Advertisement

அத்தியாயம் – 19
வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை.
ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது பூஜா ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த ஆகாஷின் புகைப்படத்தைக் கண்டு உற்சாகமானாள்.
“ஆகாஷ் மாமா, சுகமானோ… எப்பலானு நாட்டிலேக்கு வருந்தது… நான் பரஞ்ச டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரனே…” ஆர்வத்துடன் கூறியவளிடம் உற்சாகமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஆகாஷ். பூஜா ஆகாஷின் அக்கா ஆஷிகாவின் புதல்வி. மூன்றாம் வகுப்பில் படித்தாலும் வயதுக்கு மிகுந்த வளர்ச்சியோடு சுட்டித்தனமாய் இருக்கும் அழகுப் பெண்.
அவள் பேசுவது யசோதாவின் காதிலும் விழ மௌனம் கலைந்து எழுந்து வந்தார்.
“மோளே… மொபைல் இங்கு தா…” என்றவரிடம், “அம்மும்மே, ஒரு நிமிஷம் நில்க்கு… மாமனோடு நான் சம்சாரிக்கட்டே…” என்றவள் ஏதேதோ சாக்கலேட், டாய்ஸ் எல்லாம் கொண்டு வருமாறு கூறிவிட்டே போனைக் கொடுத்தாள்.
ஒரு முறை அவனது புகைப்படத்தை உன்னிப்பாய் பார்த்துவிட்டு காதுக்குக் கொடுத்தார் யசோதா.
“ஹா மோனே, சுகமானோ டா…” (இனி தமிழில்)
“எஸ் மம்மி… ஹவ் யூ…”
“நீ இல்லாம வீடே வெறிச்சின்னு இருக்குடா… இப்ப பூஜா ஸ்கூல் லீவுல இங்கே வந்ததால கொஞ்சம் நல்லாருக்கு… உனக்கு தான் படிப்பு முடிஞ்சதே… இன்னும் எதுக்கு அங்கேயே இருக்க… சீக்கிரம் கிளம்பி வா மோனே…”
“இங்க எவ்ளோ செமையா இருக்கு தெரியுமா… இனி நம்ம ஊருக்கு வரணுமானு யோசிச்சாலே நரகத்துக்குப் போற பீல்… டர்ட்டி கண்ட்ரி… பேசாம நான் இங்கயே செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன்…” என்றான் அவன்.
அவன் பேச்சைக் கேட்டு ஒரு தாயாய் அவர் மனம் வலித்தது.
“என்னடா ஆகாஷ்… பிறந்து வளர்ந்த தாய் நாட்டை இப்படி கேவலமாப் பேசறே… சொர்கமே ஆனாலும் நம்ம நாட்டைப் போல வருமா… நீ ரொம்பப் பேசாம உடனே இங்கே கிளம்பி வர வழியப் பாரு…” என்றார் அதட்டலுடன்.
“ஹூம்… ட்ரை பண்ணறேன்…” என்று அலட்சியமாய் கூறியவன் சட்டென்று ஏதோ நினைவு வந்தது போல், “ஹேய் யசோ… உங்களோட முப்பதாவது வெட்டிங் டே அண்ட் என் பர்த்டேக்கு இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு… அதுக்குதான் மகனை ஆசையா வர சொல்லறியா…. ஐ காட் இட்… ஓகே, நானும் ஊருக்கு வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு… உங்க வெட்டிங் டேவையும் என் பர்த்டேவையும் இந்த வருஷம் அங்கே செலபரெட் பண்ண பிளான் பண்ணறேன்…” என்றான் பெரிய மனதுடன்.
“ஹூம்… இப்பவாச்சும் புரிஞ்சு வரேன்னு சொன்னியே… ரொம்ப சந்தோஷம்ப்பா…”
“ம்ம்… டாட் என்ன பண்ணறார் மம்மி… ஆபீஸ் போயாச்சா…”
“ம்ம்… கிளம்பிட்டார் ஆகாஷ்… அவருக்கு ஆபீஸ், பிஸினஸ், பணம் விட்டா வேறென்ன தெரியும்…”
“என்ன மம்மி, இப்படி சொல்லிட்டிங்க… மணி மேக்ஸ் லாட்… பணம் பாதாளம் வரையும் பாயும்னு சொல்லுவாங்க… அவர் நல்லா சம்பாதிக்கட்டும்… அப்பதானே நான் இங்க ஜாலியா செலவு பண்ண முடியும்…” என்று சிரித்தவன் மீது எரிச்சலாய் வந்தாலும் காட்டிக் கொள்ளாமல் பேசினார். “பணத்தை விட குணம்தான் முக்கியம்னு உனக்கும் உன் அப்பாவுக்கும் எப்ப தெரிய போகுதோ… சரி, விசேஷத்துக்கு இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு… சீக்கிரம் அங்கிருந்து கிளம்பற வழியப் பாரு…” என்றவர் பொதுவாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
மகள் ஆஷிகா கேட்ட கேள்விகள் மனதில் மாறாமல் பிராண்டிக் கொண்டிருக்க சமாதானம் இன்றி அமர்ந்திருந்தார். “எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவுண்டு… இதற்கும் முடிவு கட்டியே ஆகவேண்டும்…” என தீர்மானித்துக் கொண்டார்.
****************
அடுத்தநாள் காலையில் பிரபாவின் கல்யாணத்திற்குப் போவதா வேண்டாமா என இரவு வெகுநேரம் யோசித்தவள் முடிவில் போய்வரலாம் என்று தீர்மானித்தாள். அந்த அழைப்பிதழை எடுத்து பார்க்க கல்யாணம் கோவிலில் முடித்து அடுத்திருந்த மண்டபத்திலேயே ரிஷப்ஷனுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அலுவலகத்தில் எல்லாரும் சரவணனின் கல்யாணத்திற்கு செல்வதால் தனியே செல்ல தயக்கமாய் இருக்கவே அன்னையையும் உடன் அழைத்தாள்.
நிதின், பிரபா சஹானா நட்பு பற்றிக் கூறியிருந்ததால் முதலில் வரவில்லையென்று மறுத்து பிறகு நிதினுக்கு அலைபேசியில் அழைத்து அவன் அவரையும் அவளோடு வரும்படி கூறவே ஒத்துக் கொண்டார். காலையில் சஹானா எழுந்து அழகான சேலையுடுத்தி சிம்பிளாய் புறப்பட்டாலும் வெகு நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் சசிகலாவுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“சஹா, இந்த நெக்லஸைப் போட்டுக்க…” அன்னை நீட்டவும், “ப்ச்… அதெல்லாம் வேண்டாம் மா… இதே போதும்…” என்று மறுக்க, எங்கு வற்புறுத்தினால் கோபப் படுவாளோ என்று நினைத்தவர் பேசாமல் விட்டுவிட்டார்.
அவரும் புறப்பட்டு முடித்து சாதனா இல்லாததால் ஸ்ரீக்குட்டியைக் குளிக்க வைத்து பவுடர் போட்டு கண்ணுக்கு மை போட்டு உடை அணிவிப்பதற்குள் அவள் ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள். கையில் அவளுக்கான உடுப்பை வைத்துக் கொண்டு சசிகலா துரத்த அவள் கட்டிலுக்கடியில் சென்று ஒளிந்து கொண்டாள்.
“செல்லக்குட்டி, வெளிய வாடி… நாம டாட்டா போகலாம்…” சசிகலா கட்டில் அருகே நின்று அழைக்க சிரிப்புடன், “பாத்தி… நானு இங்கில்ல… அந்தப் பக்கம் தேது…” என்றாள் கட்டிலுக்கடியில் இருந்து. அதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் சஹாவுக்கு கோபம் வருமோ என்ற பயத்துடனே அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“என் பட்டுக்குட்டில… தங்கம்ல… வாடா செல்லம்… லேட் ஆனா மம்மி கத்துவா…” அவர் கெஞ்சுவதைக் கண்டு கொண்டே அந்த அறைக்குள் நுழைந்த சஹா, “என்னம்மா… இன்னும் முடியலையா…” என்று கேட்க, “இதோ முடிஞ்சுது மா…” என்றவர் தயக்கத்துடன் கட்டிலடியில் பார்க்க புரிந்து கொண்டவள், “ச்சே… விளையாட ஒரு நேரம் காலம் இல்லையா… பேசாம அவளை வீட்டுக்குள்ள விட்டுப் பூட்டிட்டு வாங்க…” என்று சிடுசிடுத்தாள்.
அவளது குரலைக் கேட்டதும் குழந்தை பம்மிக் கொண்டு வெளியே வர சஹாவின் வார்த்தையில் வருந்தினாலும் எதுவும் சொல்லாமல் அவளுக்கு உடை அணிவித்தார்.
அவர்கள் கிளம்பி மண்டபத்தை அடைந்தபோது கல்யாணம் முடிந்து பொண்ணும், மாப்பிள்ளையும் மண்டபத்துக்கு வந்திருந்தனர். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வந்தவள் முன்னில் பெரிய பேனரில் சரவணன், பிரபாவின் போட்டோவைக் கண்டதும் திகைத்து அப்படியே நின்றாள்.
“சஹா, என்னம்மா…” என்று சசிகலா கேட்க அதற்குள், “வாங்க மேடம்…” அருகில் ஒலித்த குரலில் சட்டென்று திரும்பியவள் இனிமையாய் அதிர்ந்தாள். அவனை எப்போதும் மனம் தேடிக் கொண்டே இருந்ததால் முதலில் கண்ட அதிர்ச்சி இப்போது இல்லை… முன்னர் அவனை விலக்கி வைக்கத் துடித்த மனம் இப்போது விலகியோடச் சொல்லி தவித்தது.
நிதின் புன்னகையுடன் கை கூப்பி வேஷ்டி சட்டையில் அழகாய் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் நிலை குலைந்த மனது தவிக்கத் தொடங்க அப்படியே நின்றவளை, “ஆஹா சஹானா, நீயும் வந்துட்டியாம்மா… வா…” என்று வரவேற்றார் உள்ளே அமர்ந்திருந்த சாந்தமூர்த்தி. அவரைக் கண்டதும் சட்டென்று சுதாரித்துக் கொண்டவள், தலையாட்டி சிரிக்க, அவளை ஆதரவாய் பற்றிக் கொண்டது அழகான பெண் ஒருத்தியின் கரங்கள்.
“வாங்க அக்கா, பிரபா உங்களை அழைச்சிட்டு வர சொன்னா…” என்ற ஆனந்தி அவளை மேடைக்கு இழுக்காத குறையாய் அழைத்துச் செல்ல சசிகலா நிதினைப் பார்த்து புன்னகைக்க, “நீங்களும் கூட போங்கம்மா…” என்றான் அவன்.
“ஐ, டாதி…” என்று அவனை நோக்கி சந்தோஷமாய் தாவிய குழந்தையை புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன் அவர்கள் பின்னிலேயே சற்றுத் தள்ளி தொடர்ந்தான். ஆனந்தி சஹாவை மேடைக்கு அழைத்துச் செல்ல கல்யாணம் முடிந்து புதுமணக் கோலத்தில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த தம்பதியர் அவளைக் கண்டதும் புன்னகைத்தனர்.
வேகமாய் அவளது கையைப் பற்றிக் கொண்ட பிரபா, “வாங்கக்கா… உங்களைக் காணமேன்னு வருத்தப்பட்டேன்… இப்போ தான் சந்தோஷமா இருக்கு… என்னங்க, இது சஹானா அக்கா, என் பிரண்டு… எனக்கு இவங்களை ரொம்பப் பிடிக்கும்…” என்று கூற சரவணன் புன்னகைத்தான்.
“என்ன பிரபா… எங்க மானேஜர் மேடமை எனக்கே அறிமுகப் படுத்தறியா…” என்று சிரித்தவன் இருவரும் ஒரே வங்கியில் வேலை செய்வதை ஆனந்தி, அவன் பெற்றோருக்கு கூறி அவளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினான்.
“மீனாட்சிக்கு சஹானாவை அறிமுகப்படுத்தி வைக்க, “வணக்கம் மா…” என்றவளின் கையை அன்போடு பிடித்துக் கொண்டவர், “நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்… இருந்து சாப்பிட்டுத் தான் போகணும்… ஆனந்தி, பார்த்துக்கோ மா…” என்றுவிட்டு மற்றவர்களை கவனிக்க சென்றுவிட்டார்.
சஹானா வேறு ஏதோ உலகத்தில் நுழைந்துவிட்டாற் போல பிரம்மித்து பொம்மையாய் பேச்சிழந்து நிற்க, “அண்ணன் எங்கே காணோம்…” என்று தேடிய பிரபா கீழே நின்றவனை கை காட்டி மேடைக்கு அழைத்தாள். குழந்தையுடன் மேடை ஏறியவனைக் கண்டு திகைத்த சஹானா அவனது கழுத்தை உரிமையுடன் சுற்றிப் பற்றிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டதும் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“அண்ணா, எவ்ளோ நேரமா உன்னைத் தேடுறது… இவங்க சஹானா… என் பிரண்டு…” என்று அறிமுகப்படுத்த, “ம்ம்… வணக்கம்…” என்று புதியதாய் காணுவது போலக் கூறவும் அவள் என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்க, “இது யாரு குழந்தை அண்ணா, ரொம்ப கியூட்டா இருக்கு…” என்ற பிரபா,
“ஹாய் பேபி… வாங்க, ஒரு போட்டோ எடுத்துக்கலாம்…” என்று குழந்தையை அழைக்க அவள் வராமல், “டாதி…” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள, வேறு யாரும் கவனிக்காவிட்டாலும் தன் காதில் விழுந்த வார்த்தையைக் கேட்டு அதிர்ச்சியுடன் நோக்கினாள் சஹானா.
“சரி, எல்லாரும் போட்டோ எடுத்துக்கலாம்…” என்றவன், “அம்மா… வாங்க…” என்று சசிகலாவையும் அழைத்தான். மணமக்களின் வலது பக்கம் நிதின், சசிகலாவும், இடது பக்கம் சஹானா, ஆனந்தியும் நிற்க போட்டோகிராபர், “சார், நீங்க இந்தப்பக்கம் வாங்க, மேடம் நீங்க அம்மாகிட்ட நில்லுங்க…” என்று நிதினை சஹானாவின் அருகில் நிற்க வைத்து ஆனந்தியை சசிகலாவின் அருகில் நிறுத்த நடப்பதெல்லாம் கனவோ என்பது போல மிரண்டு அதிர்ந்து பார்த்திருந்தாள் சஹானா.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற குழப்பத்துடன் ஸ்ரீக்குட்டி அவனிடம் இப்படி ஒட்டிக் கொண்டு டாடி என்று அழைத்ததும் பெரும் நெருடலாய் இருக்க உலகமே சுற்றுவது போலத் தோன்றியது.
அவளை கவனித்துக் கொண்டிருந்த நிதின் ஆனந்தியிடம் கண்ணைக் காட்ட, “வாங்கக்கா… அம்மா, வாங்க சாப்பிடப் போகலாம்…” என்று அழைக்க, குழந்தையை அவரிடம் கொடுக்க அவள் போக மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
“ஸ்ரீக்குட்டி குட் கேர்ளா சாப்பிட்டு வா… உனக்கு பலூன் வாங்கித் தரேன்…” எனவும் அவள் பாட்டியிடம் தாவினாள். மேடையிலிருந்து இறங்கி டைனிங் ஹாலுக்கு ஆனந்தியுடன் அமைதியாய் சென்ற சஹானா, “அம்மா, கிளம்பலாம்…” எனவும், “என்னாச்சுக்கா… நீங்க சாப்பிடாம போனா அண்ணா, அண்ணி திட்டுவாங்க… ப்ளீஸ், சாப்பிட்டுப் போங்க…” ஆனந்தி கூற கடுகடுவென்ற முகத்துடன் பேசாமல் நின்ற மகளிடம் சொல்ல வழியின்றி பரிதாபமாய் பார்த்தார் சசிகலா.
சஹாவின் தலைக்குள் ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும் ஓடிக் கொண்டிருக்க எல்லாரும் தனக்கெதிராய் சேர்ந்து சதி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் தோன்றியது.
இத்தனை நாளாய் காணாமல் கண்ணாமூச்சி ஆடியவன் இன்று யாரோ ஒருத்தியைப் போல மேடம் என்றழைத்ததும், பிரபாவின் திடீர் சிநேகமும், குழந்தை உரிமையோடு அவனை அழைத்த டாடியும் எல்லாமே கண்கட்டு வித்தை போல இருக்க புரியாமல் தலை வலித்தது.
“வாங்கம்மா…” என்று பார்க்கிங் நோக்கி நடந்தவளை, “சஹி…” என்ற நெருக்கமான குரல் பிரேக்கடிக்க வைக்க, அந்த அழைப்புக்காய் தவம் கிடந்தவளின் மனம் துடித்து கண்ணில் நீரை வரவழைக்க திரும்பாமல் நின்றாள்.
தனை ஏற்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் அவள் படும் வேதனையை, மனதின் போராட்டங்களை அவனால் உணர முடிந்தது. சசிகலாவும் ஆனந்தியும் மௌனமாய் நிற்க நிதின் அவளை நெருங்கினான்.
“சஹி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” அவனது குரலே மனதுக்கு இதமாய் இருக்க அவனது சிறு அணைப்புக்காய், அருகாமைக்காய் உள்ளம் ஏங்கியது. ஆனால் அடுத்த நொடியே தான் அவனது அன்புக்குத் தகுதியற்றவள் என்ற உண்மை மனதில் ஓங்கி ஒலித்து தவிக்க வைத்தது. விலக்க நினைத்த மனம் விலக முடியாமல் துடித்தது.
“சாரி, எனக்கு எதுவும் உங்களோட பேசறதுக்கில்லை…” திரும்பி நின்று சொன்னவளிடம், “ஓ, சரி… அதை என் முகத்தைப் பார்த்து சொல்லு…” என்றான் அவன். கண்களில் நீர் தேங்கி நிற்க திரும்பாமல் நின்றவளின் முன்னில் வந்து நின்றான் நிதின். அப்போதும் நிமிர்ந்து அவனைப் பார்க்காமல் குனிந்து நின்றவளிடம், “சஹி, எதுவா இருந்தாலும் பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்… கார் சாவியக் குடு…” என்றவன் கையை நீட்ட, உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு இறுக்கமான முகத்துடன் திரும்பினாள்.
“அம்மா, வரப் போறிங்களா இல்லையா…” என்றவளின் அதட்டலில் சசிகலா குழந்தையுடன் அருகே வர அவனைக் கண்டு கொள்ளாமல் காரை நோக்கி நடந்தாள்.
கண்ணீர் காற்றில் விழுந்து தெறிக்க படபடக்கும் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு காரைத் திறந்து வண்டியை எடுத்தாள். அவள் செல்வதை கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்து நின்ற நிதின் ஒரு பெருமூச்சுடன் உள்ளே செல்ல ஆனந்தி வேதனையுடன் நின்றாள்.
என் கண்ணீரும் துடிக்கிறது
உன் துணை தேடி…
இதயம் செந்நீரை வடிக்கிறது
என்னிலை பாடி…
வாராமல் வந்த என் வரமே
உனை சேராமல் நான் போவேனோ…
உயிரிருந்தும் ஊணின்றிப் போனேன்
உனை இழந்து நான் நின்ற போது…
உன் கரம் பற்றி வலம் வந்த
கனவொன்று கானலாகிப் போனதே…
விதியின் வசத்தில் என் வசம்
தொலைந்து போனேனே…

Advertisement