறீங்க” சதாசிவம் எரிச்சல் கொண்டார்.
“நான் அப்படி சொல்லலை. அவனும் நல்ல மாப்பிள்ளைன்னு தான் சொல்றேன். ஏற்கனவே நம்ம பொண்ணு வாழ்க்கையில நடந்த குழப்பம் எல்லாம் போதும்ன்னு சொல்றேன்”
“ண்ணா. என் பொண்ணுக்கு கட்டாயப்படுத்தி தாலி கட்டியிருக்கான் அந்த ராஸ்கல்”
“தம்பி அப்பாவா உன் கோவம் ரொம்ப சரி. ஆனா அவன் பழி வாங்க தாலி கட்டல. தெரியாத பொண்ணுக்கு அநியாயம் செஞ்சிட்டோமேன்னு தான் தன்வி கழுத்துல தாலி கட்டினான்”
“அவனோட நியாயம், அநியாயம் எனக்கு தேவையில்லைண்ணா”
“தம்பி. நீ கண்ணை மூடிக்கிட்டு பேசுற. உன் பொண்ணை அவங்க கூட்டிட்டு போனதே உனக்கு அவங்களை பிடிக்காம போயிடுச்சு. மாமா பொண்ணு நினைச்சு தானே அவங்க பண்ணாங்க. ஆனா அந்த இடத்தில நம்ம பொண்ணுக்கு என்ன வேலை சொல்லு. தப்பை நம்ம மேல வைச்சுக்கிட்டு அவங்களையே குத்தம் சொல்றோம்ன்னு உனக்கு தோணலையா?”
“ண்ணா. ப்ரெண்டுக்கு உதவி பண்ணா. அவ்வளவு தான்”
“அவனும் அவன் செஞ்ச தப்பை சரி பண்ணான் அவ்வளவு தான்”
“ண்ணா. எனக்கு உங்ககிட்ட பேசவே வேண்டாம். என்ன பண்ணணுமோ நான் பண்ணிக்கிறேன். அவன்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்ன்னு எனக்கு தெரியும்”
“சதாசிவம். திரும்ப எந்தவொரு முட்டாள்தனமும் பண்ண மாட்டேன்னு நினைக்கிறன்” என்று ராஜேந்திரன் கண்டிப்புடன் சொன்னார்.
“ண்ணா” என்று சதாசிவம் கோவம் கொண்டார்.
“என்கிட்ட எகிறாத. முன்ன செஞ்ச மாதிரி இப்போவும் பண்ணிட முடியும்ன்னு நினைச்சிடாத. விளைவு கண்டிப்பா மோசமா இருக்கும். அவங்களும் லேசுப்பட்ட ஆள் இல்லை”
“அதை நான் பார்த்துகிறேன்ண்ணா” சதாசிவம் முடித்து கொள்ள, ராஜேந்திரனுக்கு தம்பி மேல் எக்கச்சக்க கடுப்பு.
“அவங்ககிட்ட போய் சிக்கு போ, அப்போதான் நீ அடங்குவ” என்று கத்திவிட்டு சென்றார் மனிதர்.
சதாசிவம் தொடர்ந்த நாட்களில் தீவிரமாக யோசிக்க, சுதாவிற்கு தான் கிலியாக இருந்தது. கணவர் முகத்தை பார்த்தால் அவர் நல்லவிதமாக யோசிப்பது போல் தெரியவில்லையே.
சுதா பெரிய மருமகனுக்கு அழைத்தார். “சொல்லுங்க அத்தை” என்று மனோகர் எடுக்க,
“உங்க மாமா ஏதோ வில்லங்கமா யோசிக்கிறார் மாப்பிள்ளை. தேசிகன் விஷயத்துல அவர் திரும்பவும் எதாவது பண்ணிடுவாரோன்னு இருக்கு” என்றார் மாமியார்.
“தேசிகன் கையெழுத்து போடுவார்ன்னு இவருக்கு நம்பிக்கை இல்லை”
“இவரே முடிவு பண்ணிட்டாரா?” மனோகர் மாமனாரின் குணத்தில் அதிருப்தி கொண்டான்.
“நான் பார்க்கிறேன் அத்தை. ஆனா நீங்க மாமாகிட்ட பேசுறது நல்லது. முதல்லே தன்வி வேணும்ன்னு தான் இவரை விட்டாங்க. ஆனா இப்போ தன்வி அவளோட முடிவுல உறுதியா இருக்கிற மாதிரி தான் இருக்கு. இந்த நேரத்துல என்ன நடக்கும்ன்னு எனக்கு ஐடியா இல்லை” என்று வைத்தான் மனோகர்.
சுதாவும் புரிந்து கணவரிடம் பேச அதிகமே முயன்றார். ஆனால் மனிதர் தேசிகன் பற்றி பேச்செடுத்தாலே அப்படியே நிறுத்திவிடுகிறார்.
“அவன் விஷயத்துல நீங்க யாரும் பேச வேணாம். நான் கேட்கவும் மாட்டேன்” என்றார்.
“இந்த வீட்ல இருக்கிற எல்லாம் அவனுக்கு தான் சப்போர்ட்ன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று அங்கு வந்த மகளை பார்த்து சொன்னார் தந்தை.
தன்வி அம்மாவை கேள்வியாக பார்க்க, “தேசிகன்கிட்ட பேச சொல்லி” என்று சுதா இழுக்க,
“என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். நமக்கு தேவை அவனோட கையெழுத்து தானே. என்னமோ நடக்கவே நடக்காது மாதிரி பேசுறீங்க. அப்போ அவன் பெரிய இவன், நான் ஒன்னுமே இல்லாதவனா? அவனை உயர்த்தி என்னை மட்டம் தட்ட பார்க்கிறீங்களா எல்லாம்? என் குடும்பமே அவனை தூக்கி தலையில வைச்சு ஆடுது. உங்க யாரோட அட்வைசும் எனக்கு தேவையில்லை, உதவியும் எனக்கு தேவையில்லை” என்று மகள், அண்ணனை பார்த்தே கொதித்தார் மனிதர்.
“நான் உனக்கு உதவி பண்றேன்னு சொல்லவே இல்லையே தம்பி” என்றார் ராஜேந்திரன்.
“அதனால தான் நான் உங்ககிட்ட கேட்கலை. நீங்க நினைச்சா அவன்கிட்ட பேச முடியும். ஆனா நீங்க செய்யமாட்டீங்க. நானும் உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன்”
“சதாசிவம். உனக்கு கோவம் கண்ணை மறைக்குது. அவனை ஜெயிக்க நினைக்கிற நீ?”
“ஆமா நான் சின்ன பையன்கிட்ட தோத்து போகணுமா? அவனை ஒரு மாசம் ஜெயில்ல வைச்சவன் நான். யாரும் மறந்திட வேணாம்” என்று தன்வியை பார்த்து மிரட்டலாக சொன்னார் தந்தை.
தன்விக்கு புரிய, மகளுக்கு ஆயாசம். என்னமோ நான் அவரோட ஓடி போக பிளான் போடுற மாதிரி மிரட்டுறார்!
“ப்பா. நீங்க முதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. கொஞ்ச நாளாவே டென்க்ஷனா தான் இருக்கீங்க. உங்க ஹெல்த்க்கு நல்லது இல்லைப்பா” என்றாள் மகள்.
“என் ஹெல்த் நல்லா இருக்கணும்ன்னு நீங்க எல்லாம் நினைச்சா அவனை பத்தி என்கிட்ட பேசாதீங்க”
“வெய்ட் பண்ணலைன்னா வேணாம்ப்பா. அவ்வளவு ஒன்னும் அவசரம் இல்லை. எனக்கான நேரத்தை நீங்க கொடுத்து தான் ஆகணும்” என்றாள் தன்வி உறுதியாக.
எதிலும் பெண்ணுக்கு நாட்டமில்லை. முதலில் எல்லாவற்றில் இருந்தும் அவளுக்கு இடைவெளி வேண்டும்.
அவளுக்குள்ளே பல போராட்டங்கள். இதில் தந்தை வேறு இன்னும் எல்லாவற்றையும் சிக்கலாக்குகிறார்.
“தன்வி. நாம நிச்சயம் போல பண்ணிக்கலாம். கல்யாணம்”
“ப்பா. ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க. எனக்கு இப்போ எதுவும் வேணாம். யாரும் வேணாம். முதல்ல இந்த மாப்பிள்ளை, கல்யாணம் இதெல்லாம் கேட்டாலே எரிச்சலா வருது.”
“நல்ல மாப்பிள்ளை தன்வி”
“போகட்டும் விடு தம்பி. இந்த உலகத்துல அவனை விட்டா வேற நல்ல மாப்பிள்ளையே இல்லையா என்ன?” என்று கேட்டார் ராஜேந்திரன்.
அண்ணனின் நக்கலில் தம்பி கடுப்பாக, தன்வி அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள்.