மலர் சூடும் பெண்மை 1

“கந்தன் எல்லாம் ரெடியா?” என்று அருகில் இருந்த இளைஞன் பரபரப்பாக கேட்க,

“பக்காவா ரெடி தம்பி. ஆள் வந்தா போதும்” என்று கந்தன் உறுதியுடன் சொன்னார்.

சூரியன் உதிக்க தயாராக, இவர்களும் தயாராக இருந்தனர். சாலையில் ஆட்கள் நடமாட்டம் அதிகரிக்க, நகத்தை கடித்து கொண்டான் அந்த இளைஞன்.

அவனுக்கான இரண்டாம் வாய்ப்பு இது. முதன் முறையாக அளிக்கப்பட்ட வேலையை அதிகமே சொதப்பியிருந்தான்.

இதிலும் கோட்டை விட்டால் நிச்சயம் அவர்கள் கூட்டத்தினர் முன் தலையிறக்கம் தான்.

“அண்ணே. திரும்ப செக் பண்ணுங்க” என்று கந்தனிடம் சொல்ல, அவரும் ஹோட்டலுக்குள் சென்று விசாரித்தார்.

“சொல்லிட்டோம் சார். வருவாங்க” என்று வரவேற்பு பகுதியில் இருந்த ஆண் சொன்னான்.

கந்தன் இயல்பாக வேறு பேசி கொண்டிருக்க, லிப்ட் நிற்கும் சத்தம் கேட்டது. அதில் இருந்து அந்த பெண்ணை இவர்களை நோக்கி வந்தாள்.

கந்தன் அந்த பெண்ணை எதிர் கொள்ள, அவள் ஏதோ சொல்ல வந்தாள்.

“எங்க தம்பிகிட்ட சொல்லிடுங்கம்மா” என்றவர், அவள் பேச வாய்ப்பே கொடுக்காமல் முன்னே நடக்க, அந்த பெண்ணும் வேறு வழியின்றி அவரை தொடர்ந்தாள்.

கார் நிற்கும் பகுதிக்கு வந்ததும், “ஹாய்” என்று அந்த பெண் ஆரம்பிக்கும் போதே, அந்த இளைஞனால் கடத்தபட்டாள்.

ஹோட்டல் வரவேற்பு பகுதியில் இருந்தவன், கார் கிளம்பிய பின்னே, சிசிடிவி கேமராவை மறுபடி இயக்கினான். அடுத்த இரண்டாம் நிமிடம் அவனுக்கான பணம் வந்து சேர்ந்துவிட்டது.

“இவங்க பேர் என்ன?” என்ற குரல் எங்கோ கேட்க,

“காட் எனக்கு என்ன ஆச்சு?” அதிகமான தலை வலியுடன், இமைகளை பிரிக்க  முடியாமல் சிறு போராட்டத்துடனே கண்களை திறந்தாள் தன்வி.

“என்ன இவ்வளவு கூட்டம்” அவளின் தெளிவில்லா பார்வைக்கான பதில் கிடைத்தது.

கட்டிலில் தான் படுத்திருக்க, சுற்றி அவ்வளவு பெண்கள். எப்படியும் பத்து பேராவது இருப்பாங்க போலயே?

சட்டென எழுந்து நிற்க முயன்று தள்ளாடியவளை, தாங்கி திரும்ப கட்டிலிலே பிடித்து வைத்தனர் அவர்கள்.

“என்ன அவ்வளவு அவசரம்? இந்தா இதை குடி” என்று குவளையை நீட்ட, நம்பி வாங்க வேண்டுமே?

தொண்டை சுத்தமாக காய்ந்து போயிருக்க, தன் குரலை நம்பாமல் கையசைவில் மறுத்தாள் தன்வி.

“அப்புறம் எப்படி நீ உங்க அப்பாம்மாகிட்ட பேசுவ? இந்தா குடி” என்று வலுக்கட்டாயமாக அவளின் கையில் திணித்தவர், இடையில் கை வைத்து முரட்டு தனமாக இவளை பார்த்தார்.

“நீயா குடிக்கலை நான் குடிக்க வைப்பேன்” என்ற அப்பட்டமான மிரட்டல் அவரிடம்.

“ஓஹ் காட் இவங்க கடத்தி பணம் பண்ற கும்பலா?” தன்வி அதிர்ந்து சுற்றும் முற்றும் இருந்தவர்களை கவனிக்க, எல்லோரிடமும் பணக்கார தனம்.

சிறு குழந்தை முதல், வயதான பாட்டி வரை அந்த கூட்டத்தில் இருக்க, ‘இதென்னடா குழப்பம்?’ அவள் தலை இன்னும் கனக்க,

“இந்தா பொண்ணே எவ்வளவு நேரம்? சீக்கிரம் குடி” என்று திரும்ப மிரட்டல்.

இவங்களோட போராடுறதுக்கு குடிச்சிடலாம் என்று அந்த குவளையை முழுதும் காலி செய்தாள் தன்வி.

“ம்ம். இந்தா இதையும் சாப்பிடு” என்று அடுத்து ஒரு தட்டை நீட்ட,

“க்கும். நோ. நீங்க எல்லாம் யார்?” என்று எழுந்து நின்று கேள்வி கேட்டாள் தன்வி.

“தெளிஞ்சிட்டா” என்று எல்லாம் முணுமுணுக்க,

“முதல்ல சாப்பிடு” என்று திரும்ப ஒரு மிரட்டல் வர, இந்த முறை தன்வி அசையவில்லை.

ஊட்டிவிடவே ஒருவர் முன் வர, “நோ” என்று வாயை இறுக்கமாக மூடி கொண்டாள் பெண்.

“ஒரு பொம்பிளை பிள்ளையை சாப்பிட வைக்க உங்களால முடியல” என்று வயதான ஒருவர் வர, அவருடன் இன்னும் சில ஆண்கள்.

எல்லார் பார்வையும் தன்வி மேல். ஆராயும் பாவனையே அதில் இருக்க, தன்விக்கு எரிச்சல். முயன்று தன் கோவத்தை கட்டுப்படுத்தினாள்.

“பார்த்தது போதும். எல்லாம் கிளம்புங்க” என்று ஒரு கணீர் குரல் ஒலிக்க, அடுத்த சில நொடிகளில் அந்த இடமே அமைதியாகிவிட்டது.

“யப்பா சாமி. யாருயா நீ?” என்ற மாபெரும் ஆசுவாசத்துடன் அந்த குரல் வந்த திசையை நோக்கினாள்.

போன் பேசி கொண்டே வெளியே சென்று கொண்டிருந்தவனின் பின் புறம் தான் தெரிந்தது.

தன்வி திரும்ப கட்டிலில் அமராமல், அறைக்குள்ளே நடந்தாள். அவளுக்குள் பல குழப்பங்கள்.

போன் கிடைச்சா போதுமே! என்ற எண்ணத்துடன் நடந்தவள் முன் அவளின் போன் நீட்டப்பட்டது.

“ஹேய் தேங்க்ஸ்” என்று மகிழ்ச்சியுடன் போனை வாங்கி கொள்ள போக, அவரோ கொடுக்காமல் பின்னால் இழுத்தார்.

முகத்தை சுருக்கி அவரை பார்க்க, “உன் பேர் என்ன?” என்று கேட்டார் எதிரில் இருந்தவர்.

“யாருன்னு தெரியாம தான் கடத்திட்டு வந்தீங்களா?” என்று குரல் உயர்ந்துவிட்டது.

மெல்லிய சிரிப்புடன் நின்றிருந்தவர் அப்படியே முகத்தை இறுக்கி கொள்ள, “குரல் உசர கூடாது” என்ற ஆணையுடன் வந்தான் அவன்.

இவன் தானே போன் பேசிட்டு போனது? புருவன் சுருங்க யோசித்தவள் முன் சொடக்கு போட்டான்.

‘ஹேய் என்ன சொடக்கு போடுற?’ வார்த்தைகள் எகிறி குதித்து வர பார்க்க, அப்படியே முழுங்கி கொண்டவள், எதிரில் இருந்தவர்களை கோபத்துடன் பார்த்தாள்.

அவர்களும் அதே பார்வையுடன் இவள் முன் நின்றதுடன், “ம்மா” என்று அழைத்தான் தேசிகன்.

‘அம்மா, பையனா இவங்க?’ அவதானித்து கொண்டிருக்க,

“என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.

“அவங்க அப்பாவை உடனே வர சொல்லு. எல்லாத்தையும் மொத்தமா முடிச்சுக்கலாம்” என்று அவர் சொல்ல,

“யம்மா சாவித்திரி” என்று அறைக்கு வெளியே குரல் ஒன்று யாசித்து வந்தது.

“அத்தை. என்னை மன்னிச்சிடுங்க, இதுக்கு மேலயும் அவனுக்கு நான் வாய்ப்பு கொடுக்க போறதில்லை” என்றார் சாவித்திரி.

என்னடா நடக்குது இங்க? தன்வி தன் குழப்பங்களை தனக்குள் அடக்கி கொண்டு நிற்க,

“கேட்டுச்சு இல்லை. உன் அப்பாவை உடனே வர சொல்லு” என்றான் தேசிகன்.

“இங்கிருந்து கத்தினா எல்லாம் அவருக்கு கேட்காது” என்றாள் தன்வி கடுப்பாக.

அவனின் பார்வை இன்னும் ஆழமாக இவள் மேல் பதிய, சாவித்திரி போனை அவளிடம் நீட்டினார்.

தன்வி போனை வாங்க போக, அவளுக்கு முன் அவன் போனை கைப்பற்றியிருந்தான்.

“ஹோ காட்” என்ற தன்வியிடம்,

“உன் பேர் என்ன?” என்று கேட்டான்.

“இதுக்கு பதில் சொன்னா குரல் உசரும் பரவாயில்லையா?” என்று அவனிடம் பதில் கேள்வி கேட்டாள் தன்வி.

யார் என்னன்னே தெரியாம தான் கடத்துவாங்களா இவங்க?

“ஹோய் என்ன?” என்று அவன் அதட்ட,

“ஏம்மா பொண்ணே. அத்தை மகன்கிட்ட இப்படி எல்லாம் பேச கூடாது” என்ற குரல் அறைக்கு வெளியே இருந்து வந்தது.

“அத்தை மகனா இவரா? வாய்ப்பே இல்லை” என்று தன்வி கடுப்பாக,

“அப்படி ஒரு உறவு எல்லாம் கிடையாது பாட்டி” என்றவன், அவள் சொன்ன பதிலில், “என்ன வாய்ப்பில்லை. ஹான். நீ எனக்கு மாமன் பொண்ணுதான்” என்று அவளிடம் எகிறினான்.

“உறவு இல்லைன்னு நீங்க கூடத்தான் சொன்னீங்க?”

“நான் சொல்லுவேன். நீ சொல்ல கூடாது”

“இதென்ன அராஜகம்?”

“பொண்ணே. முதல்ல நீ இப்படி கூட கூட பேசுறது நிப்பாட்டு. எல்லாம் அவங்கம்மா ரத்தம்” என்று வெளியில் இருந்து சத்தம் வர,

“என் அம்மா ரத்தத்தை பத்தி பேச இங்க யாருக்கும் ரைட்ஸ் இல்லை” என்று தன்வி பொங்கிவிட்டாள்.

“பாட்டி” என்று அடக்கிய சாவித்திரி, “வீண் பேச்சு வேண்டாம். தம்பி போனை அவகிட்ட கொடு. உன் அப்பா இரண்டொரு நாள்ல இந்த இருந்தாகணும்” என்று முடிவாக சொல்லி சென்றுவிட்டார்.

“இவங்க குடும்ப பஞ்சாயத்துல நான் வந்து சிக்கிக்கிட்டேன்” தன்வி போனை கிட்டத்தட்ட அவனிடம் இருந்து பிடுங்க பார்க்க, விடாதவன், “ரெஸ்பெக்ட்ன்னா என்னன்னே தெரியாதா உனக்கு?” என்று அவளிடம் அடிக்குரலில் கேட்டான்.

“கடத்துறவங்களுக்கு எல்லாம் மாலை போட்டு பூஜை பண்ற பழக்கம் எனக்கு இல்லை” என்றாள் தன்வி.

“மாலை தானே போட வைக்கிறேன்” என்று போனை அங்கிருந்த கட்டிலில் வீசிவிட்டு சென்றான் தேசிகன்.

தன்விக்கு மொத்தமும் கொதித்து போனது. அவனுக்கு பின்னால் சென்று கதவை அடித்து சாத்தியதில், மொத்த வீடும் அதிர்ந்து போனது.

நின்று பல்லை கடித்து மூடிய கதவை முறைத்தவனின் தோளில் தட்டி கொடுத்த சாவித்திரி, “சின்ன பொண்ணு தம்பி” என்றார்.

“உங்க அண்ணா பொண்ணுக்கு சப்போர்ட் பண்ண கூடாதும்மா” என்றான் மகன் கண்டிப்புடன்.

தன்விக்கு இன்னும் கொதிப்பு அடங்காமல், “சுஜாதா என்ன இதெல்லாம்” என்று போனில் கத்தினாள்.

“தன்வி. தன்வி நீ ஓகே தானே? எங்க இருக்க நீ?” என்று சுஜாதா அந்த பக்கம் பரபரத்தாள்.

அன்று காலை “தன்வி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுப்பா. ப்ளீஸ்” என்று சுஜாதா அவளிடம் வேகமாக வந்து நின்றாள்.

“என்ன ஹெல்ப்?” என்று தன்வி சாதாரணமாக கேட்க,

“என்னை தேடி வந்திருக்காங்க. அவங்ககிட்ட போய் நான் இல்லைனு மட்டும் சொல்லிடு ப்ளீஸ்” என்றாள் சுஜாதா.

“ஏன் என்ன ஆச்சு? யார் அவங்க? ஏதாவது பிரச்சனை பண்ண வந்திருக்காங்களா” என்று சுஜாதாவின் படபடப்பில் அக்கறையாக விசாரித்தாள் தன்வி.

“என்னோட அப்பா சொந்தம் தான். நான் இல்லைன்னு மட்டும் நீ சொல்லு போதும். வேறெதுவும் என்னை பத்தி பேசிடாத. நான் எதுக்கு இங்க வந்திருக்கேன்னு உனக்கு தெரியுமில்லை” என்று சுஜாதா மிகவும் வேண்டி கேட்டு கொள்ளவே தன்வி அவளை பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

“சுஜாதா இல்லைன்னு சொல்ல வந்த என்னை மாத்தி கடத்திட்டு வந்துட்டு எவ்வளவு பேச்சு” பெண்ணுக்கு இன்னும் கடுப்பு தான்.

“உன்னோட காட்டு மிராண்டி கூட்டம் என்னை கடத்திட்டு வந்திருக்காங்க” என்று இவள் ஆத்திரப்பட, சுஜாதாவிற்கு அதிர்ச்சி தான்.

“அம்மா சொன்ன மாதிரியே செஞ்சுட்டாங்க” என்று அவள் முனக,

“வாட்?” என்று தன்வி கூவிவிட்டாள்.

“சோ உனக்கு தெரியும்” என்று பல்லை கடிக்க,

“நோ. நோ தன்வி. என்னை தப்பா புரிஞ்சுகிட்ட. அவங்க என்னை தான் கூட்டிட்டு போவாங்க நினைச்சேன்” என்று சுஜாதா விளக்கம் கொடுக்க முனைந்தாள்.

“கூட்டிட்டா? ஹேய் அவங்க என்னை கடத்தியிருக்காங்க”

“எஸ். எஸ் அதே தான். முதல்ல நீ அமைதியாகு. அவங்க ஹார்ம்லஸ். உனக்கு ஒன்னும் பிரச்சனை வராது. எனக்கு கொஞ்ச நேரம் டைம் மட்டும் கொடு. என்ன பண்றதுன்னு பார்க்கலாம்”

“நோ. என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது, நீ முதல்ல கிளம்பி வா. அவங்களுக்கு நீதான் தேவை”

“தன்வி. தன்வி. ப்ளீஸ். உனக்கு தெரியும் நான் ஏன் சென்னை வந்தேன்னு. எல்லாம் முடியவும் நானே அங்க வரேன்”

“வாய்ப்பே இல்லை சுஜாதா”

“ப்ளீஸ். ப்ளீஸ். எனக்காக” என்று ஆயிரம் முறை அவளிடம் கெஞ்சி சுஜாதா அவளை சில நாட்களுக்காக அங்கிருக்க வைத்தாள்.

மாத்தி கடத்திட்டு வந்து எவ்வளவு ஸீன் ஓட்டுறாங்க. அதிலும் அவன்? என்று தன்வி அவனை நினைத்தே கோவம் கொண்டாள்.